தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்துறை நிபுணர் கேணல் ராஜூ

தமிழீழத் தேசியத் தலைவருடன் நீண்ட காலம் உடனிருந்து தலைவரின் போரியல் வடிவங்கள் பலவற்றிற்குச் செயல் வடிவம் கொடுத்தவர் கேணல் ராஜூஃகுயிலன். முதலாவது சிறப்புக் கொமாண்டோப் படையணியை உருவாக்கியதுடன் விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார். விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்டிலறிப் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இவர் 25.08.2002 அன்று சுகவீனம் காரணமாக வீரச்சாவடைந்தார். அவரின் நினைவாக இக் கட்டுரை பிரசுரமாகின்றது.



தாய்மண் விடிவுக்காக வீரம் பொருந்திய பல மாவீரர்களை எம் தாய்த்திருநாடு இழந்திருக்கின்றது. பல மகத்தான வீரர்களை தமிழர் வரலாறு பதிவு செய்திருக்கின்றது. தமிழ் மண் கண்ட வீர வரலாற்றில் பல்துறை நிபுணராக திகழ்ந்தவர் கேணல் ராஜூ அவர்கள்.

கரிகாலன் காலத்தில் சிறப்புமிக்க அத்தியாயமாகவும், ஆணிவேராகவும், பல்வகை நவீன வளர்ச்சிகளுக்கெல்லாம் முதுகெலும்பாகவும் விளங்கிய கேணல் ராஜூ அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்து வந்த தடயங்களை ஒருகணம் புரட்டிப் பார்ப்போம்.

தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் வளமான மண்வாசனை கொண்ட ஏழாலைக் கிராமத்தில் அம்பலவாணர் நேமிநாதன் என்னும் பெயருடன் 1961 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி இவர் பிறந்தார்.

இவரைக் கண்ணன் எனும் செல்லப்பெயர் கொண்டு அழைப்பவர்களும் உண்டு. மெலிந்த தோற்றம் கொண்ட இவர் கல்வியில் சிறந்தவராகவும் ஆசிரியர்களிடம் நன்மதிப்புப் பெற்றவராகவும் நல்லொழுக்கம் உடையவராகவும் விளங்கினார்.

சிறு வயதாக இருக்கும் போது அவரது கைகளும் கண்களும் ஏதாவதொன்றைச் செய்து கொண்டேயிருக்கும். எதனையும் செம்மையாகச் செய்து முடிக்கும் வல்லமை பொருந்திய அவர் பெற்றோர் மீதும் உடன்பிறந்தோர் மீதும் அளவற்ற பாசமும் மரியாதையும் பொறுப்புணர்ச்சியும் கொண்டவர்.

கறுப்பு யூலையும் யாழ். பொது நூலக எரிப்புச் சம்பவமும் இவரை மிகவும் பாதித்தன. அதனால் பாசத்தினை விட்டு, உறவுகளை விட்டு, வீட்டுப் பொறுப்பினை விட்டு சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்ட எம் தமிழினத்தையும் சூறையாடப்பட்ட எம் தாய்மண்ணையும் மீட்டெடுக்க நாட்டின் மீது அக்கறை கொண்டு தலைவர் பின் தன் பாதம் பதித்து 3 ஆம் பயிற்சிப் பாசறையிலிருந்து ராஜூவாக மாறினார்.

தலைவரின் சிறந்த வளர்ப்புக்களில் இவரும் ஒருவர். சாதாரண உயரம், வலுப்பெற்ற உடல் கட்டமைப்பு, அறிவின் ஆற்றலை வெளிப்படுத்தும் அரை வழுக்கை, பகல் இரவாய் ஓய்வின்றி உழைத்துச் சிவந்து போன கண்கள், பார்த்ததும் தள்ளி நிற்க வைக்கும் பார்வை இதுதான் போராளிகளும் தமிழீழ மக்களும் கண்ட கேணல் ராஜூ.

தலைவரின் மிகவும் நெருங்கிய உற்ற நண்பனாகவும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு நெறிப்படுத்தி வழிப்படுத்திய தளபதியாகவும் படையணிகளின் வளர்ச்சிகளுக்கெல்லாம் அத்திவாரமிட்டவராகவும் இவர் விளங்கினார்.

சிறந்த கல்விமானாகக் காணப்பட்ட இவர், போராளிகள் மத்தியில் வாசிப்புத் திறனையும் தேடல் பற்றிய அறிவினையும் புகட்டுவார். போராளிகள் மீது அக்கறை கொண்ட இவர் பாசத்தினால் அவர்களை அன்போடு அரவணைப்பார்.

இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் பல நவீன முப்பரிமாணங்களைக் கொண்டு தமது வெற்றியில் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பல துறைகளில் சாதனைகளை நிகழ்த்தி வருவதற்கு உந்துசக்தியாக இருந்தவர் கேணல் ராஜூ என்றால் மிகையாது.

எந்தக் கண்ணிவெடிப் பொறியினாலும் தகர்க்க முடியாது என அன்றைய உலக அரசுகள் வர்ணித்த வாகனத் தாக்குதல் முதல் இன்றைய சிறிலங்காவின் கனரக வாகனங்கள்; வரையான தாக்குதலுக்கு முன் நின்றவர். ?

இந்த வீரமகனின் ஒவ்வொரு செயற்பாடும் தமிழீழப் போராட்டப் பாதையின் திருப்புமுனைகளே.

ஆரம்ப காலத்தில் தொடர்பாடல் துறைக்கு மிகவும் வலுச்சேர்த்தவர் இவர். தொடர்பாடல் சாதனங்களை இலகுவாகவும் எளிமையாகவும் திறமையாகவும் கையாளும் இவர் புதிய புதிய தொடர்பாடல் சாதனங்களையும் உருவாக்கினார். அத்துடன் எதிரியின் தொடர்பாடலினை ஒட்டுக்கேட்கும் யுத்திகளையும் மேம்படுத்தினார்.

ஒரு சமயம் தேசியத் தலைவரை மணலாற்றுக் காட்டில் இந்திய இராணுவத்தினர் முடக்கி எதுவித உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் இந்திய இராணுவத்தினர் சுற்றிவளைத்த போது தூதுவராகச் சென்ற லெப். கேணல் ஜொனியை எதுவித இரக்கமுமின்றி கொன்றொழித்து தமது முற்றுகையை மேலும் இறக்கிக் கொண்டிருந்தது இந்திய இராணுவம்.

அத்தருணம் தலைவர் தன் எண்ணத்தில் உருவெடுத்த ஜொனி மிதிவெடியினை எதுவித கருவிகளும் இன்றி காட்டில் கிடைக்கப் பெற்றவற்றைக் கொண்டு திறம்பட உருவாக்கி இந்திய இராணுவத்தை வலுவிழக்கச் செய்த பெருந்தகை கேணல் ராஜூ என எல்லோராலும் போற்றப்பட்டவர். இவற்றினை விட பொறிவெடிகளை எந்தெந்த இடங்களில் முடிகின்றதோ அங்கெல்லாம் வெடிக்கச் செய்து இந்திய இராணுவத்தினரை நடைப்பிணமாக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் இருப்பையும் தலைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தினார்.

தனது அறிவின் கூர்மையால் பசிலன்-2000 எனும் புதிய மோட்டாரையும் அதற்குரிய எறிகணைகளையும் வடிவமைப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்த கேணல் ராஜூ அவர்கள் வெடி பொருட்களை உற்பத்தி செய்யும் பொறுப்பினை ஏற்று எதிரியின் வசமிருந்த எமது தமிழீழ கடற்பரப்பினை மீட்டெடுக்க முதன்முதலில் நிகழ்த்தப்பட்ட கரும்புலிகளின் தாக்குதலுக்கு தேவையான அனைத்து வெடிபொருட்களினையும் செய்து அத்தாக்குதலின் வெற்றிக்கு இவரே உறுதுணையாக நின்றார்.

மற்றும் கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிப் பொறி அமைப்புக்கள் நேரக் கணிப்பொறிகள் என்பவற்றினை தாக்குதலின் வகை, தன்மை, சூழ்நிலை, காலநிலை என்பவற்றுக்கேற்ப வடிவமைத்ததுடன் வெடிமருந்துத் தொகுதி ஒன்றின் உற்பத்தியின் போது அதன் ஒவ்வொரு பகுதிகயையும் தானே நேரில் நின்று அவதானித்து அதனைப் பரிசீலனை செய்து திருப்தி ஏற்பட்டதும் தான் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அனுமதிப்பார்.

அத்துடன் வெடிபொருள் பிரச்சினையால் கரும்புலிகளின் தியாகம் வீணாகிவிடக்கூடாது என்பதில் நம்பிக்கையும் உறுதியும் கொண்ட இவர் ஒரு வெடிமருந்துத் தொகுதி எதிர்பார்த்த வெற்றியை அளிக்காது விட்டால் அதற்கான காரணத்தை தொடர்ந்து ஆராய்ந்து புதிய தொழில்நுட்பத்தினை மாற்றி மறுவடிவத்தினை உருவாக்கி வெற்றியளித்தால் அதனுடன் நிற்காது மேலும் பல புதிய முறைகளை விரிவுபடுத்துவார்.

பின்னாளில் தலைவரின் சிந்தனையில் உருப்பெற்ற சிறுத்தைப் படையணியிலும் சிறப்பு படைப்பிரிவிலும் பொறுப்பு வழங்கப்பட அதன் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்தார்.

காலப்போக்கில் தரைச் சிறுத்தையுடன் கடற் சிறுத்தையணி காட்டுச் சிறுத்தையணி என அந்த அணி மேலும் விரிவடைந்தது. இவற்றின் பாரிய பொறுப்பையேற்று வழிநடத்திச் சென்ற அதேநேரம் மரபு வழிப்படையணியாக உருவாக்கம் பெற்ற கடற்புலிகளுக்கு தேவையான ராடர், இடியன்கள், G.P.S.. என பல தேவைகளையும் பூர்த்தி செய்தார்.

தமிழீழ மக்களின் இருப்பைச் சிதைத்து அவர்களின் உயிர்களை குடித்துக் கொண்டிருந்த ஆட்டிலறி எறிகணை 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு ஓயாத அலைகள் ஒன்று தாக்குதலின் போது போராளிகளின் கைவசமானது. அவர்களின் கைகளில் அது ஒரு புதியதொரு பொருளாக இருந்தது.

அதனது இயக்கம், செயற்பாடு, பராமரிப்பு, அதனை கழற்றிப் பூட்டுவது என்பவை அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புதியதொன்றாகவே இருந்தது.

எனினும் தான் அறிந்த சகல ஊடகங்கள் மூலமும் விடாமுயற்சியாக நின்று அதனது தாக்குதல் திறன், வீச்சு, துல்லியம் என்பவற்றை திறம்பட அறிந்து, பரீட்சித்து வெற்றியும் பெற்றவர்.

தீச்சுவாலை நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தில் ஆட்டிலறிகளின் துல்லியத்தின் மீது போராளிகள் கொண்டிருந்த அசையா நம்பிக்கையாலும் கேணல் ராஜூ அவர்களின் மிகத் திருத்தமான வேகமான கட்டளைகளின் கீழ் ஆட்லறி படைப்பிரிவின் செயற்பாட்டிலும் போராளிகள் பக்கம் வந்து கொண்டிருந்த தீச்சுவாலை திடீரென திசைமாறி எதிரியின் மீது திரும்பி அவர்களை அழித்துக்கொண்டிருந்தது. உண்மையிலேயே இத் தவப்புதல்வனின் செயல்கள் எல்லோராலும் விதந்து போற்றப்பட்டது.

அணுவினுள் ஊடுருவி ஆராயும் தன்மை கொண்ட இவர் கண்ணில் தென்படும் சிறு துரும்பினைக்கூட எடுத்து அதன் பூர்வீகம், நிகழ்காலம் எதிர்காலம் என்பவற்றையும் அதனுடைய அறிவியல் விளக்கங்களையும் அரசியல் நிலைமை இராணுவ தந்திரோபாயங்கள் என்பவை பற்றியும் உடனிருப்போருடன் அலசுவார். அதனை எத்தேவைக்காகப் பயன்படுத்தலாம் என ஆராயவும் தொடங்கி விடுவார். தான் அறிந்த விடயங்களை பிறருக்கு சொல்லிக் கொடுப்பதில் வல்லவர். தனக்குத் தெரியாத எந்தவொரு விடயாமகவிருந்தாலும் பெரியவர் சிறியவர் எனும் பாரபட்சமின்றி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவர்.

எந்தக் காயை எவ் வழிகளில் நகர்த்த வேண்டும் என்ற ஆற்றல் கொண்ட இவர் போராளிகள் யாராவது தவறு செய்தால் அவர்களின் மனங்களைக் கஸ்டப்படுத்தாத வகையில் அவர்கள் செய்த பிழைகளின் பின் விளைவுகளைப் பொறுமையுடன் பரிந்துரை செய்வார். கேணல் ராஜூ அவர்களுக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். இரசனை உள்ளம் கொண்ட இவர் தமிழீழப் பாடல்களை விரும்பிக் கேட்கும் இசைப்பிரியர் என்றும் கூடச் சொல்லலாம்.

இராணுவ நடவடிக்கைகளை குறுகிய காலத்துக்குள் முறியடித்து வெற்றி கண்ட இவரால் இயற்கையின் கொடூரத்தை ஜீரணிக்க முடியவில்லை. மரணம் தன்னை நெருங்குவதற்கு முன் தன்னிடமுள்ளவற்றை போராளிகளுக்கு கொடுத்துவிட வேண்டும் என அரும்பாடுபட்ட உத்தமர். இவர் தனக்குள் ஊடுருவிய நோயினைக் கூடப் பொருட்படுத்தாமல் தாய்மண் மீதும் தலைவர் மீதும் கொண்ட பற்றினால் கடமைகளையும் பொறுப்புகளையும் இடையில் விட்டுச் செல்லப் போகின்றேனே என தன்னையே வருத்தி வேதனையாலும் வலியினாலும் துடித்த மகாபுருசனை இழந்தது தமிழீழ போராட்டத்தின் பேரிழப்பாகும்.

பல்வேறு ராஜூக்களை தாயக விடுதலைப் போர் உருவாக்கினாலும் அவரது இழப்பு எவராலும் ஜீரணிக்க முடியாத ஒன்று. பல்வேறு கற்பனைகளையும், கனவுகளையும், ஆசாபாசங்களையும் சுமந்த கேணல் ராஜூ அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றுவது ஒவ்வொரு தமிழ் மகனின் கடமையும் பொறுப்பும் ஆகும். நாளைய சந்ததியினரின் பாடப்புத்தகத்தில் இந்த மாவீரனின் வீரதீரச் செயல்கள் தமிழ்மொழியின் சொல் முத்துக்களாகச் செதுக்கப்படுவதை வரலாறு சொல்லும்.

சிந்தனையின் சிகரம்
கேணல் ராஜூ
சுழன்று கொண்டிருக்கும் காலச்சக்கரத்தில்
வந்துதித்த அறிவின் பொக்கிசம்
பளிச்சிடும் புன்னகையால் அனைவரையும்
தம்பக்கம் பாச வரம்பு கட்டி இழுத்த
அன்பின் உறைவிடம்
இவர் கண்களில் தமிழனின் விடுதலை மூச்சு
அனலாக எரிந்தது
செவிப்பறைகளில் தமிழனின் அழுகுரல்
ஆழமாக ஒலித்துக்கொண்டிருந்தது
நாவில் தமிழீழம் எனும் சொல்லுறுதி
தெரிந்தது

தமிழின் விடுதலைக்காக
நீதிகேட்டுப் பயணித்த இளம் தாரகை நீர்
நீர் நடந்து சென்ற பாதங்கள் ஒவ்வொன்றும்
நிலமகள் மீது படும்போது உம் ஆத்ம தரிசனம்
கண்டு பூரித்தாள் - உம் வீரத்தின்
வரலாறுகள் காற்றின் இனிமையுடன் சென்று
அண்டங்களுக்கு பரவியது
கொடிய நோய் உம்மை வருத்தினாலும்
அதனைக் கண்டு கலங்காது தாய்மண்ணைக்
காக்க போரடி களம் பல கண்டீர் - உமது
இழப்பால் தமிழினம் சிந்திய கண்ணீர் துளிகளின்
சிதறல்கள் வானத்திரையில் நட்சத்திரங்களாக தோன்றின
வானவில்லின் வர்ணங்களில்
உம் நாமம் வரையப்பட்டது - பயணங்கள்
என்றுமே முடிவதில்லை - உம்மால்
பண்படுத்தப்பட்ட போராளிகளின் கைகளில்
நீர் ஏந்திய ஆயுதம் தவழும் போது உமது
பயணமும் முடியவில்லை அவை தொடருகின்றன.

தமிழனுக்கான மலரப் போகும் தமிழீழத்தில்
உமக்கொரு அணையா ஒளிச்சுடரை
ஏற்றுவான் தமிழன்
அந்த வெற்றி வாகை சூடிய புனித நாள்
உமது கல்லறையின்
செவிகளுக்கு வந்து சேரும்.

- த.தமயா -


Comments