மக்களே சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! - சீறும்படை

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழின உணர்வாளர்கள், தேசவிடுதலைக்காக ஈடுபட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை பழிதீர்க்கும் நடவடிக்கைகளையும் அவர்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகளையும் சிங்களப்படைகளும் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கிவரும் கைக்கூலிகளும் செய்துவருவதனை நம்மக்கள் அறிவார்கள். தேசவிடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளவர்களின் உறவினர்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் தென்தமிழீழத்தில் அண்மை நாட்களாக அதிகரித்து வருகின்றது.

தங்களது கையாட்களை ஏவிவிட்டு இவ்வாறு கொலைவெறியாட்டம் செய்துவரும் கருணா, இனியபாரதி போன்ற தேசவிரோதிகளின் குடும்பங்கள் கொழும்பில் பெரும்பான்மை இனமக்கள் வாழும் இடங்களிலும் ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளிலும் பாதுகாப்பாகவும், பல தொழில் முயற்சிகளில் முதலீடுகளைச் செய்து செல்வச் செழிப்புடனும் வாழ்ந்து வரும் நிலையில், ஒன்றுமே அறியாத தமிழ்ப்பற்றாளர்களையும், இந்த மண்ணின் மைந்தர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் அவர்களது உறவினர்களையும் படுகொலை செய்யும் கோழைத்தனமான நடவடிக்கைகள் மிகவும் வேதனைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

தாங்களும், தங்களது குடும்பத்தவர்களையும் மற்றும் உறவினர்களையும் பாதுகாப்பாக வாழவைத்துவிட்டு தமிழின உணர்வாளர்களையும் தமிழ்ப்பற்றாளர்களையும் தமிழின விடுதலைக்காக உழைப்பவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த முதியவர்களையும் படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் மறுபுறம் தாங்கள் கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு தலைமைதாங்குவதாகவும், கிழக்கை அபிவிருத்தி செய்யப்போவதாகவும் மக்களின் வாழ்வை மேம்படுத்தப்போவதாகவும் கூறுகின்றார்கள். மக்களே இவர்களைப்பற்றி சிந்தியுங்கள்!

தமிழ் உணர்வாளர்களும், தமிழ் தேசியத்தில் பிடிப்புகொண்டவர்களும மற்றும் தேசத்தின் விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக தங்களை அர்ப்பணித்துள்ள போரளிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களது உறவினர்களும் படுகொலைசெய்யப்படும் போது அதற்காக அன்று வேதனையடைந்த, கண்ணீர் சிந்திய இதே கருணாவின் கட்டளையின்படிதான் இன்று இந்தச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதுமாத்திரமல்லாது, அன்று சகபோராளிகளின் உறவுகள் என்றவகையில் உறவுகொண்டாடி நட்புக்கொண்டாடி உணவு உட்கொண்டு பழகியவர்களே இன்று அந்த உறவுகளின் உயிரைப்பறிக்க கட்டளை இடுவதுடன் அதனை நிறைவேற்றியும் வருகின்றார்கள் என்பதனை எம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிரியானவன் இவ்வாறான படுபாதகச் செயல்களை செய்கின்றபோது கவலையும் வேதனையும் அடையும் நாம், இன்று நம் இனத்திற்குள்ளேயே இருந்துகொண்டு இவ்வாறான கொடூரச் செயல்களை செய்கின்ற துரோகிகளை நினைத்து ஒட்டுமொத்த தமிழினமும் வெட்கித் தலைகுனியும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்பதனை எம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்பாவி மக்களையும் தேசபற்றாளர்களையும், தமிழின உணர்வாளர்களையும் போராளிகளின் உறவுகளையும் படுகொலை செய்வதனால் இந்த விடுதலைப்போர் அடிபணிந்துவிடாது. மாறாக, புத்துணர்ச்சியுடனும், புதுத்தெம்புடனும் மேலும் வலிமைகொண்டு எழும்பும் என்பதனையும் மீண்டும் ஒரு தடவை நாம் உறுதிப்படுத்திக்கொள்வோம்.

நன்றி

சீறும்படை.
மட்டு-அம்பாறை.

Comments