அறிஞர் சி.என். அண்ணாத்துரை நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் கொண்டாடப்படவிருக்கிறது. அதன் ஆரம்பமாக அவரின் 99 ஆவது பிறந்த தினமான நேற்று திங்கட்கிழமை கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் பொது விடுமுறை தினத்தை பிரகடனம் செய்திருந்தது.
கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் பிறந்த அரசியல் தலைவர்களிலே உலகம் பூராவும் வாழும் தமிழர்கள் மத்தியில் இனப்பற்றுச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அலையெழுச்சியை கூடுதலான அளவுக்குத் தோற்றுவித்தவர் என்றால் அது அண்ணாத்துரைதான். ஆற்றல் மிக்க பேச்சாளராகவும் வலிந்திழுக்கும் வல்லமை கொண்ட எழுத்தாளராகவும் விளங்கிய அண்ணா, தனது நாட்டில் தமிழர்களினால் விரும்பப்பட்டதைப் போன்றே வெளிநாடுகளிலும் தமிழர்களினால் நேசிக்கப்பட்டார்.
1965 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு அண்ணா விஜயம் செய்த போது அவரைப் பார்ப்பதற்கும் பேச்சைக் கேட்பதற்கும் திரண்ட மக்கள் வெள்ளத்தைக் கண்டு திகைத்துப் போன அன்றைய பிரதமர் லீ குவான் யூ, அண்ணாவின் விஜயத்துக்கு முன்னர் தனது நாட்டில் அத்தகைய பெரும் மக்கள் கூட்டத்தைக் கவர்ந்திழுத்தவர் ஜவஹர்லால் நேரு மாத்திரமே என்று குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.
1969 பெப்ரவரியில் அண்ணா காலமான போது சென்னையில் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இன்றுவரை அதுவே உலகில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்கேற்ற ஒரு இறுதி ஊர்வலமாக உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது. இலங்கையில் இன்றும் கூட தமிழர்களில் அதிகப்பெரும்பான்மையானவர்கள் அண்ணா உயிருடன் இருந்திருந்தால் எமது இன நெருக்கடி இன்றைய படுமோசமான நிலையை அடைந்திருக்காது என்று நம்புகிறார்கள். தமிழர்கள் மனதில் அண்ணா ஏற்படுத்திய தாக்கத்தையே அது பிரதிபலிக்கிறது.
ஈ.வெ.ரா. பெரியாரின் தலைமையிலான திராவிடர் கழகத்தில் இருந்து 1949 ஆம் ஆண்டு அண்ணா பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து 18 வருடங்களில் அதாவது, 1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார். மிகவும் குறுகிய காலம் மாத்திரமே அதாவது, இருவருடங்களுக்கும் குறைவான காலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த அண்ணாவிடம் காணப்பட்ட தலைமைத்துவப் பண்பையும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கையும் அவரது அரசியல் எதிரிகள் கூட வியந்து போற்றினார்கள்.
மக்கள் கவனத்தை ஈர்க்கும் மேடைப் பேச்சையும் எழுத்தாற்றலையும் கவர்ந்திழுக்கும் சினிமாவையும் ஆயுதமாகக் கொண்டே அண்ணாவும் அவரது தம்பிமாரும் காங்கிரஸ் என்ற மாபெரும் அரசியல் சக்தியை தமிழகத்தில் வீழ்த்தினார்கள்.
சினிமா இன்று தென்னிந்திய அரசியலிலும் சமூக வாழ்வின் சகல துறைகளிலும் பெரும் சீரழிவை ஏற்படுத்துகின்ற அளவுக்கு செலுத்துகின்ற ஆரோக்கியமற்ற ஆதிக்கத்துக்கு அண்ணாதான் வழிசமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்களையும் ஒருபுறம் சிந்தித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க.ஆட்சியைக் கைப்பற்றிய 1967 ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் மாத்திரமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத்தழுவியது. ஏனைய மாநிலங்களில் மீண்டும் காங்கிரஸினால் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததெனினும், தமிழகத்தில் இன்றுவரை அக்கட்சியினால் மீண்டுவர முடியவில்லை.
அண்ணா அத்தகையதொரு காங்கிரஸ் எதிர்ப்பு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்த போதிலும்,
அவரின் தம்பியான கலைஞர் கருணாநிதியைப் பொறுத்தவரை, இன்று காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் அமர முடிவதில்லை.
காங்கிரஸுடனான தேர்தல் கூட்டணியை முறிந்துவிடாமல் பாதுகாப்பதிலேயே கருணாநிதி கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
அரசியல் ரீதியாக மட்டுமல்ல, சகல வழிகளிலுமே இன்று திராவிட இயக்கங்கள் பெரும் சீரழிவுக்குள்ளான நிலையிலேயே அண்ணா நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகின்ற திராவிட இயக்கக் கட்சிகளின் தலைவர்கள். இன்று தங்களின் இயக்கங்களுக்குள் படுமோசமாக ஊடுருவியிருக்கும் மூடநம்பிக்கைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கப்பட்ட போது அண்ணாவிடமோ, கழகத்திடமோ பணம் இருந்ததில்லை.
ஆனால்,
இன்றோ திராவிட முன்னேற்றக் கழகத்தலைவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் இருக்கின்ற பணமும் சொத்தும் தமிழகத்தில் வேறுயாரிடமுமில்லை என்கிற அளவுக்கு அரசியல் ஊழல் தனமானதாகிக்கிடக்கிறது.
மறுபுறத்திலே அண்ணாவின் இன்னொரு தம்பியான காலஞ்சென்ற எம்.ஜி.ஆரின் வாரிசு என்று தன்னைக் கூறிக்கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை
அம்மா திராவிட முன்னேற்றக்கழகமாக வழிநடத்திவரும் ஜெயலலிதா ஊழலின் மொத்த உருவமாகவே திகழ்வதைக் காண்கிறோம்.
அண்ணா தனது குடும்பத்தை ஒருபோதுமே முதன்மைப்படுத்தியதில்லை. அவரது மனைவியையோ, வளர்ப்பு மகனையோ பல கோடி தமிழர்கள் அறியமாட்டார்கள்.
ஒட்டு மொத்தத்திலே தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முன்னுதாரணமான நடத்தைகளையும் பின்பற்றாத தம்பி,
தங்கைகளினால் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு நினைவு கூரப்படும் பரிதாபநிலை அறிஞர் அண்ணாவுக்கு!
Comments