வல்லரசுகளின் பலப்பரீட்சையில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள்

கொசோவா தனிநாட்டுப் பிரகடன காலத்தில் சிறியளவில் பேசப்பட்ட ஜோர்ஜியாவின் இரு மாநிலங்கள், இன்று உலகளவில் பேசப்படும் விவகாரத்திற்குரிய பிரதேசங்களாக மாறியுள்ளன.

கடந்த 7ஆம் திகதி ஜோர்ஜியாவில் சுயமாக இயங்கும் 70,000 மக்கள் தொகை கொண்ட தென் ஒசேஷியா (South Ossetia) மாநிலத்தில் பெரும் படை நகர்வொன்றை மேற்கொண்டு ஏறத்தாழ 1400 பேரை கொன்று குவித்தது ஜோர்ஜிய இராணுவம்.

அங்கு பெரும்பான்மையாக வாழும் ஒசேஷியர்கள், தனி நாட்டிற்குரிய தனித்தன்மையுடன் எடுவார்ட் கொகொய்டி (Eduard Kokoity) தலைமையில் சுயமாக இயங்கி வருகின்றனர்.

1992 ஆம் ஆண்டில் அன்றைய ரஷ்ய அதிபர் பொரிஸ் யெஸ்சின் , ஜோர்ஜிய அதிபர் எட்வேட், செவாட்னாட்சே கொண்ட உடன்பாட்டின் பிரகாரம் அமைதிப்படையொன்று தென் ஒசேஷியாவில் நிறுவப்பட்டது.

கடந்த 7 ஆம் திகதி வியாழன் வரை பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற ஜோர்ஜிய அரசு, எவரும் எதிர்பாராத வகையில் பெரும் படையெடுப்பொன்றினை தெற்கு ஒசேஷியா மீது மேற்கொண்டு அப்பிராந்தியத்தில் நிலவிய சமன் நிலையை சீர்குலைத்த விவகாரம், வல்லரசுகளின் நேரடித் தலையீட்டிற்கு வழி வகுத்தது.

தனி நாட்டிற்காகப் போராடி வரும் 70,000 மக்கள் தொகையைக் கொண்ட தெற்கு ஒசேஷியா மாநிலத்தில், ஜோர்ஜிய ஆக்கிரமிப்பின் விளைவாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ரிஸ்கின்வலி (Tskhinvali) என்கிற ஒசேஷியத் தலைநகரம் சிதைக்கப்பட்டது.
தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வரும் போராளிகளுக்கு ஆதரவாக ரஷ்யத் துருப்புக்கள் களத்தில் இறங்கின.

ரஷ்யாவின் மத்தியஸ்தத்தில் ஜோர்ஜிய படைகளும், தென் ஒசேஷியப் போராளிகளும் போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு கண்ட சில மணி நேரத்தில் ஜோர்ஜிய முன்னெடுத்த ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கை, பாரிய அழிவினை ஜோர்ஜிய முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

போர் நிறுத்தத்தை முறித்து, படை நகர்வை மேற்கொண்டதற்காக, ஜோர்ஜிய அதிபர் மிகேயில் சாகாஸ்விலி கூறும் நொண்டிச் சாக்குகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
தென் ஒசேஷிய மாநிலத்தில் நிலைöகாண்டுள்ள ஜோர்ஜிய இராணுவம் மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை ஒசேஷிய போராளிகள் தொடுத்ததற்குப் பதிலாகவே தாம் படை நகர்வை முன்னெடுத்ததாக அதிபர் சாகாஸ்விலி தன்பக்க நியாயத்தை கூறியுள்ளார்.
ஏற்கனவே ரஷ்ய அமைதிப்படையானது தென் ஒசேஷிய மாநிலத்தில் நிலை கொண்டுள்ள வேளையில் பெரும் போர் தொடுக்கும் ஜோர்ஜியாவின் பின்புலத்தில் வேறொரு பலமான காரணியோ அல்லது சக்திகளோ இருந்திருக்க வேண்டும்.

தென் ஒசேஷியா மீதான படையெடுப்பானது, ரஷ்ய தலையீட்டினை உருவாக்கி, நேட்டோ படைகளின் பிரசன்னத்தை ஜோர்ஜியாவில் ஏற்படுத்தி விடுமென்கின்ற கணிப்பினை அதன் அதிபர் சாக்காஸ்வலி கொண்டிருக்க வேண்டும்.

ஆனாலும் ஜோர்ஜிய அதிபரின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நேட்÷டா நாடுகளின் கூட்டத்தில் உக்ரேன், ஜோர்ஜியா நாடுகள் சமர்ப்பித்த உறுப்புரிமை விண்ணப்பத்தை அமெரிக்கா ஆதரித்தாலும் ஜேர்மனிய அரசு பலமாக எதிர்த்தது.

அதாவது அத் தேசங்களின் எல்லைகளில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை, புதிய எதிர்விளைவுகளை உருவாக்கலாமென்கிற தயக்கமே ஜேர்மனிய எதிர்ப்பிற்கு அடிப்படைக் காரணியாக முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேட்டோவின் பார்வையை தம்பக்கம் ஈர்க்க, இத்தகைய வீர விளையாட்டில் ஜோர்ஜிய அதிபர் ஈடுபட்டுள்ளாரென்பதே பல மேற்குலக அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

யுத்தம் ஆரம்பித்தவுடன் ஜோர்ஜிய அதிபர் சாக்காஸ்வலி கூறிய ரஷ்ய எதிர்ப்பு வன்மச் சொல்லாடல்கள், அமெரிக்காவை விட ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் அவர்களையே அதிகம் உசுப்பி விட்டுள்ளது.

ரஷ்ய அதிபரை விட, அதன் பிரதமரே ஜோர்ஜியா மீதான கண்டனங்களை அதிகம் வெளிப்படுத்தியிருந்தார்.

தென் ஒசேஷியாவிற்குள் நுழைந்த ரஷ்ய படைகள் ஜோர்ஜியத் தலைநகர் ரப்லிசி (Tbilisi) இலிருந்து 80 கி. மீற்றர் தூரத்திலுள்ள கோரி (Gori) நகரை நோக்கி நகர்ந்த வேளையில் கருங்கடலோடு அமைந்திருந்த ஜோர்ஜியத் துறைமுகம் பொட்டி (Poti) மீது விமானத் தாக்குதலையும் தொடுத்தது.

அதேவேளை, தனது நாட்டின் இராணுவ, பொருளாதார நிலைகளை ரஷ்ய அழிப்பதாக ஜோர்ஜிய அதிபர் மேற்கிடம் முறையிடத் தொடங்கினார்.

தென். ஒசேஷியாவில் மோதல்கள் தீவிரமடைகையில் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் இன்னொரு மாநிலமான அப்காசியாவிலும் (Abkhazia) தாக்குதல்கள் ஆரம்பித்தன.
இம்மாநிலத்தின் கொடொரி கோச் (Kodori Gorge) என்கிற பிரதேசத்தில் மட்டும் நிலைகொண்டிருந்த ஜோர்ஜிய படைகள், போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டன.
இருமுனைத் தாக்குதலுக்கு முகங்கொடுத்த ஜோர்ஜிய அதிபர் 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் முடிவிற்கு வருவதாக அறிவித்து அப்காசியாவிலுள்ள ரஷ்ய அமைதிப் படையினரை ஆக்கிரமிப்பு இராணுவமாகப் பிரகடனம் செய்தார்.

அதேவேளை முன்னாள் சோவியத் ஒன்றியக் குடியரசு நாடுகளின் பொதுநலவாயக் கூட்டமைப்பிலிருந்து (Common Wealth Of Independent States - CIS) வெளியேறப் போவதாகவும் அவர் எச்சரித்தார்.

தென் ஒசேஷியாவில் 70,000 ஒசேஷியர்கள் வாழ்ந்தாலும், ஏனைய 75,000 ஒசேசியர்களும் சகல சௌபாக்கியங்களுடன் ஜோர்ஜியாவின் ஏனைய பகுதிகளில் வாழ்வதாக வியாக்கியானம் வேறு அதிபரால் வழங்கப்பட்டது.

தனது நகர்வுகளுக்கு உறுதுணையாக அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் வருமென்கிற ஜோர்ஜியாவின் எதிர்பார்ப்புக்கள் கலைந்து போனது.

மேற்குலகின் சார்பாகக் களமிறக்கப்பட்ட தற்போதைய ஐரோப்பிய யூனியனின் தலைவர், பிரெஞ்சு அதிபர் நிக்கலாஸ் சார்க்கோசி மேற்கொண்ட சமரச முயற்சியை ஜோர்ஜிய அதிபர் உளமார விரும்பவில்லை.

அவசர நிவாரண உதவிகள் என்கிற போர்வையில் சரக்கு விமானங்களையும், யுத்தக் கப்பல்களையும் அனுப்பி ஜோர்ஜியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா தற்போது ஈடுபட்டுள்ளது.

உலக மகா வல்லரசு என்கிற ஸ்தானத்திற்கு விழுந்த பலத்த அடியால் ஏற்பட்டுள்ள வலி, இன்னமும் அதிபர் புஷ்ஷினை விட்டு அகலவில்லை.

இறையாண்மை கொண்ட தேசத்தின் மீது ரஷ்யா மேற்கொண்ட படை ஆக்கிரமிப்பினை இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஏற்றுக்கொள்ள முடியாதென்பதே அமெரிக்க அதிபரின் வாதமாகும்.
இவ்வகையான மேற்குலகின் எச்சரிக்கைத் தொனி உரத்துக் கிளம்புவதால் அப்காசிய, தென் ஒசேஷிய மாநிலங்களின் தனி நாட்டுக் கோரிக்கையினை ஆதரிக்கப் போவதாக ரஷ்யா எச்சரிக்க ஆரம்பித்துள்ளது.

தென் ஒசேஷியாவும், ரஷ்ய இறையாண்மைக்கு உட்பட்ட வட ஒசேஷியாவும் இணை ந்து அகண்ட ஒசேஷியா என்கிற தேசத்தை உருவாக்க ரஷ்யா உடன்படுமாவென்று தெரியவில்லை.
தனது எல்லைப் பிரதேசங்களில் நேட்டோவின் பிரசன்னத்தை அகற்ற வேண்டுமென்கிற குறிக்கோளை நிறைவேற்ற, தென் ஒசேஷியா, அப்காசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ரஷ்ய பயன்படுத்துவதாகவும் பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ரஷ்ய கடவுச் சீட்டினை வைத்திருப்பவர்களை காப்பாற்றுவதற்காகவே படையெடுப்பு செய்ததாகக் கூறும் ரஷ்யா, அத் தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் வெளியக சுயநிர்ணய உரிமையை இதுவரை அங்கீகரிக்கவில்லை.

தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை, தமது பிராந்திய நலனிற்காகப் பயன்படுத்திய இந்தியாவை 80 களில் தமிழ் மக்கள் தரிசித்துள்ளார்கள்.

சேர்பியாவிலிருந்து கொசோவா பிரிந்து சென்ற போது எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யாவும் ஆதரித்த அமெரிக்காவும் தென் ஒசேஷியாவில் எதிர்மறையான நிலைப்பாட்டினை எடுத்துள்ளன.

கொசோவா விவகாரத்தில் உடன்பாடு இல்லாமல் அரசுகள் பிரியக் கூடாதென்கிற விவாதத்தையே ரஷ்யா முன்னிலைப்படுத்தியது.

புதிய உலகக் கோட்பாட்டில் “உடன்பாடுகள்’ பிராந்திய நலனிற்கேற்ப நாடுகள் மீது திணிக்கப்பட்டதை ரஷ்யா ஏன் உணரவில்லையென்பது ஆச்சரியத்திற்குரியது.
ஜோர்ஜியாவில் தற்போது நிகழும் வல்லரசுகளின் காய் நகர்த்தல்களிலிருந்து தமிழ் மக்கள் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போர் தொடுக்கும் சிங்கள தேசத்தைத் தடுத்து நிறுத்த எந்த வல்லாதிக்க நாடுகளும் முன்வரவில்லை.

தென் ஒசேஷியத் தலைநகரில் ஜோர்ஜியப் படைகளால் ஏற்பட்ட பேரழிவுகளைப் பார்க்கிலும், மிக மோசமான மனிதப் பேரவலம் வன்னியில் நிகழ்த்தப்படுகிறது.

சில வல்லரசுகள் ஆக்கிரமிப்பாளருக்கு உறுதுணையாகவும், பல வல்லாதிக்க நாடுகள் இன அழிப்பை கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலைப்பாட்டிலும் இருக்கின்றன.

ஆனாலும் இவர்களின் உள் முரண்பாடுகள் முற்றி, பிறிதொரு பரிமாண நிலையை எட்டும் வரை, ஆக்கிரமிப்பினை தீவிரப்படுத்தும் சிங்களத்தின் போக்கு மாறப் போவதில்லை.
பேரினவாத வல்லாதிக்கத்தின் பலவீனமான பகுதியும், அதன் இயங்கியல் போக்கில் இணைந்தே வருவதை அறிவியல் பூர்வமாக உணரலாம். இப்புதிய உலக ஒழுங்கிற்கு முகங் கொடுத்தவாறு ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமானது எவ்வாறு முன்னோக்கி நகர்ந்து செல்லுமென்கிற புதிய விடயத்தை இலங்கையில் தரிசிக்கப் போகிறது இந்த வல்லாதிக்க நாடுகள்.

- சி. இதயச்சந்திரன்-

Comments