ஆளணி வள அதிகரிப்பால் இராணுவம் பலம் பெற்றுள்ளதா?

விடுதலைப் புலிகள் மரபுப்போரில் இனிமேல் ஈடுபட முடியாதென்றும், மரபுவழி இராணுவம் என்ற ரீதியில் அவர்களின் பலத்தை அழித்து விட்டதாகவும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். கொழும்பிலிருந்து பணியாற்றும் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்களை கடந்த ஜுன் 30ம் திகதி சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

புலிகளால் இனிமேல் மரபுரீதியாகப் போரிட முடியாதென்றும், இன்னும் ஒரு வருடத்துக்குள் புலிகளை முற்றாக அழித்து முழுமையாகத் தோற்கடித்து விட முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இராணுவத் தளபதியின் கணிப்புப் படி இன்னும் ஒரு வருடத்துக்குள் புலிகள் முற்றாகத் தோற்கடிக்க திட்டமிட்டுள்ள நிலையில், அரசாங்கமோ பெருமளவில் படையினரைத் திரட்டி வருகிறது. கடந்த வருடத்தில் இராணுவத்தில் 32 ஆயிரம் பேர் புதிதாக இணைந்து கொண்டதாகவும், இந்த வருடத்தில் மே மாதம் வரையில் 16 ஆயிரம் பேரைத் திரட்டியிருப்பதாகவும் லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில் தான் இந்த வருடத்தின் இரண்டாவது கட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கையை ஜுலை முதலாம் திகதி இராணுவத் தலைமையகம் ஆரம்பித்திருக்கிறது. செப்ரெம்பர் 30 ஆம் திகதி வரை 3 மாதங்களுக்குத் தொடர்ச்சியாக இந்த ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.

இராணுவத் தரப்பும் அரசாங்கமும் ஆட்சேர்ப்பு முதற்கொண்டு, போரில் ஏற்படும் இழப்புக்கள் வரையில் சொல்வதெல்லாமே பொய்யாகத்தான் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தின் ஆட்பலம் 167,000 என்று இராணுவத் தளபதி கூறியிருந்தார். இந்த வருடத்தில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் படையினரின் எண்ணிக்கையையும் சேர்த்து இது கிட்டத்தட்ட 183,000 ஆக அதிகரித்திருக்க வேண்டும்.

ஆனால் இராணுவத்தில் நிச்சயமாக இந்தளவு தொகையினர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் தப்பி ஓடிய படையினரின் எண்ணிக்கையையும் சேர்த்துத்தான் படைத் தரப்பின் இந்த ஆளணி வளக் கணக்கு காட்டப்படுகிறது. தப்பியோடிய படையினரின் என்ணிக்கையாவது சரியாகக் கணக்குக் காட்டப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை.

20 ஆயிரம் படையினர் தப்பியோடியிருப்பதாகவும் இவர்களில் 4773 பேர் கடைசியாக அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் மீளவும் தமது படைப் பிரிவுகளில் இணைந்திருப்பதாகவும் இராணுவத் தலைமையகம் கூறியிருந்தது.
அதேவேளை தப்பியோடிய மேலும் 12 ஆயிரம் படையினரில் 11 ஆயிரம் படையினரையாவது தேடிப்பிடித்து சேர்த்துக் கொண்டால் வன்னி மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தலாம் எனத் தெரிவித்திருந்தார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார.

அவரேதான், இதுவரை காலமும் தப்பியோடிய படையினரின் எண்ணிக்கை 50 ஆயிரம் வரை இருக்கும் என்றும், அவர்கள் கடன்களைச் செலுத்தி விட்டு படையில் இருந்து நீங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தார்.

முன்னர் கூறப்பட்ட 20 ஆயிரம் என்ற தொகை என்ன?

பின்னர் கூறிய 50 ஆயிரம் என்ற தொகை என்ன?

என்ற குழப்பத்துக்கு எந்த இராணுவ அதிகாரியும் விடை தருவதில்லை.

இலங்கை இராணுவம் தப்பியோடிய படையினர் மற்றும் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்படும் படையினரைக் கொண்டே புதிய புதிய கணக்குகளைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்த வருடத்தில் 15 ஆயிரம் பேரை இராணுவத்தில் சேர்க்கவே அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அதற்கான கணக்கு வழக்குகள் காட்டப்பட்டே பாதுகாப்பு அமைச்சின் நிதியொதுக்கீடுகள் பெறப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஒரு வருடத்தில் சேர்க்கப்படத் திட்டமிட்ட ஆளணி வளத்தை விட, அதிகமான படையினரை அரசாங்கம் ஆறே மாதத்தில் திரட்டியதென்றால் அது ஆச்சரியமே.

அவ்வாறு 16 ஆயிரம் பேர் படைகளில் சேர்க்கப்பட்டு விட்டனர் என்றால் வருடாந்த திட்டமிடல் அளவைவிட, அதிகமாக இரண்டாவது கட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கை எதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறாயின் படையினரின் தற்போதைய ஆளணி வளம் புலிகளைத் தோற்கடிப்பதற்குப் போதுமானதல்ல என்றே கருதவேண்டும்.

அடுத்த வருடத்தில் புலிகளை முற்றாகத் தோற்கடிக்க முடியும் என்று தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி, இன்னும் எவ்வளவு படையினரை இக்காலப் பகுதிக்குள் சேர்த்துக் கொள்ளப் போகிறார் என்பதையும் வெளிப்படுத்தவில்லை. சென்ற வருடத்திலும் இந்த வருடத்திலுமாக மொத்தம் 48 ஆயிரம் படையினரைச் சேர்த்திருக்கும் இலங்கை இராணுவம் இவற்றைக் கொண்டு என்ன செய்திருக்கிறது என்று பார்ப்பதும் முக்கியமானது.

இராணுவம் புதிய பற்றாலியன்களை, பிரிகேட்களை, டிவிசன்களை உருவாக்கி வருவதாகவும் இது இலங்கையின் இராணுவ வரலாற்றில் மட்டுமன்றி போரிலும் திருப்பங்களை ஏற்படுத்தப் போவதாகவும் படைத்தரப்பும் அரசாங்கமும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதையே பெரிதாகக் கருதி தென்னிலங்கை சிங்கள, ஆங்கில பாதுகாப்பு ஆய்வாளர்களும் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கை இராணுவக் கட்டமைப்புத் தொடர்பான அடிப்படை அம்சங்களைக் கூட விளங்கிக் கொள்ளாத பலரும் பாதுகாப்பு விமர்சனங்களை எழுதத் தொடங்கியுள்ள நிலையில், படைத் தரப்பினால் இத்தகைய பிரசாரங்களை அவர்கள் மூலம் சுலபமாக கொண்டு செல்லவும் முடிகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் ஆங்கில வாரஇதழ் ஒன்றின் பாதுகாப்புச் செய்தியாளர், மன்னார் போர் அரங்கு குறித்த தனது கட்டுரையில் கெமுனு வோச் பற்றாலியன் என்பதற்குச் சுருக்கமாக புசு என்றும் கஜபா றெஜிமென்ட் என்பதற்கு புறு என்றும் குறிப்பிட்டி ருந்தார்.

இராணுவத்தில் உள்ள கெமுனு வோச் படைப்பிரிவை சுருக்கமாக புறு என்றும், கஜபா றெஜிமென்டை புசு என்றும், இலகு காலாற்படையை என்றும், விஜயபா காலாற்படையை ஏஐசு என்றும் அழைப்பது வழக்கம். இந்த வழக்கத்தைக் கூடச் சரிவரப் புரிந்து கொள்ளாத பாதுகாப்பு ஆய்வாளர்கள் தான் இராணுவத்தின் புதிய படைப்பிரிவுகள் தொடர்பான மிகைப் படுத்தப்பட்ட பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்கு இராணுவம் படைபல ரீதியாகத் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவில்லை எனக் கூறவரவில்லை. ஆனால், அது எந்தளவுக்கு அனுகூலமான அடிப்படையில் பலமடைந்திருக்கிறது என்பதே முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும்.
இலங்கை இராணுவத்தின் உயர்வலுத் திறன் கொண்ட படைப்பிரிவுகள் எனக் கொள்ளத்தக்கவை, கொமாண்டோ றெஜிமென்ட் மற்றும் விசேட படைப்பிரிவு என்பனவாகும்.

சிறப்புத் தாக்குதல் பயிற்சிபெற்ற படைப்பிரிவுகள் எனக் கொள்ளத் தக்கவை இவையே. கடந்த இரண்டு வருடங்களுக்குள் 48 ஆயிரம் படையினரைச் சேர்த்திருக்கின்ற இராணுவம் இந்த உயர்வலுப் படைப்பிரிவுகளை எந்தளவுக்கு வலுப்படுத்தியிருக்கிறது என்று பார்ப்பது முக்கியம்.

கொமாண்டோ பிரிகேட்டை எடுத்துக் கொண்டால் முன்னர் எந்த நிலையில் இருந்ததோ, அதேபோன்று 1 வது, 2 வது, 3 வது கொமாண்டோ பற்றாலியன்களையும் தலைமையகப் பிரிவையும் மட்டுமே இப்போதும் கொண்டிருக்கிறது.

விசேட படைப்பிரிவைப் பொறுத்தவரையில் சற்று வளர்ச்சி இருக்கவே செய்கிறது. முன்னர் 1 வது, 2 வது, 3 வது விசேட படைப்பிரிவு பற்றாலியன்களையும், தலைமையகப் பிரிவையும் கொண்டிருந்த இது, தற்போது 4 வது விசேட படைப்பிரிவு பற்றாலியனை உருவாக்கி வருகிறது. கடந்த 28 ஆம் திகதி மாதுறுஓயாவில் உள்ள விசேடபடை பயிற்சித் தளத்தில் இருந்து பயிற்சியை நிறைவு செய்த 2 அதிகாரிகள் மற்றும் 308 படையினரும் முதல்கட்டமாக இதில் இணைக்கப் பட்டுள்ளனர்.

தலா 153 பேர் கொண்ட இரண்டு ஸ்குவாட்ரன்கள் இந்த பற்றாலியனில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்ற அதேவேளை, தற்போது பயிற்சி பெற்றுவரும் 600 படையினரில் இருந்து, மேலும் 400 படையினர் இதில் இணைக்கப்பட்டே இந்த பற்றாலியன் முழுமை படுத்தப்படும். 4 ஆவது விசேடபடை பற்றாலியன் தலா 153 பேர் கொண்ட 4 ஸ்குவாட்ரன்களையும் ஒரு நிர்வாகப்பிரிவு ஸ்குவாட்ரனையும் கொண்டிருக்கும்;. இந்த பற்றாலியன் இந்த வருடத்தில் தான் முழுமை படுத்தப்படும்.

இந்தவகையில் உயர்வலுப் படைப்பிரிவுகளை பெருமெடுப்பில் உருவாக்கியிருப்பதாக படைத்தரப்பு கூறிக் கொள்வதெல்லாம் வெறும் பிரசாரமேயாகும். இப்போது உயர்வலுமிக்க டிவிசன் எனச் சொல்லப்பட்ட 53 ஆவது டிவிசனே சாதாரண காலாற்படை டிவிசன் தான் என்று, அது முகமாலையில் அடிவாங்கியதன் பின்னர் படையதிகாரிகள் கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கது. 53 ஆவது டிவிசனில் உள்ள இயந்திரக் காலாற்படை பிரிகேட் என்ற படைப்பிரிவு கடந்த ஆண்டு உருவாக்கப் பட்டது. ஆனால் இது கூட ஒரு காலாற்படைப் பிரிவே தவிர, உண்மையான இயந்திர காலாற்படைப் பிரிவு அல்ல.

காலாற்படையில் உள்ள 3 பற்றாலியன்களைக் கொண்டே இந்த பிரிகேட் உருவாக்கப் பட்டிருக்கிறது. அதுபோன்றே கடந்த இரண்டரை வருடங்களில் புதிதாக 5 டிவிசன்களை உருவாக்கியிருப்பதாக இராணுவத் தளபதி பெருமைப்பட்டுக் கொள்கிறார். இதில் எத்தனை டிவிசன்கள் முழுமையாக இருக்கின்றன என்பதே முக்கியம். அரைகுறையாக உள்ளவற்றுக்கெல்லாம்; கணக்குகள் காட்டியே 5 டிவிசன்களை உருவாக்கியதாகப் படைத்தரப்பு சொல்கிறது.

இந்த 5 டிவிசன்களில் 57,58,59 ஆகியவற்றைத் தான் கிட்டத்தட்ட முழுமையான டிவிசன்களாக ஏற்றுக் கொள்ளலாம். ஏனைய 61 ஆவது மற்றும் 62 ஆவது டிவிசன் (அதிரடிப்படை-2) என்பன குறைப்பிரசவ டிவிசன்களாகவே உள்ளன.
ஒரு டிவிசனில் தலா மூவாயிரம் பேர் கொண்ட 3 பிரிகேட்கள் இருக்க வேண்டும். மொத்தம் 9 ஆயிரம் படையினர் இருப்பர். ஆனால் இலங்கை இராணுவத்தில் உள்ள டிவிசன்களில் 7 ஆயிரம் பேர் வரையே ஒரு டிவிசனில் உள்ளனர். அதிலும் 61 ஆது டிவிசனைப் பொறுத்தவரையில் 2 பிரிகேட்கள் மட்டுமே உள்ளன. அடுத்ததாக 62 ஆவது டிவிசன் எனப்படும் அதிரடிப்படை-2 என்பது 7 பற்றாலியன்களை - 3ஆயிரம் படையினரைக் - கொண்டதாகவே இருக்கிறது. அவையும் முழுமையான பற்றாலியன்களாக இல்லை.
மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதிக் காலத்தில் இராணுவத்தில் ஆளணிப் பற்றாக்குறை நிலவியபோது, புலிகளுடனான யுத்தத்தில் சேதமடைந்து அரைகுறையாக இருந்த பற்றாலியன்கள் சிலவற்றை படைத்தலைமை இணைத்திருந்தது.

உதாரணத்துக்கு சிங்க றெஜிமென்டின் 4-9, 6-7, 9-14 ஆகிய பற்றாலியன்களும், கெமுனு வோச்சின் 1-9, 4-12, 5-7, 6-8 ஆகிய பற்றாலியன்களும், விஜயபா றெஜிமென்டின் 5-7, 8-9 போன்ற பற்றாலியன்களும் இவ்வாறு ஒன்றிணைக்கப் பட்டிருந்ததைக் குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்ட 18 பற்றாலியன்களும் மூன்றாவது கட்ட ஈழப்போரில் மோசமான அழிவுகளைச் சந்தித்திருந்தன. இவ்வாறு இணைக்கப்பட்ட அரை நிலை பற்றாலியன்கள் சிலவற்றையும் புதிய பற்றாலியன்களையும் ஒன்றிணைத்தே 62 ஆவது டிவிசனுக்கு 7 பற்றாலியன்கள் ஒதுக்கப் பட்டிருக்கின்றன.

இந்த டிவிசன் புளியங்குளத்துக்கு மேற்காக உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் கடந்த 17 ஆம் திகதி தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. கடந்த வருடம் 57 ஆவது டிவிசன் மடுவைக் கைப்பற்ற வியூகம் வகுத்த போது, ஓமந்தைக்கு மேற்காக இரணைஇலுப்பைக் குளத்தில் இருந்து வடக்கு நோக்கிய ஒரு நகர்வைச் செய்தது நினைவில் இருக்கலாம். கேணல் லால் கமகே தலைமையில் 57-3 பிரிகேட்டில் அடங்கியிருந்த நான்கு பற்றாலியன் துருப்புகள் இந்த நகர்வில் ஈடுபட்டன.

பாலமோட்டை, நவ்வி, கள்ளிக்குளம், சின்ன வலையன்கட்டு என்று இந்த பிரிகேட் முன்னகர்வை மேற்கொண்டிருந்தது. இதன் பிரதான இலக்கு மடுவுக்குக் கிழக்காக உள்ள களமுனையில் உள்ள புலிகளுக்கு மாங்குளம், மல்லாவி போன்ற பகுதிகளில் இருந்து மூன்றுமுறிப்பு, சின்ன வலையன்கட்டு பகுதிகள் ஊடாகக் கிடைக்கக் கூடிய விநியோக மற்றும் மேலதிக படை உதவிகளைத் தடுப்பதேயாகும். அப்போது இது ஒரு துணைநிலைப் போர் அரங்காக இருந்தது.

ஆனால் இப்போது இது ஒரு பிரதான போர் அரங்காக மாற்றப்பட்டு வருகிறது. பாலம்பிட்டி, மடு, பெரிய மடு என்று 57 ஆவது டிவிசனின் கட்டுப்பாட்டுப் பிரதேசமும், போர்அரங்கும் விரிந்து சென்றதால், ஓமந்தைக்கு மேற்கே 57 ஆவது டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை மேஜர் ஜெனரல் லலித் தவுலகல தலைமையிலான 61 ஆவது டிவிசன் பொறுபேற்றிருக்கிறது. தற்காப்பு டிவிசனான இந்த டிவிசனும் அண்மையில்தான் உருவாக்கப்பட்டது. இதிலும் இரண்டு பிரிகேட்கள் மட்டுமே இணைக்கப்பட்டு குறைப் பிரசவப் படைப்பிரிவாகவே காட்சியளிக்கிறது.

ஓமந்தைக்கு மேற்காக உள்ள பாலமோட்டை மற்றும் நவ்வி அடங்கலான பிரதேசத்தில் இருந்து, குஞ்சுக்குளம், பாலைப்பாணி போன்ற பகுதிகளை நோக்கி முன்னேறிச் செல்லும் நோக்கில் தான், 62 ஆவது டிவிசன் உருவாக்கப் பட்டிருக்கிறது.

மூன்றுமுறிப்பில் இருந்து 62 ஆவது டிவிசன் வடக்கு நோக்கி பாலைப்பாணி வழியாக நகர்ந்து மல்லாவி-மாங்குளம் வீதியில் குறுக்கறுத்தால் ஓமந்தை முதல் கனகராயன்குளம், புளியங்குளம், மாங்குளம் போன்ற கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களின் பாதுகாப்பும்- அவற்றைப் புலிகள் தக்க வைப்பதும் கேள்விக்குள்ளாகும். அதேவேளை நட்டாங்கண்டல், ஒட்டங்குளம் வழியாக துணுக்காய் நோக்கி நகர்ந்தால் புலிகளின் மேற்கு வன்னித் தளங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.

மூன்றுமுறிப்பில் திறக்கப்பட்டுள்ள போர்அரங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அதிக முக்கியத்துவத்துடன் பார்ப்பதாகத் தெரிகிறது. இதனால் தான் இந்த டிவிசனுக்கு பிரிகேடியர் ரால்ப் நுகேராவைக் கட்டளைத் தளபதியாக நியமித்திருக்கிறார்.

பிரிகேடியர் ரால்ப் நுகேரா, இராணுவத் தளபதியின் மூளையில் உருவாகிய இயந்திர காலாற்படையின் கட்டளைத் தளபதியாக இருந்தவர். கடந்த வருடம் கொடிகாமத்தில் இந்தப் படைப்பிரிவின் தலைமையகத் திறப்புவிழா நிகழ்வு நடைபெறவிருந்த போது, புலிகள் நடத்திய ஆட்டிலறித் தாக்குதலில் இவர் படுகாயம் அடைந்து நீண்ட காலத்தின் பின்னரே களம் திரும்பியவர்.

இயந்திர காலாற்படை முழுமையாகச் செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், வட போர்அரங்கில் தனது நம்பிக்கைக்குரிய ஒரு தளபதியை குறுகிய நோக்கில் 62 ஆவது டிவிசனுக்கு கட்டளை அதிகாரியாக லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நியமித்திருக்க வாய்ப்பில்லை. பிரிகேடியர் ரால்ப் நுகேரா அவசர அவசரமாகவே வன்னிப் போர்அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இயந்திர காலாற்படைக்கு பொருத்தமான ஒரு கட்டளை அதிகாரியை நியமிக்க படைத் தலைமைக்கு கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது. இதனால் தற்காலிக ஏற்பாடாக இந்தப் படைப் பிரிவின் பதில் கட்டளை அதிகாரியாக லெப். கேணல் தம்மிக ஜெயசுந்தர நியமிக்கப்பட்டிருக்கிறார்.

எனவே மூன்றுமுறிப்பில் திறக்கப்பட்டுள்ள புதிய போர்அரங்கு வன்னிப் போர்க்களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் கடைசியாக உருவாக்கப்பட்ட இரண்டு டிவிசன்களுமே குறைப்பிரசவ நிலையில் இருப்பது அதைவிட முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

ஏற்கனவே இராணுவத்தில் உள்ள டிவிசன், பிரிகேட், பற்றாலியன், கொம்பனி, செக்சன் மட்டங்களில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அவை முழுமை நிலையில் அல்லாமல் அரைகுறை வளத்துடனும் பலத்துடனும் தான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் குறைநிலைப் படைப்பிரிவுகளை முழுமைப் படுத்துவதில் ஆர்வம் காட்டாமல் புதிய புதிய படைப்பிரிவுகளைத் தோற்றுவிப்பதில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா காட்டிவரும் ஆர்வம் பலரையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. போரியல் நோக்கங்களுக்காக இந்த டிவிசன்கள் உருவாக்கப்படுகிறதா அல்லது அரசியல் தேவைகளின் நிமித்தம் இவை தோற்றுவிக்கப்படுகிறதா என்ற குழப்பம் உருவாகத் தொடங்கிவிட்டது.

புதிய படை டிவிசன்கள் எத்தகைய செயற்திறனுடன் இயங்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே இந்தப் போரில் அவற்றின் பங்கைத் தீர்மானிக்க முடியும். புலிகளைப் பொறுத்தவரையில் இந்த டிவிசன்களின் உருவாக்கம் களத்தில் எந்தத் தாக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றும் பத்தோடு பதினொன்றாகவே இதை நோக்குவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் டிவிசனுக்கு அதிரடிப்படை-2 என்று பெயரிடப் பட்டிருப்பினும்;, இதற்கு முன்னர் செயல்நிலையில் உள்ள டிவிசன்கள் அல்லது பிரிகேட்களின் தாக்குதல் திறனை மிஞ்சுகின்ற அளவுக்கு இவற்றின்; செயற்திறன் இருக்கப் போவதில்லை என்பதே அது.

அதேவேளை, இராணுவத்தில் பெருமளவு இளைஞர்கள் இணைவதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கத்தால் சேதமுற்று சிதைந்த நிலையில் உள்ள படைப் பிரிவுகளைச் சீரமைக்க முடிந்துள்ளதே தவிர, உயர் வலுமிக்க புதிய படைப்பிரிவுகளை உருவாக்க முடியவில்லை என்றே தெரிகிறது.

அத்துடன் பெருமளவில் ஆட்சேர்ப்புச் செய்தும் படையினரால் புலிகளை ஒரேயடியாக அடித்து நொருக்கிக் கொண்டு முன்னேறவும் முடியவில்லை. தற்போதும் 5 ஆயிரம் வரையே இருக்கும் என மதிப்பிட்டுள்ள புலிகளை அழிக்க இராணுவத் தளபதி இன்னும் ஒருவருட கால அவகாசத்தைக் கோரியிருப்பதானது உயர்வலு மிக்க படையினரை உருவாக்குவதில் படைத் தலைமை தோல்வியடைந்து விட்டதென்பதையே காட்டுகிறது.

புதிய படையினரையும், தப்பியோடி மீள இணைந்தவர்களையும் வைத்துக் கொண்டு உருவாக்கப்படும் புதிய டிவிசன், படைப்பிரிவுகள் மூலம் போரில் அதிகம் திருப்பத்தை ஏற்படுத்த முடியாது. இது இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அறியாததொன்றாக இருக்க முடியாது.

-அங்கதன்-

Comments