வவுனியாவின் அதிகாலைப்பொழுதை அதிர வைத்த வெடியோசை சிறீலங்காவின் அரசையும் படைத்தலைமையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழீழ விடுதலைப்புலிகள் தேர்ந்தெடுத்த இலக்கு சிறிய சலசலப்பை ஏற்படுத்தியதொன்றல்ல.
ஜோசப் படைதளம் என்றால் அது புலிகள் மூச்சுக்கூடப் பட்டுவிட முடியாத இடமாக படையாள் ஒருவர் தொடக்கம் சிறீலங்காவின் படைத்தளபதி சரத் பொன்சேகா வரை அதீத நம்பிக்கை வைத்திருந்த இடம்.
வவுனியா நகரின் தெற்காக ஐநூறு மீற்றர் தொடக்கம் சுமார் நான்கு கிலோமீற்றர் வரை நீண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ள ஜோசப் படைத்தளம் மேற்காக ஏ9 வீதியை எல்லையாகக் கொண்டது. சிறீலங்காவின் வான்படைத்தளமும், வன்னிக்கான கூட்டுப்படை கட்டளைத்தளமும் அமைந்துள்ள குறிப்பிட்ட இந்தத் தளம் மீது புலிகள் முப்படைகளை கொண்டு தாக்கியமை சிறீலங்கா அரசையும் படைத்தலைமையையும் புலிகள் மீதான கிலியை அதிகரிக்கவே செய்திருக்கும்.
தளம்பற்றிய விடயங்களை ஆராய்கின்ற போது இந்தத் தளத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். வடக்குப்புறமாக சூசைப்பிள்ளையார்குளம், இறும்பைக்குளம், கிழக்காக கோவிற்குளம், கல்நாட்டியகுளம் தெற்காக ஈரப்பெரியகுளம், மேற்காக ஏ9 வீதி (இந்தப்பக்கம் கற்குழி, தேக்கங்தோட்டம், மூன்று முறிப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன.) குறிப்பிட்ட இந்த கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழரை விரட்டியபின்னர் மக்களின் வாழ்விடங்களையும் தோட்டக்காணிகளையும் வவுனியா காட்டிலாக அலுவலகம் விதை உற்பத்தி நிறுவனத்தின் கட்டிடம் என்பனவற்றையும் வன்பறிப்பு செய்து வைத்துள்ள இடம் தான் ஜோசப் படைத்தளம்.
1984 ம் ஆண்டு வவுனியா நகரில் இருக்கும் இறைச்சிக் கடையில் இறைச்சி வாங்குவதற்காக ஜீப் ஒன்றில் வந்த படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் நான்கு சிறீலங்கா வான்படையினர் பலியானார்கள். இதற்குப் பழிவாங்கும் முகமாக நகரில் நவீன சந்தை, தமிழரின் கடைகள் என்பனவற்றை தீயிட்டு கொழுத்தியதுடன் கொள்ளையிட்டார்கள். பொது மக்களைப் படுகொலை செய்தார்கள். இளம் பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.
அந்த நாள் தொடக்கம் சிறிய வானூர்தி ஓடு தளம் மட்டும் அமைந்திருந்த இடம் இன்று பல தமிழரின் பல கிராமங்களை பிய்த்தெடுத்து பெரியதொரு கிராமத்தையே அமைத்து கொண்டது போலத்தான் இப்படைத்தளம் இருக்கிறது.
பெரு நம்பிக்கை கொண்ட தளத்திற்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வாறு துல்லியமாக தகவல்களை திரட்டினார்கள்? நுழைந்தார்கள்? என்பது வியப்புக்குரிய கேள்விதான்
இந்தப் படைத்தளத்திற்குள் தென் கிழக்குப்புறமாக அமைந்துள்ள கட்டிடத்தில் கூட்டுப்படைதளபதிகளின் மகாநாடு நடப்பது வழமை. முன்பு தளத்திற்குள் நுழைவதற்கு பல வாயில்கள் இருந்தன. ஆனால் 1999 ம் ஆண்டிற்கு பின் ஈரப்பெரியகுளம் சந்தியில் இருந்தே படைத்தளத்திற்குள் நுழைவதற்கு வாயில் உள்ளது. MI 17 போன்ற துருப்புக்காவி உலங்கு வானூர்திகளை நிறுத்தி வைப்பதற்கான தகரத்தினால் ஆன பாரிய கொட்டகைகள் (இது வானூர்திகளை மறைத்து வைப்பதற்காக அமைக்கபட்ட கொட்டகைகள்) பலவுள்ளன.
சிறீலங்கா வான்படையினருக்கான பயிற்சிகள் நடைபெறும் இடமும் நவீன ராடர் கருவிகளும் இங்குள்ளன. தமிழ் மக்களின் விடுதலைப் போரை மனோவியல் ரீதியாக நலிவடையச் செய்வதற்காக மத்திய அலைவரிசை, பண்பலை வரிசை ஆகியவற்றினூடாக இயங்கிய வானொலிகளான வானம்பாடி, வன்னிச்சேவை என்பனவும் இங்கிருந்தே இயங்கியது.
வானூர்தித்தளம் கூட்டுப்படைத்தளம் கூட்டப்படைதளம் என்பவற்றின் பாதிப்புக்காக நாலாபுறமும் மின்னொளி பாய்ச்சப்பட்டிருக்கும். கொமோண்டோ முட்கம்பிகள் சுருள் சுருளாக போட்டு அதற்கும் மின் பாய்ச்சபட்டுள்ளது. சீமெந்தினால் ஆன எட்டடி உயரமான தூண்களை நட்டு அதில் ஆறு அங்குலத்திற்கும் அதிகமான முட்கம்பிகளை அடித்துள்ளார்கள்.
எல்லையோரம் இவற்றை அடுக்கடுக்காக செய்து வைத்துள்ளதுடன் தொடர் பதுங்கு குழிகளில் இருபத்தி நான்கு மணி நேரமும் படையாட்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இடையிடையே கண்காணிப்பு கோபுரங்கள் பலவுள்ளன. குறிப்பிட அடுக்கடுக்கான தளத்தின் பாதுகாப்போடு மிதிவெடி பொறிவெடி வயல்களும் தாராளமாகவுள்ளது. இவற்றையும் தாண்டி புலிகள் நுழைந்து விட்டாலும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் சிறிய படைக்காவி ஊர்தியொன்று எல்லையோரங்களை கண்காணிப்பதற்காக சென்று வரும்.
தவிரவும் தளத்திற்குள் எல்லையோர கண்காணிப்பில் இருந்து சுமார் இருநூறு மீற்றர் தொலைவில் பாரிய நிலக்கீழ் பதுங்கு குழிகளைக் கொண்ட காவலரண்கள் பலவுள்ளன. இவை சிறிய முகாம்களைப் போல அமைக்கப்பட்டிருக்கும். ஐம்பது கலிபர் போன்ற கனரக சுடுகுழல்கள் எந்த வேளையிலும் எல்லையோரங்களில் இயங்கும் நிலையில் இருக்கும். மோட்டார், ஆட்டிலெறித் தளங்கள் என்பன கல்நாட்டிய குளம் பக்கமாக இருப்பதனால் படையாட்களை கொண்டவர்கள் சுற்றுக்காவலிலும் ஈடுபடுகின்றனர். மிகவும் இறுக்கமான பாதுகாப்பு கொண்ட தளத்தினுள் புலிகள் எவ்வாறு நுழைந்தார்ளோ?
தளத்தின் வடமேற்குப் புறமாக சிறீலங்கா காவற்துறையின் வன்னிக்கான உயர்பீடங்கள் அமைந்துள்ளன் பயங்கரவாத குற்றத்தடுப்பு காவற்துறையினரின் விசாரணைப்பீடம், சிறைக்கூடம் என்பனவும் உள்ளன. இவை தளத்தின் குறிப்பிட்ட எல்லையோர பாதுகாப்பிற்கு வெளியே இருப்பது கூட தளத்திற்கான பாதுகாப்புத்தான்.
இவ்வளவு இறுக்கமான பாதுகாப்பு இருந்தமையால்தான் தளத்தினுள்ளே படைத்தளபதிகள் நீந்திக்குளித்து உற்சாகமாக இருப்பதற்கு கோடிக்கணக்கான பணங்களை செலவு செய்து நீச்சல் தடாகம் ஒன்றை அமைத்து வைத்துள்ளார்கள்.
பெரு நம்பிக்கை கொண்ட தளத்திற்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வாறு துல்லியமாக தகவல்களை திரட்டினார்கள்? நுழைந்தார்கள்? என்பது வியப்புக்குரிய கேள்விதான்.
சிறீலங்கா படைத்துறையின் படைத்தளபாடரீதியான பலம் அமிகமெனும் தமிழீழ விடுதலைப் புலிகளது பலம் மதிநுட்பம் கொண்டதாகவுள்ளது. சிறீலங்காவில் சனாதிபதியகாக மகிந்த ராஜபக்ச பதவியேற்றபின்னர் வீரமுழக்கம் செய்தார். இதோ புலிகள் அழித்து விடுகிறேன். கதை முடிகிறது என்று. போரியர் ரீதியாக புலிகளது தந்திரோபாய நடவடிக்கைகளை எல்லாம் புலிகளது பலவீனம் என்று எண்ணி அறிக்கை விட்டார்.
ஆனால் உண்மையில் நடப்தென்ன என்பதை கவனிக்கத் தவறுகின்வர்காக ஒரு தகவலைச் சொல்வது பொருத்தமானதாக இருக்குமென எண்ணுகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆளணி இழப்புகளைக் குறைத்தது சிறீலங்காப் படைத்தரப்பின் கட்டுமானங்களைச் சிதைத்து வருகிறார்கள். மகிந்த ராஜபக்சவின் காலத்தில் புலிகளது புதிய தொழில்நுட்பம் நன்றாக வேலை செய்வதாகத்தான் தெரிகிறது.
பலாலி வான்படைத்தளம், அனுராதபுரம் வான்படைத்தளம், கட்டுநாயக்கா வான்படைத்தளம் இறுதியாக வவுனியா வான்படைத்தளம் என்பனவற்றைப் புலிகள் குறிவைத்தமையின் மூலம் புலிகளது தன்மை என்னென்று புரிந்து கொள்ள முடியுமல்லவா?
இவற்றில் அனுராதபுரம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் புலிகள் வேறுபாடு கொண்ட தாக்குதல்களைச் செய்தார்கள். ஆனால் அவையிரண்டும் ஒரேமாதிரியான தாக்ககுதலாக தெரிந்தது. எனினும் இவற்றை நாம் சரியாக அலசி ஆராய்ந்து பார்க்கையில் சிறீலங்காப்படையை புலிகள் திணற வைக்கின்றனர் என்று சொல்லலாம். பலாலியில் முதலில் தமிழீழ வான்படை தாக்கிய போது ஊடகமொன்றில் சிறீலங்காப்படைத்துறைப் பேச்சாளர் கூறுகையில் அங்கு ஒரு பட்டம் கூடப் பறக்கவில்லை என்றார்.
இதுபற்றி தமிழீழ படைத்துறைப்பேச்சாளர் இளந்திரையனிடம் அதே ஊடகம் தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு பட்டம் பறந்ததா இல்லையாவென அவர்களுக்குத் தான் தெரியும் என்றார்.
தமிழீழ வான்படையின் வானுர்திகள் கட்டுநாயக்காவில் தாக்கியபோது அங்கு ஏற்பட்ட அழிவுகளை மூடி மறைத்தனர். பலாலி மீது இரண்டாவது தடவஐ வான்தாக்குதல் செய்த புலிகள் பூனகரியில் இருந்து ஏக காலத்தில் ஆட்டிலெறித்தாக்குதலையும் நடத்தினர்.
கொழும்பில் இருக்கும் ஊடகவிலயலாளர்களை அருகில் இருக்கும் கட்டுநாயக்கா வான்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லாத சிறீலங்காப் படைத்தலமை பலாலிக்கு வேக வேகமாக அழைத்துச்சென்று சேதமெதுவும் ஏற்படவில்லை எனக் காண்பித்தது. ஆனால் அனுராதபுரம் மீதான தாக்குதல் புதிய வடிவத்திலானதாக அமைந்தது.
நவீன போர்க்கருவிகளுடன் கரும் புலிகள் களமிறங்கி இலக்கை அழிக்க தமிழீழ வான்படையும் தாக்குதலை நடத்தியது. சிதைத்தழிக்கபட்ட அனுராதபுரம் வான்படைத் தளத்தை மூடி மறைக்க வழியின்றி திணறினார்கள். அழிவைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் கரும்புலிகளின் உடலங்களுடன் வீர விளையாட்டுக் காட்டியது வேறுகதை. (அது சிங்கள இனத்தை அவர்களே அவமானப்படுத்தியதற்கு சமமானது என ஒரு சில சிங்களச் சிந்தைனயாளர்களே சொல்லிக்கொண்டார்கள்.)
இவை எல்லாவற்றிக்கும் முற்றிலும் புறம்பாக வவுனியா வான்படைத்தளம் மீதான தாக்குதல் அமைந்தது. கரும்புலியணி இலக்கை அழித்துக்கொண்டிருக்க ஆட்டிலெறி தாக்குதலும் துல்லியமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்க தமிழீழ வான்படையும் மூன்று தடவை குண்டுவீச்சுத் தாக்குதலைச் செய்துள்ளது. அதிகாலை மூன்று மணி தொடக்கம், காலை எட்டு மணிவரை தொடராக வெடியோசை வவுனியா நகரையே அதிரவைத்துக்கொண்டிருந்தது.
வவுனியா வாழ் மக்கள் ஆங்கிலத்திரைப்படம் ஒன்றைப் பார்ப்பது போலவும் கண்முன்னே நடக்கும் காட்சியின் கதை தெரியாமலும் திகைப்பில் இருந்துள்ளனர். அவ்வளவு வெடியோசைகளை கேட்டு ஓய்ந்த பின்னர் அரச தரப்பினர் அங்கு சிறிய சேதம் தான் எனக் கூறியதைக் கேட்டால் அந்த மாவட்ட மக்களை சிரிப்பதைத் தவிர வேறு எதனைத் தான் செய்திருப்பார்கள்.
பலத்த பாதுகாப்பு கொண்ட வவுனியா ஜோசப் படைத்தளம் மீதான தாக்குதல் சிறீலங்காப் புலனாய்வாளர்களையும் மாரடிக்க வைத்துள்ளது. இது போன்ற தாக்குதல் நடைபெறப்போவதை முற்கூட்டியே அறியவில்லை. தாக்குதல் நடந்த பின்னரும் தலையைப் பிய்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
நுழைய வழி இல்லாத இடத்திற்குள் எப்படி புலிகள் தகவல்களைத் திரட்டினார்கள். இப்படியொரு திட்டத்தை நிறைவேற்றினார்கள் என்பது சிறீலங்காவின் அனைத்து புலனாய்வாளர்களுக்கும் குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடியவொன்றுதான்.
ஒட்டு மொத்தமாக ஜோசப் படைத்தளம் மீதான தாக்குதல் சிறீலங்கா அரசிற்கும் அதன் தமிழன அழிப்பிற்கு துணை போகின்ற வல்லாதிக்க சக்திகளுக்கும் ஒரு செய்தியை விளக்கியுள்ளது. ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டம் சந்தையில் விற்கும் ஒரு பொருளல்ல.
அது ஒரு தேசியத்தின் ஆன்மா புனிதம் கொண்டது. நேர்மை பொதிந்தது. விடுதலைக்கான இதுவரைகால விலைகொடுப்பினை விலைமதிக்க முடியாத தியாகம் நிறைந்தது. எனவே தான் உலகத்தவரில் துணிவான செயல் புரியும் தற்கொடையாளர்களும் தமிழீழ விடுதலைக்காக உயிர்களை தற்கொடை செய்கின்றார்கள்.
எந்தவொரு மனிதனும் எப்போது சாவேன் எனச் சொல்லமுடியாது. கரும்புலிகள் எப்பொழுது சாவைத் தழுவ வேண்டும் என்று தெரிந்து நெஞ்சுரத்தோடு செல்கின்றனர் என்றால் அது ஏன்? எப்படி? எதற்காக செய்வதற்கு துணிகின்றனர் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழீழ மக்கள் மீது சிறீலங்காவின் மிகையொலி குண்டு வீச்சு விமானங்கள் பலதடவை குண்டுகளை வீசியுள்ளன. குழந்தைகள் உள்ளடங்கலாக மக்கள் உடல் சிதறிப்பலியாகியுள்ளனர். 1984 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை ஏராளம் தாக்குதல்களைப் பட்டியலிடமுடியும்.
எதிரி நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது போன்று தொடராக தாக்குதல்களை செய்துள்ளமை பற்றி உலகம் நேர்மையாக பார்க்க தவறியுள்ளது. ஆகவே தான் எமதுறவுகளை நாமே காப்பாற்றுவோம் எனப் புறப்பட்டவர்கள் தான் கரும்புலிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துப் போராளிகளும்.
அவர்கள் தியாகத்தின் முதிர்ச்சி தான் தமிழீழ வான்படை. ஆற்றலுள்ள விலைபோகாத தலைவரின் வழிகாட்டலில் ஈழத்தமிழினம் நாடில்லாத உலகத்தமிழினத்திற்கு நாடொன்றை காண்பிக்கின்றது. எனவே அதனை தேசியம் வலுமிக்கது என்பதனை உலகத்தவரே புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியா அதன் பிராந்திய நலனிற்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் உட்கிடக்கையையும் சரியாகப் புரிந்து அங்கீகரிக்கத் தவறியுள்ளது. இதனை ஜோசப் படைத்தளம் மீதான தாக்குதலில் புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். போர்த்தளபாட உதவிகளைச் செய்வதாக மட்டும் கூறிவந்த இந்தியா இன்று என்ன சொல்லப்போகின்றது.
தனது வான்படை தொழில்நுட்பவியலாளர்களை ஜோசப் படைத்தளத்தில் ராடர்களை கண்காணிப்பதற்கு சிறீலங்கா வான்படை தொழில்நுட்பவியலாளர்களிற்கு பயிற்சி வழங்கவும் தங்க வைத்தது ஏன்?
ஈழத்தமிழினம் தங்களைப் பாதுகாக்க தாங்களே போராடுகிறார்களே?
இதனால் இந்தியாவிற்கு என்ன வலி? ஒரு இனத்தின் உயிர் உங்களிற்கு பிராந்திய நலனிற்கான் கேடயமா?
சிலவேளை குறிப்பிட்ட இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் சாவடைந்திருந்தால் மூடி மறைத்திருப்பீர்கள். இலக்கு சிறீலங்கா படைத்துறை முக்கிய இடங்கள். இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் கிடையாது. காயமடைந்த குறிப்பட்ட இருவருமே அதற்கு சாட்சி.
2004 ம் ஆண்டு சிறீலங்காவின் முப்படைத் தலைவராக சிறீலங்காவின் கடற்படைத் தளபதி தயாசந்தகிரி பதவி ஏற்கும் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பிற்கு வந்த இந்தியாவின் கடற்படைத் தளபதி அருண்பிரகாஷ் (அன்றைய காலம் இலங்கையில் சமாதானப் பேச்சுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம்) நான்கு நாட்கள் தங்கி நின்றார்.
இலங்கையில் முக்கிய தளங்கள் சிலவற்றையும் நேரில் பார்வையிட்டார். அவர் சிறீலங்காவிற்கு வைபவம் ஒன்றிற்கு வந்த ஆள் கிடையாது. மீண்டும் போர் தொடங்கினால் இந்தியா படைத்துறை சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார். அருண்பிரகாஷ் அப்படிக்கூறினாலும் இந்திய அரசியல் தலைவர்கள் நேரடி ஆள் அணி உதவிகள் எதுவும் செய்யவில்லை என்ற கருத்தை முன்வைத்தனர். இந்த ஏமாற்றுக்காரர் இன்று வெட்கித் தலை கவிழ வேண்டும்.
எனவே இன்று நாம் இவை எல்லாவற்றையும் நோக்குகின்ற போது சிறீலங்காவின் வாய் வீச்சுக்காரர மகிந்த ராஜபக்ச சகோதரர்களுடனோ சரத் பொன்சேகா போன்ற தளபதிகளுடனோ அவர்கள் வழிநடத்தும் படைகளுடன் மட்டுமோ தமிழீழ விடுதலைப் புலிகள் சமராடவில்லை.
வல்லாதிக்க நாடுகளின் போர்த்தளபாடங்களைப் பெற்று அவர்களின் முழுத் தொழில்நுட்ப வழங்கலுடனும் முன்னெடுக்கப்படும் போரிற்கே புலிகள் முகம் கொடுக்கின்றனர். எனவே தந்திரோபயமாக போரை முன்னெடுப்பதும் எதிர் கொள்வதும் தான் புத்திசாலித்தனர்.
அதனையே புலிகள் செய்வதனால் வெற்றிகளை நிரந்தரமாக தமிழீழமே பெறப்போகிறது. இனி ஜோசப் படைத்தளம் போன்று எந்த்த் தளமோ என சிறீலங்கா விழியை விரியவைத்துள்ளது. குறிப்பிட்ட இந்த தாக்குதலும் தமிழீழம் சிறீலங்காவின் முகத்தில் அறைய பிடரியில் இருந்தவர்களுக்கும் வலித்திருக்கும்.
மதி
Comments