புரட்சி மண்ணை எதிரிப்படைகளுக்கு புதைகுழியாக்குவோம்: பா.நடேசன்


சிங்களப் படைகளுக்கு வன்னிப் பெருநிலப்பரப்பை புதைகுழியாக மாற்ற மக்கள் அனைவரும் அணிதிரள்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது பா.நடேசன் மேலும் தெரிவித்ததாவது:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அரச பயங்கரவாதத்தினால் 53 மாணவிகள் குண்டுவீச்சினால் பலியெடுக்கப்பட்டனர்.

இப்படுகொலை தமிழினத்திற்கு மட்டுமல்ல பன்னாட்டுச் சமூகத்திற்கும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் முகத்தை வெளிப்படுத்தி நின்றது.

சிங்களப் பயங்கரவாதம் என்பது இன்று, நேற்றல்ல 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழினப் படுகொலையை திட்டமிட்டு மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது.

1948 ஆம் ஆண்டில் சிறிலங்கா விடுதலை பெற்றதாகக் கூறப்படும் நாளில் இருந்து ஆட்சியில் இருந்தவர்கள் தமிழர்களை அழித்தொழிப்பதற்காக தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை தொடங்கி இருந்தனர்.

அறவழியினை நம்பிப் போராடிய தமிழ்த் தலைவர்களும், சிங்களப் பயங்கரவாதத்தினால் தாக்கப்பட்டனர். 1956 ஆம் ஆண்டில் சிங்கள தனிச்சட்டத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் அகிம்சை வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்து தமிழ்த் தலைவர்கள் தொண்டர்கள் தாக்கப்பட்டனர்.

தொடர்ச்சியாக தமிழினத்திற்கு எதிராக கொக்கட்டிச்சோலைப் படுகொலை உட்பட பல படுகொலைகளை சிங்களப் பயங்கரவாதம் நிகழ்த்தியிருக்கின்றது.

சிங்கள அரச பயங்கரவாதத்தின் தொடர்ச்சியாகவே செஞ்சோலை மாணவிகள் மீதான படுகொலையை நிகழ்த்தியதன் மூலம் உலகிலேயே படுகொலைகளை நிகழ்த்தும் முதல் நாடாக சிறிலங்கா தன்னைப் பதிவாக்கியுள்ளது.

சிங்கள அரசு படை நடவடிக்கை ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளது. தனது படை நடவடிக்கை தொடர்பான மிகையான தகவல்களை சிங்கள மக்களுக்கு சிறிலங்கா அரசு வழங்கி வருகின்றது.

1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை விட்டு புலிகள் தந்திரோபாயப் பின்வாங்கலை மேற்கொண்டபோது சிங்கள பேரினவாத சக்திகள் 80 விழுக்காடு புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற சூழலில்தான் 'ஓயாத அலைகள்' நிகழ்த்தப்பட்டு ஆயிரக்கணக்கில் சிங்களப் படைகள் கொல்லப்ட்டு சிங்களப் பேரினவாதத்தின் மிகப்பெரிய நடவடிக்கையான 'ஜெயசிக்குறு' நடவடிக்கை முறியடிக்கப்பட்டதும் எல்லோருக்கும் தெரியும்.

இன்று கூட சிங்களப்படை அகலக் கால்விரித்து- தமிழ் மக்களின் நிலங்களினை விழுங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடியை தமிழினம் கொடுக்கும் காலம் நெருங்கி வருகின்றது.

வன்னியில் கால்பதித்துள்ள சிங்களப் படைகளுக்கு வன்னியையே புதைகுழியாக மாற்றுவதற்கு தமிழினம் அணிதிரள வேண்டும்.

சிங்களப் பேரினவாதம் தமிழினத்திற்கு எதிராக மேற்கொண்ட படுகொலைகளை நினைவுகூர்வது தமிழினம் விடுதலைக் குறிக்கோளை அடைந்து கொள்வதற்கு உந்துசக்தியாக இருக்கும் என்றார் அவர்.



Comments