சிறிலங்காப் படைகளின் படையெடுப்பும் தமிழ் மக்களின் இடப்பெயர்வும்.

சிறிலங்காவை ஒரு பௌத்த சிங்கள நாடாக்கிவிட சிங்கள அரசுத் தலைவர்கள் தொடர்ச்சியான பல திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர்.

அதில் ஒரு வரைவிட இன்னொருவர் குறைந்தவர் அல்லது மேலானவர் எனக் கொள்ளமுடியாது. அந்தளவு ஒவ்வொரு சிங்களத் தலைவரும் முழு இலங்கையையும் பௌத்த சிங்கள நடாகா மாற்றிவிட அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் செயற்பட்டுள்ளனர்.

அந்த வகையில் அதி தீவிரமாக தற்போதய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முழுஇலங்கையையும் பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.


முதற்கட்டமாக குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் படைகளையும், படைக்கலங்ளையும் குவித்து தமிழர் வாழ்விடங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார். கிழக்கில் தமிழர்மீது தாக்குதல் நடாத்தி அங்கு பௌத்த சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதில் அரசாங்கம் முனைப்புக் காட்டிவரும் நிலையில் இப்போது வடக்கே குறிப்பாக வன்னிப்பிராந்தியம் மீது தாக்குதல் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவர்களது நோக்கம் தமிழ்மக்களின் வாழ்விடங்களில் மையம் கொள்வதே ஆனால் தமிழ் மக்கள் முன்னெச்சரிக்கையாக தமது வாழ்விடங்களைவிட்டுவெளியேறி எதிரிப்படைக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துவிடுகின்றனர்.

வன்னியில் விடுதலைப்புலிகளின் நிர்வாக எல்லைகளைக் கடந்து விடவேண்மென்று கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா இராணுவம் தாக்குதல் நடாத்தி வருகிறது. ஆயினும் அவர்களால் குறிப்பிடத்தக்க வெற்றி எதனையும் அடைய முடியவில்லை.

குறிப்பாக சிறிலங்காப்படைகளின் வலிந்த தாக்குதல் மற்றம் எறிகணைவீச்சு போன்றவற்றால் தமது வாழ்விடங்களில் நிம்மதியாக இருக்க முடியாது பாதுகாப்புத்தேடி செல்கின்றனர். இத் தாக்குதல்களால் பலியாவோர் மற்றும் காயமடைவோர் தொகையும் நீண்டுசெல்வதாகவே உள்ளது.

சிங்களப் படைகள் வன்னியில் பல களமுனைகளைத் திறந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்ற எதனையும் பெறமுடியவில்லை. ஆனால் அந்தப்போர் முனைகளிற்கு அண்மித்து வாழ்ந்த மக்கள் முற்றாக வெளியேற நேர்ந்ததது. தமிழ் மக்கள்மீது வலிந்த போரைத் திணித்த அரசாங்கம் அந்த மக்களின் வாழ்வுரிமைக்கும் ஆப்புவைத்தது.

தமது நிலத்தை, தமது தொழிலை, தமது இருப்பிடத்தை, தமது வசதிவாய்ப்புக்களை எல்லாம் இழந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வு இன்று கேள்விக்குறியாக்கி விட்டது. ஐ.நா.சாசன விதிகளின் படி தனி மனிதனுக்கு இருக்கவேண்டிய உரிமைகள் யாவற்றை அரசாங்கம் பறித்திருக்கிறது. அந்த மக்களின் அடிப்படைத்தேவைகளை மறுத்திருக்கிறது.

இவ்வாறான நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒன்று புதிதல்ல முன்னைய அரசாங்கத் தலைவர்களும் இதனையே செய்தார்கள். ஆனாலும் மகிந்தவின் போக்கு மேலும் மோசமானதாக இருக்கிறது.

2006 ஆகஸ்ட் 12ம் திகதி முகமாலையில் தடையைப் போட்ட இராணுவம் ஏ-9 சாலையை மூடியது அத்தோடு எறிகணைத் தாக்குதலையும் செறிவாக மேற்கொண்டதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர்பிரிவு மக்கள் முற்றாக வெளியேறினர். சுமார் இரண்டு தசாப்த காலமாக இராணுவ வன்பறிப்புக்குள் சிக்கியிருந்த அப்பிரதேசம் விடுதலைப்புலிகளின் மீட்பு நடவடிக்கைப்போரில் 2001 இல் புலிகளிடம் வீழ்ந்தது. இப்போதும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அங்கு சிறிலங்காப் படைகள் எறிகணை வீச்சை தொடர்வதால் அங்குமக்கள் வாழ முடியாத நிலைஏற்பட்டுவிட்டது.

சுமார் 6000 வரையான குடும்பங்களைச் சேர்ந்த 25,000 மேற்பட்ட மக்கள் இன்று அடிப்படைவசதிகளற்று குடியிருப்பு மற்றும் தொழிலின்றி வாழ்கின்றனர். இது ஒருபுறமிருக்க மன்னார் மாவட்டத்தின் வட போர் முனையில் 2006 நடுப்பகுதியில் சிங்களப் படைகள் வலிந்த தாக்குதலை தொடக்கியது அதனை அண்டியுள்ள பகுதிகளிற்கு செறிவான எறிகைண வீச்சுநடாத்தப்பட்டது. அன்று தொட்டு இன்றுவரை வடமேற்குப் பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படுவது தொடர்கதையாகிவிட்டது.

மடுவை ஆக்கிரமித்துவிட வேண்டுமென்ற வெறியோடு அரசாங்கம் படைக்கலன்களையும், படைகளையும் குவித்து படைநடாத்தியது. மகிந்த அரசாங்கம் முழுப் பலத்தையும் பிரயோகித்தது. மடுதேவாலயம் அமைந்துள்ள பகுதி புனித வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதும் அதுபற்றி பொருட்படுத்தாத இராணுவம் தாக்குதல்களை நடாத்தி அங்கு வாழ்ந்த மக்களை விரட்டியது. இன்று மடுப்பிரதேச செயலர் பிரிவில் முழுமக்களும் இடம்பெயர்ந்து விட்டனர் சுமார் 25000 இற்கும் மேற்பட்ட மக்கள்தமக்கு பாதுகாப்பான பிரதேசமெனக்கருதி வெள்ளாங்குளம் பகுதியில் அடைக்கலம் புகுந்தனர்.

அதுபோன்றே மாந்தைவடக்கு பிரதேச செயலர் பிரிவில் உள்ள 2500இற்கும் மேற்பட்ட மக்கள் மூன்றாம்பிட்டி, தேவன்பிட்டி, கள்ளியடி, வெள்ளாங்குளம் பகுதியில் அடைக்கலம் புகுந்திருந்தனர். சிறிலங்காப் படைகள் இவர்களைத் துரத்தி, துரத்தி எறிகணை வீச்சை நடாத்துவதால் இவர்கள் உளவியல் ரீதியாகவும், ஏனைய அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

மேலும் மேலும் எறிகணை வீச்சை குடியிருப்புக்கள் மீது செறிவாக வீசப்படுவதால் தேவன்பிட்டி மூன்றாம்பிட்டி, வெள்ளாங்குளம், இலுப்பக்கடவை, கள்ளியடி, பாலியாறு போன்ற பகுதிகளைவிட்டு மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். உலக வரலாற்றில் இது ஒரு மோசமான இடப்பெயர்வாக கொள்ளவேண்டும். இந்த மக்கள் இத்தோடு பத்துக்கு மேற்பட்ட தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் இப்போது வன்னேரிக்குளத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.


இவர்கள் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளுக்கு ஆளாவதால் தங்களுடன் எடுத்துவந்து தேவன்பிட்டி புனித சவேரியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடு மாதாவின் திருச்சொரூபத்தை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டது. மன்னார் மறைமாவட்டத்தின் எல்லை வெள்ளாங்குளத்துடன் முடிவடைந்தாலும் மடுமாதா திருச்சொரூபம் மன்னார் ஆயரிடம் கையளிக்கப்படநேர்ந்தது. மேற்கு நிலம் இப்போது வரண்ட பூமியாகிவிட்டது. வெள்ளாங்குளம், தேவன்பிட்டி, மூன்றாம்பிட்டி போன்ற பகுதிகளில் தண்ணீர்; தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்கு அலையவேண்டியிருக்கிறுது.

கடந்த 300 தினங்களாகியும் தற்காலிக குடியிருப்புக்கூட அமைத்துக்கொடுக்கவிலை. ஓலைக்கொட்டில்கள் சிலை காணப்படுகின்றன. அது இன்றோ நாளையோ காற்றில் பறந்துவிடும் நிலையில் உள்ளது. இன்றும் சில இடங்களில் தறப்பாள்களைக் கட்டிவிட்டு அதன் கீழ் இருக்கின்றனர். ஒழுங்காக நிவாரணமில்லை, அரைவயிறும் கால்வயிறுமாக பட்டினி கிடக்கின்றனர். இந்நிலை குடி நீரும் இல்லையென்று ஆகும்போது அந்த மக்களின் வாழ்வுநிலை சொல்லிமாறாது. இவ்வாறு மடு, மாந்தைவடக்கு, மாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர். இம்மக்கள் நிலைதொடர்பாக அரசாங்கம் எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. அதேவேளை இம்மக்களுக்கான பன்னாட்டு உதவிகள் கிடைப்பதையும் கூட அரசு தடுத்திருக்கிறது.

இம்மக்கள்மீது எறிகணைவீச்சுக்களை சிறிலங்காப் படைகள் மேற்கொண்டதால் வெள்ளாங்குளம், கள்ளியடி, இலுப்பக்கடவை, மூன்றாம்பிட்டி, தேவன்பிட்டி போன்ற இடங்களில் இருந்த மக்கள் பாதுகாப்புத்தேடி மீண்டுமொரு இடப்பெயர்வை எதிர்கொண்டுள்ளனர். இவர்களது பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அக்கறை கொள்ளாத நிலையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அம்மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்துள்ளது.

ரி.ஆ.ஒ. அமைப்பின் நிதியை அரசாங்கம் முடக்கி இருப்பதால் அவர்களால் கூட இப்பாரிய இடப்பெயர்விற்கு முகங்கொடுக்கமுடியாதுள்ளது.

சிலவெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவமுன்வந்தாலும் அவர்கள் பாதிக்கப்படும் இடங்களுக்கு சென்றுஉதவ தயாரில்லாதவர்களாகவே உள்ளனர். தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தால் உதவலாம் என்ற கோட்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். என்பதால் இடம்பெயரும் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதேவேளை வன்னியின் மேற்குபோர் முனைகள் கூர்மையடைந்து காணப்படுவது போல இப்போது வவுனியாவின் வடபேர் முனைகளும் கூர்மையடைந்து வருகின்றது. இக்களமுனைகளில் உள்ள சிறிலங்காப்படைகள் வலிந்த தாக்குதல்கள் மற்றும் எறிகணைவீச்சுக்களை மேற்கொண்டுவருவதால் வவுனிக்குளம், மல்லாவி, துணுக்காய் போன்ற பகுதிகளில் வாழந்த மக்கள் தமது வாழ்விடங்களை விட்டுஇடம்பெயர்ந்து அக்கராயன் கிளிநொச்சி புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளிற்கு இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.

மாந்தை கிழக்கு உதவிஅரசாங்க அதிபர் பிரிவில் இருந்து சுமார் இருபத்;தையாயிரம் பேரும் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்து இருபதாயிரம் பேரும் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர் இவர்களுக்கு தேவையான உடனடித் தேவைகளை நிறைவேற்ற முடியாதவாறு கிளிமுல்லை மாவட்டங்களில் உணவு நெருக்கடி உள்ளது. அதுபோன்றே ஏனைய தேவைகளும் உள்ளது. அதேவேளை வவுனியா வடக்கு உதவிஅரசாங்க அதிபர் பிரிவிலுள்ள நெடுங்கேணி மக்கள் முற்றாக இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பதினையாயிரம் மக்கள் ஒட்டுசுட்டானில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இவ்வாறு மன்னார் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் கணிசமான மக்கள் இடமபெயர்ந்துள்ளனர். இவர்களின் இடப்பெயர்வு குறித்து அரசாங்கம் கவலைகொள்ளவில்லை. இவர்களது, வாழ்விடங்களைவிடுத்து துரத்திக் கொண்டு வருகிறது. வாழ்விடங்கள் மீது எறிகணை வீச்சு செறிவாக இடம்பெறுவதால் இடப்பெயர்வு நாள்தோறும் நடைபெறுகிறது.

இவர்கள் இடம்பெயர்ந்து காடுகளில் மரங்களின் கீழ் வாழ்கின்றனர். மரங்களில் தொட்டில்கட்டி குழந்தைகளை தாலாட்டுகின்றனர். மரக்கட்டைகளை தீமூட்டி இரவுவேளையை கழிக்கின்றனர். குடிதண்ணீருக்காக பல மைல் அலைகின்றனர், உணவு இன்றி பட்டினி கிடக்கின்றனர், தொழிலின்றி படுத்துறங்குகின்றனர். இந்தமோசமான நிலை குறித்து சர்வதேச சமூகம் கருத்தில் கொள்ளாதுவிடடின் இம்மக்களின் எதிர்கால வாழ்வு இருள் சூழ்ந்ததாகவே இருக்கப்போகிறது. இரண்டாம் தவணைப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் அகதிகளை நிரப்பிக்கொண்டிருக்கிறது. எவ்வாறு இம்மக்களின் வாழ்வு நிலையை மாற்றுவது.

என்பது புரியாது அதிகாரிகள் தவிக்கின்றனர். இடப்பெயர்வில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரிட்சை எழுத முடியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் ஏனைய மாணவர்களின் பரிட்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அண்மைய புள்ளிவிபரப்படி சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் முப்பத்தையாயிரம் பேர் பாடசாலை சிறுவர்களாவர் இந்நிலையில் இது மிகப்பெரிய மனிதவதை என கொள்ளப்படவேண்டும் இம் மக்களின் மனிதப்பேரவலம் குறித்து சர்வதேச நாடுகள் குரல்கொடுக்கவேண்டும் இல்லையெனில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேலும் தீவிரமடையும் என்பதே யதார்த்தநிலை.

-கலி-

Comments