எதிரி தொடுக்கும் உளவியல் போருக்கு இரையாகாது உறுதியுடன் போராடுவோம் - அரசியல்துறை



தமிழன் அகதி இனமல்ல. போருக்கஞ்சி அடிமைகளாக வாழவிரும்பும் கோழைகளுமல்ல. இது வீரம் விளையும் தேசம். இதை மீண்டுமொருமுறை எதிரிக்கு உணர்த்தும் காலம் அண்மித்து விட்டது. பீதி எதிரிக்கானது. எதிரியின் உளவியல் போருக்கு இரையாகாமல் உறுதியுடன் போராடுவோம் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

பீதி எமக்கானதல்ல அது எதிரிக்கானது! என்ற தலைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

வன்னிப் போரில் ஒரு நாசகாரத் திட்டத்தை நிறைவேற்றத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தைப் பூண்டோடு ஒழிக்கச் சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது.

வன்னிக்குள் அழிவுகளை விதைத்து, மக்களை அகதிகளாக விரட்டி, அவர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிவிட்டு, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் மக்களை உள்வாங்க மகிந்த அரசு விரும்புகின்றது.

கடந்த இரண்டு வருடமாக வன்னியின் நடக்கும் போரில் மக்களைச் சிறைப்பிடித்து அவர்களை விடுவிக்கப்பட்ட மக்களைப் போல் உலகிற்குக் காட்டச் சிங்கள அரசு எடுத்த அனைத்து முயற்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன.

அதனால், இப்போது மிரட்டிக் காரியமாற்ற மகிந்த அரசு முனைகின்றது. இதேபோன்றதொரு மிரட்டல் திட்டத்தை பிரேமதாசா அரசின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்னாவும் கையிலெடுத்துத் தோற்றிருந்தார்.

அப்போது 1990 ஆம் ஆண்டில் - யாழ்ப்பாணத்தின் முழு மக்கள் தொகையையும் வவுனியாவுக்குள் இழுத்தெடுக்கும் அந்தத் திட்டம் படுதோல்வியடைந்திருந்து. அதேபோன்றதொரு திட்டத்தைத்தான் மகிந்த - கோத்தபாயக் கும்பல் இப்போது கையிலெடுத்துள்ளது.

வன்னி மக்களை வவுனியாவுக்குள் இழுக்கும் இந்தத் திட்டம் மக்களைப் போர் நெருக்கடிக்குள்ளிருந்து பாதுகாப்பதற்கல்ல. மாறாகத் தமிழின அழிப்பை வஞ்சகமாக மேற்கொள்வதற்கேயாகும்.

வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து அந்த மக்களை ஆசைவார்த்தை காட்டி உள்ளிழுத்துப் பின்னர் செம்மணியில் புதைகுழிகளுக்குள் மூடிவிட்டமை தமிழினம் சந்தித்த சோகமான வரலாறாகும்.

கொழும்பிற்கும் - வவுனியாவிற்கும் சென்று பாதுகாப்புத் தேடமுனைந்த தமிழர்களைக் காணமற்போகச் செய்வித்தும் - சுட்டுக்கொன்றும் - வீதிகளில், நீர்நிலைகளில் வீசியெறிந்தும் - சிறைகளில் அடைத்துச் சித்திரவதை செய்தும் கோரமான வடிவில் தமிழின அழிப்பை மேற்கொள்கின்றது.

சந்தேகத்தின் பேரிலான கைதுகள் மூலம் தமிழ்யுவதிகளைச் சிறைப்பிடித்துப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியும் படுகொலை செய்தும் சிங்களப்படைகள் வெறித்தனம் ஆடுகின்றன.

வவுனியாவிற்குள் அகப்பட்டுக் கொண்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலவருடங்களாக அகதி முகாம்களுக்குள்ளேயே வைத்து அவர்களை நிரந்தர அகதிகளாகச் சிங்கள அரசு மாற்றிவிட்டுள்ளது.

இப்பொழுது அந்த அகதிகளுடன் மேலும் பல இலட்சம் மக்களை அகதிகளாக்கிக் கொண்டு சென்று நிரந்தர அகதி முகாம்களுக்குள் அடைக்கச் சிங்கள அரசு திட்டமிடுகிறது.

தமிழினத்தை ஒரு அகதியினமாக மாற்றுவதுதான் மகிந்த அரசின் திட்டம். இதற்கு ஒருநாசகார அரசியல் நோக்கம் உண்டு.

அகதியென்ற அடையாளத்துடன் ஒரு மக்கள் கூட்டத்தை நீண்ட நாட்களுக்கு அடைத்து வைத்திருப்பதன் மூலம் அந்த மக்களின் தனித்துவங்களை அழித்து ஒரு நாடோடிக் கூட்டமாக மாற்றிவருவது ஆக்கிரமிப்பு அரசுகளின் பொதுவான வேலைத்திட்டமாகும்.

ஆக்கிரமிப்புப் படைகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் அகதி முகாம்களுக்குள் மக்களை வாழ நிர்ப்பந்தித்து அதற்குள் சமூகச் சீரழிவுகளைத் திட்டமிட்டு விதைத்து ஒற்றுமையுணர்வைச் சீரழித்து அடிமை மனோபாவத்தை ஊட்டி போர்க்குணத்தைக் களைந்தெடுத்து ஒருநாதியற்ற இனமாகத் தமிழினத்தை மாற்றிவிட மகிந்த அரசு துடியாய்த் துடிக்கின்றது.

நூற்றி ஐம்பது வருடங்கள் கழிந்த நிலையிலும் மலையக மக்களின் வாழ்க்கையை ஒரு “லயன் வாழ்க்கையாகவே” நீள வைத்தது, தமிழர்களென்ற காரணத்திற்காக அந்த மக்களை வாட்டி வதைக்கும் சிங்கள அரசின் ஈனச் செயல் எமது மக்களுக்குத் தெரியாததல்ல.

சிறிலங்காவின் நகர்களில் வாழுகின்ற தமிழ் மக்களைச் சிங்கள அரச படைகளின் கைகளில் சிக்கிச் சீரழிப்பதும் எமக்குத் தெரியாததல்ல.

மட்டக்களப்பில் திருகோணமலையிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்து அகதி முகாம்களுக்குள் அடைத்துவிட்டு அவர்களின் நிலங்களில் சிங்களவர்களைக் குடியேற்றிய வரலாறு மறக்கக்கூடியதல்ல.

வன்னி மக்கள் மீதும் இத்தகையதொரு வஞ்சக அடிமைப்படுத்தலை மேற்கொள்ள மகிந்த அரசு செய்யும் முயற்சியை நாங்கள் முறியடிப்போம். இன்று வன்னியில் வாழும் மக்கள் அனைவரும் போராட்டப் பங்காளிகளாகவே உள்ளனர். இது சிங்களப் பேரினவாதிகளுக்கு எரிச்சலூட்டும் விடயமாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

எனவே இந்த மக்கள் மீது பழி வாங்கும் கொலைவெறித் தாக்குதலைச் செய்ய அரசு ஆசைப்படுகின்றது. அதையும் நவீனவடிவில் மேற்கொள்ள அது விரும்புகின்றது.

வன்னி மக்களை அகதிகளாக்கி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இழுத்து அகதி முகாம்களுக்குள் அடைத்து விட்டு அந்த அகதி முகாம்களைச் சிங்களப் படைகளின் ஒரு வேட்டைக் களமாக மாற்ற மகிந்த அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறுதான் கொடுங்கோலன் கிட்லரும் யூத மக்களை அகதி முகாம்களுக்குள் அடைத்து இனக்கொலை செய்தான்.

தமிழன் அகதி இனமல்ல. போருக்கஞ்சி அடிமைகளாக வாழவிரும்பும் கோழைகளுமல்ல. இது வீரம் விளையும் தேசம். இதை மீண்டுமொருமுறை எதிரிக்கு உணர்த்தும் காலம் அண்மித்து விட்டது.

எனவே பீதிக்குள்ளாக வேண்டிய தேவை எமது மக்களுக்கில்லை. பீதி எதிரிக்கானது. எதிரியின் உளவியல் போருக்கு இரையாகாமல் உறுதியுடன் போராடுவோம்.



Comments