கோமாளித் திலகம் துக்லக் சோ ராமசாமியும் தமிழீழ விடுதலையும் !

ஈழத் தமிழரின் அரசியற் தேவைகளையும் உயிர் வாழ்வின் அடிப் படை உரிமைகள் பற்றிய உண்மைகள் எதுவுமே அறியாதவர் சிக்கல்களின் திலகம் துக்லக் சோ இராமசாமி.

சினிமாக் கோமாளியான இவர் அரசியல் கோமாளியாக மக்களை மகிழச் செய்வதில் எமக்கும் மகிழ்ச்சிதான்.

ஆனால் ஈழத் தமிழர் பற்றிய அவரது கோமாளித் தனங்களை எம்மால் சகிக்கவோ ரசிக்கவோ சிரிக்கவோ முடியாது இருக்கிறது.

பூனைக்கு விளையாட்டு என்றால் சுண்டெலிக்கு சீவன் போவதைப் பார்த்துக் கிண்டல் செய்வதும் கிறுக்குத்தனமாக உளறுவதும் அவரது கோமாளித்தனமாக உள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சிறு சுண்டெலிதான். ஆனால் எமக்கும் உயிர் வலியும் உயிர் வாழும் உரிமையும் இப்பூமியில் இருக்கிறது. அதற்கு ஆரியரின் வேதமோ அந்நியப் படையோ தடையாக வரக் கூடாது வரவும் முடியாது. இதனை இந்த அகில உலகக் கோமாளித் திலகத்துக்கும் அவரது விசிறிகளுக்கும் உணர்த்துவதற்கே இக்கட்டுரை.

ஆனந்த விகடனின் ஆய்வுக்கு அவர் வழங்கிய கருத்தில் ஏழு எட்டு வயசுப் பசங்களைத் தீவிரவாதியா மாத்துறதுதான் ஒரு இயக்கத்தின் கொள்கையாய் இருந்தா அப்படி ஒரு இயக்கம் எதுக்கு ? என்று எமது சார்பில் கொள்கைப் பிரகடனம் செய்து தமே தீர்ப்பும் வழங்கியுள்ளார் இந்தத் சோ க்கிரட்டீஸ்.

அவரது மொழியில் கூறுவதானால்,

ஏழு எட்டு வயசுப் பசங்களை நாம் கல்லுடைக்கவோ பீடி சுற்றவோ அனுப்ப நினைக்காது பள்ளிக்குப் படிக்க அனுப்பத்தான் நினைக்கிறோம். ஆனால் ஆரியச் சாமியான நீங்களும் ஆரிய புத்தச் சிங்களவனும் எங்க வீடுகளையும் பள்ளிக் கூடங்களையும் உடைச்சா நாங்க எங்க பசங்களை எதிரி மண்டையை உடைக்கத்தான் அனுப்ப நினைப்போம். அதுக்கு உதவுற புலிகள் தான் எங்களைக் காக்கும் உண்மையான கடவுள்கள். உங்க பிரம்ம உபதேசமும் மனுதர்ம வேதத்தையும் உங்களோடையே வைச்சுக்கோங்க சாமி.

நீங்க ஆயிரம் சொன்னாலும் எங்க பசங்களைத் தெரு நாய்கள் போலச் சிங்களப் படை கொன்று அழிப்பதைத் தமிழக மீனவரைச் சிங்களப் படை சுட்டுக் கொல்றதை சும்மா பார்த்துக் கொண்டிருக்கிற தமிழக மற்றும் இந்திய மத்திய அரசு போல நாங்களும் பார்த்திருக்க முடியாது.

ஏழு எட்டு வயசுப் பசங்களுக்குப் புலிகள் என்ன கஞ்சா பீடி குடிக்கவா கத்துக் கொடுக்கிறார்கள் ? எங்கள் நாட்டிலும் வீட்டிலும் புகுந்து எங்கள் பசங்க பொண்ணுங்க புள்ளைகளைச் சுட்டுக் கொல்ற சிங்களப் படையையும் அவங்களுக்குத் துணை போகிற கூலி வேட்டை நாய்களையும் அழிக்கத்தான் கத்துக் கொடுக்கிறார்கள் என்பதைத் தெரிஞ்சு கொள்வது நல்லது.

உங்களுடைய படை எமக்கு அமைதி தர்றதாகச் சொல்லி எங்க நாட்டிலே எங்களைக் கொன்று ஒழிச்ச போதும் எங்கள் புலிகள் அதையே செய்தார்கள். உங்கள் படை இமாசலப் பிரதேசத்திலும் காஷ்மீரத்திலும் போய் உங்கள் எதிரிகளை அழிக்கிறதாகச் சொல்லி போராடலாம் அது எப்படி உங்களுக்குச் சரியாகத் தெரிகிறதோ அப்படித்தான் நாங்கள் எங்கள் ஊரிலை எங்கள் வீட்டிலை எங்களை வாழவிடாது கொல்றவனைக் கொலகிறது எமக்குச் சரியாகத் தெரிகிறது. தேவையாகவும் இருக்கிறது. எங்களைக் கொதல்கிறவனைத் தடுக்க நீங்கள் யாருமே வரமாட்டீங்க எனவே கொல்ல வாறவனைக் கொல்ல எங்க பெண்டு பிள்ளைங்க தானே கொல்ல வேண்டும் ?

அதைத்தான் எங்கள் புலிகள் எங்க ஏழு எட்டு வயசுப் பசங்களுக்குக் கத்துக் கொடுக்கிறார்கள் அது ஒரு வரலாற்றுக் கடமையாகவும் உள்ளதுது. துன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று உங்கள் தேசக் காந்தி தான் எமக்குச் சொல்லித் தந்தாரு. முதல்ல அவர் சொல்லித் தந்த சத்தியாக் கிரகப் போரை 1956 முதல் நடத்தினோம் காடையரை வைச்சு சத்தியாக்கிரகிகளை அடிச்சார்கள் அதைச் சிங்களப் பிரதமரே ரசிச்சார். 1961ல் ஆமியை எங்க ஊர்களுக்கும் வீட்டுகளுக்கும் அனுப்பி எங்களைச் சிங்களவன் அடிச்சான் சுட்டான் சிறை வைச்சான். உங்களின் பாரத மாதாவும் என்ன ஏது என்றும் கேட்கவில்லை உலகில் வேறு எவரும் கண்டு கொள்ளவும் இல்லை.

1987ல் விடுதலைப் போராளி தியாகி திலீபன் 12 நாள் பச்சைத் தண்ணியும் குடிக்காமல் இந்திய அரசிடம் நீதி கேட்டான். உங்கள் அரசுத் தூதர் டிக்சித்தும் உங்கள் பிரதமர் ராஜீவ் காந்தியும் எங்களைப் புரிஞ்சு கொள்ளவே இல்லை. அதனால் நாங்கள் உங்களையும் உலகத்தையும் நல்லாகவே புரிந்து கொண்டோம்.

உங்களின் வேதப் படி நாங்கள் பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள். எங்கள் படிப்பும் பகுத்தறிவும் வித்தியாசமானது

எங்க பாசையிலே அடியைப்போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

அதோடு உங்களின் சாமி பாரதக் கதையிலே தர்மத்தின் பேராலே என்னேனமோ தில்லு முல்லுச் செய்து போரில் வெற்றி பெற்றாரே. அவரே சின்னப்பய அபிமன்யுவைக் கொல்லடா என்று அருச்சனனுக்குச் சொல்லிக் கொன்று போட்டாரே ! அந்தச் சாமியை விடவா நாங்கள் மோசமானவர்கள் ? அந்த அபிமன்யு பெரியவர்களோடு போர்க்களத்தில் பயிற்சி இல்லாமலா போராடினான் ? உங்கள் அபிமன்யு தீவிரவாதியா தியாகியா ? அவனை அப்பிடி ஆக்கினது யாரு; ? அது சரியா ?

தமிழ் நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்தியாவில் இருந்துதான் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் புலிகள் கடத்துகிறார்கள் என்கிறீர்களே எங்களைக் கொல்ல ஆயுதங்களையும் சிங்களப் படைக்குப் பயிற்சியும் இந்திய அரசு கொடுப்பது ஏன் தெரிய வில்லை ? உலகம் எங்கும் இருந்து புலிகள் ஆயதம் கடத்துகிறார்கள் என்று இந்தியா அமெரிக்கா அரசுகளே குற்றம் சாட்டும் போது இந்தியாவிலிருந்து கடத்தித்தான் போராடுகிறார்கள் என்பதில் எத்தனை உண்மை இருக்கிறது ?

எங்கள் அரசியல் உரிமைகளை, அடிப்படை உயிர் வாழ்தலுக்கான வசதி வாய்ப்புகளை நாங்கள் கேட்பது கூடவா உங்களுக்கும் உங்கள் மத்திய அரசுக்கும் பாவமாகத் தெரிகிறது ? இந்திரா காந்தி அம்மாவுக்கு இருந்த அறிவிலே பத்தில் ஒரு பங்குதானும் உங்களுக்கு இல்லாமல் போனால் அது எங்கள் குற்றமா ? எல்லாத்தையும் மறந்து எங்களைக் கொன்று அழிக்கும் சிங்களத்துக்கு கோடி கோடியாய்க் கொடுத்து கொல்ல வைப்பதில் உங்களுக்குப் புண்ணியமா தேடுகிறீர்கள் ? உங்களுக்கும் ஆரிய பௌத்த சிங்கள இன வெறியர்களுக்கும் என்ன உறவு ? என்ன வேறுபாடு ?

ஐயா சிக்கல் திலகமே ! உங்கள் அற்புதமான கருத்துக்கள் எங்களுக்கு அபத்தமாகத்தான் தெரியுது. அது எங்கள் குற்றம் இல்லை. நீங்க வேறு ஆட்கள் உங்கள் படிப்பும் பகுத்தறிவும் வித்தியாசமானது ஏனென்றால் நீங்கள் பிரம்மாவின் நெத்தியில் இருந்து பிறந்தவர்கள் என்று மதம் பிடித்து அலைகிறீர்கள். அதனால் எங்களைப்; பார்த்தால் உங்களுக்குக் கண் கூசும். பகலில் பார்க்கும் கோட்டான்களின் விழிகள் உங்களுக்கும் சிங்கள இனத்துக்கும் இருக்கிறது. அதனால் உண்மைகளைக் காண முடியாத பிறவிகள் நீங்கள்.

உங்களின் வேதப் படி நாங்கள் பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள். எங்கள் படிப்பும் பகுத்தறிவும் வித்தியாசமானது, அப்படிப் படித்த பாடமும் பகுத்தறிவும்தான் எங்களது கால்களுக்குத் தாங்கி நடக்கவும் தெரியும் தாக்கி உதைக்கவும் முடியும் என்பது. கால்கள் தாங்கும் வரைதான் தாங்க முடியும் , தாங்க முடியவில்லை என்றால் தாக்கி உதைக்க வேண்டும். இதுதான் எங்கள் படிப்பறிவும் பாடமும். பகுத்தறிவும். இனிமேலும் தாங்க முடியாது என்பதால் இப்போது இரண்டாவது நிலையில் ஈழத் தமிழன் இருக்கிறான் அதனால் உதைக்கிறான். இதைப் புரிஞ்சு கொள்ளும் புத்தியும் பக்குவமும் இருந்தால் புரிந்து கொள்ளுங்கள். இல்லை என்றால் ஆளை விடுங்க சாமி ! எங்களை நாங்களே ஆழ விடுங்க. அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது.

-பத்மா-

Comments