வான்புலிகளின் தாக்குதல் சொல்கின்ற செய்திகள்

2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சம்பூரை வல்வளைப்பு செய்யும் நோக்கில் பாரிய படை நடவடிக்கை ஒன்றை சிறிலங்கா அரசு ஆரம்பித்தது. விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் இருந்து திருகோணமலை துறைமுகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்று சிறிலங்கா அரசு அதை குறிப்பிட்டிருந்தது.

மாவிலாறு மீதான சிறிலங்காப் படையினரின் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகள் மூதூர் மீது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை செய்திருந்தனர். அப்பொழுது திருகோணமலை கடற்படைத் தளம் மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர்.

இதைச் சுட்டிக்காட்டிய சிறிலங்கா அரசு திருகோணமலையை விடுதலைப் புலிகளிடம் இருந்து காப்பதற்கு சம்பூரை கைப்பற்றுவது அவசியம் என்று பிரச்சாரம் செய்தது. உலக நாடுகளும் மௌனமாக இருக்க ஒரு கொடிய போரை நடத்தி சம்பூரை சிறிலங்கா அரசு கைப்பற்றிக் கொண்டது. ஒரே நாளில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான எறிகணைகளை சம்பூர் மீது சிறிலங்காப் படையினர் வீசினார்கள்.

நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட, பல ஆயிரம் பேர் அகதிகளாக சம்பூரையே தரைமட்டமாக்கி சிறிலங்காப் படை வெற்றி விழாவைக் கொண்டாடியது. சம்பூரில் இருந்து பின்வாங்குவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள்.

படையினர் சம்பூரை ஆக்கிரமித்தாலும் திருகோணமலையின் படைத் தளங்கள் மீது எம்மால் தாக்குதல் தொடுக்க முடியும் என்ற செய்தியை அந்த அறிக்கை மூலம் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள். வான்புலிகள் களத்தில் இறங்காத காலகட்டம் அது. அந்த நிலையில் இந்த அறிக்கையை சிங்களத்தின் ஊடகங்களும், ஒட்டுக் குழுக்களின் ஊடகங்களும் கிண்டல் செய்தன.

தற்பொழுது சம்பூர் மீதான படை நடவடிக்கை ஆரம்பித்து சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து விடுதலைப் புலிகளின் விமானங்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படைத் தளம் மீது குண்டுகளை வீசி விட்டுச் சென்றிருக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (26.08.08) இரவு 9:05 மணியளவில் விடுதலைப் புலிகளின் விமானங்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் அமைந்தள்ள சிறிலங்கா கடற்படைத் தளத்தின் மீது குண்டுகளை வீசின. விடுதலை புலகளின் விமானங்கள் வருவதை தாக்குதல் நடப்பதற்கு ஒரு பத்து நிமிடங்களுக்கு முன்னர் சிறிலங்காப் படையினரின் ராடர்கள் கண்டுபிடித்த போதும் விடுதலைப் புலிகளின் விமானங்களை சிறிலங்காப் படையினரால் தாக்கி அழிக்க முடியவில்லை.

வான்புலிகளின் வருகையை அறிந்ததும் கடற்படையினர் வானை நோக்கி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். ஆயினும் தாக்குதலை முடித்துக் கொண்டு வான்புலிகளின் விமானங்கள் வெற்றிகரமாக திரும்பின.

தங்களுக்கு ஏற்பட்ட அவமானமான தோல்வியை சிறிலங்கா அரசு மூடி மறைக்க முற்பட்டது. விடுதலைப் புலிகளின் விமானங்கள் வீசிய இரண்டு குண்டுகளில் ஒன்று வெடிக்கவில்லை என்றும், மற்றைய குண்டு வெடித்ததில் நான்கு கடற்படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் படைத் தரப்பு முதலில் தெரிவித்தது. பின்பு பத்துப் படையினர் காயமடைந்ததாக கூறியது.

ஆயினும் சிங்கள ஊடகங்கள் படையினருக்கு ஏற்பட்ட இழப்பை அம்பலப்படுத்தின. நான்கு படையினர் கொல்லப்பட்டும் இருபதிற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தும் உள்ளனர் என்று படையினர் மத்தியில் இருந்து பெற்ற செய்திகளை வெளியிட்டன. கடந்த முறைகளை விட இம் முறை வான்புலிகள் வீசிய குண்டுகள் வீரியம் மிக்கவை என்பதும் அவர்கள் தருகின்ற தகவல்களில் ஒன்று.

தாக்குதல் நடந்து இரண்டு நாள் கழித்து விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தாக்குதல் வெற்றிகரமாக நடந்ததாகவும், நான்கு படையினர் கொல்லப்பட்டு, 35 படையினர்கள் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாக்குதல் நடத்திய வான்புலிகள் தேசியத் தலைவருடன் நிற்கின்ற படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இதே வேளை ஆறு படையினர் கொல்லப்பட்டனர் என்றும், 35 படையினர்கள் காயமடைந்தனர் என்றும், கடற்படையின் இரண்டு தாக்குதற் படகுகள் அழிக்கப்பட்டன என்றும், பல கட்டடங்கள் சேதமாகின என்றும் கொழும்பு ஊடகம் ஒன்றில் படைத்துறை ஆய்வாளர் ஒருவர் எழுதியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

ஆனால் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் நடத்துகின்ற ஒவ்வொரு முறையும் சிறிலங்கா அரசு ஒரே மாதிரியான அறிக்கையை விடும். விடுதலைப் புலிகளின் குண்டுகள் இலக்குத் தவறி விழுந்தன என்று அந்த அறிக்கையில் சொல்லிக் கொள்ளும். வீசப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒரு குண்டு வெடிக்கவில்லை என்பதையும் தன்னுடைய அறிக்கையில் மறக்காமல் சேர்த்துக் கொள்ளும்.

இலக்குத் தவறிக் குண்டுகள் விழுகின்றன, விழுகின்ற குண்டுகளும் வெடிக்கவில்லை என்று ஒவ்வொரு முறையும் சொல்வதன் மூலம் வான்தாக்குதலில் விடுதலைப் புலிகள் இன்னும் முறையான பயிற்சியைப் பெறவில்லை என்றும் அவர்கள் சரியான வான்படையாக வளர்ச்சி அடையவில்லை என்றும் மொத்தத்தில் விடுதலைப் புலிகளை வான்படையை கொண்டிருக்கும் ஒரு இராணுவமாக மதிப்பிட முடியாது என்றும் சிறிலங்கா அரசு சொல்லி தனக்கு ஏற்பட்ட அவமானத்தை குறைத்துக் கொள்ள முற்படும்.

ஆனால் வான்புலிகளின் தாக்குதல் நடத்திய ஒவ்வொரு முறையும் படையினர் அந்தத் தாக்குதலில் காயம் அடைந்துள்ளார்கள் என்று சிறிலங்கா அரசு ஒத்துக்கொள்வதானது, வான்புலிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது. பலாலிப் படைத் தளம் மீது வான்புலிகள் குண்டு வீசிய போது, நான்கு படையினர் கொல்லப்பட்டனர் என்று சிறிலங்கா அரசு கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத் தக்கது.

மிக நவீன வான்கலங்களை வைத்திருக்கும் சிங்களப் படைகளின் வான் தாக்குதல் பெரும்பாலும் பொதுமக்கள் மத்தியில் விழுகின்ற பொழுது, சிறியரக விமானங்களையே வைத்திருப்பதாக சொல்லப்படும் வான்புலிகள் போடுகின்ற குண்டுகள் சரியாக படையினர் மீது விழுவது உண்மையிலேயே ஆச்சரியமானதுதான்.

வான்புலிகள் தாக்குதல் நடத்தி விட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியது சிறிலங்கா அரசுக்கு உலக அரங்கில் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. கடந்த ஆண்டு வான்புலிகள் யுத்தத்திற்குள் நுழைந்ததை அடுத்து சிறிலங்கா அரசு உலகின் பல நாடுகளில் இருந்து மிக நவீன ராடர்களை வாங்கிக் குவித்தது. வுவனியாவில் அதிக தூர வீச்சு எல்லை கொண்ட ராடர்களை நிறுவியது. வன்னியில் இருந்து புலிகளின் விமானங்கள் மேலெழுந்த உடனேயே தம்மால் அதை அறிந்து கொள்ள முடியும் என்றும் சொன்னது. இனி புலிகளின் விமானங்கள் வந்தால் அவைகளால் திரும்பிப் போக முடியாது என்று கொக்கரித்தது.

ஆனால் திருகோணமலையை வான்புலிகள் அண்மித்த பின்புதான் சிறிலங்காப் படையினரால் வான்புலிகளின் வருகையை அறிந்து கொள்ள முடிந்தது. வான்புலிகளின் விமானங்கள் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி தளம் திரும்பிய பிற்பாடு, கிபீர் விமானங்கள் வன்னிக்கு விரைந்து “பரா” குண்டுகளை வீசி புலிகளின் விமானங்களை தேடியதாக சொல்லி சிறிலங்கா அரசு அசடு வழிந்தது.

சில வாரங்களுக்கு முன்பு சிறிலங்காவின் படைத் தளபதி சரத் பொன்சேகா ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒரு விடயத்தைக் கூறினார். விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபு வழி இராணுவமாக செயற்பட முடியாது, அவர்களால் இனி கொரில்லா குழுக்களாகத்தான் செயற்பட முடியும் என்று சொன்னார்.

அவருடைய இந்தக் கூற்று பலரால் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்பட்டது. சிங்கள மக்கள் அதை உண்மை என்று நம்பினார்கள். ஒட்டுக் குழுக்களும் சரத் பொன்சேகாவின் கூற்றை அப்படியே ஏற்று கட்டுரைகள் வரைந்தன. தமிழர் தரப்பில் அதை மறுத்து ஆய்வுகள் செய்ய வேண்டிய அளவிற்கு சரத் பொன்சேகாவின் கூற்று முக்கியத்துவம் பெற்றது.

கடைசியில் வான்புலிகளின் திருகோணமலை மீதான தாக்குதல் சரத் பொன்சேகா கூறியதை அர்த்தமற்றதாக்கி விட்டது. விடுதலைப் புலிகள் ஒரு மரபு வழி இராணுவமாக செயற்படுகிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்தி விட்டது.

ஒரு கொரில்லாப் படையால் வான்படையை வைத்திருக்க முடியாது. வான்படையை வைத்திருப்பதற்கு பரந்த பிரதேசம், சீரான வினியோக வழிகளும் தேவை. வன்னியில் பல முனைகளில் சிறிலங்காப் படையினர் படை நடவடிக்கைகளை செய்தும், நாச்சிக்குடா, உயிலங்குளம் போன்ற பகுதிகள் வரை முன்னேறியும் விடுதலைப் புலிகளின் போரிடும் வலிமை அப்படியே இருக்கிறது என்பதே வான்புலிகளின் தாக்குதல் சொல்கின்ற முக்கிய செய்தி.

தமிழர்களுக்கு நம்பிக்கை கொடுக்கின்ற செய்தியும் அதுவே ஆகும்.


Comments