அக்கினிக்களமாக விரிந்திருக்கும் போர்க்களத்தை அணிதிரண்டு வென்றெடுப்போம்: புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை

தமிழர் தேசமெங்கும் அக்கினிக்களமாக விரிந்திருக்கும் சிறிலங்கா அரச படைகளின் போர் வியூகங்களை உடைத்தெறிவதற்கு தமிழ் மக்கள் யாவரும் திடசங்கற்பம் பூணவேண்டும். சிங்களப் படைகளுடன் கைகோர்த்து நிற்கும் தேசத்துரோகிகளை இனம் கண்டு அழிக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை இன்று ஞாயிற்றுக்கிழமை (10.08.08) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அன்பார்ந்த அம்பாறை மாவட்ட தமிழீழ மக்களே!

அரச பயங்கரவாதத்தின் உச்சமாக திகழும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்டுவிட்டதாக வெற்றிவிழா நடத்திய நாட்கள் தொட்டு இற்றை வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட படைய வீரர்கள் சிறிலங்கா அரச பயங்கரவாத படையினருக்கு எதிராக இடைவிடாது நடத்திய அதிரடி தாக்குதல்களில் பத்துக்கும் மேற்பட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 92-க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதுடன் 141 க்கும் அதிகமான சிறப்பு அதிரடிப்படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களைவிட, மூன்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் உட்பட 36-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 48-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன், சிறிலங்கா காவல்துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுவினர் ஆகியோரிலும் ஐந்துக்கும் மேற்பட்ட உயர்நிலையாளர்கள் உட்பட 37-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் 19-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துமுள்ளனர்.

படுகாயமடைந்த 208-க்கும் மேற்பட்ட சிறிலங்கா அரச பயங்கரவாத படையினரில் 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உட்பட 43-க்கும் அதிகமானோர் தமது உடல் அவயங்களை இழந்து மீளவும் களப்பணிக்கு ஈடுபடுத்தமுடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் அம்பாறை மாவட்ட படைய வீரர்களின் வீரம் செறிந்த - செயற்றிறன் மிக்க - அதிரடித்தாக்குதலால் சிறிலங்கா அரச பயங்கரவாத படைகளின் யால இராணுவ முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதுடன் அம்முகாமை மூன்று மணி நேரம் தம்வசம் வைத்திருந்து ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கைப்பற்றியதுடன் முகாமையும் தீயிட்டு எரிக்கப்பட்டது.

அத்துடன், சிறிலங்காப் படையினரின் பல காவலரண்களையும் ரோந்து அணிகளையும் தாக்கி அழித்துள்ளதுடன் அரச பயங்கரவாதிகள் பயணித்த உலங்கு வானூர்தி உட்பட மூன்று பவல் கவச வாகனங்கள், இரண்டு ஜீப் வண்டிகள், எட்டுக்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்கள் ஆகியவை அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன.

இக்காலப்பகுதியில் எதிரிகளுடன் இடம்பெற்ற நேரடி மோதல்களில் லெப்ரினென்ட் கேணல் புகழ்வாணன், லெப்ரினென்ட் நிலாமதி உட்பட 13 வீரர்கள் தமிழீழ தாய் மண்ணின் விடிவுக்காக தங்கள் உயிரை அர்ப்பணம் செய்துள்ளதுடன் லெப்ரினென்ட் கேணல் அயோனி, லெப்ரினென்ட் கேணல் தவமாறன், லெப்ரினென்ட் கேணல் மிதுலன் உட்பட ஆறு போராளிகள் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்துக்களில் வீரச்சாவை அணைத்துக்கொண்டதுடன் அரவம் தீண்டி மேஜர் யுவப்ரியன் என்பவரும் சாவை அணைத்துக்கொண்டுள்ளார்.

இவர்களுக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்பார்ந்த அம்பாறை மாவட்ட தமிழீழ மக்களே!

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சிறிலங்கா அரச பயங்கரவாத படைகள் இருபதுக்கும் மேற்பட்ட தடவைகள் பாரிய படைகளை குவித்து, பெருமெடுப்பிலாக படை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல நூற்றுக்கணக்கான பகுதி நடவடிக்கை அணிகளை களமிறக்கியும் தமிழீழ வீடுதலை புலிகளை அழித்துவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழீழ விடுதலை புலிகள் எதிர்கொண்டு வந்தனர்.

படையினரை பொறிவெடிகளில் சிக்க வைத்தும் அதிரடித்தாக்குதல்களை மேற்கொண்டும் பல சிறிலங்கா படையினரை அழித்துமுள்ளனர். களமிறக்கப்பட்ட தமது படைகளால் எதையுமே சாதிக்க முடியாதநிலை கண்ட சிறிலங்கா படைத்தலைமை, படையியல் நோக்கத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு தமிழீழ மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி -

வன்னேரிக்குளம், வேப்பையடிக்குளம், ரூபஸ் குளம், கஞ்சிகுடிச்சாறு குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் ஆகிய பகுதிகளில் படைகளை நிலைநிறுத்தி எமது நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி எம்மை அழித்துவிடலாம் என்ற நப்பாசையால் - சிறிலங்கா படைகளால் - தமிழீழ மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.

அன்பார்ந்த அம்பாறை மாவட்ட தமிழீழ மக்களே!

படைகளின் நோக்கத்தை மட்டுமே பிரதான காரணியாக கொண்டு எமது வனப்பகுதி எல்லையில் கூடியிருக்கும் அரச பயங்கரவாத படைகளை எமது தாய்மண்ணிலேயே சமாதியாக்கும்வரை தங்களின் ஒத்துழைப்பை அன்புடன் வேண்டி நிற்கிறோம்.

வெள்ளைக்கல் என அழைக்கப்படும் பகுதிக்கு உள்ளிருக்கும் வேட்டையடிக்குளம், வன்னேரிக்குளம் ஆகிய வனப்பகுதிகளுக்கோ வயல்பகுதிகளுக்கோ பெரியதளவா குளம், கூதைக்குளம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு பாடசாலை, தங்கவேலாயுதபுரம், கேணிக்குளம், கோமாரி, ஆலங்குளம், ஊரணி, செம்மடுக்குளம், சொட்டைக்குளம், செங்காமக்குளம் ஆகியவற்றின் புறமாக உள்ள வனப்பகுதிக்கோ வயல்பகுதிக்கோ எத்தேவை கருதியும் பொதுமக்களை வரவேண்டாம் என்று உங்களின் பாதுகாப்பு கருதி வேண்டிக்கொள்கிறோம்.

எமது தாக்குதல்களில் சிறப்பு அதிரடிப்படையினர் இழப்புக்களை சந்திக்கும்போதெல்லாம் பழி தீர்க்கும் நோக்குடன் - தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக - அப்பாவி தமிழ்மக்கள் மீது கொலைவெறித்தாக்குதல்களை நடத்துவதுடன் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதும் கடத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாக நடந்துவருகிறது.

ஆகவே, சிறிலங்கா அரச படைகளை நாம் இலக்கு வைக்கும்போது இப்பகுதிகளுக்குள் வந்து தாங்கள் சந்திக்கும் இழப்புகளுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும் அறியத்தருகிறோம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

எமது தேசிய கோட்பாட்டையும் தாய்நில கோட்பாட்டையும் உடைத்து, தாய்மொழி தமிழை சிதைத்து, எமது உயரிய காலாசார பாரம்பரியத்தை சிதைத்து, சிங்கள பேரினவாத அரச படைகளுடன் இணைந்து சிங்கள அரசுடன் கை கோர்த்து நிற்கும் தேசத்துரோகிகள் எம்முடன் ஏதோ இணக்கப்பாட்டை ஏற்படுத்திவிட்டதாக செய்யம் பரப்புரைக்கு நீங்கள் செவி சாய்க்காமல் தன்மான உணர்வுடன் விடுதலை கனவுகளை சுமந்தவர்களாக பெற்றுக்கொள்ளவுள்ள விடுதலைப் போருக்கு தோள் கொடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம்.

அன்பார்ந்த மக்களே!

இன்று தமிழீழ தேசமெங்கும் அக்கினிப்பிழம்பாக சிங்கள அரச பயங்கரவாத படைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலை புலிகளால் கொடுக்கப்பட்டிருக்கும் யுத்த உஷ்ணத்தில் கானல் நீருக்குள் மறைக்கப்பட்டிருக்கும் செயற்பாடகவே இன்று தேசத்துரோகிகளின் செயற்பாடுகளை கருதுகிறோம்.

இருப்பினும், தமிழ்மக்கள் மீது அதிதீவிர தேசத்துரோக நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்ட தேசத்துரோகிகள் எமது துப்பாக்கி குண்டுக்கும் இரையாகி உள்ளார்கள். சிறிலங்கா அரச பயங்கரவாத படைகளுக்கு எதிரான அக்கினிக்களம் முடிவுக்கு வந்து தமிழீழ விடுதலை உதயமாகும் சமயம் இந்த துரோகிகளும் அமிழ்ந்துபோவார்கள். அதையும் மீறுவோர் அழிந்துபோவார்கள்.

அன்பார்ந்த மக்களே!

கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைக்காக தமது சுயநலத்தை துறந்து, தாய் தமிழ் மொழிக்காகவும் தாய்நிலத்துக்காகவும் தன் இன உரிமைக்காகவும் ஒவ்வொரு தமிழனின் பாதுகாப்பிற்காகவும் களமாடி வீரச்சாவடைந்த இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தை சிங்கள பேரினவாத படைகளுடன் இணைந்துநின்று களங்கப்படுத்தும் தேச துரோகிகளின் செயல்களுக்கு அடிபணிந்துபோகாது உரிமை குரல்கொடுத்து தன்மான தமிழர் நாமென தமிழீழ விடுதலைப்போருக்கு தோள் கொடுங்கள்.

அன்பார்ந்த அம்பாறை மாவட்ட தமிழீழ மக்களே!

தாய்மொழி தமிழுக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்த்த விபுலானந்த அடிகள் பிறந்த மாவட்ட மண் என்ற தன்மான உணர்வுடன் விடுதலைக்கு தோள் கொடுங்கள். இனிவரும் நாட்களில் சந்திக்கு சந்தியாய் வீதிக்கு வீதியாய் வீட்டுக்கு வீடாய் வேலிக்கு வேலியாய் காடு காடாய் அலை அலையாய் அழியப்போகும் தேச துரோகிகளதும் சிங்கள அரச பயங்கரவாத படைகளதும் அழிவிற்கு எமக்கு தோள்கொடுத்து தாய் மண்ணின் விடுதலைக்கு தோள் கொடுத்த தன்மான தமிழன் என்று ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சில் மார்தட்டி சொல்லும் வண்ணம் உங்களின் செயல்களை அமைத்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிநிற்கின்றோம்.

நன்றி.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

அரசியல்துறை
அம்பாறை மாவட்டம்
தமிழீழ விடுதலை புலிகள்
தமிழீழம்

Comments