தமிழ்த் தேசியத்தின் மறைக்கப்பட்ட வரலாறு ஓர் ஆய்வு




தமிழ்த் தேசியத்தின் மறைக்கப்பட்ட வரலாறு ஒரு முழுமையான வரலாறாக இவ் ஆய்வு நூலின் மூலமாக முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. கி.மு. 300 ஆண்டுகள் தொடங்கி தற்காலம் வரையுள்ள இலங்கைத் தமிழர்களின் சமய, கலை, கலாச்சார, மொழி, சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்று நிகழ்வுகள் யாவும் கால வரண் முறைப்படி பல வகையான மூல ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு விஞ்ஞானரீதியாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட ஒரு முழுமையான நூலாகும்.

இலங்கை இரு தேசங்களைக் கொண்ட ஒரு நாடு. ஒன்று தமிழ்த் தேசம். மற்றையது சிங்களதேசம். இந்த இரு தேச மக்களும் வரலாற்றுக் காலம் தொட்டு, அந்த மண்ணில் தொடர்ச்சியாக வாழ்ந்து, அந்த மண்ணை அந்நியரான மேலைத் தேசத்தவர்கள் கி.பி. 16ம் நூற்றாண்டில் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் வரை, ஆட்சி செய்து வந்தார்கள். அந்த நாட்டின் வரலாறு இரு தேசங்களை உள்ளடக்கிய வரலாறாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த நாட்டின் வரலாறு சிங்கள தேசத்தின் வரலாறாக மட்டுமே எழுதப்பட்டிருக்கின்றது. தமிழர் வரலாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு துர்ப்பாக்கியமான நிலைமையாகும். இந்த நிலைமையே இன்று வரை தொடர்கிறது.

தமிழர்கள் தமது சுதந்திரத்தை முதன் முதலில் அந்நியவரான போர்த்துக்கேயரிடம் இழந்ததில் இருந்து இன்றுவரையும் அடிமைகளாக, சுதந்திரமற்றவர்களாக அந்த மண்ணில் வாழ்ந்துவருகின்றனர். ஜனநாயக வழிகளில் போராடி தமது சுதந்திரத்தைப் பெறலாம் என போராடிப் போராடி தோல்வியைக் கண்ட தமிழர்கள் தாம் இழந்த சுதந்திரத்தை மீளப் பெற இன்று அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி வருகின்றனர்.

தமிழர்களுக்கு தனியான சமய, மொழி, பண்பாடு அடையாளங்களும் அவர்களுக்கே
சொந்தமான பாரம்பரிய பிரதேசமும் நிரந்தரமாக அந்த மண்ணில் உண்டு. அதனால் அவர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையும், இறைமையும் கொண்ட ஒரு பூரண தேசியத்தைக் கொண்டவர்கள். ஆனால் மேற்படி இறைமையும் தேசியத்தையும் அதிகாரபூர்வமாக நிறுவுவதற்கு அவர்களுக்கு ஒரு தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவு மிக அத்தியாவசியமானது. இதுவே இந்நூல் இச்சந்தர்ப்பத்தில் வெளிவர அடிப்படைக் காரணமும், உடனடிக் காரணமுமாகும்.

இந்நூல் முற்றுமுழுவதுமாக மூல ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு செய்து உள்ளதை உள்ளவாறே எழுதப்பட்ட ஒரு புலமைசார் நூலாகும். இலங்கை, இந்தியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலுள்ள பல ஆவணக் காப்பகங்களில் இந் நூலாசிரியர் பல மாதங்களாக தேடி எடுக்கப்பட்ட முக்கியமான ஆதாரங்களே இந் நூலின் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையில் குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை பல்கலைக்கழக தொல்வியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது பெறப்பட்ட தொல்லியல் சான்றுகளும், கல்வெட்டுகளும் இவ் ஆய்வின் மிக முக்கிய ஆதாரங்களாக இடம்பெற்றுள்ளன.

சுருங்கக் கூறின் அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் மூல ஆவணங்களை ஆதாரமாகக்கொண்டு எதுவித பக்கசார்பும் இன்றி உள்ளதை உள்ளவாறே பதிவு செய்யப்பட்டள்ளது. நிச்சயமாக இந் நூல் தமிழர்களின் 2300 வருடகால வரலாற்றை மிகவும் தெளிவாகவும், சுருக்கமாகவும், உண்மைத்தன்மை கொண்டதாகவும் கூறும் முதல்தர நூல் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்.

மேலும் சிறப்பாக பல்வேறு மட்டத்தினரையும் கருத்திற்கொண்டு இந்நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. 600 க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட இந்நூல் 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்களே அந்த மண்ணின் ஆரம்பக் குடியிருப்பாளர்கள் என்பதை தொல்லியல் சான்றுகளின் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இதுவரையும் எந்த ஆய்வாளர்களும் துணிந்து இவ்வாறான ஒரு முடிவைக் கூறத் தயக்கம் காட்டியே வந்துள்ளனர். ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையான நிலைப்பாட்டை உள்ளவாறு துணிந்து கூறப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும். சைவமும் தமிழுமே இலங்கையின் பூர்வீக மக்களின் மதமும், மொழியும் என்பதனையும் தொல்லியல் சான்றுகள் கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் நிறுவப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையில் பல்வேறு ஆரம்ப சிற்றரசுகள் இருந்திருப்பதையும், அச்சிற்றரசுகள் யாவும் திராவிடத் தமிழ் மக்களின் சிற்றரசு என்பதனையும் இவ் ஆய்வுமூலம் காட்டத் தவறவில்லை.

கி.மு. 5ம் நூற்றாண்டளவில் வட இந்தியாவிலிருந்து விஜயன் வந்தது பற்றி ”மகாவம்சம்” கூறும் கதை வெறுமனே ஐதீகக் கதை என்பதையும் இந்நூல் மிக துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அத்தோடு ஆரிய இனம் என்ற ஒரு இனக் குழு இலங்கையின் பூர்வீக மக்கள் மத்தியில் காணப்படவில்லை என்பதை தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலும் சிங்கள, தமிழ் தொல்லியளாளர்களின் புலமைசார் வெளியீடுகளில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களையும் வைத்து நிரூபிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கி.மு. 3ம் நூற்றாண்டளவில் வட இந்தியாவிலிருந்து வருகை தந்த பௌத்தமத வருகையின்போது இலங்கையிலிருந்த பூர்வீக திராவிட இன மக்களே பெரும்பாலும் பௌத்தர்களாக மாறியிருக்கின்றார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. கி.மு. 3ம் நூற்றாண்டுகளில் இருந்து வரலாற்றுக் காலம் ஆரம்பித்ததிலிருந்து இராச்சியங்கள் தோற்றுவிக்கப்பட்டு மத, வியாபார, அரசியல் தொடர்புகளின் காரணமாக பல்வேறு இனக் குழுவினர் பல நாடுகளிலிருந்தும், குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்திலிருந்தும் வந்து இலங்கையில் குடியேறினார்கள் என்ற வரலாற்று உண்மை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கி.பி. 10ம் நூற்றாண்டு காலப்பகுதியில் சோழர் இலங்கையை ஆக்கிரமித்த நிகழ்வுகளோடு, கி.பி. 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியம் மிகவும் பலம்வாய்ந்த ஒரு இராச்சியமாக தன்னை வளர்த்து இலங்கையில் பெரும்பான்மையான பிரதேசங்களில் தனது மேலாண்மையை செலுத்தியமை பற்றியும் அதற்கு வன்னிச் சிற்றரசுகளின் ஆதரவு தொடர்ச்சியாகக் கிடைத்தமை பற்றியும் காலவரண்முறைப்படி ஆய்வு செய்து விளக்கப்பட்டுள்ளது.

இலங்கையை அந்நியரான போர்த்துக்கேயர் கி.பி. 16ம் நூற்றாண்டில் ஆக்கிரமித்தபோது எவ்வாறு தமிழ்த்தேசம் சீரழிக்கப்பட்டது என்பது பற்றியும் சைவக் கோவில்களும், கலாச்சார மையங்களும், கல்வி நிறுவனங்களும் முற்றாக அழிக்கப்பட்டமை பற்றியும் கத்தோலிக்க மதமும், மேலைத்தேச கலாச்சாரமும் எவ்வாறு தமிழர்கள் மத்தியில் கட்டாயப்படுத்தித் திணிக்கப்பட்டமை பற்றியும் தமிழர்களின் பொருளாதார வளங்களை எவ்வாறு போர்த்துக்கேயர் வழித்துத் துடைத்து எடுத்தார்கள் என்பது பற்றியும் இந் நூலின்மூலம் விளக்கப்பட்டள்ளது.

தமிழர்களின் தேசியக் கொடியாகிய நந்திக்கொடி இறக்கப்பட்டு போர்த்துக்கேயரின் அந்நியக்கொடி தமிழ்ப் பிரதேசங்களில் பறக்கவிடப்பட்டு தமிழர்களின் அடிமை வாழ்க்கை உலகத்திற்கு பறைசாற்றப்பட்டமை பற்றி அதிகாரபூர்வமான போர்த்துக்கேய ஆவணங்களில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து முதல் முறையாக எழுதப்பட்டுள்ளது.

போர்த்துக்கேயரைப் போன்றே அவர்கள் பின் இலங்கைக்கு வருகை தந்த டச்சுக்கார ஆக்கிரமிப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக தமது புரட்டஸ்தாந்து மதத்தை தமிழர்கள் மத்தியில் திணித்தமை பற்றியும் தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்ததோடு மட்டும் திருப்திப்படாமல் அவர்களின் தசையையும் விட்டுவைக்கவில்லை என்பதனையும் டச்சு ஆவணங்களில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் மூலம் மிகவும் தெளிவாக ஆய்வு செய்து முதல் முறையாக பல அதிர்ச்சி தரும் வரலாற்று நிகழ்வுகள் இந் நூல் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

சமய, பொருளாதார நோக்கில் இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர், டச்சுக்காரர்களை விட பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்கள் நாட்டை நிரந்தரமாக பிரித்தானிய சாம்பிராயத்தின் கீழ் ஆட்சி செய்யும் நோக்கம் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். இதன் விளைவாக இவர்கள் இலங்கையில் தமது புரட்டஸ்தாந்து மதத்தை மிசனரிகளின் உதவிகளுடன் மிகவும் தீவிரமாகப் பரப்பினார்கள். இதற்கு கல்வியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தவேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.

அதனால் தமிழர்கள் ஆங்கிலக் கல்வி வாய்ப்பையும் வேலை வாய்பையும் பெறுவதற்காக மதம் மாறவேண்டிய நிலை ஏற்பட்டது. தெருக்கள், வீதிகள், குளங்கள், கால்வாய்கள் திருத்தி அமைக்கப்பட்டன. சட்டதிட்டங்கள், நிர்வாகக் கட்டுமானங்கள் மிகவும் சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்பட்டது. நாட்டிலும் அமைதியும், பாதுகாப்பும் நிலவியது. சுகாதார வசதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது. இவைகளின் விளைவாக நாட்டில் மக்கள் தொகையும் அதிகரித்தது.

புதிய அரசியல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி ஆட்சியில் உள்ளுர்வாசிகளை பங்கெடுக்க வைத்தனர். பல்வேறுபட்ட நன்மைகளை மக்கள் பெற்றபோதிலும் பிரித்தானியர் அறிமுகப்படுத்திய பிழையான பொருத்தமில்லாத அரசில் சீர் திருத்தங்கள் தமிழர்களின் ஆளுகின்ற உரிமையையும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேச அடையாளத்தையும் மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளியது. இதன் தாக்கம் தமிழ்த் தேசியவாதத்திற்கு வழி அமைத்தது.
இலங்கையைவிட்டு பிரித்தானியர் 1948ம் ஆண்டில் விலகியபோது அவர்களது தவறான பொருத்தமற்ற அரசியல் சீர்திருத்தக் கொள்கையினால் பெரும்பான்மை மக்களின் தலைவர்களிடம் இலங்கையை ஆளுகின்ற இறைமை சென்றடைந்தது. தமிழர்கள் தொடர்ந்தும் அரசியல் அடிமையானார்கள்.

தொடர்ந்து ஆட்சியை நடாத்திய சிங்கள அரசு பெரும்பான்மை என்ற ஒரே ஒரு பலத்தை தமது வசம் வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் ஆட்சியை அமைத்து அதனூடாக முப்படைகளின் பலத்தையும் தன்னகத்தே கொண்டு தமிழர்களை எந்த வழிகளில் எல்லாம் அடக்கி ஒடுக்கி அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
1948ம் ஆண்டிலிருந்து தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனநாயக வழிகளில் போராடி அல்லது சிங்கள அரசியல் தலைவர்களிடம் விலைபோன நிலையில் இளம் தலைமுறையினர் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போரடத் தொடங்கினர்.

மேற்படி காலகட்ட வரலாறுகள் அனைத்தும் காலவரண்முறைப்படி பிரித்தானிய ஆவணக் காப்பகங்களில் கிடைக்கப்பெற்ற முதல்தர ஆவணங்களை ஆதாரமாகக்கொண்டு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டது. இக்காலகட்ட வரலாற்றை இந் நூலின்மூலம் வாசிப்பவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வராமல் இருப்பதற்கு நியாயம்மில்லை. இந்நூல் தமிழர்களின் மனச்சாட்சியை மட்டுமல்ல சிங்கள மக்களின் மனச்சாட்சியையும் ஏனைய உலக நாட்டு மக்களின் மனச்சாட்சியையும் தொடும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

தமிழ்க் கல்வி-மான்களும், மற்றையவர்களும் இந் நூலின் மூலம் பல புதிய தரவுகளையும் ஆச்சரியமும் அதிசயமும் தரக்கூடிய பல உண்மைகளையும் நிச்சயம் அறிந்துகொள்வார்கள். தமது சொந்த சுய இலாபங்களுக்காக குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களின் மனச்சாட்சியை நிச்சயம் இந் நூலில் உள்ள நிகழ்வுகள் என்றும் உறுத்தியவண்ணம் இருக்கும்.
தமிழர்களின் நியாயமான, நீதியான, தர்மமான சகல உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதனை சகல தரப்பினர்களும் உணர்வு பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு யதார்த்தத்தை இந் நூல் நிச்சயம் ஏற்படுத்துவதற்கு தவறாது என்பதுவே இந் நூலின் பயன்பாடாக விளங்கியுள்ளது.


Comments