தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலானது தமிழின அழிப்புக்கு உலக வல்லாதிக்க சக்திகள் சிங்களத்துக்கு செய்கின்ற ஒத்துழைப்புகளை அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
வன்னி சிறிலங்கா படை நடவடிக்கை தலைமை மையமான வவுனியா படைத்தள அழிப்பில் வீரகாவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்கக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது மக்கள் விடுதலைக் குறிக்கோளை அடைவதற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து வீரவரலாறாகியவர்கள் இக்கரும்புலி வீரர்கள். ஓரு பெரும் வரலாற்றை படைத்தவர்களுக்கு நாம் வணக்கத்தை செலுத்துகின்றோம்.
வீரவரலாறு படைத்த கரும்புலிகளுக்கு தனிவரலாறு உண்டு. எமது விடுதலைப் போராட்டத்தில் நெருக்கடியான காலகட்டங்களில் நெருக்கடிகளை உடைத்தெறிந்து விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்வதில் இக்கரும்புலி மாவீரர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
இக்கரும்புலிகள் கொடுத்த அடி சிங்களத்தின் படை இதயத்தில் விழுந்த அடியாகும். எமது மக்கள் மீது வானூர்தி தாக்குதல்களை நிகழ்த்தும் நடவடிக்கைக்கான மையத்தின் மீது விழுந்த அடி இது.
தமிழ் மக்களின் நிலங்களை வல்வளைத்து, தமிழ் மக்களை பிடித்து அடைத்து வதைக்கும் வதை முகாம்களை புதைகுழிகளைக்கொண்டதுமான படை நடவடிக்கை மையத்தளத்தில் கரும்புலிகள் தமது வீரவரலாறைப் படைத்துள்ளனர்.
எமது வான்படையினை கண்காணிக்கும் தளமாகவும் இது இருந்தது. இத்தாக்குதல் என்பது தமிழின அழிப்புக்கு உலக வல்லாதிக்க சக்திகள் சிங்களத்துக்கு செய்கின்ற ஒத்துழைப்புக்களை அம்பலப்படுத்தியுள்ளது.
எந்த வல்லாதிக்க சக்திகள் எமது போராட்டத்துக்கு எதிராக சிங்கள அரசுக்கு உதவி புரிந்தாலும் எந்த சக்தியாலும் எமது மக்களின் விடுதலை உணர்வை தகர்க்க முடியாது என்றார் அவர்.
Comments