இலங்கை இரண்டாவதைத் தவிர வேறு வழியில்லை!

விடை கொடு எங்கள் நாடே... கடல் வாசல் தெளிக்கும் வீடே... பனமரக்காடே... பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?''




துக்கம் மனதைக் கிழிக்கும் இந்தப் பாடலைக் கேட்டாலே இரண்டு நாளைக்குத் தூக்கம் கொள்ளாது. நித்தம் நித்தம் குண்டுச் சத்தம். மொத்தம் மொத்தம் பிணக்குவியல் என்று இலங்கையில் போர் தீவிரம் கண்டுள்ளது. அண்மையில் சென்னை வந்திருந்த இலங்கை, வண்ணி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்துப் பேசினோம். டெலோ அமைப்பின் தலைவரான அவர் இதுவரை மூன்று முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இலங்கையில் உள்ள தற்போதைய நிலவரத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர்.

கடந்த இரண்டு மாதகாலமாக இலங்கையில் போர் தீவிரமடைந்துள்ளதே?

``இப்போது இலங்கையில் நடந்துவரும் சிங்கள ராணுவத்தின் நடவடிக்கைகளை போர் என்றே சொல்ல முடியாது. அப்பாவித் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் ஆகாயத் தாக்குதல் உட்பட அனைத்துத் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது சிங்களராணுவம். தமிழ்மக்கள் வாழும் பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாகக் காட்டிக் கொள்ள அவர்களை நாடோடிகளாக விரட்டியடிக்கின்றனர்.

உதாரணத்திற்கு அரிப்பு, சிறைத்துறை, சொக்குப்புடையான் ஆகிய பகுதிகளில் புகுந்த ராணுவம் ஒரு மணி நேரத்தில் அங்கிருந்த தமிழர்களை வீடுகளை விட்டு வெளியேறும்படி கட்டளையிட்டது. நமது மக்களும் வேறு வழியின்றி பொருட்கள் எதையும் எடுக்காமல் அப்படியே வெளியேறிவிட்டனர். அவர்களின் உடைமைகளை ராணுவம் சூறையாடிவிட்டது. இதுபோன்ற மனித உரிமை மீறிய செயல்கள்தான் இலங்கையில் தொடர்ந்து நடந்து வருகின்றன.''

இப்போது நடந்து கொண்டிருக்கும் போரினால் இலங்கையில் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளனவே?

``இதற்கு முன்பு வரை போர் நடக்கும் சில நாட்களில் மட்டும் பள்ளிகள் மூடப்பட்டு திறக்கப்படும். ஆனால் இப்போது பிரச்னை தீவிரமடைந்துள்ளதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன.''

இலங்கையில் விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்துள்ளதே!?

``ஆறு மாதத்திற்குமுன் ஒரு கிலோ அரிசி 25 ரூபாய் இப்போது எழுபது ரூபாய். சர்க்கரை ஒரு கிலோ ஐம்பது ரூபாய். ஒரு பிரட் பாக்கெட்டின் விலை 35 ரூபாய். இப்படி அண்மையில் எல்லாமே மூன்று மடங்களாக விலை கூடியிருக்கிறது. இலங்கையில் ஒரு தொழிலாளியின் ஒரு நாள் வருமானம் இருநூறு ரூபாய். அதுவும் அவர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைப்பதுமில்லை. இதனால் தமிழ் மக்கள் தொடர்ந்து பசியும், பட்டினியுமாகத்தான் காலத்தைக் கழிக்க வேண்டியுள்ளது.''

தமிழ் எம்.பி. என்ற முறையில் இந்த அவலங்களை நீங்கள் நாடாளு மன்றத்தில் எடுத்து வைக்கிறீர்களா?

``மொத்தம் 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 30 பேர் தமிழ் பேசும் எம்.பி.க்கள் உள்ளனர். அதிலும் 22 பேர் தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்தவர்கள். இந்த தமிழ் தேசிய கூட்டணிக்கு நான் நாடாளுமன்ற தலைமைக் கொறடாவாக இருந்துவருகிறேன்.

நாடாளுமன்றத்தில் நாங்கள் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, கொடுமைகளைப் பற்றிப் பேசும் போது மற்ற உறுப்பினர்கள் எங்களை அடிக்க வருவார்கள். ஆனாலும் நாங்கள் தொடர்ந்துபேசினால் அந்தத்துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவையில் இருக்க மாட்டார்கள். நாம் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசினாலாவது இந்தப் பேச்சுக்கள், அவலங்கள் உலகநாடுகளுக்குத் தெரிந்து அவர்கள் மூலமாவது இலங்கையில் தமிழ் இனம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையில்தான்.''

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட அங்கு உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கூறப்படுகிறதே!

``உண்மைதான். பட்டப் பகலில் பொது இடத்தில் வைத்து ஒரு எம்.பி.யை சுட்டுள்ளது ராணுவம். ஆனால் அதைச் செய்தது ராணுவம் என்பதாகக் காட்டிக் கொள்ளாமல் கொலை குறித்து விசாரிக்க இலங்கை அரசு விசாரணை கமிஷனை நியமித்துள்ளது. விசாரணை கமிஷன் என்றாலே பிரச்னையை அரசுக்கு ஏற்றாற்போல் அமுக்கிவிடவேண்டும் என்றுதான் அர்த்தம்.''

இந்தப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

``இலங்கை அரசு தமிழர்கள் பிரச்னையில் அரசியல் ரீதியான தீர்வை முன் வைத்தால் புலிகள் இது குறித்து பரிசீலினை செய்வார்கள். இல்லை எனில் இலங்கை இரண்டா வதைத் தவிர வேறு வழியில்லை.''

இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து நீங்கள் எந்த மாதிரியான உதவியை எதிர்பார்க் கிறீர்கள்?

``தமிழக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இந்திய பாராளுமன்றத்தில் அழுத்தமாக குரல் எழுப்ப வேண்டும். இந்தியாவின் நேரடித் தலையீடு இருந்தாலே இலங்கையில் தமிழ் இனம் காக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.''

கடந்த சில வாரங்களாக இராணுவ நடவடிக்கைகள் ஓங்கியிருப்பதாகவும் இது புலிகளுக்குப் பின்னடைவு என்றும் கூறப்படுகிறதே?

``சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை ராணுவம் மாதக் கணக்கில் போர் தொடுத்து புலிகளின் கட்டுப் பாட்டிலிருந்த பல பகுதிகளைப் பிடித்தது. ஜெயசிகுரு என்று அந்த ஆபரேஷனுக்குப் பெயர். ஆனால் கடைசியில் புலிகள் நான்கு நாட்கள் மட்டுமே தாக்குதல் நடத்தி ராணுவத்தினரை விரட்டியடித்து மீண்டும் அந்தப் பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். இருபத்தைந்து ஆண்டுகள் போராட்டத்தில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறோம். அதில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.''

புஷ்கின் ராஜ்குமார்
படங்கள்: ஆர். கோபால்

நன்றி: குமுதம், Sept 03, 2008



Comments