புலிகளின் தாக்குதல்கள் உதிரிகளானவையல்ல

கிழக்கைப்போல் வடக்கும் மீட்கப்படும்; கிளிநொச்சி நகரம் விரைவில் கைப்பற்றப்படும்; விடுதலைப் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்படுவர் என மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், அதன் படைத்தரப்பும் அறிவிப்புக்கள் செய்து வரும் நிலையில், வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் மாற்றங்களும் தீவிரம் பெற்றுள்ளன.

கடந்த பத்து நாட்களுக்குள் வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதல்கள் தற்காப்புத் தாக்குதல்கள், அதிரடித்தாக்குதல்கள், முறியடிப்புத் தாக்குதல்கள், வலிந்து தாக்குதல்கள் எனப் பல வகைப்பட்டிருந்தன.

இந்த வகையில், மூன்று வகை நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

01. அம்பாறையில், பொறிவெடிகள், கண்ணிவெடிகள் என்பனவற்றுடனான தற்காப்புத் தாக்குதலும், சிறிய அளவிலான அதிரடித் தாக்குதல்களும்.

02. திருமலைத் துறைமுகத்தின் மீதான விமானத் தாக்குதல்.

03. வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் முறியடிப்புத் தாக்குதல்கள்.

இதில் முதலாவதாகக் குறிப்பிட்டுள்ள பொறிவெடிகள் மற்றும் கண்ணிவெடிகளுடன் கூடியதான தற்காப்பு நடவடிக்கைகளும், அதிரடித் தாக்குதல் என்பதும் விடுதலைப் புலிகள் கிழக்கில் தமது இருப்பை வெளிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் உதிரியான தாக்குதல்கள் அல்ல. விடுதலைப் புலிகளின் பரந்துபட்ட போர்த்தந்திரோபாயத்தின் ஓர் பகுதியே அதுவாகும்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது என்ற சிறிலங்கா புலனாய்வுத்துறையின் எச்சரிக்கையில் இருந்தே கிழக்கில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் முழுமையான ஒரு போர்த் தந்திரோபாயத்தின் பாற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

அத்தோடு கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தவர்கள், தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்திலும் தாக்குதல்களை நடத்த ஆரம்பித் திருப்பதானது மேற்சொன்னவற்றை மேலும் வலியுறுத்துவதற்குப் போதுமானதாகும்.

அது மட்டுமன்றிக் கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் கிளைமோர்த் தாக்குதல்கள் தனிநபர் துப்பாக்கிச்சூடு போன்ற வகையில் செயற்பட்ட விடுதலைப் புலிகள் தற்பொழுது அதிரடித் தாக்குதல்களிலும், குறிபார்த்துச் சுடுதல் போன்றவற்றிலும் ஈடுபடத் தொடகியுள்ளனர்.

அதாவது, சிறிலங்கா ஆயுதப் படையினரை நெருங்கிச் சென்று தாக்கும் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் சிறிலங்கா ஆயுதப் படையினருடன் நேரடி மோதலைத் தவிர்த்து வந்த விடுதலைப் புலிகள் படிப்படியாக நேரடி மோதலுக்குத் தயாராகிக் கொண்டிருப்பதையே இது வெளிப்படுத்துவதாகவுள்ளது.

இரண்டாவதாக, திருக்கோணமலைத் துறைமுகத்தின் மீதான விடுதலைப் புலிகளின் வான்தாக்குதலாகும் - சிறிலங்காப் படைத்தரப்பு இது கூறிக்கொள்வது போன்று ஓர் உளவியல் போர் என்பதல்ல. சிலவேளை சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பது போன்று இது சிலருக்கு உளவியல் போன்று இருக்கலாம்.

ஆனால், இத்தாக்குதலானது இராணுவ ரீதியில் சிறிலங்காவின் முக்கிய கேந்திர நிலை மீது நடாத்தப்பட்ட தாக்குதலாகும். சிறிலங்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறியதாக நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை எவருமே நிராகரித்துவிட முடியாது.

அத்தோடு, இத்தாக்குதலில் பத்துப்பேர் வரையிலான சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டும் 35இற்கும் மேற்பட்ட படையினர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தலைமையக தங்கு விடுதி பலத்த சேதத்திற்கும் உள்ளாகியுள்ளது.

அத்தோடு இத்தாக்குதல் மூலம் வான் புலிகள் ஏதோ வித்தை காட்டிச்சென்றுள்ளது போன்றதொரு நிலையே அங்கு காணப்படுகின்றது. அதாவது, கடல் மட்டத்தில் தாழப் பறந்த விமானங்கள் திடீரென மேலெழுந்து தாக்குதல்களை நடத்திவிட்டு மறைந்ததாகக் கூறப்படுகின்றது.

ஆனால், வான்புலிகளின் விமானங்கள் - வன்னியில் இருந்து மேலெழுந்தபோதே வவுனியாவிலுள்ள ராடர்கள் அவற்றைக் கண்டு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு சகல கேந்திர நிலையங்களும் உசார்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

மேலும், திருமலைத் துறைமுகம் மீது விமானங்கள் தாக்குதல் நடத்தியபோதும் எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இத்தகைய நிலையிலும் வான்புலிகளின் விமானங்கள் எவ்வாறு தப்பிச் சென்றன என்பது இன்று பரவலானதாகச் சிறிலங்காப் பாதுகாப்பு வட்டாரங்களில் கேட்கப்படும் கேள்வியாகும். இதன் காரணமாக வான்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தவகையில் பார்க்கையில், திருமலைத் துறைமுகத்தின் மீதான வான்தாக்குதலானது உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கானது எனக்கூறித் தட்டிக் கழித்துவிடக் கூடியதல்ல. சிறிலங்காவின் வான் பாதுகாப்பு ஏற்பாட்டிற்கு விடுதலைப் புலிகள் விடுத்துள்ளதான சவால் என்றே கொள்ளத்தக்கது.

இதேசமயம், வான்புலிகளின் இத்தாக்குதலானது அதன் இருப்பை வெளிப்படுத்துவதற்கானதொன்று��
�் அல்ல. ஏனெனில் சிறிலங்கா வான்படையோ அன்றி ஏனைய படைப்பிரிவுகளோ வான்புலிகளுக்குச் சேதத்தினை ஏற்படுத்தவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததொன்றே.

இத்தகைய நிலையில் வான்புலிகளின் தாக்குதலானது ஒட்டுமொத்தமான போர்த் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படத்தக்கதானதாகும். சுருக்கமாகக் கூறப்போனால், கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்று வருவதையும் - விடுதலைப் புலிகளின் எதிர்காலத்திட்டத்தின் ஓர் அங்கமாகவுமே நோக்கத்தக்கதாகும்.

மூன்றாவதாக வன்னிப் பிரதேசத்தில் படை நடவடிக்கைக்கெதிராக கடந்த காலத்தில் தீவிரம் பெற்றுள்ள புலிகளின் எதிர்த்தாக்குதலாகும்.

இக்காலப்பகுதிக்குள் மூன்று தீவிர முறியடிப்புத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டு சிறிலங்காப் படைத்தரப்பில் 100 வரையிலான படையினரைக் கொன்றுள்ளதோடு, 150 வரையிலான படையினரைக் காயப்படுத்தியும் உள்ளனர்.

இன்று வன்னிக் களமுனையில் இடம்பெறும் யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் நகர்வுகள் முற்றிலுமாகத் தந்திரோபாயத்தின் பாற்பட்டதாகவே நோக்கப்படுதல் பொருத்தப்படானதாகும். இதனைக் களமுனையை நன்கு அவதானிப்பதன் மூலம் புரிந்துகொள்ளமுடியும்.

சிறிலங்கா இராணுவம் வன்னிப் பிரதேசம் மீது கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் படை நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து பல இடங்களில் புலிகள் கடுமையாக எதிர்ச்சமர் செய்துள்ளனர். சில இடங்களில் இருந்து எதிர்பாராத வகையில் விரைவிலேயே வெளியேறியும் உள்ளனர்.

இதற்குப் பெரும்பாலும் விடுதலைப் புலிகள் தந்திரோபாய ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணமாகும். ஓரிரு இடங்களில், சிறிலங்கா இராணுவத்தின் சில நடவடிக்கைகளும் வெளியேற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், வன்னிப் பகுதி மீதான யுத்தமானது சிறிலங்காப் படைத்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாக இல்லை என்பது மட்டும் வெளிப்படையானது.

இதில் முதலாவதாக, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அரச தரப்பு விடுத்த காலக்கெடுக்கள் - தோல்வியில் முடிவடைந்ததோடு கைவிடப்பட்டவையாகவும் போயுள்ளன. இது சிறிலங்காவின் இராணுத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் ஏற்றுக்கொண்ட விடயமாக ஆகியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க சிறிலங்காப் படைத்தரப்பு தற்பொழுது மேற்கொண்டு வரும் படை நடவடிக்கையின் இலக்குக்குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிடாது விட்டாலும், ஆரம்பத்தில் ஏ-32 பாதையைத் திறத்தல் - அதாவது, மன்னார் - பூநகரிப் பாதையைத் திறத்தல் என்பதாக வெளிப்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது கிளிநொச்சியைக் கைப்பற்றுதல் என்பதாகவே வெளிப்படுத்தப்படுகின்றது. ஆனால், பூநகரியே பிரதான இலக்காக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது.

ஆனால், இது எதுவாகினும் சரி, சிறிலங்கா இராணுவம் தனது திட்டத்திற்கு ஏற்ப செயற்பட விடுதலைப் புலிகள் இலகுவில் அனுமதிப்பார்கள் என்றோ - சிறிலங்கா இராணுத்தினர் விடுதலைப் புலிகளைத் தாண்டி இலகுவில் தமது இலக்கைக் அடைந்து விடுவார்கள் என்றோ கொள்வதற்கில்லை.

சிறிலங்கா இராணுவம் பாரிய வலிந்து தாக்குதல்களை எத்தனை தடவை மேற்கொண்டபோதும் சில பகுதிகளைத் தக்க வைத்துக்கொள்வதில் விடுதலைப் புலிகள் தீவிர அக்கறை காட்டியிருந்தனர். இதனால் அப்பகுதிகளில் தீவிர முறியடிப்புத் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக பாலமோட்டை, நாச்சிக்குடா, வன்னேரிப் பகுதிகளில் தீவிரமுறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வருவதனைச் சுட்டிக்காட்ட முடியும்.

இதேசமயம் சில இடங்களில், விடுதலைப் புலிகள் முறியடிப்புப் தாக்குதலில் தீவிர கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை என இராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக துணுக்காய், மல்லாவி ஆகிய இடங்களில் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலில் கவனம் செலுத்தவில்லை என அவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இது விடுதலைப் புலிகளால் கவனிப்பாரற்று விடப்பட்டவையாகக் கொள்ளமுடியாது. ஏனெனில் மல்லாவி, துணுக்காய் ஆகிய இடங்கள் வன்னிப் பிரதேசத்தில் ஓரளவு நகர் என்ற பண்புகொண்ட பிரதேசங்கள் ஆகும். இப்பிரதேசங்களைக் கைவிடுதல் அன்றி இழத்தல் என்பது சிறிலங்கா அரசின் பிரச்சாரத்திற்குப் பெரும் துணையாக அமையும் என்பதும் முக்கியமானதாகும்.

ஆனால், விடுதலைப் புலிகள் அது குறித்துப் பெரிதாக அக்கறை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக, நாச்சிக்குடா, வன்னேரிப் பகுதிகளில் சிறிலங்காப் படைத்தரப்பு மேற்கொள்ளும் பாரிய வலிந்து தாக்குதலுக்கு எதிராக உக்கிர எதிர்த்தாக்குதலை மேற்கொள்வதோடு, சிறிலங்காப் படைத்தரப்பிற்கு பெரும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த வகையில் கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வலிந்து தாக்குதலை முறியடித்த விடுதலைப் புலிகள் 75 இற்கும் அதிகமான படையினரைக் கொன்றும் 150 இற்கு மேற்பட்டோரைக் காயப்படுத்தியும் உள்ளனர்.

சுருக்கமாகக் கூறப்போனால், விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் யாவும் ஒட்டுமொத்தமான - பரந்துபட்ட யுத்த தந்திரோபாயத்தின் பாற்பட்டதே ஆகும். இவை தனித்தனி அலகுகளான தாக்குதல்கள் அல்ல. இதில், இருப்பை வெளிப்படுத்துவதற்காகவோ, உளவுரணைப் பாதிப்புறச் செய்வதற்கானதாகவோ புலிகளின் தற்போதைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக மதிப்பீடு செய்வோருக்கு அது எதிர்காலத்தில் பாதகமானதாகவே அமையத்தக்கதாகும். ஏனெனில், ஒருங்கிணைக்கப்பட்ட தந்திரோபாயத்தின் பாற்பட்ட நடவடிக்கைகளாகவே அவை பார்க்கப்படவேண்டியவை.

களமுனையில் சிலவேளைகளில் எதிர்பாராத மாற்றங்கள், பின்னடைவுகள் ஏற்படுவதுமுண்டுதான்.. ஆனால், பரந்துபட்ட தந்திரோபாயத்தின் பாற்பட்ட திட்டத்தில் அவற்றால் பெரும் மாற்றத்தைத்- தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது.

- ஜெயராஜ் -

நன்றி: வெள்ளிநாதம் (05.09.08)

Comments