புலிகளின் வானோடிகள் குறித்து ஆராய்ந்து வரும் சிறிலங்கா புலனாய்வுத்துறை

தமிழீழ விடுதலைப் புலிகளின் வானோடிகளின் திறன் குறித்து அவற்றை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்த விரைந்த சிறிலங்கா வான் படையினரின் மூலம் தெரிந்து கொண்டுள்ள அரச புலனாய்வு வட்டாரங்கள், இவ்வளவுக்கு புலிகள் எவ்வாறு வானூர்தி ஓட்ட பயிற்சி பெற்றார்கள் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இது தொடர்பில் அறிய வருவதாவது:

வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வானூர்திகளை கலைத்து சென்று தாக்குதவதற்கு கொழும்பிலிருந்து சென்ற சிறிலங்கா வான் படையின் எஃப்-7 வானூர்திகள் அந்த கும்மிருட்டு வேளையிலும் ஒருவாறு புலிகளின் வானூர்தியை கண்டுவிட்டன.

தனது வானூர்தி சிறிலங்கா வானூர்தியின் கண்காணிப்பு எல்லைக்குள் வந்துவிட்டதை அறிந்துகொண்ட புலிகளின் வானோடி தனது வானூர்தியை திடீரென கரணம் அடிக்கச்செய்து, சிறிலங்கா வானூர்தியின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார்.

அதேபோல, வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த புலிகளின் வானூர்தி அங்கு சிறிலங்கா வான்படையின் எஃப்-7 தாக்குதல் வானூர்தி வந்தவுடன் உடனேயே முல்லைத்தீவுக்கு திரும்புவது போல பாசாங்கு செய்துவிட்டு, முல்லைத்தீவு நோக்கி அரைவாசி தூரம் சென்றுவிட்டு, திடீரென திரும்பி வந்து வவுனியா கூட்டுப்படைத்தள அதிகாரி நிர்மல தர்மரட்ணவின் அதிகாரபூர்வ இருப்பிடத்தின் மீது குண்டென்றை வீசிச்சென்றது.

இது போன்ற நுணுக்கமான வான்படை போரியல் முறைகளை இவ்வளவு நேர்த்தியாக புலிகள் எங்கு பயிற்சி பெற்றார்கள் என்பது குறித்து சிறிலங்கா அரச புலனாய்வு வட்டாரங்கள் ஆராய்ந்து வருகின்றன.

சிறிலங்கா படைத் தரப்பு வட்டாரங்களிலிருந்து பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறுகையில், வவுனியா தாக்குதலை பொறுத்தவரை அங்கு தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வானூர்தியை சுட்டு வீழ்த்தச்சென்ற சிறிலங்கா வான்படை வானோடியை விட புலிகளின் வானோடி மிகவும் சாமர்த்தியமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.


Comments