சிங்கள அரசின் சதித் திட்டங்களை தடுத்து நிறுத்த தொடர்ந்து போராட வேண்டும் - செல்வராசா கஜேந்திரன்

சிங்கள அரசின் கபட நோக்கங்களை சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்தி அதனை முறியடிப்பதற்கு தொடர்ந்து போராட வேண்டும். நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசுகளின் உதவியுடன் வன்னியிலிருந்து மக்களை வெளியேற்ற முயலும் சிங்கள அரசின் சதித் திட்டங்களை தடுத்து நிறுத்த தொடர்ந்து போராட வேண்டும்.

தாயகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை புரிந்து கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒவ் வொருவரும் விரைந்து செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் விடுத்த ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு….

ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற் கொண்டு வரும் இன அழிப்பு போர் காரணமாக தமிழ் மக்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சொந்த ஊரில் சொந்த வீட்டில் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழ்ந்த மக்கள் அவர்களது பாரம்பரியமான வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வருமானங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் அனைத்திற்கும் கையேந்தி வாழும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து சிங்களப்படைகள் வன்னி பிரதேசத்தின் மீது மேற்கொண்டு வரும் கொடிய இன அழிப்பு போர் காரணமாக இரண்டு இலட்சம் வரையான மக்கள் சொந்த வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கபட்டு அவர்களது வீடுவாசல்கள் சொத்துக்கள் அழிக்கப்பட்டு அவர்களது நெல் வயல்கள் மரக்கறித் தோட்டங்கள் தென்னந் தோட்டங்கள் மாட்டுப் பண்ணைகள் ஆட்டுப்பண்கைள் கோழிப் பண்ணைகள் என சகல வருமான மூலங்களும் சிங்களப் படைகளால் அழிக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் வாழ் விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு வன்னியில் இடம் பெயர்ந்துள்ள மக்களை முழுமையாக தங்க வைக்க கூடியளவிற்கு அங்கு பொதுக்கட்டடங்களோ பாடசாலைகள் கோவில்களோ போதியளவில் கிடையாது. இதனால் மக்கள் வீதியோரங்களிலும் மர நிழல்களின் கீழும் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு வேளை கஞ்சி குடிப்பதற்கு கூட நாதியற்றவர்களாக மாற்றப்பட்டுள்ள அந்த மக்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகளை இன்று வரை தமிழீழ விடுதலைப் புலிகளும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக தமிழர் புனர் வாழ்வுக்கழகம் சீடொட் நிறுவனம், வெண்புறா நிறுவனம் உட்பட சில உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் பெருமளவான தொண்டர்களின் உதவிகளுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

உலகின் பல நாடுகள் சிங்கள அரசின் அழுத்தத்தின் காரணமாக தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினை தடை செய்துள்ள அதேவேளை சுயாதீனமான நிதிகளை திரட்டி தாயகத்தில் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் கொடுமைப்படுத்தப்படும் தமது உறவுகளுக்கு உதவுவதையும் சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு உதவும் நடவடிக்கை என்று கூறி தடை செய்துள்ள போதிலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனது தொண்டர்களின் உதவியுடன் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை தாயகத்தில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறும் வாழும் மக்களுக்கு தேவையான உணவு மருந்துப் பொருட்களையும் மக்களுக்கான தற்காலிக கொட்டகைகளை அமைப்பதற்கான தறப்பள்கள் கூரைத் தகடுகள் மற்றும் பொருட்களையும் வவுனியாவில் இருந்து எடுத்துச் செல்லப்படுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதனால் அகதிகளாக்கப்பட்ட மக்கள் மிக மோசமான மனிதாபிமான பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளனர். குறிப்பாக பெண்கள்இ குழந்தைகள், நோயளர்கள், கற்பிணித் தாய்மார்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பசியினால் கதறும் குழந்தைகளுக்கு ஒரு பிடி சோறு கூட ஊட்டிவிட வழியில்லாத நிலையில் குழந்தைகள் பசியினால் துடிக்கும் போது அவர்களின் பசியைப் போக்க வழியில்லாமல் கண்ணீர் விட்டு அழும் தாயின் மனக்குமுறல் இந்த உலகத்திற்கு தெரியவில்லை.

பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் அகதிகளாக்கப்பட்டமையினால் அவர்களது கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரில் சொந்த வீட்டில் வாழ்ந்த போது சுயகொரவத்துடன் சந்தோசமாக பாடசாலையில் கல்வி பயின்றார்கள் இந்த பிள்ளைகள்.

ஆனால் இன்று வீடு வாசல் சொத்து சுகங்கள் அனைத்தையும் இழந்து வீதியல் நின்று ஒரு வேளை சோற்றுக்காக கையேந்தும் நிலைக்கு பல்லாயிரக்கணக்கான தமிழ் சிறார்கள் ஸ்ரீலங்காவின் சிங்கள அரசால் தள்ளப்பட்டுள்னர்.

இந்தக் கொடூரம் இன்று வரை சிறுவர் ஆடசேர்ப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டிவரும் ஐ.நா அமைப்புக்களுக்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் தெரியாமலே உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட வன்னிப் பகுதியில் சுமார் ஐந்து இலட்சம் வரையான மக்கள் வாழ்நது வருகின்றனர். இவர்களில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்களுக்குரிய அத்தியாவசிய பொருடகளையும் மற்றும் அவசர மனிதாபிமான உதவிகளைகளையும் மருந்துப் பொருட்களையும் சென்றடையவிடாது தடை செய்துள்ள சிங்கள அரசு மக்களது வாழ்விடங்கள் மீது தொடர்சியான விமானத் தாக்குதல்களையுமஇ கிளைமோர்த் தாக்குதல்களையும்இ எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டு பொது மக்களை படு கொலை செய்தும் காயப்படுத்தியும் வருகின்றது.

இத்தாக்குதலுக்கு பின்னர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களை அங்கிருந்து வெளியேறி வவுனியாவில் இருந்து பணியாற்றுமாறு அரசு கட்டளையிட்டுள்ளதுடன் ஐநா விற்குச் சொந்தமான தொண்டு நிறுவனங்களையும் வன்னிக்குச் செல்வதனை தவிர்க்குமாறு அரசு எச்சரித்துள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற நிற்பந்தித்து வருகின்றது.

வன்னியில் வாழும் தமிழ் மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறி இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களுக்குள் வரும்படி விமானங்கள் மூலம் சிஙக்ள அரசு துண்டுப்பிரசுரங்களை வீசி வருகின்றது.

அந்த மக்கள் தமது சொந்த ஊரில் சொந்த வீடுகளில் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கே விரும்புகின்றனர். அவ்வாறு வாழும் மக்களையும் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் சிங்கள அரசு வேகமாக மேற் கொண்டு வருகின்றது.

அரசு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே வேளை வன்னியிலுள்ள பொது மக்களை அங்கிருந்து வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வில்லை என்ற பொய்ப் பிரசாரத்தினை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

சிங்கள அரசு கடந்த காலங்களை போன்று தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போரை சர்வதேச ரீதியில் நியாயப்படுத்தி தனது நடவடிக்கைகளுக்கான சர்வதேச ஆதரவை பெறும் நோக்கிலேயே இவ்வாறு பொய்யான பரப்புரைகளை ஆரம்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா அரசின் நோக்கங்களுக்கு துணைபோகும் விதமாக சர்வதேச மன்னிப்புச் சபை அண்மையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் வன்னியில் உள்ள மக்களை வெளியேற விடாது புலிகள் தடுத்து வைத்திருப்பாக குற்றம் சாட்டியுள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

வன்னியில் வாழும் தமிழ் மக்கள் எவரும் அங்கிருந்து தமது பாரம்பரியமான வாழ்விடங்களில் இருந்து வெளியேறி இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களுக்கு செல்லவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியில் சுதந்திரமாக வாழும் மக்களை விடுவிக்கப் போவதாக கூறி மக்களை வெளியேற்றி கைதிகளாக மாற்றுவதற்கு அரசு முயல்கிறது.

கடந்த 2006ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தினை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிங்கள அரசு பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்ட பொழுது 200000திற்கும் அதிகமான பொது மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

அகதிகளாக்கப்பட்ட அந்த மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அகதி முகாம்களிலும் மர நிழல்களின் கீழும் வீதியோரங்களிலும் அவல வாழ்வு வாழ வேண்டி இருந்தது.

அந்த மக்களுக்கான உணவு மருந்து உட்பட அத்தியாவசிய மற்றும் அவசர மனிதாபிமான உதவிகள் எதுவும் செல்ல விடாது சிங்கள இராணுவம் தடை செய்ததுடன் அம் மக்கள் மீது தொடர்ச்சியான வான் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் கிளைமோர்த் தாக்குதல்களும் சிங்கள இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டன வைத்தியசாலைகள் அழிக்கப்பட்டன மக்கள் கொன்று குவிக்கப்பட்னர் காயப்படுத்தப்பட்டனர்.

மனிதாபிமான யுத்தம் என்ற போர்வையிலேயே இக்காடைத்தனங்கள் அரங்கேற்றப்பட்டன. இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் மூலம் பொது மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு பலவந்தமாக நிற்பந்திக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தினை ஆக்கிரமிப்பதற்கான ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே அரசு மக்களை பலிக்கடாக்களாக்கி அதன் மூலம் தனது இராணுவ இலக்கினை நிறைவேற்றிக் கொண்டது.

இச்சம்பவங்களை கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றில் தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்களையும் விவாதங்களையும் நடாத்தியது. தூதரக அதிகாரிகளை சந்தித்து எமது மக்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தினை உடன் நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு கோரியது.

எனினும் இக் கொடூரங்கள் அனைத்தும் போர் நிறுத்த உடன் படிக்கைக்கு மாறாக நிறைவேற்றப்படும் வரைக்கும் சர்வதேச சமூகம் வாய் மூடி மௌனமாக நின்று ஆதரவு வழங்கியது.

தென் தமிழீழ உறவுகளுக்காக குரல் கொடுத்தமைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களை சிங்களம் பலி கொண்டது.

இதுதான் ஐனநாயக வழியில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அவலத்தில் துடித்த மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ் மக்களுக்கும் சிங்கள் அரசு தந்த பரிசு.

கிழக்கு மாகாணம் முழுமையாக சிங்கள அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று ஒன்றரை ஆண்டுகள் நிறைவடயும் நிலையில் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுக்களாலும் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டும் பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும் உள்ளனர். இவை இன்றும் தொடர்கதையாகவே உள்ளது.

இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காலப் பகுதியில் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக மீளக் குடியமர்த்தப்படவில்லை.

ஆனால் திருமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பௌத்த விகாரைகள் அமைப்பதும் வீதிகளுக்கு சிங்களத்தில் பெயர் சூட்டுவதும் தமிழர் தாயகத்தினை சிங்கள மயமாக்குவதற்குமான நடவடிக்கைகளும் தமிழர் தாயகப் பிரதேசங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதற்கமான வடவடிக்கைகள் எவ்வித தடைகள் தாமதங்களும் இன்றி துரித கதியில் ஆரம்பித்துள்ளது.

போதாக்குறைக்கு மக்களுக்கு சொந்தமான குடியிருப்பு பிரதேசங்களில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கும் சிங்களவர்களது முதலீட்டு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமாதான தேவதையாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட சந்திரிகா அரசினால் யாழ் குடா நாடு ஆக்கிரமிக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அதன் பின்னர் குடா நாட்டில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிங்களப் படைகளாலும் துணை இராணுவக் குழுவான ஈபிடிபி யினராலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

நுற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆறு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர்.

அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு சொந்தமான வீடுகள் அனைத்தும் படையினர் வசம் உள்ளது. அகதிகளாக்கப்பட்ட மக்கள் 13 வருடங்களுக்கு பின்னரும் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை.

இந்த மக்களுக்கு சொந்தமான வாழ்விடஙகள் சிங்கள அரசினால் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் வேகமாக அமைக்கப்பட்டு வருகினறது. சிங்கள சிறைக்கைதிகள் தென்னில்கையில் இருந்து கொண்டு வரப்பட்டு படையினருக்கு தேவையான மரக்கறி உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறுதான் மணலாற்றுப் பிரதேசத்தில் உள்ள பதவியா கென்பாம் டொலர்பாம் என்ற தமிழ் கிராமங்கள் சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டது என்பதனை தமிழர்கள் மறக்கவில்லை.

போர் காரணமாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப் பாதை பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 2002.04.08 ல் திறக்கப்பட்டு 2006 ஆவணி 11ம் திகதி மூடப்பட்டது.

தரை வழிப்பாதை மூட்ப்பட்டதன் மூலம் யாழ் குடா நாட்டில் இருந்த 600000 இலட்சம் வரையான மக்களும் வெளி மாவட்டங்களுக்கு தரை வழிப் பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டது.

இதனால் யாழ் குடா நாட்டிற்கான உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் அவசர மனிதாபிமானத் தேவைகளுக்குமான பொருட்களும் எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டது.

இதனால் 2006ம் ஆண்டின் இறுதியில் யாழ் மக்கள் பட்டினிச்சவை எதிர் நோக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது தரை வழிப் பாதையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை யாழ் குடா நாட்டு மக்களாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டது.

அக் கோரிக்கையை அரசு தொடர்ந்து நிராகரித்ததுடன் கடல் வழியாக பொருட்களை அனுப்ப போவதாக கூறியது.

அச்சந்தற்பத்தில் யாழ் குடா நாட்டிலுள்ள படையிருக்கான ஆயுத வினியோகங்கள் செய்வதும் படையினரை திருமலைக்கும் யாழ்பாணத்திற்கும் ஏற்றியிறக்கும் வினியோக நடவடிக்கையை மேற்கொள்வதில் படையினர் பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்தனர்.

இதனால் யாழ் குடாநாட்டு மக்களினது போக்குவரத்தினையும் அவர்களுக்கான உணவு வினியோகத்;தினையும் கடல்வழியாக மேற் கொள்வதன் மூலம் குடா நாட்டிலுள்ள படையினருக்கான வினியோக நடவடிக்கைகளை பாதுகாப்பாக மேற்கொள்ளும் நோக்கில் தரை வழிப்பாதையை அரசு திறக்க மறுத்தது.

தமது இராணுவ நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு மக்களது மனிதாபிமான விடயத்தினை அரசு ஆயுதமாக கையில் எடுத்து செயற்படத் தொடங்கியது.

பொது மக்களுக்கான உணவு மருந்து பொருட்களை கடல் வழியாக எடுத்துச் செல்வதனை தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்வதாக அரசு பொய்ப் பிரசாரம் செய்தது.

அதன் அடிப்படையில்; யாழ் குடா நாட்டில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவும் மருந்தும் மட்டுமே முக்கியம் அதற்காக தரை வழிப்பாதை திறக்கப்படல் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை கடல் வழியாக உணவும் மருந்தும் எடுத்துச் செல்லப்படல் வேண்டும் என சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்ததன் விளைவு இன்று வரை தரை வழிப் பாதை திறக்கப்படவில்லை.

மாறாக சர்வதேச சமூகத்தின் அந்த நிலைப்பாடு அரசு தனது இராணுவ நோக்கங்களை நிறை வேற்றுவதற்கு துணை புரிந்துள்ளது.

இன்று வரை யாழ் குடா நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகள் கூட பூர்த்தி செய்யப்பட வில்லை. இன்று கொழும்பில் ஒரு கிலோ அரிசி வாங்குவதற்கு கொடுக்கும் விலையை விடவும் மூன்று மடங்கு அதிக விலை கொடுத்தே யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் ஒரு கிலோ அரிசி வாங்க வேண்டியுள்ளது.

மக்களது தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டதோ இல்லையோ இராணுவத்திற்கான உணவு மருந்து ஆயுத வினியோகங்களும் படையினர் விடு முறையில் வீடு சென்ற திரும்புவதும் மாத்திரம் ஒழுங்காக எவ்வித தடையும் இன்றி நடை பெற்று வருகின்றது. தரை வழிப் பதை மூடப்பட்டமையினால் குடா நாட்டிலுள்ள மக்கள் எங்கும் தப்பிச் செல்ல முடியாத நிலையில் வாழுகின்றனர்.

அங்கு வாழும் மக்கள் தினமும் படையினரால் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் வருகிறன்றனர். பலர் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சரணடைந்தும் வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்த மக்கள் 1995ம் ஆண்டு யாழ் குடா நாட்டை சிங்கள இராணுவம் கைப்பற்றிக் கொண்டு முன்னேறிய போது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து வன்னிக்கு இடம் பெயர்வதற்காகவே வலிகாமத்திலிருந்து இடம் பெயர்ந்து கிளாலி வரை சென்றனர்.

ஆனாலும் அம் மக்கள் முழுமையாக வன்னிக்கு செல்வதற்கு முன்னரே சிங்களப் படைகள் தென்மராட்சியை கைப்பற்றிக் கொண்டமையினால் அவர்கள் இராணுவத்தின் பிடியில் சிக்கி அங்கு வாழ வேண்டிய நிலைக்குள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 13 ஆண்டுகளில் ஒன்பது ஆண்டுகளாக அரசாங்க கட்டப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள கொழும்பிற்கு செல்வதற்கு அல்லது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு சிங்கள இராணுவத்தினரிடம் பயண அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் இவ்வாறு பயண அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்காக இராணுவ முகாம்களுக்குச் சென்றவர்களில் நூற்றுக்கணக்கானோர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை.

இக் கொடூரங்கள் அனைத்தும் சர்வதேச சமூகத்திற்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் நன்கு தெரியும். அவர்கள் விடுகின்ற அறிக்கைகளுக்கு பயந்து சிங்கள அரசு தனது படுகொலைகளை நிறுத்தவில்லை அது அதிகரித்து கொண்டே செல்கின்றது.

கடந்த 1990 தொடக்கம் யாழ் குடா நாட்டில் அகதிகளாக்கப்பட்ட மக்கள் குடா நாடு படையினரால் கைப்பற்றப்பட்டு 13 ஆண்டுகள் கடந்தும் மீளக் குடியமாத்தப்படவில்லை இது தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபையோ ஏனைய ஐ.நா நிறுவனங்களோ சர்வதேச நாடுகளோ இன்று வரை எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.

இவ்வாறு அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமைக்கு ஆழமான ஆபாத்தான அரசியல் உள்நோக்கம் உண்டு.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக ஒற்றுமையாக குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 1976ம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் 1977ல் நடை பெற்ற தமிழீழத்தை வலியுறுத்திய பாராளுமன்றத் தேர்தல் முதல் தமிழ் மக்கள் ஓரணியில் நின்று தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியே வந்துள்ளனர்.

தமிழீழத்தை வலியுறுத்திய 77ம் ஆண்டு தேர்தலில் வடகிழக்கில் இருந்த அனைத்து பாராளுமன்ற ஆசானங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியமைக்கு காரணம் வடக்கு கிழக்கு முழுவதிலும்; செறிவாக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் ஒட்டு மொத்தமாக ஒருமித்த கருத்துடன் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்து வந்ததுடன் தமது வாக்குரிமையை தமிழ் தேசியத்தின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக பயன் படுத்தியும் வந்தமையுமேயாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகப் பிரதி நிதிகளாக ஏற்றுக் கொண்டு 77ம் ஆண்டு வட்டுக் கோட்டை தீர்மானத்தினை நிறை வேற்றுதல் என்ற அடிப்படையில் 2004 ம் ஆண்டில் வடக்கு கிழக்கில் ஓர் நீதியானதும் நேர்மையானதுமான அடிப்படையில் வடகிழக்கில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களைப் பெற்றமைக்கான காரணம் 77ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினடிப்படையில் தமது அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதிலும் தமது ஏகப் பிரதி நிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே என்பதிலும் மக்கள் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்து தமது வாக்குகளை அளித்தமை மட்டுமல்ல வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்தமையுமாகும்.

கொழும்பு உட்பட தென்னிலங்கையிலும் மலையகத்திலும் வாழும் தமிழ் மக்கள் 77ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படல் வேண்டும் என்பதையே விரும்புகின்ற போதிலும் அவர்களால் தமது விருப்பங்களை எங்கும் வெளிப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது.

எனவே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றி தமிழர் வாழ்விடங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களது பெரும்பான்மையை சிறுபான்மையாக்குதன் மூலம் எதிர் காலத்தில் தமிழ் பிரதிநிதித்துவதிதனை படிப்படியாக இல்லாது ஒழிப்பதே சிங்கள அரசின் எண்ணமாகும்.

இது மகிந்த அரசின் திட்டம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்கள பௌத்த பேரினவாதிகளின் திட்டமும் இதுவேயாகும்.

இதனை முழுமையாக நிறை வேற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும் தடையாக இருந்து வருவதால் அவர்களை கூண்டோடு அழிக்க மகிந்த அரசு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றது. அதற்கான ஓர் தந்திரோபாயமாக வன்னியிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்ற முயல்கின்றது.

அதற்காக இரண்டு இலட்சம் மக்களை அகதிகளாக்கியுள்ளதுடன் அவர்களுக்கான உணவு மருந்து உட்பட உடனடி மனிதாபிமான உதவிகளும் வன்னிக்கு செல்லவிடாது தடை செய்துள்ளது.

தொடர்ந்து அம்மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டுத்தாக்குதல்களையும் செல்தாக்குதல்களையும் மேற்கொண்டு எஞ்சியுள்ளவர்களையும் இடம் பெயர வைப்பதிலும் ஏற்கனவே இடம் பெயர்நதுள்ளவர்களை மீண்டும மீண்டும் இடம் பெயர வைப்பதிலும் மக்களை படு கொலை செய்வதிலும் காயப்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதன் மூலம் உணவு இன்றியும் மருத்துவ வசதியின்றியும் மக்கள் இறக்கும் நிலையை விரைவு படுத்த முயல்கின்றது.

வன்னியில் வாழும் 500000 திற்கம் அதிகமான மக்களதும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இரண்டு பொது வைத்தியசாலைகள் மட்டும் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இயங்குகின்றன. அதில் முல்லைத்தீவு வைத்தியசாலை கடந்த மாதம் சிங்கள இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் சேத மடைந்துள்ளது.

இத்தாக்குதல் மூலம் வைத்தியசாலை இடம்பெயரும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன் பல நெருக்கடிகள் மத்தியில் சேவை மனப்பான்மையுடன் வன்னியில் சேவையாற்றும் வைத்தியர்களை அச்சுறுத்தி வெளியேற்ற அரசு முயல்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மக்களை அச்சுறுத்தி வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றவும் அதன் மூலம் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி அழிக்கவும் அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தினைப் போன்று வடக்கிலும் தமிழர் வாழ்விடங்களை எவ்வித தடைகளும் இன்றி சிங்கள பௌத்த மயமாக்குவதற்கு சிங்கள அரசு சதித் திட்டம் தீட்டி செயற்படுகின்றது.

வன்னியிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதிக்கிறார்கள் இல்லை என்ற பிரசாரத்தினை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மக்கள் மீது அரசு மேற்கொண்டு வரும் இராணுவ ரீதியான அழுத்தங்களை தடுத்து நிறத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வன்னியில் பசியால் வாடும் மக்கள் அங்கிருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தால் அரசு அவர்களுக்கான சோற்றையும் மருந்தையும் வழங்கும்.

எனவே மக்கள் வன்னியில் இருந்து வெளியெறி அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் என்ற தோரணையில் அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு துணை போகும் வகையில் சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை வெளியிட்டுள்ளமையானது தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு துணைபோகும் செயற்பாடாகவே அமைந்துள்ளது.

வன்னியில் தமது சொந்த மாவட்டத்தில் வாழும் மக்களை வெளியேற்றும் நோக்கில் அவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக அவர்களுக்கான உணவு மருந்து பொருட்கள் சென்றடைய விடாது தடுப்பதும் போரில் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் நடவடிக்கை என்பதனை சர்வதேச மன்னிப்புச் சபை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் வெறுமனே வயிற்றுப் பசியை போக்கும் சோற்றுக்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல என்பதனை சர்வதேச சமூகம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

வன்னியில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்துள்ள மக்களை ஐ.நா வின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக அப்பகுதில் வைத்து அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை கிடைக்கச் செய்வதன் மூலம் காப்பாற்றுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களை போலல்லாது சர்வதேச சமூகம் இந்த சந்தற்பத்திலாவது பொறுப்புணர்வுடனும் மனச்சாட்சியுடனும் செயற்பட வேண்டும்.

காலம் காலமாக தாம் வாழ்ந்து வந்த தமது வீடுகளில் இருந்து அவர்களை வெளியேறுமாறு கட்டளையிடுவதற்கு இறமையுள்ள அரசுக்கு கூட உரிமையில்லாதபோது ஆண்ட தமிழனை வன்னி மண்ணிலிருந்து வெளி வெளியேறச் சொல்ல சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கங்கள் ஒரு போதும் கை கூடாது. அதற்கெதிராக வன்னி மண் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கும்.

தமிழ் மக்களை வேரொடு பிடுங்கி எறிவதற்கு சிங்களம் கங்கணம் கட்டி நிற்கின்றது. பட்டினி கிடந்து பசியால் மடிந்தாலும் மட்டியிட்டு சிங்களத்தின் காலடியில் அடிமையாக வாழ ஒரு போதும்; தமிழ் மக்கள் தயாராக இல்லை.

சிங்களத்தின் நோக்கங்களை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வன்னியில் இன்று பட்டினிச் சாவுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களது மனித அவலங்களை போக்குவதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்கள அரசின் கபட நோக்கங்களை சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்தி அதனை முறியடிப்பதற்கு தொடர்ந்து போராட வேண்டும். நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசுகளின் உதவியுடன் வன்னியிலிருந்து மக்களை வெளியேற்ற முயலும் சிங்கள அரசின் சதித் திட்டங்களை தடுத்து நிறுத்த தொடர்ந்து போராட வேண்டும்.

தாயகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை புரிந்து கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒவ் வொருவரும் விரைந்து செயற்பட வேண்டும் எனக் கோருகின்றேன் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Comments