குற்றம் இழைத்த தரப்பே குற்றம் சுமத்தும் விநோதம்

ஐந்து மாதங்களுக்கு மேல் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸநாயகத்துக்கு எதிராக ஒருவாறு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துவிட்டது இலங்கை அரசு.

இதனையடுத்து, இதுவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அவலத்தை அனுபவித்து வந்த திஸநாயகம் ஒருவாறு விளக்கமறியலுக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

எனினும், திஸநாயகத்துக்கு எதிராக அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பலவீனமானவை எனத் தெரிவித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை மிரட்டும் முயற்சி இது என்றும் கண்டித்திருக்கின்றது.

இலங்கையில் இருந்துகொண்டு தமிழர் தரப்பின் நியாயத்தை இலங்கையின் உண்மை நிலைவரத்தை ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் வெளிப்படுத்தி, தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உணர்த்தும் ஊடகவியலாளர்களே இப்போது அதிகம் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்.

இத்தகையோருக்கு கள நிலைவரம் பற்றிய உண்மைகளைத் தொகுத்து வழங்கும் தமிழ் ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்படுகின்றார்கள், தண்டிக்கப்படுகின்றார்கள், அச்சுறுத்தப்படுகின்றார்கள். அது மற்றொரு விடயம்.

ஆனால் இலங்கையில் தமிழர்கள் மத்தியிலிருந்து ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் விடயங்களை அம்பலப்படுத்தும் திறமையுள்ள ஊடகவியலாளர்களின் நிலைமை இங்கு அதோகதிதான்.

ஓரளவு உண்மைகளை இந்த இரு மொழிகளில் வெளிப்படுத்தி உலகுக்கு உரைத்து வந்த நிமலராஜன், சிவராம் போன்றோர் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் எஞ்சி மிஞ்சி இருந்து ஆங்கிலத்தில் ஆக்கபூர்வமாகப் பணியாற்றிய திஸநாயகமும் இன்று கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தப்பட்டு விட்டார்.

இனவாதத்தைத் தூண்டி அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முனைந்தார் என்று பொத்தம் பொதுவில் திஸநாயகம் மீது இப்போது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டுவது போல, இதனை இத்தகைய குற்றச்சாட்டின் கீழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த எத்தனிப்பதை இலங்கையில் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் விடுக்கப்பட்ட கடும் அச்சுறுத்தலாகவே மக்கள் கொள்ளவேண்டும்.

தமிழ் ஊடகவியலாளர் ஒருவரைப் பார்த்து "இனவாதத்தைத் தூண்டி அரசுக்கு அபகீர்த்தி' ஏற்படுத்தினார் என்று குற்றம் சுமத்தும் அடிப்படை யோக்கியதையோ தகுதியோ கடந்த அறுபது ஆண்டு காலமாக இலங்கையை ஆண்ட எந்த அரசுக்கும், அதிகாரத்துக்கும் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை நிலை.

இந்தத் தீவில் இனவாதத்தைத் தூண்டி, இந்தத் தீவின் மக்களை இனக்குழுமங்களாகப் பிரியவைத்த கொடூரத்தைப் புரிந்தவையே சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலும், மேலாண்மைத் திமிரிலும் விளைந்த கொழும்பு அரசுகள்தாம்.

சிறுபான்மையினரான தமிழரை இனவழிப்புச் செய்வதற்காகக் காலத்துக்குக்காலம் ஒடுக்குமுறைச் சட்டங்களையும் அடக்குமுறை விதிகளையும் உருவாக்கி, பேரினவாதத்தைத் தூண்டி வளர்த்தவையே கொழும்பு அரசுகள்தாம்.

தமிழினத்தின் இருப்புக்கே அடிப்படையான நில உரிமை, மொழி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை, இனத்துவத்தைப் பேணிக் காக்கும் உரிமை என்பனவற்றை சிதைத்தழித்து, தமிழினத்தின் பண்பாட்டு வாழ்வுக்கே பெருநாசம் செய்யும் நிர்வாகக் கட்டமைப்பாகத்தான் கொழும்பு அரசுகள் வடிவம் கொண்டு நிற்கின்றன.

தனிச் சிங்களச் சட்டம், உயர் கல்விக்கு மாவட்ட ரீதியான தெரிவு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற வரிசையில் கடைசியாக வந்திருக்கும் அவசரகாலச் சட்டவிதிகள் வரை அனைத்துமே இப்படி இனவாதக் கண்ணோட்டத்தோடு தமிழ் இன சம்ஹாரத்தை இலக்காகக் கொண்டு நடைமுறைப் படுத்தப்பட்டவைதான்.

அத்தகைய இனவாதக் கண்ணோட்டத்தோடு தமது ஆட்சிக் கட்டமைப்புகளை நிறுவி, முன்னெடுத்துச் செல்லும் கொழும்பு அரசு நியாயத்துக்காகப் போராடும் தமிழர் தரப்பைப் பார்த்து "இனவாதத்தைத் தூண்டுகின்றார்' எனக் குற்றம் சுமத்துவது அபத்தத்திலும் அபத்தம்.
அதுவும் ஒருபுறம் இன சமரசத்துக்கு ஆப்பு வைத்து, தமிழர்களை மூன்றாம் தரப்பாக நடத்தி, அதன்மூலம் இனவாதத்தைத் தூண்டித் தனக்குத்தானே அபகீர்த்தியை ஏற்படுத்திக் கொண்டுள்ள அரசு

அரசின் அராஜக அத்துமீறல்களுக்கு எதிராகக் கிளர்ந்து உண்மையை வெளிப்படுத்திவந்த தமிழ் ஊடகவியலாளன் ஒருவனைக் கூண்டில் நிறுத்தி, அவர் "வன்முறையைத் தூண்டி, அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார் என்று' குற்றம் சுமத்துவது வேடிக்கையிலும் வேடிக்கையாகும்.


Comments