தஞ்சை அருகே செய்தியாளர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை கி.வீரமணி கூறியதாவது:
சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழர்களை விலங்குகளை விட கொடூரமாக வேட்டையாடி வருகின்றனர். இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது. இனிமேலும் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.
தொப்புள்கொடி உறவுள்ள தமிழ் சமுதாயம் நித்தம், நித்தம் அழிந்து வருகிறது. நாகை, புதுக்கோட்டை, வேதாரண்யம், இராமேஸ்வரம் மீனவர்களை சுடுவதும், கைது செய்வதும், உடனே மத்திய அரசிடம் பேசுவது, அவர்கள் சிறிலங்கா மந்திரிகளிடம் பேசி மீனவர்களை விடுதலை செய்வது என்பது அன்றாட சந்தை நிலவரம் போல் நடக்கிறது.
சிறிலங்காவுக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது செல்லாது என்பதை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கு முன்பே நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
மீனவர்களின் வாழ்வுரிமை பிரச்சினையாக இருந்தாலும் சரி, இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை பிரச்சினையாக இருந்தாலும் சரி கேள்விக்குறியாக தான் உள்ளது.
இதை கண்டித்து எனது தலைமையில் வருகிற 23 ஆம் நாள் முற்பகல் 11:00 மணிக்கு சென்னை பெரியார் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சென்னை மத்திய தொடரூந்து நிலையத்திற்கு சென்று மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம்.
இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதுபோன்ற போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது இயல்பு. அந்த தடையை மீறி உலகம் தமிழர்களின் உணர்வுகளை அறிந்து கொள்வதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் இருக்கும் நளினி பிரச்சினை, கருணை அடிப்படையில் சிந்திக்கப்பட வேண்டும். சோனியா மனிதாபிமான அடிப்படையில் அணுகி இருக்கிறார். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சோனியா தான் நேரடியாக பாதிக்கப்பட்டவர். அவருக்கு கருணை எண்ணம் இருக்கிறது என்றார் அவர்.
இந்திய மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: தமிழ் படைப்பாளிகள் முன்னணி அழைப்பு
ஈழத் தமிழர்களின் துயர் நீக்க தம்மால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஒரு தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (22.09.08) முற்பகல் 10:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசிற்கு இராணுவ உதவிகளை இந்திய மத்திய அரசு நிறத்துவதுடன், சிறிலங்காவிற்கு அனுப்பியுள்ள இந்திய படைப் பயிற்சியாளர்களை திரும்ப பெறவேண்டும் என்றும்,
கூட்டணி உறவுகளைக் கடந்து தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு ஈழத் தமிழர்களைக் காக்க குரல்கொடுக்க வேண்டும்
என்றும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் அந்த அழைப்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் அமைப்பாளரும் எழுத்தாளருமான இராசேந்திரசோழன், அந்த முன்னணியின் செயலாளரும் படைப்பாளியுமான பா.செயப்பிரகாசம், கவிஞர் இன்குலாப், ஓவியர் புகழேந்தி ஆகிய நால்வரும் கையெழுத்திட்டுள்ள இந்த அழைப்பானது,
அனைத்து படைப்பாளிகளும் மனிதநேய பற்றாளர்களும் கலந்து தமிழீழ மக்களின் இன்னல் போக்க ஒன்றிணைந்து பங்களிக்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது.
Comments
;))))
/////இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதுபோன்ற போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது இயல்பு. அந்த தடையை மீறி உலகம் தமிழர்களின் உணர்வுகளை அறிந்து கொள்வதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.////
வாயால் கேட்டு பதில் வரலைன்னா, இந்த மாதிரி போராட்டங்கள் எல்லாம் தேவைதான்.
ஆனா, அது ஏன் மறியல் போராட்டமா மாறி, சாதாரண மனுஷனுக்கு தொல்லை தரணும்?
அமைதி ஊர்வலம் போங்க, அத விட்டுப் போட்டு, மறியல் கிறியல்னா, யாருக்கும் அனுதாபம் வராது, எரிச்சலே மிஞ்சும்.
மத்தியில் பெரும் ஆளுமை கொண்ட நம்மாளுங்க ஆட்சி இருக்கும்போதே,இந்த நெலமை.
Its all about priorities. யாரு எங்க செத்தா எங்களுக்கென்ன என்ற மனோபாவம் தான் நம் தலைகளுக்கு.
நளினி விஷயத்தைப் பொறுத்தவரை, ஆயுள் தண்டனை தொடரவேண்டும். இதில் பச்சாதாபம் பார்க்கக்கூடாது. இதையெல்லாம் ஒரு ப்ரச்சனைன்னு மறியல்ல சேத்தா, சொத்தையாயிடும்.
மீனவர் கொலை, சிங்களப் படையின் அட்டூழியங்கள், இதை மட்டும் முன்னிலைப் படுத்தி, அமைதி ஊர்வலம், தாம்பரம் டூ கோட்டை போணா, விழிப்பு வரலாம். பொதுமக்களையும் ஊர்வலத்தில் சேரச்சொல்லி அழைப்பு விடுக்கலாம்.
எவ்வளவோ மறியல்களும், உண்ணாவிரதங்களும் பாத்துட்டோம், தமிழன் தமிழன்னு மூச்சுக்கு நூறுதரம் பேசுபவர்கள் இம்மியளவேனும் அக்கரை கொண்டிரூந்தால், மாற்றங்கள் என்னிக்கோ வந்திருக்கும்.
இந்த தொடரூந்து மறியல் எல்லாம் கண்துடைப்பு வேலை.
பொழப்பப் பாருங்க.