பயங்கரவாதம் பற்றிய ஐ.நா.பட்டயம் அவசியம்

'பயங்கரவாதம் தொடர்பான தனது பட்டயத்தைத் தயாரிப்பதில் ஐக்கிய நாடுகள் சபை விரைவு காட்ட வேண்டும்.'

இப்படி ஐ.நாவைக் கோரும் பிரேரணை ஒன்று சார்க் மாநாட்டில் நிறைவேற்றப்படவிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இத்தகைய பிரேரணையைச் சார்க் நிலையியல் குழு இறுதி செய்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹண தெரிவித்திருக்கின்றார்.
நிச்சயமாக விரைந்து ஐ.நா. ஆற்றவேண்டிய காரியம் இது.

ஏனென்றால், 'பயங்கரவாதம்' என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் விளக்கம் சர்வதேச ரீதியில் ஐ.நா. போன்ற அமைப்பினால் விரிவாகவும், நுணுக்கமாகவும் ஆராயப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

உலக நாடுகளின் ஆட்சித் தலைமைகள் தாம் மேற்கொள்ளும் அடக்குமுறை ஆட்சியதிகார நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் நீதி, நியாயமான உரிமை கோரி தேசியங்களும், குழுமங்களும் நடத்தும் உண்மையான விடுதலைப் போராட்டங்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி, அகௌரவப்படுத்தி அவற்றைச் சிதைக்கவும்

இத்தகைய 'பயங்கரவாதம்' என்ற சொல்லையே தமக்கு சாதகமாகப் பெரிதும் பயன்படுத்துகின்றன என்பதே இன்றைய உண்மை நிலையாகும்.

இதேசமயம், இறைமையுள்ள ஆட்சி பீடங்கள் என்று தம்மை உரிமை கோரிக்கொள்ளும் இத்தகைய தரப்புகள், மறுபக்கத்தில் நியாயமான விடுதலைப் போராட்டங்களை அழித்தொழித்து சிதைப்பதற்காக முன்னெடுக்கும் 'அரச பயங்கரவாதமும்' கூட, மேற்படி பயங்கரவாத நடவடிக்கை எது அல்லது எவை என்பதற்குச் சரியான விளக்க மில்லாத காரணத்தால், சட்டரீதியானதும் நீதியானதுமான செயற்பாடுகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய நிலைமையே இலங்கையில் நீடிக்கின்றது என்பதே இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்புகளுள் ஒன்றான ஈழத் தமிழர்களின் கருத்து நிலைப்பாடாகும்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் 2005 ஆம் ஆண்டில் தமது மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இந்தச் சிக்கலைக் கோடிகாட்டி வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

"" பயங்கரவாதம் என்ற சொற் பதத்திற்கு ஒரு தெளிவான, தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழி தழுவி நிகழும் நியாயமான அரசியல் போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிவுபடுத்தப்படுகின்றன.

இந்த வகையில் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கரவாதச் சேறு பூசப்படுகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடி மறைக்கப்படுகிறது.

ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர்கள் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது.

இந்தத் துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.'' இப்படிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருக்கின்ற கருத்து இச்சமயத்தில் நோக்கற்பாலதாக உள்ளது.


சர்வதேச ரீதியில் சிக்கலுக்குள்ளாகியுள்ள முக்கிய விடயம் இது. அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் "பயங்கரவாதம்' என்ற சொல்லை, தமது நேச சக்திகள் எவை, எதிரணி சக்திகள் எவை என்ற அடிப்படையிலேயே தீர்மானித்து வரையறை செய்கின்றன.

இஸ்லாமியப் போராளிகளின் குறிப்பாக பாலஸ்தீனப் போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகளைப்"பயங்கரவாதம்' என்று வகைப்படுத்தும் அமெரிக்கத் தரப்புக்கு, அப்பாவி இஸ்லாமிய மக்களின் மீது இஸ்ரேல் ஸியோனிஸ சக்திகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்கள் "பயங்கரவாதமாக'த் தோற்றுவதேயில்லை.

இலங்கையில் கூட இங்கு செயற்படுகின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துத் தடைசெய்துள்ள அமெரிக்கா, பிரிட்டன் போன்றவற்றின் கண்களில் ஈழத் தமிழர் தாயகம் மீது கோரமாக கொடூரமாக கட்டவிழ்ந்திருக்கும் அரச பயங்கரவாதம் படுவதேயில்லை.

ஆகக் குறைந்தது அச் செயல்களைக் கண்டிக்கும் நியாயம் கூட அவர்களுக்குப் படுவதில்லை.

இந்தப் பின்புலத்தில் "பயங்கரவாதம்', "அரச பயங்கரவாதம்', "இராணுவப் பயங்கரவாதம்', "இனவழிப்புக் கொடூரம்' ஆகிய சொற்பதங்கள் குறித்து ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் விரிவாகவும், விளக்கமாகவும் ஆராய்ந்து பல தரப்புக் கருத்துகளையும் உள்வாங்கி சர்வதேசப் பட்டயம் ஒன்றைத் தயாரிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

அப்படிச் செய்தாலாவது, பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நியாயம் கிடைக்க வழி பிறக்காதா என்பதுதான் பலரினதும் எதிர்பார்ப்பாகும்.


Comments