புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் அபிமானிகளே! அவசரக் கரம் நீட்டுங்கள்


புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் அபிமானிகளே!

எங்கெங்கு மனிதம் வதைபடுகின்றதோ அங்கங்கு தம்கரம் நீட்டும் மனிதாபிமானிகளே!

ஈழத்தமிழகத்திலிருந்து தம் வாழ்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் உங்கள் உறவுகள் இடம்பெயர்ந்து இன்னலுற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், மிக அவசரமாக இந்த வேண்டுகையை உங்கள் முன்னே சமர்ப்பிக்கின்றோம். கழியும் ஒவ்வொரு கணப்பொழுதும் எம்மக்களைச் சாவின் விளிம்புக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது. நீங்கள் கைகொடுத்து அவர்களைக் கரையேற்றாதுவிடில் மாபெரும் மனித அவலத்துக்கு அவர்கள் உள்ளாக நேரும்.

தொடரும் எமது விடுதலைக்கான போராட்டத்தைத் தம் தோள்களிற் சுமந்து எம்தாயகம் அதிக விலைகொடுத்து நிற்கிறது. உயிரிழப்பு, உடமையிழப்பு, அவலமானவாழ்வு, நிர்க்கதியான இடப்பெயர்வின் நெருப்பு, பசி, பட்டினி, நோய்கள், மருத்துவ வசதியின்மை, ஆதரவற்ற நாளாந்தமென எம்மக்கள் படும் துயர் எடுத்துரைக்க முடியாத பெரும் அவலமாகிவிட்டது. சிங்கள - பௌத்த பேரினவாதிகள் தம் அரசயந்திரத்தை எம்மீது பாயவிட்டுக் குண்டுகளை வீசுகின்றனர். எறிகணைகளை எகிறுகின்றான்.

ஆக்கிரமிப்பை நோக்காகக்கொண்டு தன் படையினரை ஏவி எம்மக்களைக் கொன்று குவிக்கின்றான். இரவோடு இரவாக இடம்பெயரச் செய்கின்றான். எம்மக்கள் இப்போது படும் அவலமிருக்கிறதே இதனை எக்காலமும் எந்த அடக்குமுறை அரசுகளும் தன் மக்கள் மீது நடத்தியதில்லை. உலகம் இதற்கு முன்னறியாத வன்கொடுமைகளை எம் மக்கள் மீது பாயவிட்டு அவர்களைச் சொந்த ஊரிலிருந்தே அகதிகளாக வெளியேற்றுகிறது சிங்கள அரசு.இங்குள்ள உதவி அமைப்புக்கள் அனைத்தும் வழமில்லாது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.



ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் போக்கிடமேதுமற்று மரநிழலிலும் மதவுகளுக்குக் கீழும் வீதியோரங்களிலும் படும் அவலமிருக்கிறதே அதையெப்படி உங்களுக்குப் புரியவைக்கமுடியும். இப்போது இங்கே கொடூர வெய்யிலெறிக்கிறது. அதனாற் கானலடிக்கிறது. அடுத்தமாதம் மழைபொழியப் போகிறது. இன்னும் சில மாதங்களில் பனி பெய்யப்போகிறது. ஆனால் இடம்பெயர்ந்த எம்மக்கள் கோடைக்கோ அல்லது மாரிக்கோ தாக்குப்பிடிக்கக் கூடியதாக எந்தத் தரிப்பிடமுமற்றுத் தவிக்கின்றனர். சமைக்க அரிசியில்லை, சரிந்து படுக்கப் பாயில்லை, குளிக்கக் கிணறில்லை, குடியிருக்கக் கொட்டிலில்லை.. 'இல்லையே நிறைந்திருக்கும் வாழ்வில் எம்மக்கள் இடருற்றுக்கிடக்கின்றனர். எங்கள் அவலமும் எம்மக்களின் அழுகையும் வெளியே தெரிந்துவிடுமென்றஞ்சி எதிரி எம்மை இராணுவ வேலிபோட்டு மூடியுள்ளான்.



எமது குரல்கள் உலகுக்குக் கேட்டுவிடுமோ என்றஞ்சிக் காற்றுக்குக்கூட அவன் கட்டளையிட்டுள்ளான். பல்லாயிரக்கணக்கான மக்கள் பசித்த வயிற்றுக்குக் கூழ்கூடயின்றிக் குறண்டிப்போயுள்ளனர். அடர்காட்டுக்குள் தங்கள் இரவுகளைக் கழிக்கின்றனர். மருத்துவ வசதியின்றியே இங்கே மரணங்கள் மலிந்துவிட்டன. உங்கள் பிள்ளைகளையொத்த சிறுவர்கள் இங்கே கையேந்தி நிற்கின்றனர். உங்கள் தாயாரையொத்த தாயர் இங்கே தாங்குகொடியின்றித் தள்ளாடுகின்றனர். எவராவது வந்து எம்மை எடுக்கமாட்டார்களா என்று ஒவ்வொரு பொழுதுடனும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்புக்களை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்கள். எம் தேசமும் எம்மக்களும் இன்றுபடும் இந்த இன்னலிலிருந்து எங்களை நீங்களே கரையேற்ற வேண்டும்.



ஆண்டவனை அகத்திலும் அன்புடமையைப் புறத்திலுமாகக்கொண்டவர்கள் நீங்கள். பன்றிக்குப் பால்கொடுத்துத் தாயுமானவன் எங்கள் இறைவன். மூன்றுவயதுப் பாலகன் அழுதபோது பால்கொடுத்துப் பசிதீர்த்தவள் எங்கள் உண்ணாமுலையம்மன். சூரர்படையழிக்கச் சூலாயுதம் எடுத்தவன் எங்கள் முருகன். வரண்ட நிலத்திற் காவிரியைப் பாயச்செய்யக் கமண்டலத்தைக் கவிழ்த்தவன் எங்கள் விநாயகன். இத்தனை அற்புதங்களை ஆற்றித் தம் மக்களைக் காப்பாற்றிய கடவுளரைக் கும்பிட்டெழும் வாழ்வைக் கொண்டவர்கள் நாங்கள். உழவாரத்திருப்பணி செய்த நாவுக்கரசரை நாயன்மார் வரிசையில் ஏற்றுக்கொண்டவர் நாங்கள். பெருகிவந்த ஆற்றின் அணையுடைந்தபோது கூலியாளாகச் சென்று பிட்டுக்கு மண்சுமந்தவன் எங்கள் பெருமான். இத்தனை மனிதாபிமானமிக்க மதத்தையும் நீண்ட வரலாறைக்கொண்ட இனத்தையும் இருகண்களாகக்கொண்ட நீங்கள்,

உங்கள் தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மனிதப்பேரவலத்துக்கு என்ன செய்யப்போகின்றீர்கள்?

மிகவும் அவசரமாக, மிகவும் அத்தியாவசியமாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உங்கள் உதவிக்கரத்தை எதிர்பார்த்திருக்கும் உறவுகளுக்கு உங்கள் தனிப்பட்ட உதவியாகவும் ஏதாவது செய்யுங்கள். செய்ய முடிவெடுத்தால் அதை அவசரமாகச் செய்யுங்கள்.

'இப்பணி கோடிபுண்ணியம், உம் குலம் காக்கும் அருட்பணி'

தமிழீழ சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் (SEDOT)
உதவி செய்ய முன்வரும் உறவுகள் கீழ் காணும் தொடர்பு இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும

0041762944857 > sedot.uthavi@gmail.com

http://athirvu.com/wannai/



Comments