தான்விட்ட தவறைத் திருத்தும் கடப்பாடு பிரிட்டனுக்கு உண்டு

புற்றுநோயால் வாழ்வா, சாவா என்று போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் நோயாளிக்கு, தலையிடியைத் தணிப்பதற்கான "பனடோல்' மாத்திரையை புற்றுநோய் நிவாரணியாகக் கொடுப்பது குறித்து வைத்தியர் ஆலோசித்தால் எப்படி இருக்கும்?

இலங்கைப் பிரச்சினையை ஒட்டி பிரிட்டனின் மூத்த அமைச்சர் ஒருவர் கூறிய கருத்து, மேற்படி வைத்தியர் தொடர்பாக நமக்கு எழக்கூடிய எரிச்சலையே தந்து நிற்கின்றது.
இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடப்பதை உறுதி செய்யும் நோக்குடன் அதனை வலியுறுத்தி இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக மேற்குலக நாடுகள் புதியவகை உத்தி ஒன்றைக் கையாள்வது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றன.

இலங்கைக்கு வழங்கிவரும் வரிச்சலுகைகளைத் தொடர்ந்தும் வழங்கவேண்டுமாக இருந்தால், அந்த நாடு மனித உரிமைகள் விடயத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று நிபந்தனை விதிக்க மேற்குலக நாடுகள் திட்டமிட்டிருக்கின்றன. இப்படி பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான அமைச்சர் மலோச் பிறவுண் பிரபு கூறியிருக்கின்றார் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பிரிட்டனில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் இலங்கை அரசின் மீது அழுத்தத்தைக் கொடுப்பதற்கான நியாயபூர்வமான சாதனமாக ஜி.எஸ்.பி. வரிச்சலுகை விவகாரத்தைக் கருதுகின்றன என்று குறிப்பிட்டார் எனக் கூறப்படுகின்றது.

இந்தக் கருத்தை வெளியிட்ட பிரிட்டிஷ் அமைச்சரே, இலங்கை தொடர்பான பிரிட்டனின் வெளிவிவகாரச் செயற்பாடுகளைக் கையாள்பவர். அத்துடன் அவர் ஈழத் தமிழர்களின் சமூகத்தின் மத்தியிலேயே இக்கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

ஆகவே,இலங்கையின் மனித உரிமை விவகாரங்களை நேர்சீர் செய்வதற்கான கருவியாக வரிச்சலுகை விடயத்தைத்தான் பயன்படுத்துவது என்பதே பிரிட்டனின் நிலைப்பாடு என்று எண்ணவேண்டியுள்ளது.

பிரிட்டனின் இந்த நிலைப்பாட்டை எண்ணும்போதுதான், புற்றுநோயால் வாழ்வா, சாவா என்று போராடிக்கொண்டிருக்கும் நோயாளிக்குத் தலையிடி மருந்தைத் தீர்வாக நிவாரணியாக வழங்க முற்படும் வைத்தியர் பற்றிய விசனம் தமிழர்களுக்கு ஏற்படுகின்றது.

இலங்கையில் இனப்பிரச்சினை இன்று இத்தகைய ஆழமான விடயமாகப் புரையோடிப் போயிருக்கின்றமைக்கு கால்கோள் வித்து இட்டவர்கள் பிரிட்டிஷாரே. இந்தப் பிரச்சினை உருவெடுத்தமைக்கான பொறுப்பில் கணிசமான பங்கு பிரிட்டிஷாரையே சாரும்.

இலங்கைத் தீவில் தமிழர் தேசியமும், சிங்களவர் தேசியமும் புவியியல் ரீதியாக வேறுபட்டு தனித்தனியாகக் காணப்படும் இரு வெவ்வேறு தாயகங்களில் தனித்தனி அரசுகளுடனும், தனித்தனியான மொழி, கலாசாரம், வழக்காறு, பண்பாட்டுக் கோலங்கள் ஆகியவற்றுடனும் சரித்திர காலம் தொட்டே விளங்கி வந்தன.

பதினாறாம் நூற்றாண்டின் பின்னர் இலங்கைத் தீவை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் போன்ற அந்நியர்கள் ஆக்கிரமித்துத் தமது ஆதிக்கத்தின் கீழ் அதனைக் கொண்டுவந்தபோதும், இந்த இரு தேசங்களையும் தேசியங்களையும் தனித்தனி வெவ்வேறான நிர்வாகக் கட்டமைப்புகளின் கீழேயே ஆட்சி செய்தனர்.

அந்த ஆக்கிரமிப்பைப் பின்னர் அவர்களிடமிருந்து பிடுங்கிக்கொண்ட பிரிட்டிஷ் வெள்ளையர்கள், பின்பு 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தங்களது நிர்வாகக் கட்டமைப்பு வசதிக்காக இரண்டு தேசங்களையும் ஒன்றிணைத்து ஒரு பொது ஆட்சி முறையை அறிமுகப்படுத்தினர்.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இலங்கைத் தீவின் மீதான தமது ஆட்சி அதிகாரத்தைக் கைவிடும்வரை இந்த முறைமையைத் தொடர்ந்த பிரிட்டிஷார், தாங்கள் வெளியேறும்போது இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தினதும், தேசியத்தினதும் இறைமை என்ற குடுமியை நாட்டின் பெரும்பான்மையினரான பௌத்த சிங்களவரிடம் அடிமைத்தளையாகப் பிடித்து ஒப்படைத்துவிட்டுச் சென்றனர்.

அந்த வினையின் விளைவையே இலங்கைத் தீவு இன்னும் இன்றும் அறுத்துக் கொண்டிருக்கின்றது.

பிரிட்டிஷ் விட்டுச் சென்ற தவறினால் ஏற்பட்ட களேபரமே இன்று முற்றி பெரும் இனப்பிரச்சினையாகி,உள்நாட்டு யுத்தமாக வெடித்திருக்கின்றது.

அதன் விளைவாக, இன்று தமிழர்கள் மீது பெரும் கொடூர யுத்தமாக ஏவி விடப்பட்டிருக்கும் பேரினவாதத் திமிர்த்தனமே மோசமான மனித உரிமை மீறல்களுக்கும் அவர்களுக்கு எதிரான குரூர வன்முறைகளுக்கும் களம் அமைத்து நிற்கின்றன.

பேரழிவு தரும் மனித உரிமை மீறல் வன்முறைகள் தமிழர் தாயகத்தை வாழ்வா, சாவா என்ற இறுதிக்கட்ட நெருக்கடிக்குள் ஆழ்த்தியிருக்க, அந்தப் பேரவலத்திலிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கு விரைந்து ஆக்கபூர்வமான உடன் பலன் தரக்கூடிய நேர்த்தியான அவசர நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பிரிட்டன், அதை விடுத்து சாவகாசமாக அதனைக் கையாளும் போக்குக் குறித்து விளம்புகிறது; விளக்க முற்படுகின்றது.

கனவான் போக்கில் செயற்படுவோரை கனவான் தனத்தில் அணுகலாம்; அந்த மார்க்கத்தில் திருத்தலாம்.

ஆனால் துன்மார்க்கத்தில் உழல்பவர்களைக் கனவான் போக்கில் அணுகித் திருத்தவே முடியாது. இது வெள்ளைக்கார கனவான்களுக்கு எப்போது புரியப்போகின்றது?


Comments