இலங்கை போர் முனையில் உள்ள இந்தியர்களை உடனடியாகத் திருப்பியழைக்கவேண்டும். ஈழத்தமிழருக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் தொடர்பில் இந்திய அரசாங்கம் தனது அணுகு முறையினை மாற்றவேண்டும். இதற்கான வலியுறுத்தல்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் மருத்துவர். ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் இதுவரை மௌனமாக இருந்த தமிழக முதல்வர் இனியாவது மௌனத்தை கலைக்கவேண்டும். ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் நெல்லைக்கு வந்தார்.
அங்கு அவர் நிருபர்களுக்களித்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஈழத்தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களையும் கடலில் இந்திய தமிழ் மீனவர்களுக்கு எதிரான தாக்குதல்களையும் அந்நாட்டு அரச படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
சமீபத்தில் தேசிய பாதுகாப்பு செயலாளர் நாராயணன், இனிமேல் தமிழ் மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடக்காது என்று கூறினார். ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது. சிறிலங்கா அரசை பொறுத்தவரை சிங்களப் படையினர் ஈழத்தமிழர்கள் என்றோ, இந்திய தமிழர்கள் என்றோ பிரித்து பார்ப்பது கிடையாது. தமிழர்கள் என்றந்தொலேயே அவர்கள் எதிரியாக கருதுகின்றனர்.
இந்த பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறையை மாற்றவேண்டும். இதை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். மத்திய அரசு சார்பில் இராணுவத்துக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று இதுவரை மத்திய அரசு கூறி வந்தது.
ஆனால் செவ்வாய்க்கிழமையன்று வவுனியாவில் நடந்த தாக்குதலில் இந்திய ராடர் கருவிகள் சேதம் அடைந்ததாகவும், அதை இயக்கி வந்த இந்திய பொறியியலாளர்கள் இருவர் காயம் அடைந்து இருப்பதாகவும் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு சிறி லங்கா இராணுவத்துக்கு ஆதரவாக ஆட்களை அனுப்பி வைத்து இருப்பது இங்குள்ள இந்திய தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செயலாகும். உடனடியாக போர்முனையில் உள்ள இந்தியர்களை திருப்பி அழைக்க வேண்டும்.
மத்திய அரசு சிங்கள தேசத்திற்கு எந்தவித இராணுவ உதவியையும் அளிக்கக்கூடாது. அளிக்கமாட்டோம் என்ற உறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும்.
சிங்கள அரசுக்கு அவர்களுக்கு புரிகின்ற மொழியில் தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்கவேண்டும். இதுவரை தமிழக முதல்வர் மௌனமாக இருந்தது போதும், மௌனத்தை கலையுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். இது தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.
Comments