நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகள்

தமிழரின் கடற்புலிகளும் - சிங்களக்கடற் படையும் பொருதும் சண்டை அரங்காகக் கடல் உள்ளது. காப்புகளோ! மறைவிடங்களோ! அற்ற திறந்த களமாக அது கிடக்கின்றது. வெற்றிபெறு! அல்லது மூழ்கிப்போ! என்பது போலத்தான் கடற்சண்டைகளின் போரியற்பரிமாணம் உள்ளது.

வேரலைகளுக்கு ஈடுகொடுத்துச் சண்டையிடக்கூடிய கடற்கலங்கள் சிங்களக்கடற் படையிடமுண்டு ஆனால் சாதாரண படகுகளே கடற்புலிகளின் சண்டைக்கப்பல்களாகச் செயற்படுகின்றன.

ஆழ்கடலில், பேரலைகளையும் சமாளித்தல் எதிரியின் கடற்கலங்களுடன் வெற்றிகரமாக மோதும் கடற்புலிகளின் சண்டை வரலாறு துணிகரமானது கடற்புலிகளின் படகுத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் கரும்புலிப் படகுகள் எதிரிக்கு கிலி ஏற்படுத்தக்கூடியவை எதிரியின் ~டோறா| வகைக் கடற்கலனிலிருந்து பாரிய கட்டளைக்கப்பல்கள் வரை கடற்கரும்புலிகளின் தாக்குதல்களில் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.

சிங்களக் கடற்படையினரின் பார்வையில் ஒவ்வொரு கரும்புலிப்படகும் ஒவ்வொரு 'நாசகாரிக்கப்பல்களைப்" போன்றது ஆனால் அனைத்து வகைப்பலங்களாலும் அரண் செய்யப்பட்டபடி தூரநின்று குண்டு மழை பொழிந்து எதிரிக்கப்பல்களை மூழ்கடிக்கும் அந்தவகை நாசகாரிக் கப்பல்களைப் போல இந்த வகை 'நாசகாரிப்பல்கள்" இல்லை இது எதிரியின் கடற்கலங்களை முத்தமிடும் வரை ஓட்டிச்செல்ல வேண்டும்.

எதிரிக்கப்பலின் குண்டு மழையில் அகப்படாமல் அதை நோக்கி இலாவகமாக வழுக்கிச்செல்ல வேண்டும். வெற்றிகரமாக மோதி வெடித்தாலும் சாவுதான் முயற்சியில் தோற்றுப்போனாலும் சாவுதான். வென்று சாக இந்தக் கடற்கரும்புலிகள் படகோட்டத்தில் காட்டும் விவேகமும் - சாதுரியமும் தமிழினத்தின் வரலாற்றில் அதி உன்னத வீரத்தியாகமாகவே இருக்கும்.

தமிழீழக் கடலை ஆக்கிரமிக்க ஆசைப்படும் சிங்களக் கடற்படையை கனவிலும் அச்சுறுத்தும் சக்தியாகக் கடற்புலிகள் உள்ளனர் - கடலும் - தரையும் இணைந்தது தான் தமிழரின் தாயகம்.

இதில் கடற்பரப்பை மீட்டெடுக்கும் தாயகப்போரில் கடலில் காவியமான சில கடற்கரும்புலிகளின் மனதை அள்ளும் சம்பவங்கள் இங்கே கோர்வையாக்கப்பட்டுள்ளன. படித்துப்பாருங்கள் இவை வெறும் கதைகளல்ல தமிழீழ தேசியத்தின் உயிர் அணுக்கள். எதிர்கால சந்ததியின் தேசப்பற்றை உலுக்கி விடப்போகும் அதிர்வலைகள்.

பழிக்குப்பழி

~தொழிலுக்குப் போன என்ர அப்பாவைக் கொலை செய்தவனை நான் சும்மா விடமாட்டன்? இந்த ஓர்மந்தான் சஞ்சனாவைக் கரும்புலியாக மாற்றியது
ஏற்கனவே ஒரு தடவை சிறிலங்காக் கடற்படையால் தொழிலுக்குப் போன அப்பாவைக் கடலில் வைச்சுக் கைது செய்த போது, வீட்டில் ஒரு நேர உலை வைக்க அம்மா பட்ட பாட்டை அவள் நேரில் பார்த்திருந்தாள். அந்த நேரத்தில் சிறியவளாக இருந்தாலும் அம்மாவுடன் இணைந்து குடும்பச் சுமையைத் தாங்கியவள் சஞ்சனா அப்போதே அவளது மனத்தில் விடுதலை பற்றிய கருமுளை கொள்ளத் தொடங்கியதை யாரும் அறியவில்லை.
சஞ்சனா வீட்டில் இருந்த காலத்தில் பொறுப்புணர்வோடு எல்லா வேலைகளையும் செய்வாள்.

யாருடனும் அதிகம் பேசமாட்டாள்.
சஞ்சனா வீட்டில் இருக்கிறாளா...? இல்லையா...?
என்று உள்ளே போய்த்தான் பார்க்க வேண்டும்...
அந்தளவு அமைதியானவள் அவள்
அச்ச உணர்வு இவளிடத்தில் அதிகம் இருந்தது.
எதைக் கண்டாலும் கலக்கம்...
பாம்பைக் கண்டா... அட்டையைப் பார்த்தா... மயிர்க்கொட்டியைப் பார்த்தா...
ஏன் சில மனிதர்களைக் கண்டாலே அவளுக்கு அச்சம். தனிய எங்கையும் போகமாட்டாள் அவளுக்கு எல்லாத்துக்குமே அம்மா வேணும்...
~படிப்பு| அவளுக்கு விருப்பமான ஒன்றல்ல...

பொம்பிளப் பிள்ளையள் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற வலுக்கட்டாயத்தில் தான் அவள் பத்தாவது வரை படித்து முடித்திருந்தாள்.
அப்பா விடுதலையாகி வந்தபின் ஒருநாள் சஞ்சனாவைக் காணவில்லை.
வீட்டை விட்டுப் பக்கத்தில் கூட ஓர் இடமும் போகாதவள் எப்படி எங்கே போயிருப்பாள்....? இவள் போராடப் புறப்பட்டிருப்பாள் என்ற எண்ணம் அம்மாவுக்கு இல்லை.

அம்மா கலங்கிப் போய் எல்லா இடமும் தேடினாள். ஆனால் போன இடம் தெரிந்த போது அம்மா அமைதியானாள்.
~என்ர பிள்ளையா...?
~போராடவா....?|
இயக்கத்தில் இவளால நிண்டு பிடிக்கேலாது இண்டைக்கோ நாளைக்கோ அவள் திரும்பி வருவாள் என்று அம்மா எதிர்பார்த்தாள்.
ஆனால், பிள்ளையைப் பற்றி வரும் ஒவ்வொரு செய்தியும் அம்மாவுக்குப் பெரும் புதுமையாக இருந்தது.
~என் மகளா....?|
அம்மா தனக்குள்ளே பல தடவைகள் கேள்வி கேட்டுப் பார்த்து விட்டாள். மிஞ்சியது வியப்புத்தான்.
சஞ்சனாவின் சண்டைக் களங்கள் நீண்டன.

சில காலம் அரசியல் பணியிலும் அவள் செயற்பட வேண்டி இருந்தது.
முல்லைச் சமர் வெற்றியின் பின் முல்லை மண்ணில் நடந்த பல்வகைப்படைக்கலப் பயிற்சியின் போது அவள் தனது கால் ஒன்றை இழக்க நேருகிறது.

ஆனால் அதன் பின் அவளுக்குள் ஒரு புதுவேகம்; மாற்று வலுவுள்ள காலைக் கொழுவிக் கொண்டு மீண்டும் கடலில் அவள் இறங்கி விட்டாள்.

'இந்நிலையில் அக்காவின் காலைப் பறித்தவனை சும்மா விடமாட்டன்" என அவள் தம்பியும் போராளியாகி 2 - ஆம் லெப். சோழ நிலவனாக வீரச்சாவையும் தழுவி விட்டான்.

இந்நிலையில் தான் கடற்றொழிலுக்குப் போன சஞ்சனாவின் தந்தை திரும்பி வரவில்லை.

'இரவு சிறீலங்காக் கடற்படை மீன் பிடிக்கப் போன சனத்தின்ர படகுகள் மீது தாக்குதல் செய்ததாம்.... தொழிலுக்குப் போன கனபேர் வீடு திரும்பேல்ல... அதில சஞ்சனாவின்ர அப்பாவும் ஓராள்..."

செய்தி அவள் காதுகளுக்கு எட்டிய போது அவள் துடித்துப் போனாள்.
வீட்டு நிலைமை அவள் முன் கேள்விக்குறியாகி நின்றது. தங்கையின் படிப்பு, அவள் எதிர்காலம், அன்றாட வாழ்க்கைச்செலவு என ஒவ்வொன்றும் அவள் முன் பெரும் சுமையாகத் தெரிந்தது.
ஆனாலும்,
'அம்மா சமாளிப்பா..." அவள் மனத்தில் உறுதி இருந்தது.
அதனால் ~பழிக்குப் பழி| வாங்கும் உணர்வு அவளுக்குள் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. அவள் தன்னைக் கரும்புலி அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு தலைவருக்கு மடல் எழுதினாள்.

ஆனாலும் தலைவரிடமிருந்து இசைவு வர அவள் காத்திருக்க வேண்டியிருந்தது.
எனினும் அவளது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இறுதியில் வென்றது.
ஆனால் கரும்புலிப் பயிற்சிகள் எடுத்த பின்னும் அவளுக்கான இலக்கிற்காக அவள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டி இருந்தது.
கிட்டத் தட்ட 8 ஆண்டுகள் அவள் பொறுமை காத்தாள்.
சஞ்சனாவின் பொறுமையை இந்த இடத்தில் நாம் நினைக்காமல் இருக்கமுடியாது.

'இனி எங்க உனக்கு இலக்குக் கிடைக்கப்போகுது..."
மற்றவர்கள் செய்யும் பகிடி இப்போது அவளுக்குள் அழுகையாக மாறிவிடும்.
'என்ன சஞ்சனா... எங்களோட கதைக்காட்டி நாங்க இடிச்ச பிறகு தனிய இருந்து அழ வேண்டிவரும்..." மீண்டும் நாங்கள் பகிடி செய்யத் தொடங்கினால்.

'நீங்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டு இருக்க எதிரியின்ர டோறாப் படகொன்றை நான் தாக்கத்தான் போறன்..." அவள் கீச்சுக் குரலில் சொல்லி விட்டு, எல்லோரையும் முறைத்துப் பார்த்து விட்டு கடற்கரை மணலில் கால் புதையப் புதைய அவள் நகர்ந்து செல்லுவாள்.

11.05.2006 வழமை போலவே சஞ்சனாவின் படகு படகுத் தாங்கியிலிருந்து இறக்க கரையில் நின்று வழியனுப்பிய தோழர் தோழியருக்கு
'இண்டைக்கு நான் திரும்;பி வரவே மாட்டன்...
வெற்றிலைக்கேணிக் கடலில் ஒரு டோறா தாழுது..."
அவளது விரைவுப் படகு விரைந்தது.
'என்ர அப்பாவைக் கொலை செய்தவனச் சும்மா விடமாட்டன்"
அவளது எண்ணம் நிறைவேறிக்கொண்டது.

விரதம்

அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள். எப்போதும் மற்றவர்களைச் சீண்டிப் பார்ப்பதிலும் சிரிக்க வைப்பதிலும்தான் பெரும்பாலான அவளது பொழுதுகள் கழியும். அந்தப் பாசறையில் எல்லோருக்கும் இளைய வளாக அவள் இருப்பதால் அவள்தான் கதாநாயகி.

தன்னுடைய கடமைகளில் அவள் ஒருநாளும் பின்னிற்பதில்லை.
~சமையற்கூட முறை| என்றால் இரவு படுக்கும் போதே அவள் சொல்லுவாள்
~என்ன விடியவே எழுப்பி விடுங்கோ, எனக்கு நாளைக்கு முதன்மையான பணியிருக்கு....| முழுகி, மடிப்புக் குலையாத உடையோடு வந்து நிற்பாள்.
~என்ன... எங்க போகப் போறா என்று எல்லோரும் கேட்டால்,
~முதன்மையான வேலைக்கு வெளியில போகப்போறன்|
என்று சொல்லி விட்டு ஒன்றுக்கு நாலு தடவை தலைவாரி முகப்பூச்சுக்கள் பூசி அவள் எங்கேயோ" புறப்படத் தயாராகி விட்டாள்.

~எங்க பிள்ள போகப் போற...|
மூத்த அக்காக்கள் கேட்டால்,
~நேரம் வரேக்க நீங்களே புரிஞ்சு கொள்ளுவியள்| என்று சொல்லி விட்டு நேரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டாள்.
நேரம் நெருங்க சாப்பாட்டு வாளியோடு சற்றுத் தள்ளியிருக்கும் சமையற் கூடத்திற்கு போய் விட்டாள்.

ஆக அவள் போட்ட ஆர்ப்பாட்டம் எல்லாம் சாப்பாடு எடுக்கப்போவதற்குத்தான்.
இப்படித்தான் இவளது குழப்படிகள் இருந்தன.
இவள் கடற் கரும்புலிகளணிக்கு வந்து ஒரு வருடம் கழிந்துவிட்டது. தனக்கு இன்னும் சரியான இலக்கு அமையவில்லையே என்ற ஆதங்கம் அவளிற்கு இருந்தது.

இந்த நேரத்;தில் தான் விரதம் இருந்தா நினைச்சது நடக்கும் என்று யாரோ ஒரு அம்மா சொன்னதைச் செய்ய அவள் துணிந்துவிட்டாள்.
வெள்ளிக்கிழமை விரதம் இருக்க வேண்டும். ஆனால் அவளால் ஒரு பொழுதும் சாப்பிடாமல் இருக்க முடியாது.

~என்ன செய்யலாம்| அவள் யோசித்தாள் ~அம்மா இருக்கிறாதானே| ஏன் கவலைப்படுவான். உடனே அம்மாவுக்கு கடிதம் எழுதினாள்.
அம்மா ஏழு வெள்ளி விரதமிருந்தா நினைத்தது நடக்குமாம். எனக்கு நெடு நாளா ஒரு விருப்பம் நான் விரதம் இருக்கமாட்டன் எண்டு உங்களுக்குத்
தெரியும் தானே. எனக்காக நினைச்சு நீங்க விரதம் இருங்கோ. எனக்கு என்ன ஆசை எண்டதை நான் நினைக்கிறன்.

அம்மாவுக்குச் சொல்லப் பத்தாது பிள்ளை கேட்டு விட்டாள், அதுகும் அவள் நினைச்ச காரியத்திற்காக. அம்மாவுக்கு ஏற்கனவே ஒரு மாவீரன் இந்தப் பிள்ளைக்காவது ஒன்றும் நடக்கக்கூடாது என எண்ணிய அம்மா விரதமிருக்கத் தொடங்கி விட்டாள்.

'என்ரை பிள்ளை நினைச்சது நடக்க வேண்டும்"
இது தான் அம்மாவின் வேண்டுதலாக இருந்தது. ஒருவாறாக நான்கு வெள்ளி கடந்து விட்டது. மறுநாள் பிள்ளை நினைத்தது நடந்தேறியது.
இப்போதும் சிறீலங்காக் கடற்படையால் என்ன, ஏது என்று அறிய முடியாத அந்தத் தாக்குதல். நாயாற்றுக் கடலில் சுப்ப டோறா மூழ்கடித்த தாக்குதலில் அம்மாவின் மகள் வரலாறாகி விட்டாள்.

ஏதும் அறியா அப்பாவி அம்மா இப்போதும் சொல்லிச் சொல்லி அழுகிறா
~என்ர பிள்ளையின்ர சாவுக்கு நான் காரணமாகி விட்டேனே....| என்று.
அம்மாவின் மகள் வேறு யாருமல்லள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சினி யோடு புதிய வரலாறு எழுதிய மேஜர் கனிநிலா தான்.

கடமை

2004 டிசம்பர் 26 ஆம் நாள். ஆழிப்பேரலை அனர்த்தம் நம்
மண்ணிலும் பல உயிர்களைக் காவு கொண்டதோடு, பெரும் அழிவுகளையும்
ஏற்படுத்தி இருந்தது.

இந்த அழிவுக்குள் மட்டக்களப்பு - கதிரவெளியைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த கடற்கரும்புலி கண்ணாளனின் குடும்பமும் சிக்கிவிட்டது. நிலைமையை அறிந்து அவனை அவனது ஊரிற்கு விடுமுறையில் அனுப்பியாயிற்று.

அங்கு அவனுக்கான பணிகள் நிறையவே இருந்தது. குடும்பத்தை நிமிர்த்தி, எஞ்சியவர்களுக்கான இருப்பிடம், உணவு, உடை என அத்தியாவசியமான தேவைகளைக் கவனிப்பதில் இருந்து எல்லாமே அவன்தான். வீட்டின் இல்லாமை போக்க அவன் உழைக்க வேண்டியதாயிற்று....
ஆனால், முதன்மையான தாக்குதல் ஒன்றிற்கான பயிற்சித் திட்டங்கள் எல்லாம் நிறைவு செய்த நிலையில் அவன்... ஓர் அளவுகோலில் 'பாசம்", 'கடமை" என்ற இரண்டையும் நிறுவை செய்தான். அவன் மனச்சாட்சி முன் 'கடமை" என்ற பக்கம் தாண்டுகொண்டது. அவன் முடிவெடுத்தான். தன் நிலைமையை அந்தத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பானவரிடம் சென்று கதைத்தான்.

'நான் அந்த நடவடிக்கையைச் செய்யப் போறன்... இனி இந்த நடவடிக்கைக்காகப் புதுசா ஒருவருக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தெடுக்க எவ்வளவு காலம் எடுக்கும்... என்னால இந்த நடவடிக்கையில எந்தவொரு காலதாமதமும் ஏற்படக்கூடாது.... ஆனா...., என்ர குடும்பத்த நீங்கதான் பார்க்க வேணும்...."

குடும்பத்தின் அந்த வறுமை நிலையைக் கண்டபோதும் அவன் தன் இலக்கிலிருந்து பின்வாங்காது தன் கடமையைச் சரிவரச் செய்தான். அவன் வேறு யாருமல்ல காலிமுகத் துறைமுகத்தில் வரலாறு எழுதிய கடற் கரும்புலிகளில் ஒருவரான கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்...

'ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை"

என்ற வள்ளுவன் கூற்றுக்கு எடுத்துக்காட்டான பெரு வீரனாய் கண்ணாளன்.

ஒரு நிமிடமும் ஓய்ந்துபோய் இருக்காதவன்

வீட்டில் அவன் கடைசிக்கு மூத்தவன். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து போக குடும்பச் சுமையை அம்மா சுமக்க வேண்டிய நிலைமை. அம்மாவின் நிலைமையை அறிந்த மூத்தவர்கள் அம்மாவுக்குத் தோள் கொடுக்க, சின்னவன் இவனின் விளையாட்டுத்தனமும் குழப்படிகளும் நாளுக்கு நாள் அதிகரித்தன.

வேலையால் களைத்து விழுந்து வீட்டுக்கு வரும் அம்மாவுக்கு வீட்டில் ஏதாவது புரளி செய்து வைத்திருப்பான் அவன்.

மரத்தில் ஏறி விழுந்து காலை உடைத்திருப்பான். அல்லது கத்தியால் கையை வெட்டி வைத்திருப்பான். அதுகும் இல்லையேல் யாருடனும் சண்டை பிடித்து அடிபட்டிருப்பான். இப்படியான குழப்படிக்காரன் அவன்.
ஒரு இடத்தில் ஒரு நிமிடம் என்றாலும் வெறுமனே ஓய்ந்திருக்க அவனால் முடியாது.

இந்தியப்படைகள் நமது மண்ணை வல்வளைப்புச் செய்திருந்த காலம் அது.
இந்தியப் படைகளின் கண்ணில் சிக்காது தலைமறைவாய்ச் செயற்படும் புலி வீரர்களிற்கு பாதை காட்டி இந்தியப்படைகளின் நடமாட்டம் இருக்கின்றதா? இல்லையா? என அவதானித்துச் சொல்லும் பெரும் பணியையும் அவன் செய்து கொண்டிருந்தான்.

இவனது அண்ணனும் ஒரு போராளி. ஒருமுறை அண்ணனுக்கு வீதியில் இந்தியப்படைகள் நிற்கின்றார்களா? இல்லையா? என அவதானித்து வந்தவன் இந்தியப்படைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி வீதி கடக்க உதவிய போது திடீரென்று அந்த இடத்திற்கு இந்தியப் படையினன் வந்து விட்டான்.
இவர்கள் இருவரும் அவர்களைக் கவனிக்காதவர்கள் போல் சென்று கொண்டிருக்க இந்தியப் படையினன் அண்ணணை அழைத்தான். அண்ணனிடம் எதுவும் இல்லை. அண்ணன் செல்ல இந்தியப் படையினன் தன் கையில் வைத்திருந்த சுடுகருவியால் அண்ணனுக்கு அடிக்க இவனுக்கு சினம் தலைக்கு ஏறிவிட்டது. ஓடிப்போய் அந்த இந்தியப் படையினன் வைத்திருந்த சுடுகருவியைப் பறித்து இந்தியப்படையினனுக்கு அடித்துவிட்டு அண்ணணையும் கூட்டிக்கொண்டு ஓடி விட்டான்.

அன்றிலிருந்து அவன் தலைமறைவாய் வாழவேண்டிய சூழல்.
இந்தச் சூழலில் தான் தேச விரோதக் கும்பல்களால் வலுக்கட்டாயமாகப் பிடிபட்டு பயிற்சிக்கு என விடப்பட்டிருந்தான் அவன். அவனோடு கூடவே இன்னும் பலர்.

சுடுகருவிகள் கொடுக் கப்பட்டு பயிற்சிகள் நடந்து கொண்டிருந்த போது
எப்படித் தப்பிச்செல்ல............ என்ற சிந்தனையில் அவன்.
அவனைப் போலவே இன்னும் சிலர்..............

தக்க நேரம் பார்த்து சுடுகருவிகளோடு தப்பி ஓடி விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த போதுதான் அவனுக்குள் மகிழ்வு துளிர் விட்டது.
விடுதலைப் புலியான போது மாவீரன் தன் அண்ணன் கதிரவனின் பெயரையே அவன் தனக்கும் சூட்டிக் கொண்டான்.

இப்போது அவன் ஒரு கடற்புலி.
அதுவும் நீரடி நீச்சல் கரும்புலி.
மூன்றாம் கட்ட ஈழப்போரின் திறவு கோல்களில் ஒருவனாக அவன்.

தன் நேசமக்களிடம் - தேசத் தலைவனிடம் தன் உறவுகளிடம் என எல்லோரிடமும் இறுதி விடை பெற்று இப்போது இலக்கிற்காக அவன் நகர்ந்து கொண்டிருக்கின்றான்.

இருள் சூழ்ந்த அந்தப் பொழுதில், இடியும் மின்னலும் முழங்க மழைதூவ கடலோடு கடலாய் அவர்கள் எதிரியின் கண்காணிப்புப் பாதுகாப்பு வேலிகளைக் கடந்து எதிரி விழிப்படைந்து விடா வண்ணம் நீரின் கீழ் நீந்தி தங்கள் இலக்குகளை இனங்கண்டு விட்டார்கள்.

இன்னும் 30 நிமிடங்கள்......
மிக நிதானமாக எதிரி விழிப்படையா வண்ணம் கப்பலின் அடியில் ஒருவாறு குண்டுகளைப் பொருத்தியாயிற்று
இன்னும் 20 நிமிடங்கள்..............
தம் சாவுக்கான ஒவ்வொரு நிமிடங்களையும் எண்ணியபடி தேசத் தலைவனையும் - மக்களையும் மனதில் நினைத்தபடி கப்பலின் அடியில் குண்டை அணைத்தபடி அவர்கள்.

ஆடாமல் - அசையாமல் - விலகாமல் குண்டைப் பிடித்தபடி கடல் நீரில் தம்பிடித்தபடி ஒவ்வொரு நிமிடங்களையும் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
கடைசி மணித்துளி...........

'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
திருமலைத் துறைமுகம் அதிர்ந்தது...... கப்பல் தாண்டது.
ஒரு நிமிடம் ஓய்ந்து போய் இருக்க முடியாதவன். நம் தேச விடுதலைக்காக, போரியலில் ஒரு திருப்பு முனைக்காக
30 நிமிடங்கள் தன் சாவுக்கான ஒவ்வொரு நொடியையும் எதிர்பார்த்துப் பார்த்துக் காத்திருந்து வீரவரலாற்றைப் படைத்தான்.

தக்கநேரத்தில்

ஓயாத அலைகள் - 03 சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999 அன்று கிளாலியில் இருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் மூன்று நீருந்து விசைப்படகுகள், 04 கூவக் கிறாப் 7,8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன.

இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க கடற்புலிகளின் சிறியரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலிப் படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலங்களை வழிமறித்துத் தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், பெரும் இக்கட்டான சூழல் ஒன்று உருவாகுகின்றது.

இந்த நிலையைக் கிளாலிக் கரையில் நின்று அவதானித்த அறிவரசன் புரிந்துகொண்டான். எந்தக் கட்டளையுமின்றி உடனடியாகவே அவன் முடிவெடுத்தான். 'அந்த இடத்திற்குத்தான் விரைவாகச் செல்ல வேண்டும்." அதற்காக அவன் தனது படகை இறக்க வேண்டும். உதவிக்கோ யாரும் இல்லை, தனி மனிதனாக நின்ற அவனின் உடல்நிலையோ படுமோசம்.

வயிற்றில் விழுப்புண்பட்டு சரியாக நிமிர்ந்து நடக்க முடியாத நிலை... வயிற்றில் விழுப்புண் பட்டதால் சோறோ, பிட்டோ.... கடினமான உணவினை உட்கொள்ள அவனால் முடியாது. நேரத்திற்கு நேரம் சாப்பிடவும் முடியாது..... இப்படியான நிலையில் இருந்த அவன் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

இந்நிலையில் கிளாலியின் வற்றிய பகுதியில் இருந்த தனது கரும்புலிப் படகைத், தன்னந்தனியாகத் தள்ளிக் கடலுக்குள் இறக்கி, கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளைத் தளபதி பகலவனிடம் விரைந்து சென்று,
'நான் இடிக்கட்டா" எனக் கேட்டு அனுமதியினைப் பெற்றுக்கொண்டு, எந்தத் தொலைத் தொடர்புக் கருவியும் இன்றி, கையிலே இலக்கைச் சுட்டிக்காட்ட, மிக விரைவாகச் சென்று இடித்த அறிவரசனின் தாக்குதலின் பின் - மூன்று நீருந்து விசைப்படகு, நான்கு - கூவக்கிறாப் என்பன மீண்டும் அந்த இடத்தில் இருக்கவேயில்லை.

அன்பு

~கரும்புலிகள் உறுதிக் குத்தான் இரும்பை ஒத்தவர்கள். ஆனால், அவர்களின் மனங்களோ மிக மிக மென்மையான உணர்வுகளால் சேர்ந்து உருவாக்கிய அன்புக்கூடு அவர்களுக்கும் ~காதல்| இருந்தது.

இந்தத் தேசத்தின் மீதும், தலைவன் மீதும், மக்கள் மீதும், ஏன் இவை எல்லாவற்றோடும் கூடவே ~அம்மா| ~அப்பா| ~உடன்பிறப்புக்கள்| என்ற சுற்றத்தின் மீதும் தான்.

~அம்மா| என்றால் அவளுக்கு உயிர். சிறு அகவை தொட்டே அம்மா எங்கு போனாலும் அம்மாவுக்குப் பின்னாலே ஒரு வாலாக அவள்...
இரவில் படுப்பது என்றால் ஏன் வெளியில் செல்வது என்றால் எல்லாவற்றிற்கும் அவளுக்கு அம்மா வேண்டும் அம்மாவைப் பிரிந்து அவள் இருந்ததே இல்லை.

ஆனால், காலத்தின் தேவையுணர்ந்து அம்மா மீது அன்பு கொண்ட அவள் போராடப் புறப்பட்ட போது அந்த ஊரே முதலில் நம்பவில்லைத்தானே.
அவளா....?, எப்படி...? அம்மாவை விட்டுவிட்டு...? எல்லோரது கேள்விகளுக்கும் மாறாகவே அவளது விளக்கம் இருந்தது.

~தாயை நேசிப்பவனால்தான் தாய் நாட்டுக்காகப் போராட முடியும்| நான் அம்மாவை நேசிப்பது உண்மையாக இருந்தால், இந்தத் தேசத்தையும் என்னால் நேசிக்க முடியும்| என்று பெரும் தத்துவஞானி போல் கருத்துச் சொல்லுவாள்.

பயிற்சிகளில், சண்டைக் களங்களில் எல்லாவற்றிலுமே அவள் பெரும்புலி ஆனாலும் ~அம்மா| என்ற சொல்லை உச்சரிக்காமல் அவள் படுக்கைக்குப் போனதே இல்லை.

ஒரு முறை அவள் விடுமுறையில் போனபோது அம்மா அதிகம் பாவிக்கும் புடைவை ஒன்றை எடுத்து வந்து விட்டாள்.

அன்றிலிருந்து அவள் படுக்கையின் தலையணை அது தான். அதில் படுக்கும் போது அம்மாவோடு இருப்பது போன்ற சுகம் அவளுக்கு அவள் எங்கு போனாலும் அதை மட்டும் அவள் மறந்தும் விட்டு விடமாட்டாள்.

விடுதலையின் தேவைக்காக அவள் நகர்ந்த பயணங்கள் எல்லாவற்றிலும், கூடவே அவளுடன் அந்தப் புடைவையும் நகரும்.

அந்தப் பூ மனசுக்குள் இப்போது மக்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற துடிப்புத் துளிர்விட்டது.

மக்களுக்காகத் தன்னைத் துறப்பது என்ற முடிவை அவள் எடுத்து விட்டாள்.
ஆனால் தன் ஆசை அம்மா எப்போதும் தன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காய் தனக்கு விருப்பமான அம்மாப் பாடல்களையெல்லாம் தனது குரலிலே பாடி ஒலிப்பதிவு செய்த ஒரு ஒலி நாடாவை அவள் அம்மாவுக்காக கொடுத்திருந்தாள். இப்படி அம்மா மீது அன்பு கொண்ட அவளால் எப்படிப்பகை அழித்து புதிய வரலாற்றைப் படைக்க முடிந்தது.

அது தான் வள்ளுவர் சொன்ன
'அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"
என்ற குறட்பா கடற் கரும்புலி மேஜர் வனிதா விற்குச் சாலப் பொருத்தமல்லவா?

முரட்டுப்பிள்ளை

'கடாபி" இது அவளுக்கு முன்னால் அல்ல பின்னால் எல்லோரும் சொல்லிக்கொள்ளும் பெயர். அந்தப் பெயரை அவளுக்கு முன்னால் சொல்ல யாருக்கும் துணிவு இருக்காது. அந்தளவுக்கு முரட்டுக் குணங்களைத் தன்னகத்தே கொண்டவள்தான் அவள்.

பாசறையில் ஏதாவது பளுவைத் தூக்க வேண்டியிருந்தால், 'காந்தி" என்று சொல்லத் தேவையில்லை தானாகவே முன்வந்து தோளில் அடிப்பாள். அவளுக்கு யாருடைய உதவியும் தேவையிருக்காது. நாங்கள் இரண்டு மூன்று பேர் செய்யும் வேலையை அவள் தனியாளாகச் செய்து முடிப்பாள்.

கடற்கரை மணலில் பளுத் தூக்கி நடப்பது எளிதானதல்ல... நாங்கள் தள்ளாடுவோம், காந்தி நிமிர்ந்து கொண்டு நடப்பாள். மணலில் ஏதாவது ஊர்தி புதைந்து விட்டால், நாங்கள் எத்தனைபேர் தள்ளியும் அசையாத ஊர்தி காந்தி வந்து தொட்டால் காணும் அசைந்து விடும்.

கடலில் படகுகள் இறக்கும் போது முதிர்வும் பட்டறிவும் மிக்க ஊர்தி ஓட்டுநர்கள் போலக் காந்தியும் தனது உழவு ஊர்தியில் படகுக் காவிகளைக் கொளுவி மிக இலாவகமாக படகுகளைக் கடலுக்குள் இறக்கிவிட்டுப் படகுத் தாங்கியை வெளியே கொண்டுவருவாள்.

கடலில் காந்தி படகை ஓட்டினால் எங்களுக்குப் படகில் நிற்க அச்சம். ஏனெனில், அவளது ஓட்டத்தின் விரைவு அப்படி... உந்துருளியில் எட்டு அடிப்பது போல் குறுகிய வட்டத்துக்குள் நின்று படகில் எட்டடிப்பாள். அவள் படகைத் திருப்பி வெட்டும் விரைவில் நாங்கள் எதையாவது பிடிக்கத் தவறினால் கடலுக்குள் விழ வேண்டியதுதான்.

'காந்தி" மெல்ல ஓட்டு என்றால், சொன்னதற்காக இரு மடங்கு விரைவைக் கூட்டி விட்டுக் கேட்பாள். 'இப்ப எப்படியிருக்கு..." இவளது இந்தப் படகோட்டும் பயிற்சி பல கடற் சண்டைகள் வெற்றியுடன் நகரக் காரணமாக இருந்தது. மேலே 'கிபிர்" என்றால் காந்தி செலுத்தும் படகு கிபிரை விட விரைவாக ஓடும்...

போராளிகளுக்கிடையே நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் எப்படியும் காந்தியின் அணி வெல்லும். கூடைப்பந்துப் போட்டியில் காந்தியை மறிக்கும் கன்னை பாவம்... கயிறிழுத்தல் போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை...

காந்திக்கு எதையும் ஒளிச்சு மறைச்சுப் பேசத் தெரியாது. எதுவானாலும் நேருக்கு நேர் நின்றுதான் பேசுவாள். வெட்டொன்று துண்டிரண்டு எனத்தான் அவளது பேச்சு இருக்கும். அவளிடம் எதற்கும் அஞ்சாத துணிச்சல் இருந்தது.

'காந்தி" கடலிலே படகினை இறக்கும் போது 'அப்பப்பா" பாட்டுச் சொல்லும் விதம் கூட வேறுபட்டதுதான். அம்மப்பாச் சொல்லும் போது அவளது குரல் ஓங்கி ஒலிக்கும், மற்றவர்களின் குரல்கள் பின்னால் இழுபடும். அவள் குரலுக்கு கட்டுண்டது போல விரைவாய்ப் படகு கடலில் இறங்கும்.

கடலுக்குள் இறங்கும் படகின் அணியத்தைப் பிடித்துப் படகைச் சீராக்கி விடவும் காந்திதான் முன்னணியில் நிற்பாள். காந்தி வெளித்தோற்றத்தில், செயற்பாட்டில் முரட்டுக்குணமாகத் தெரிந்தாலும், அவளுக்குள் இளகிய மனம் இருந்தது. மென்மையான உணர்வுகள் இருந்தன. ஆனால், அன்பை வெளிப்படுத்தத் தெரியாததனால் அந்த ஒரேயொரு விடயத்தில் மட்டும் அவள் தோற்றுப்போனது உண்மைதான்.

'காந்தி" மக்களுக்காகத் தன்னை உவப்பீகை செய்யத் துணிந்த ஒரு கரும்புலி. அவளுக்கு தாக்குதலுக்கான படகு கொடுத்தாயிற்று. இனி எந்த நேரத்திலும் அவளுக்கான இலக்குக் கிடைக்கும். தனது இறுதி விருப்பாய்ச் சிறப்புத் தளபதியிடம் அவள் ஒன்றை மட்டும் கேட்டாள்.

'அண்ண நானொருக்கா வெளியால போய் வரப்போறன்" ஒரு கரும்புலியின் கடைசி ஆசை அது, அவர் உடனே அனுமதித்தார். வெளியில் சென்றவள் நேரே போன இடம் எல்லோருக்குமே வியப்புத்தான். அன்பைச் சொரியும் அறிவுச்சோலை, செஞ்சோலை, குருகுலம், வெற்றிமனை, அன்புச்சோலை என அன்பு மழையில் நனையும் அந்தச் சோலைகளில் தான் சில மணிநேரம் கழித்துவிட்டு வந்திருந்தாள். வந்தவள் ஒரு பெரிய பொதி ஒன்றைச் சிறப்புத் தளபதியிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள், 'அண்ண இத நான் வீரச்சாவடைந்த பிறகு திறந்து பாருங்கோ..." அவரும் அதை வாங்கித் தனது மிசையத்தில் வைத்திருந்தார்.

16-09-2001- கப்பல் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்கிய 'டோறா" இதுதான் அவளுக்கான இலக்காகியது. 'பாகையைச் சொல்லுங்கோ மிச்சத்த நான் பாக்கிறன்" அந்தக் கம்பீரக் குரல் கேட்கப் பாகை சொல்லப்பட்டது. சில நொடிப் பொழுதுகள் எந்தப் பிசிறும் இல்லாத இடியால் டோறா மூழ்கிப்போனது.

மிசையத்தில் இருந்த பொதியைத் திறந்து பார்த்தபோது கண்ணாடிச் சட்டத்துக்குள் இருந்து கறுப்புச் சீருடையில் முரட்டுப்பிள்ளை காந்தி சிரித்துக்கொண்டிருந்தாள்.

கண்ணீரைக்கடந்து

'அம்மா.... இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா....." மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது.

வீட்டில் நின்ற கோலத்தோடே செய்த வேலையைப் போட்டுவிட்டு அம்மா கடற்கரைக்கு ஓடினாள். கூடவே அன்புவின் அன்பு உறவுகளும்......
இன்பருட்டி 'வான்" அன்புவின் உறவுகளால் முற்றுகை இடப்பட்டதோடு, ஒப்பாரியும், ஓலமுமாய் அந்த 'வான்" அதிர்ந்துகொண்டிருந்தது. அன்புவின் அம்மாவையும், உறவுகளையும், கூட நின்ற போராளிகள் தேற்ற முயன்று தோற்றுப்போய் நின்றார்கள்.

நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு பொறுப்பாளரின் தலையில் விழுந்தது. பொறுப்பாளர் அன்புவை அழைத்தார். 'அன்பு.... நீதான் அவர்கள எப்படியாவது அமைதிப்படுத்த வேணும்....." அன்பு முதலில் தயங்கினாலும், நிலைமையைப் புரிந்தவனாய் தன் அம்மாவோடும், உறவுகளோடும் போய்க் கதைத்தான்.

அம்மா மகனைக் கட்டிப்பிடித்து அழுதா..... காலில விழுந்து கும்பிட்டா..... 'தம்பி கரும்புலியாப் போகாதையடா...." உடன்பிறப்புக்களோ
அவன் கையையும் காலையும் கட்டிப்பிடித்தபடி நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு அன்புவிடம்.

திருவள்ளுவர் சொன்ன கூற்று அவன் மனத்திரையில்...
'பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"

அவன் முடிவெடுத்தான். 'நான் கரும்புலியாப் போகேல்லையெண...." அம்மா கேட்டபடி ஊர்க்கோயில்கள் எல்லாவற்றின் மீதும் 'சத்தியம்" செய்தான். பொய்யே பேசாத அவன் பொய்ச் சத்தியம் செய்யுமளவிற்கு சூழ்நிலைக் கைதியானான். அம்மா நம்பிக்கொண்டு வீட்டுக்குப்போக முற்றுகையிட்ட உறவுகள் பின்னாலே...
ஒருவாறாக அன்பு என்ற பெருமழை ஓய்ந்து போக அன்பு சிரித்தபடி போராளிகளிடம் வந்தான். போராளிகளின் விழிகள் கசிந்திருந்தன.

உலகில் எந்தவொரு உயிரினமும் ஆழமாய் அன்பு செலுத்துவது 'அம்மா" என்ற தாய்மையில்தான் எவ்வளவுதான் மனவுறுதி படைத்தவனாக
இருந்தாலும், அம்மாவின் கண்ணீர் அவனை ஆட்டங்காணச் செய்துவிடும். ஆனால், அன்புவோ... தான் விரும்பித் தேர்ந்தெடுத்த கொள்கையில் இருந்து சற்றும் தளரவில்லை.

தனது தாய், உறவுகள் என்ற குறுகிய வட்டத்திற்காக நமது தாய் மண்மீது அவன் வைத்த பற்றுதலைத் துறக்கத் துணியவில்லை. 20-09-1995, இன்பருட்டி வான் கலகலக்கத் தொடங்கியது.

அன்புவை வேவு பார்த்துக் கொண்டிருந்த தம்பி தகவல் சொல்ல அம்மாவிடம் ஓடினான். 'அம்மா... நேற்றைக்கு நிண்ட படகிலதான் அண்ணா நிக்கிறானெண...." அம்மாவுக்குள் எரிமலை.... இன்பருட்டி வானை நோக்கி அம்மா ஓடினாள்.

இன்பருட்டிக் கரையில் அம்மாவின் தலைக்கறுப்பைக் கண்ட அன்பு படகிற்குள் மறைவாக இருந்தபடி எல்லோரையும் பார்த்தான்.
தலையிலும் வயிற்றிலும் அடித்தடித்து அம்மா மண்ணில் புரண்டு அழுதாள். உடன்பிறப்புக்களும் ஏதேதோ சொல்லி அழுதார்கள். படகின் பொறி ஓசையை மீறி அவர்கள் சொல்லி அழுவது மட்டும் புரியவில்லை.
ஆனால், அவர்கள் துடித்து அழுவது மட்டும் அன்புவின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது.

தாயின் மீதும், உடன்பிறப்புக்கள் மீதும் அன்பு வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாய் அன்புவின் கண்களிலும் நீர்த்திரை. எத்தனையோ மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான அவன் பயணம்... அன்பு உறவுகளின் கண்ணீரைக் கண்டு தடைப்பட்டுப் போகவில்லை. அவன் பயணம் கண்ணீரைக் கடந்துசென்று வென்றது.

- பிரமிளா -

விடுதலைப் புலிகள் ஏடு (04.09.08)

Comments