வன்னிப் பகுதி மக்களின் துயரும் துன்பமும் எளிதில் எவராலும் புரிந்து கொள்ளவோ எளிதில் மற்றவருக்குப் புரிய வைக்கவோ முடியாதவை. அத்தனை பெரிய சோகத் துயரில் பெருமழையும் எதிரியின் குண்டு மழையும் மேலும் அவர்களின் நாடி நரம்புகளை வருத்துகின்ற வேளை இது.
இன்று அவர்களுக்குப் பக்க பலமாகவும் உயிர் காக்கும் அருமருந்தாகவும் இருக்க வேண்டியவர்கள் அவர்களின் உறவுகளாகிய புலம் பெயர் தமிழ் மக்களே.
இப்படியான வேளையில் புலத்தில் வாழும் உறவுகளாகிய நாம் அரச பிரச்சார வெள்ளத்தால் அடிபட்டு அள்ளுண்டு போகாது எமது உறவுகளுக்கு உதவும் பணியில் உடனடியாக இறங்குவதே எமது அறிவார்ந்த செயலாக இருக்க முடியும். களத்திலே வெற்றிச் செய்திகளைக் கேட்டுக் கேட்டு நாம் ஆரவாரித்துப் பழகிப் போய் விட்டோம்.அதனால் அப்படியான செய்திகளுக்காகவே காத்துக் கிடந்து பழகிப் போய் விட்டோம். ஆனால் இத்தகைய போக்கு என்றும் சரியாகி விடும் என்றோ பாதுகாப்பானது எனறோ நினைப்பது ஆபத்தான சிந்தனையாகும். நாம் எமது இப்படியான சிந்தனைகளிலிருந்து உடனடியாக விடுபடுவது அவசியமாகும். அடுத்து நாம் ஆக்க பூர்வமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். அதன் மூலமே நாம் எமது இனத்துக்கான காலம் விதித்த கடமைகளைச் சரிவரச் செய்யமுடியும்.
புலம் பெயர் மக்கள் கொண்டுள்ள பீதியும் மனச் சஞ்சலமும் தேவையா ? நியாயமானதா ?
ஒரு மேலதிக செய்தியாக யாழ் இலங்கை வங்கி ஊடாக வன்னிப்பகுதியில் உள்ள இலங்கை வங்கிக் கிளைகள் மூலமாக பண உதவி செய்ய முடியும் என வடபிராந்திய செயற்பாட்டு முகாமையாளர் தெரிவித்துள்ளார் என இணையத்தளம் ஒன்று கூறுகிறது. ஆனால் வன்னிப் பகுதியில் பணப்புழக்கம் மிகவும் இறுக்க நிலையில் உள்ளது என்ற பழைய சேதியும் உள்ளது. எனவே பணப் புழக்கத்தைப் பொறுத்தே வங்கிகளும் செயற்பட முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
புலம் பெயர் தமிழ் மக்கள் எமது உறவுகளுக்கு உடனடியாக உதவி சேரும் வகையில் தமிழர் புணர்வாழவுக்கழகம், வெண்புறா இயக்கம் போன்ற தமிழர் உதவு நிறுவனங்கள் மூலம் நிறைவான உதவிகளால் தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவது அவசியமாகிறது.
இது போன்ற கோரிக்கைகளை யாழ் பல்கலைக் கழக பேராசிரியர்களும் மாணவர்களும்; விடுத்து உள்ளனர். இத்தகைய வேண்டுகோளை யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம ஆண்டகை விடுத்துள்ள மனித நேயச் செய்தியில் 2 இலட்சம் மக்கள் வன்னியில் படும் அவதிக்கு உடனடியாகத் தமிழ் மக்கள் நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். அரசு பலவித தடைகளையும் போட்டு பொது மக்களுக்கு எவ்வித உதவிகளையும் செய்யாது மிருகத்தனமாக நடந்து கொள்கிறது.
அதே வேளை புலிகள் பொது மக்களைக் கேடயமாகத் தமது பகுதிகளுக்குள் தடுக்கிறார்கள். அதனால் அரசின் முக்கியமான மனிதாபிமான உதவிகளைச் செய்ய முடியாது இருப்பதாக முதலைக் கண்ணீர்ப் பிரச்சாரம் செய்கிறது. இதனையும் அரசு புலிகளைப் பயங்கரவாதிகள் என்றும், புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதைக் காட்டும் முகமாகவும் செய்யும் பிரச்சாரமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இந்நேரத்தில் புலம் பெயர் மக்கள் கொண்டுள்ள பீதியும் மனச் சஞ்சலமும் தேவையா ? நியாயமானதா ? என்பதைப் பார்ப்பது குழம்பிய மனங்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்பதால்; இங்கே பார்க்கப்படுகிறது.
கிழக்கை விடுவித்து விட்டதாக பிரச்சாரம் செய்யும் அரசின் படைகள் புலிகளின் தாக்குதலிருந்து விடுதலை கிடைக்காது அன்றாடம் அவதிப்படுகிறது. அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதிலிருந்நு அம்பாந்தோட்டை வரை பல தாக்குதலுக்கு முகம் கொடுத்து வந்துள்ளது. திருமலை மாவட்டம் அம்பாறை குடும்பி மலை மற்றும் யால வனப் பகுதி எனப் பரவலான புலிகளின் தாக்குதலும் சிங்களப் படைகளின் உயிரிழப்பு, காயங்கள் காரணமாகக் களத்திலிருந்து அகற்றப் படுவோரின் எண்ணிக்கையும் பெருகிக கொண்டே போகிறது.
படையை விட்டு ஓடுவோரின் தொகையும், அவர்களைப் பிடித்து வரும் நிகழ்வுகளும் தினமும் நடக்கின்றன. பயப் பீதி காரணமாக தற்கொலை புரியும் படையினரும் காவல் அரணில் இடம்பெறும் படையினரின் மரணங்கழளயும் கண்டுமா தமிழ் மக்கள் கவலைப் பட வேணடும் ?
மாதம் தோறும் இலங்கை அரசு அவரசகாலச் சட்ட நீடிப்புக்காகத் தெரிவித்த தகவல்களை மீளப் பார்ப்பது கலங்கும் உள்ளங்களுக்குப் பலம் தரும் செய்திகளாகும். 2008ல் முதல் 6 மாதத்திலும் கொல்லப் பட்டும் காயமடைந்தும் களத்திலிருந்து அகற்றப்பட்ட படையினரின் எண்ணிக்கை இதோ
தேசிய தலைவர் என்றைக்கும் மற்றவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற விதத்தில் நடப்பவர் அல்ல என்பதை நாம் முதலில் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். களத்தின் நிலை அறிந்து எதிரியின் பலவீனம் அறிந்து எதிரியின் பலம் அறிந்து அதனைக் குறைக்கும் வழியில் குறையும் வரை தருணத்தை ஏற்படுத்தித் தகுந்த தருணம் பார்த்து வெல்லும் வகை தெரிந்து தாக்கி வெற்றிக் கனி பறிக்கும் மதி நுட்பம் படைத்தவர்.
வள்ளுவர் தமது குறளில் செயல் பற்ற இப்படிக் கூறியுள்ளார்.
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல்
வள்ளுவர் குறளின் படி ஒரு செயலை வெற்றியாய் செய்து முடிக்கத் தேவையான பொருள் எனப்படும் பணம், கருவி எனப் படும் ஆயுதம் போன்ற கருவிகள், அச் செயலை முடிப்பதற்கு ஏற்ற தருணம் என்கிற காலம், வினை எனக் கூறப்படும் செயல் திறன், செயலை முடிப்பதற்கு ஏற்ற இடம் என்ற ஐந்தினையும் சந்தேகம் இல்லாதபடி சிந்தித்துச் செய்வதே வெற்றி பெறும் செயல் என்கிறார்.
புலிகளின் தலைவர் இந்த வழியினை முறை பிசகாமல் பின் பற்றி வருவதால் தான் வெற்றிகளின் நாயகனாக விளங்குகிறார். அவருக்கு உதவியாக தேவையான பொருள் வளமும் ஆளணி வளமும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் போதும் எதிரியை வீழ்த்தும் வழி அறிந்து அவனுக்குப் பாதகமான இடம் காலம் பார்த்து அவனை வீழ்த்தும் வழியில் வீழ்த்துவார்.
அதுவரை நாம் மனம் தளராது அவருக்குத் தேவையான வளங்களையும் காலத்தையும் ஒத்துழைப்பையும் கொடுப்பது ஒன்றே நாம் அவருடைய அற்புத பணிகளுக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
இறுதியாக நாம் ஆய்வாளர் கேணல் சுசந்த செனவிரட்ணவின் சில வரிகளை நினைவு கொள்வது மனதுக்கு உற்சாகம் தரும் என்பதால் அவை இங்கே தரப்படுகின்றன-
‘சிறீலங்காப் படையினர் கிழக்கைக் கைப்பற்றியது போன்று வடக்கை மிக இலகுவாகக் கைப்பற்ற முடியாது. ஏனெனில் விடுதலைப் புலிகளால் பெருமளவில் நிலக் கண்ணிகள் புதைக்கப்பட்டிருக்கும் என்பதால் படை முன்னகர்வுகள் மிகவும் சிக்கல் நிறைந்தாகக் காணப் படுகின்றது. விடுதலைப் புலிகளின் பின்வாங்கல், சிறீலங்காப் படையினரை கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சி நிரலாக அமையலாம். காடுகளில் பதுங்கியிருக்கும் புலிகள் தம்வசம் இன்னமும் ஆட்டிலறிகள் மற்றும் கனரக ஆயுதங்களை வைத்துள்ளனர். ஆகவே விடுதலைப் புலிகளால் மூர்க்கமான தாக்குதல்களை நடத்தக்கூடும்.
புலிகளின் இந்த மெளனம் படையினருக்கு நல்லதாக அமையாது
- ஈழப்பிரியன்-
Comments