வன்னியில் பூதாகரமாகும் மனிதாபிமானப் பிரச்சினை

வன்னி மீதான தனது கொடூரப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது இலங்கை இராணுவம். விமானக் குண்டு வீச்சுகளும், பீரங்கி, ஷெல், மோட்டார் தாக்குதல்களும் அகோரமாகியிருக்கின்றன.

மக்கள் குடியிருப்புகள் கண்மண் தெரியாமல் தாக்கப்படுவதால், ஏற்கனவே வன்னிக்குள் இடம்பெயர்ந் திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள், மீண்டும் தமது எச்ச சொச்ச உடைமைகளுடன் ஏதிலிகளாக அலையும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அகதி அவல வாழ்வே அவர்களுக்கு நிரந்தரமாகிவிட்டது.

தீவிரமடையும் வன்னிக் களமுனை யுத்தத்தை அடுத்து இடம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்க ளுக்குத் தற்காலிக இருப்பிடங்களையும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருள்களையும் வழங்குவதற்கு ஐ.நா.முகவர் அமைப்புகள் துரிதமாகத் தயாராகி வருகின்றன எனக் கொழும்புக்கான ஐ.நா. தூதரகப் பேச்சாளர் ?2965;ார்டன் வைஸ் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மேலும் இரண்டு லட்சம் பேர் நாட்டிற்குள் இடம் பெயர்ந்த புதிய அகதிகளாகச் சேர்த்துக் கொள்ளப்படும் நிலைமை வரும் என்று ஐ.நா.முகவர் அமைப்புகள் பூர்வாங்க உத்தேச மதிப்பீட்டைச் செய்திருக்கின்றன.

இவ்வாறு இடம்பெயர்வோரின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும்

யுத்தத் தீவிரக் கெடுபிடியிலிருந்து தப்பிப் பிழைப் பதற்காக இடம்பெயருகின்ற மக்களின் சுதந்திர நடமாட் டத்துக்கு அனுமதிக்கும்படியும்

அப்படி இடம்பெயர்வோர் தங்கியிருக்கும் பிரதேசங் களை அண்டி இராணுவ இலக்குகள் அமையாமல் பார்த் துக் கொள்ளுமாறும்

அகதிகளுக்கான ஐ.நா.தூதரகத்தின் பேச்சாளர் றொன் றெட்மண்ட் கோரியிருக்கின்றார்.

இடம்பெயரும் அகதிகளின் அவசிய, அவசர மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதில் தங்களுக்கு உள்ள நெருக்கடிகளையும் சிக்கல்களையும் அவர் விரிவாக விளக்கியிருக்கின்றார்.

உணவு விநியோகம், பாதுகாப்பான தங்குமிட வசதிகள், குடிதண்ணீர், சுகாதார நலனுக்கான உபகரணங்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்குத் தேவையான எரிபொருள் என்பவற்றுக்கான தட்டுப்பாடு அபாயகரமான கட்டத்தை அடைந்துவிட்டது என்றும், கையிருப்பு மிகமிகக் குறைந்து விட்டதாகவும் கூட அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

இந்த அத்தியாவசியப் பொருள்களைத் தடையேது மின்றி ஐ.நா.முகவர் அமைப்புகள் (வன்னிக்கு) எடுத்துச் செல்ல அனுமதிக்கும்படியும்

பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள இடங்களுக்கு ஐ.நா. முகவர் அமைப்புகளின் தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்கு தடையின்றிச் செல்வதற்கு இடமளித்து அந்த மக்களுக்குரிய அத்தியாவசிய, அவ சர மனிதாபிமானத் தேவைகளை விரைந்து நிறைவு செய்வதற்கு வசதியாக ஒத்துழைக்கும்படியும் அவர் சம்பந்தப்பட்ட தரப்புகளை (அரசையும் புலிகளையும்) மன்றாட்டமாகக் கோரியிருக்கின்றார்.

ஆனால் நிலங்களைப் பிடித்து ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை தமிழர் தேசம் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இலங்கை அரசு, அந்த மண்ணின் மைந்தர்களான தமிழ் மக்களின் அவல நிலைமை குறித்து சிந்திக்கப் போவதில்லை. "இறைமையை உறுதிப்படுத்தல்' என்ற பெயரிலான அதன் ஆக்கிரமிப்பும், அடிமைப்படுத்தல் தீவிர முமே அதற்கு முக்கியமானவை.

பொதுமக்களின் மருத்துவமனைகள் மற்றும் மனி தாபிமானப் பணிகளுக்குப் பொறுப்பாக உள்ள அவற் றைக் கண்காணிக்கின்ற அரச உத்தியோகத்தர்களின் பணிமனைகள் போன்றவற்றை "வேண்டுமென்றே' இலக்குவைத்து அதன் மூலம் ஜெனிவாப் பிரகடனங் களை மீறுகின்ற இலங்கை அரசுக்கு

தன்னுடைய தேச மக்கள் எனத் தானே உரிமை கொண்டாடி, ஆதிக்கம் செலுத்தும் ஓரின மக்கள் கூட்டத்தின் மீது தனது ஹெலிக்கொப்டர்கள், விமானங்கள் மூலம் வான்குண்டுவீச்சுத் தாக்குதல்களையும் மற்றும் பீரங்கி, ஷெல், மோட்டார் தாக்குதல்களையும் கண்மண் தெரியாமல் நடத்தும் இன்றைய இலங்கை அரசுக்கு

யுத்தப் பிரதேசத்தில் மக்கள் பாதுகாப்புத் தொடர்பான நியம ஏற்பாடுகளும், பொறுப்புகளும் புரியப் போவதில்லை.

அல்லது அவற்றை அது கவனத்தில் எடுக்கப்போவதில்லை.

ஏற்கனவே, மனிதாபிமானப் பிரச்சினைகள் மிக மோசமான கட்டத்தை அடைந்திருக்கையில் அங்குள்ள சர்வதேச தொண்டர் அமைப்புகளுக்கான எரிபொருள் விநியோக அனுமதியை வெட்டிக் குறைக்கத் தொடங்கி விட்டது அரசு.

ஆகவே அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் மேற் படி கோரிக்கையும் வேண்டுகோளும் இலங்கை ஆட்சி அதிகாரத்தின் காதில் விழப்போவதில்லை. அவை புறக்கணிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

அத்தகைய சூழலில், இடம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வு உயிரைத் தக்கவைக்கும் போராட்டம் மிக மோசமானதும் ஆபத்தானதுமான கட்டத்தைத் தொடும்.

அப்போது சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது?

சர்வதேசத்தின் பிரதிபலிப்பை தமிழ் மக்கள் மட்டுமன்றி முழு உலகமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.


Comments