நேரிடையாக கைகோர்க்கும் இந்தியாவும் தீவிரமாக்கப்படும் படை நகர்வுகளும்

போரை நோக்கி வளர்த்துவிடப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு தொடர்ச்சியான வெற்றி செய்திகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. எனவே வன்னி மீது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கை தொடர்பாக வெளிவரும் அறிக்கைகளில் விடுதலைப்புலிகள் பெருமளவில் கொல்லப்படுவதாகவும், அவர்களின் பதுங்குகுழிகள் தொடர்ச்சியாக கைப்பற்றப்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

ஆனால் விடுதலைப்புலிகள் அறிவித்த போர் நிறுத்த காலத்தில் அதாவது ஜூலை 26 தொடக்கம் ஆகஸ்ட் 4 ஆம் நாள் வரையில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் வவுனிக்குளம் மற்றும் கல்விளான் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் இராணுவத்தின் வலிந்த தாக்குதல் படையணிகளில் ஒன்றான 57 ஆவது படையணி கணிசமான இழப்புக்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்த காலத்தில் மல்லாவி மற்றும் துணுக்காய் பகுதிகளை நோக்கியே அரசாங்கம் தனது படை நடவடிக்கைகளை செறிவாக்கியிருந்தது. அதற்கேற்ப பெரும் சூடுவலுவுடன் 57 ஆவது படையணியின் 1 ஆவது, 2 ஆவது மற்றும் 3 ஆவது பிரிகேட் படையணிகள் சிறப்புப் படை கொமோண் டோக்களின் துணையுடன் தமது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருந்தன.

மல்லாவிக்கு தென்கிழக்காக உள்ள வவுனிக்குளம் நோக்கி நகர்ந்த 57 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட்டின் பிரதான இலக்கு மல்லாவியை நோக்கி நகர்வதாகும். இந்த படையணியின் 3 ஆவது கஜபா றெஜிமென்ட், 7 ஆவது சிலோன் இலகு காலாட்படை, 8 ஆவது கஜபா றெஜிமென்ட், 4 ஆவது கெமுனுவோச் ஆகிய படை அணிகளே வவுனிக்குளம் நோக்கிய நகர்வை மேற்கொண்டிருந்தன.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இன் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இந்த படை நடவடிக்கையில் கடந்த மாதம் 25 ஆம்திகதி வெள்ளிக்கிழமை வவுனிக்குளம் நோக்கி நகர்ந்த 57 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட் படையணியை சேர்ந்த 4 ஆவது கெமுனுவோச் படையணியினர் லெப். கேணல் வெலிகல தலைமையில் கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மல்லாவிக்கு தென்கிழக்காக உள்ள வவுனிக்குளம், பாலையடி ஆகிய பகுதிகளினுõடாக மல்லாவி நோக்கி நகர்ந்த போது விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை தொடுத்திருந்தனர்.

கேணல் பானுவின் வழிநடத்தலில் களமிறங்கிய சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி 57 ஆவது படையணியின் கெமுனுவோச் மற்றும் கஜபா றெஜிமென்ட பற்றலியன் துருப்புக்களை முற்றுகையிட்டு தாக்கத் தொடங்கின. கடுமையான சமர் ஆரம்பமாகிய போது. லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி 120 மி.மீ மோட்டார்கள், 81 மி.மீ மோட்டார்கள் மூலம் ஆதரவு சூடுகளை வழங்க மோதல் உக்கிரமடைந்தது.

இதன்போது விடுதலைப்புலிகள் மாங்குளத்திற்கு வடக்காகவும், கிளிநொச்சி பூநகரி வீதிக்கு தெற்காகவும், 122 மி.மீ மற்றும் 130 மி.மீ பீரங்கிகளை ஒருங்கிணைத்து தாக்குதலை நடத்தியதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இராணுவமும் மோட்டார்கள், கனரக பீரங்கிகள், 122 மி.மீ பல்குழல் உந்துகணை செலுத்திகளின் கடுமையான தாக்குதல்களுடன் எம்ஜ24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் மூன்றையும் தாக்குதலில் இணைத்திருந்தது. 13 மணிநேரம் நீடித்த சமரில் படைத்தரப்பு கடுமையான இழப்புக்களை சந்தித்திருந்தது. இந்த சமரில் 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 20 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.
எனினும் இந்த மோதல்களில் 30 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 60 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

படைத்தரப்பின் தகவல்களின் படி இந்த மோதல்களில் 21 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 5 படையினர் காணாமல் போயுள்ளதாகவும், 65 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 60 மி.மீ மோட்டார், ஆர்.பி.ஜி, இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பெருமளவான ஆயுதங்களையும், லான்ட்குரூசர் வாகனத்தையும், படையினரின் 3 சடலங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட 3 சடலங்களும் காணாமல்போன படையினரின் சடலங்களாக இருக்கலாம் என தெரிவித்துள்ள படைத்தரப்பு ஆரம்பக் கட்ட மோதல்களின் போது காயமடைந்த படையினரை ஏற்றிவர சென்ற லான்ட்குரூசர் வாகனம் விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையினரின் பதுங்கித் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் இதன் போது வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்த இரு இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக 57 ஆவது படையணியின் துருப்புக்கள் பெருமளவில் விடுதலைப்புலிகளை அழித்து வருவதாக படைத்தரப்பு மார்தட்டி வந்த வேளையில் அந்த படையணி கடுமையான எதிர்த்தாக்குதலை எதிர்கொண்டதுடன், பெரும் இழப்பையும் சந்தித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விளாத்திக்குளம் மற்றும் முள்ளிக்குளம் பகுதிகளில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஊடறுப்புத் தாக்குதலில் இந்த படையணி அதிக இழப்புக்களை சந்தித்திருந்தது. அதனை தொடர்ந்து 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் மானவடு பதவிநீக்கம் செய்யப்பட்டதுடன், பிரிகேடியர் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டிருந்தார். பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டயஸின் படையினர் படை நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதலின் போது விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையினர் இராணுவத்தினரின் உள்நிலைகளுக்குள் ஊடுருவியே, உதவிக்கு விரைந்த லான்ட்குரூசரை கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை துணுக்காய் பகுதிக்கு தென்மேற்காக 2 கி.மீ தொலைவில் உள்ள கல்விளான் பகுதியிலும் மேற்காக உள்ள வெள்ளாங்குளம் பகுதியிலும் கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளன. கல்விளான் பகுதியில் முன்நகர்வில் ஈடுபட்டிருந்த 57 ஆவது படையணியினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், பெருமளவான படையினர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த மோதல்களில் படையினரின் சடலம் ஒன்றையும், ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும், 10 படையினர் கொல்லப்பட்டதாகவும் 19 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெள்ளாங்குளம் பகுதியில் அதே நாளில் 58 ஆவது படையணியுடன் நடைபெற்ற மோதல்களின் போது 10 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும், பெருமளவானோர் காயமடைந்ததுடன் இரு படையினரின் சடலங்களையும், ஒரு தொகுதி ஆயுத தளபாடங்களையும் மீட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

மணலாற்றில் படை நடவடிக்கையை மேற்கொண்டுவரும் 59 ஆவது படையணியின் நடவடிக்கைகள் மிகவும் மந்த நிலையை அடைந்துள்ள நிலையில், மன்னார் வவுனியா அச்சில் வடகிழக்காகவும், வடமேற்காகவும் நடைபெற்றுவரும் படை நடவடிக்கைகளில் படைத்தரப்பு அதிக சிரத்தை காட்டிவருவது கவனிக்கத்தக்கது.

வன்னி படைநடவடிக்கையை பொறுத்தவரையில் ஏ9 பாதையின் மையப்பகுதியை குறிவைத்து 57 ஆவது படையணி நகர்வில் ஈடுபட, ஏ32 பாதையை குறிவைத்து 58 ஆவது படையணி நகர்வில் ஈடுபட்டுவருகின்றது. இரு முனைகளால் சமாந்தரமாக நகர்வில் ஈடுபட்டுவரும் இந்த படையணிகள் இடை நடுவில் பெரும் நிலப்பரப்புக்களை விழுங்கி வருகின்றன.

ஆனால் அவற்றின் கேந்திர முக்கியத்துவம் என்ன என்பதுதான் தற்போதைய முக்கிய கேள்வி.

இராணுவத்தை பொறுத்தவரையில் அண்மையில் ஸ்லோவாக்கியாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 10,000 ஆயிரம் பல்குழல் உந்துகணை செலுத்திகளுக்கான 122 மி.மீ உந்துகணைகளின் உதவியுடன் செறிவான சூட்டாதரவை பயன்படுத்தி வருவதுடன், எம்.ஐ24 மற்றும் எம்ஐ35 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளின் துணையுடன் படையினர் முன்நகர்ந்துள்ள பகுதிகளுக்கு அண்மையாக வான் தாக்குதலையும் மேற்கொண்டு வருகின்றது.

விடுதலைப்புலிகளின் ஆழமான பகுதிகள் மீது மிக்27 மற்றும் கிபீர் அதிவேகத் தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்திவரும் படைத்தரப்பு முன்னணி அரங்குகளுக்கு அண்மையாக தாக்குதல் உலங்குவானூர்திகளை பயன்படுத்தி வருகின்றது.

கடந்த 5 ஆம் நாள் கல்விளான் பகுதியில் நடைபெற்ற மோதல்களின் போதும் படைத்தரப்பு இரண்டு டாட்டா டிரக் வட்டிகளின் மூலம் தலா 40 குழல்களை கொண்ட பல்குழல் உந்துகணை செலுத்திகளில் இருந்து ஒரு தடவையில் 80 உந்துகணைகள் வீதம் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டதுடன், இரு எம்ஐ24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளையும் தாக்குதலில் பயன்படுத்தியிருந்தது.

தற்போதைய படைநடவடிக்கையில் படைத்தரப்பு பயன்படுத்தி வரும் உத்திகளுக்கு அதிக படைவளம், அதிக சுடுவளங்கள் தேவை. படையினரின் தேவைகளை ஈடு செய்வதற்காக தப்பி ஓடிய படையினருக்கான பொதுமன்னிப்புக்களையும், புதிதாக படையினரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ள அரசு தனது ஆயுத தேவைகளை பல்வேறு நாடுகளிடம் இருந்து பெற்று வந்திருந்தது.

அரசாங்கம் தனது ஆயுத தேவைகளுக்கு இந்து சமுத்திர பிராந்திய பூகோள அரசியலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான், சீனா என தனது ஆயுத தேவைகளை நிறைவு செய்துவந்த இலங்கை அரசாங்கம் இந்தியாவை தனக்கு சாதகமான ஒரு நிலைக்கு மீண்டும் இழுத்துள்ளது.

இதற்கு அமைய இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டை முன்னின்று நடத்தி கொடுத்த இந்தியா, தற்போது இலங்கைக்கான தனது படைத்துறை உதவிகளையும் அதிகரித்துள்ளது.
இலங்கை அரசு கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ள மிக்29 ரக தாக்குதல் விமானங்களுக்கான தொழில்நுட்ப மற்றும் பயிற்சி உதவிகளை வழங்க முன்னர் முன்வந்த இந்தியா தற்போது இலங்கை வான்படையினரை தரமுயர்த்தும் நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை வான்படையினரின் வான்கலங்களை தரமுயர்த்தும் நடவடிக்கைகளை இந்திய அரசின் அனுசரணைகளுடன் இந்திய வான்படையும், இந்தோ ரஷ்யன் ஏவியேசன் லிமிடெட் மேற்கொண்டு வருகின்றன. இந்திய அரசு இலங்கை வான்படையின் எம்ஐ17வி, எம்ஐ24, எம்ஐ35

(இது எம்ஐ24 வகை உலங்குவானூர்தியின் ஏற்றுமதி வடிவம்), உக்ரேன் தயாரிப்பான மிக்27டி மற்றும் மிக்27யுபி (பயிற்சி விமானம்) ஆகியவற்றை தரமுயர்த்துவதற்கு முன்வந்துள்ளது.

மேலும் ஈரானுடன் இலங்கை அரசு கொண்டுள்ள புதிய உறவுகளால் சினமடைந்துள்ள இஸ்ரேல் இலங்கை ஆயுத விநியோகங்களை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதற்கு முயன்று வருகையில் இஸ்ரேலிய தயாரிப்பான கிபீர் தாக்குதல் விமானங்களை பராமரிக்கும் பணிகளை இந்தியா மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

கிபீர் விமானங்களுக்கான சூட்டு கட்டுப்பாட்டு ராடார்களை பொருத்தும் பணிகள் தொடர்பாக இலங்கை அரசு இஸ்ரேலுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போது, இந்தியாவின் இந்துஸ்த்தான் ஏரோநியூற்றிக்கல் நிறுவனம் அந்த ராடார்களை இலங்கையின் கிபீர் விமானங்களுக்கு விரைவாக பொருத்தி கொடுத்துள்ளது. அதற்கான செலவுகளையும் இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ராடார்கள் வானில் இருந்து வானுக்கும், வானில் இருந்து தரைக்கு மற்றும் கடலுக்குமான தாக்குத்திறனில் முன்னைய உடூtச் உஃ/M 2001 ராடார்களை விட மிகவும் தரமானது. மேலும் இந்த வருட இறுதிப்பகுதியில் இலங்கை வான்படையினரின் இரு கிபீர்சி7, ஒரு கிபீர்சி2, ஒரு கிபீர்ரி.சி.2 (பயிற்சி விமானம்) என்பனவும் புனரமைப்பு மற்றும் தரமுயர்த்தும் பணிகளுக்காக இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

இந்திய நிறுவனங்கள் இலங்கை வான்படையின் ஆறு எம்ஐ24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளையும் இரவுநேர தாக்குதல் வலிமை உள்ளதாக மாற்றி கொடுத்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவை தவிர 2006 ஆம் ஆண்டு இரு எம்ஐ17 உலங்குவானூர்திகளையும் இந்திய அரசு இலங்கை அரசிற்கு வழங்கியிருந்தது. அவற்றில் ஒன்று வான்புலிகளின் தாக்குதலில் சேதமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசானது முன்னர் இந்த பணிகளுக்காக பாகிஸ்தான் மற்றும் உக்ரேன் நாட்டு நிறுவனங்களை நாடிவந்தது. எனினும் அங்கு எடுத்து செல்லப்படும் விமானங்கள் மீண்டும் பணிக்கு திரும்ப அதிக காலம் எடுக்கும் என்ற காரணத்தால் அது இந்தியாவை நாடுகிறது.

உதாரணமாக 2005 ஆம் ஆண்டு சீனத் தயாரிப்பான எப்7 விமானங்களை மறுசீரமைக்கும் பணிகள் பாகிஸ்தான் இற்கு வழங்கப்பட்டது. 03 ஊ7ஆகு, 01 ஊகூ7, 02 ஊகூ5 என்பன மேலதிக புனரமைப்பு வேலைகளுக்காக பாகிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் 2005 ஆம் ஆண்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. அதே காலப்பகுதியில் 3 மிக்27 ரக தாக்குதல் விமானங்கள் உக்ரேனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இந்திய அரசு இலங்கை அரசுடன் நேரடியாக கைகோர்த்துள்ள நிலையில் இலங்கை அரசு தனது படைத்துறை உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெருமளவில் பெற்றுக் கொள்வதுடன், போரையும் தீவிரப்படுத்தி வருகின்றது. அதாவது இலங்கையில் உக்கிரமடைந்துவரும் மோதல்கள் அதனால் கொல்லப்படும் பெருமளவான அப்பாவி பொதுமக்களின் பின்னணியில் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என தன்னைத்தானே தம்பட்டமடித்து வரும் இந்தியா தீவிரமாக செயற்படுவது உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களை ஆழ்ந்த அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இந்த நிலையில் எந்தச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் ஒரு நெருக்கடியான கட்டத்தை தமிழ் இனம் அடைந்துள்ளது என்பதே தற்போது பொருத்தமானது.

ஆனால், அனைத்துலகத்திலும், தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழ் மக்களுக்கான ஆதரவுகள் பெருகிவருவதாக கருத்து கணிப்புக்களும், அங்கு நடைபெறும் பேரணிகளும் கட்டியம் கூறி வருகையில் விடுதலைப்புலிகளை ஒரு பலவீனமான அமைப்பாக சித்திரிக்க அரசாங்கம் முயன்று வருகின்றது.

- வேல்ஸிருந்து அருஷ்-


Comments