நம்பிக்கை தளரா மனதைக் கொண்டிருப்பதும் ஒருவகையில் தமிழ்த் தேசியத்திற்கான பணியே

சிங்களத்தின் ஊடகங்கள் தங்களின் பணியை மிகவும் சிறப்பாகவும் வினைத்திறனுடனும் ஆற்றி வருகின்றன.

விடுதலைப் புலிகள் தங்களிடம் தோற்றுவருகின்றனர். நாங்கள் இப்போது கிளிநொச்சியை அண்மித்து விட்டோம், இன்னும் சில நாட்களில் கிளிநொச்சியில் சிங்கக்கொடி பறக்கும், சில மாதங்களில் வன்னி எங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும். இதுதான் சிங்களத்தின் இன்றைய பிரச்சாரம்.

எப்போதுமே ஆக்கிரமிப்பு சக்திகள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் சக்திகள் மீது இரண்டு வகையான போர்களை கட்டவிழ்த்து விடும்.

ஓன்று வன்முறை ரீதியானது.

மற்றையது உளவியல் ரீதியானது.

இந்த இரண்டையும் சம அளவில் பேணிக்கொள்வதன் மூலம் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை நசுக்கிவிட முடியுமென்பதே ஆக்கிரமிப்பு சக்திகளின் காலாதி கால நம்பிக்கை. இதைத்தான் இன்று சிங்களம் செய்ய முயல்கின்றது.

உண்மையில் தமிழர் தேசத்தில் என்னதான் நடைபெறுகிறது? இவ்வாறானதொரு கோள்வி தமிழர்கள் வாழும் எல்லா திசைகளிலும் கேட்கத்தான் செய்கிறது.

சமீப காலமாக புலிகள் தமது ஆட்சிப்பரப்பிற்கு உட்பட்ட சில பகுதிகளிலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.

குறிப்பாக, கிழக்கில் கருணா விவகாரத்தால் ஏற்பட்ட தொய்வே அவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வெளியேறியதற்கு காரணம்.

தமிழர் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கு இது ஒன்றும் புதியதல்ல. இதற்கு முன்னரும் இவ்வாறான கட்டங்களை நாம் தாண்டியிருக்கிறோம். அப்போதும் அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற கேள்வி நம்மத்தியில் எழாமல் இல்லை. பின்னர் புலிகள் அடைந்த வெற்றிகள் அதற்கான பதிலாக இருந்தது. இப்போதும் நமக்கு பதில்கள் தேவைப்படுகின்றன.

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிப்போக்கை உன்னிப்பாக அவதானித்தால் ஒரு விடயத்தை தெளிவாக பார்க்கலாம்.

விடுதலைப் புலிகள் வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டு தமது ஒவ்வொரு நகர்வுகளையும் திட்டமிடும் போது, போராட்டத்தின் ஆதாரமான மக்கள் புலிகளின் வெற்றியை நோக்கி மட்டும் சிந்திப்பதை நாம் கானலாம். காலப்போக்கில் இது விடுதலைப் போராட்டத்தை மகழ்ச்சி - சோர்வு என்னும் உணர்வு நிலைக்குள் சுருக்கிவிடும் ஆபத்தை விழைவிக்கின்றது.

புலிகளுக்கு வெற்றி என்றால் மகிழ்ச்சி, புலிகளுக்கு தோல்வி என்றால் சோர்வு என்றாகி விடுகின்றது.

இப்பொழுதும் நான் சந்திக்க நேரும் அரசியல் ஆய்வு, ஊடகம் என்பவற்றுக்கு அப்பாலான நண்பர்களிடமிருந்து இப்படியான கருத்துக்களைத்தான் எதிர்கொள்ள முடிகின்றது. அவர்களில் பிழையில்லை அவர்கள் மகிழ்ச்சி - சோர்வு என்ற உணர்வுநிலையினூடாக போராட்டத்தை பார்ப்பதன் விளைவுதான் அது.

ஒவ்வொரு விடுதலைப் போராட்டங்களும் ஒவ்வொருவிதமான அணுகுமுறைகளையும், தந்திரோபாயங்களையும் கொண்டிருக்கும். அது அந்தப் போராட்டம் நிலைகொண்டிருக்கும் சூழலுடன் பொருந்தியிருக்கும் ஒன்று. அந்த வகையில் பார்த்தால் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கும் சில வேறுபட்ட, முற்றிலும் புதியவகையான வரலாற்று அனுபவங்களும், படிப்பினைகளும் உண்டு. அதன்படிதான் பல்வேறு சவால் நிறைந்த காலகட்டங்களையும் புலிகள் எதிர்கொண்டு வந்திருக்கின்றனர்.

இப்பொழுது போராட்டம் ஒரு புதிய கட்டத்தை எதிர்கொண்டு நிற்கிறது. நமது கடந்த கால வரலாற்று அனுபவத்தின் வழி நின்று பார்ப்போமானால் இந்த கட்டத்தையும் புலிகள் தமக்கு சாதமாக எதிர்கொண்டு வெளிவருவார்கள்.

சிங்களம் பெரும் எடுப்பில் முன்னெடுக்கும் ஒவ்வொரு வலிந்த போர் முஸ்தீபுகளுக்குள்ளும் சிங்களத்தின் வீழ்ச்சியும் ஒழிந்திருக்கிறது. இதுதான் வரலாற்றை நகர்த்தும் முரண்விதி.

இந்த விதியிலிருந்து எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியும் தப்பிவிட முடியாது. ஆக்கிரமிப்பில் கிரங்கி சுகம்காணும் எதேச்சாதிகார சக்திகள் இந்த முரண் விதியை ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் கருத்தில் கொள்ளாமை என்னும் இறுமாப்பில்தான்; அவர்களின் அழிவின் வாயிலை திறக்கும் சாவி ஒழிந்திருக்கிறது என்பதைத்தான் நாம் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

இன்று சிங்களம் என்ன செய்கிறது? அது பெற்ற வெற்றிகள் என்ன? நான் இதற்கு முன்னரும் எனது கட்டுரைகள் சிலவற்றில் இது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.

கிழக்கில் கருணா விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் புலிகளின் ஆட்பலத்தை கணிசமான அளவில் பாதித்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சிங்களம் கிழக்கில் புலிகளை முழுமையாக பலவீனப்படுத்தும் நோக்கில் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டது.

சிங்களத்தின் தந்திரோபாயத்தை நன்கு விளங்கிக்கொண்ட புலிகள் கிழக்கின் சில பகுதிகளிலிருந்து வெளியேறினர். இதனையே சிங்களம் வெற்றியாக கொண்டாடி மகிழ்ந்தது.

உண்மையில் புலிகள் கிழக்கிலிருந்து வெளியேறவில்லை. ஆனால் சில கனரக ஆயுதங்களை வன்னி நோக்கி நகர்த்தியிருக்கின்றனர். கனரக ஆயுதங்களை நகர்த்தும் போது அதற்குரிய ஆளணியும் கூடவே நகரவேண்டியிருக்கும். அந்த வகையில் சில ஆளணியையும் வன்னி நோக்கி புலிகள் உள்ளெடுத்திருக்கின்றனர். அவ்வாறு புலிகள் செய்யாது இருந்திருந்தால் சிங்களத்தின் போரியல் தந்திரோபாயத்திற்கு புலிகள் பலியாக நேர்ந்திருக்கும்.

கிழக்கில் ஏற்பட்ட ஆளணிப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கிழக்கின் தமது நில அதிகாரத்தை புலிகள் தக்கவைப்பதாயின் அதற்கு ஏற்ப கனரக ஆயுதங்களையும் அதற்குரிய ஆளணியையும் செலவிட வேண்டியிருந்திருக்கும்.

அவ்வாறு புலிகள் செய்திருந்தால் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான தளமாக இருக்கும் வன்னியின் பாதுகாப்பில் அது தொய்வுகளை ஏற்படுத்தியிருக்கும்.

சிங்களத்தைப் பொறுத்தவரையில் எப்போதுமே அதன் இராணுவ இலக்கு வன்னிப் போர்முனையே தவிர கிழக்கல்ல. கிழக்கின் நிலைமைகளைத் தொடர்ந்து வன்னியை நோக்கிய சிங்களம் பாரிய படை நகர்வுகளை முன்னெடுக்கும் என்பதை துல்லிமாக மத்திப்பிட்டிருந்த புலிகளின் தலைமை. அதற்கு ஏற்பவே காய்களை நகர்த்தியது. நகர்த்துகின்றது.

இப்பொழுது அடுத்த கேள்வி எழலாம். புலிகள் அடுத்து என்ன செய்யப் போகின்றார்கள். இப்படியொரு கேள்வியையும் நான் மேலே குறிப்பிட்டவாறான பலரை சந்திக்க நேரும்போதெல்லாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. நமது விடுதலைப் போராட்ட வரலாற்றை நோக்கினால் ஒரு விடயத்தை நாம் தெளிவாக பார்க்கலாம்.

புலிகள் சில அடிகள் பின்நோக்கி நகருகின்றார்கள் என்றால் அவர்கள் மிகவும் அதிகமான அடிகளை நோக்கி பாயப்போகின்றார்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.

ஆனால் அதற்காக ஒரு காதலி வரும் வழிநோக்கி விழிவைத்திருக்கும் காதலன் போன்ற மனநிலையில் எவரும் இருக்கமுடியாது.

நம்பிக்கையுடன் நமது பணிகளை செய்வதுதான் நம் ஒவ்வொருவரதும் கடப்பாடாகும்.

பணிகள் ஆற்றாவிட்டாலும் நம்பிக்கை தளரா மனதுடன் இருப்பதும் ஒரு வகையில் ஈழத் தமிழர் தேசியத்திற்கு ஆற்றும் ஒரு வகைப் பணிதான்.

இன்று புலிகள் தமது ஆட்சிப்பரப்பின் பகுதிகளை நோக்கி வரும் சிங்களப் படைகளுடன் ஒரு முறியடிப்பு போரை மட்டுமே நடாத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இதுவரை சிங்களத்தை குறுக்கறுக்கும் எந்தவொரு படை நடவடிக்கைளையும் மேற்கொள்ளவில்லை.

புலிகள் மிகவும் நுட்பமாக காய்களை நகர்த்தினர். புலிகளுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்திருக்கலாம் என நான் ஊகிக்கின்றேன்.

ஒன்று, சிங்களத்தின் இராணுவ வலிமையை ஒரு திரும்பிப் போக முடியாத வகையில் ஒரு போர்ப் பொறிக்குள் அகப்படுத்துவது.

இரண்டு, மகிந்த நிர்வாகத்தை போரைத் தவிர வேறு எந்தவொரு அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளை நோக்கியும் திரும்ப முடியாத கையறு நிலைக்கு ஆட்படுத்துதல்.


இரண்டும் நோக்கங்களும் பெருமளவு நிறைவேறி விட்டதாகவே நான் எண்ணுகிறேன். இனி எஞ்சியிருப்பது சிங்களத்தையும் சிங்களத்திற்கு முண்டு கொடுக்கும் சக்திகளையும் அதிர்ச்சியில் உறையச் செய்யும் தாக்குதல்கள்தான்.

நம்பிக்கை தளரா மனதுடன் நாம் இருப்போம். 1987 ஆம் ஆண்டில் திரு.பிரபாகரன் அவர்கள் மதியுரைஞர் பாலாவுடன், இந்திய தூதுவர் டி.என்.டிக்சிட்டின் முன்னால் இருக்கின்றார். டிக்சிட் சொல்கின்றார், 'மிஸ்டர் பிரபாகரன் நீங்கள் இத்துடன் இந்தியாவை நான்கு தடவைகள் ஏமாற்றி விட்டீர்கள்." திரு.பிரபாகரன் கூறுகின்றார், 'அப்படியானால் நான் நான்கு தடைவைகள் எனது மக்களை காப்பாற்றியிருக்கிறேன்." டிக்சிட் மீண்டும், 'எனது சுங்கான் பற்றி முடிவதற்குள் உங்களை எங்களின் படைகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கவிடும்." பிரபாகரன் அவருக்கே உரித்தான அமைதியுடன் 'சரி பார்ப்போம்" என்கிறார்.

இன்றைய புலிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டால் அன்றைய வளர்ச்சி நிலை மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம். இப்பொழுது சிங்களம் தனது கடந்தகால தோல்வி வரலாற்றை மறந்து கொக்கரிக்கின்றது.

இப்பொழுதும் திரு.பிரபாகரன் அவருக்கே உரித்தான அமைதியுடன் எல்லாவற்றையும் நெறிப்படுத்திக்கொண்டிருக்கிறார். அவரது பொறுமையின் ஆழம் பல வேளைகளில் நமது ஆய்வுப் பார்வைகளுக்கு அப்பாற்பட்டதாகும்.

சிங்களத்தின் உச்சந்தலையில் அடித்த அனுராதபுர தாக்குதலை நாம் யாராவது எதிர்பார்த்ததுண்டா?

பொழுது விடிந்தே தீரும்.

-தாரகா-


Comments