சரிந்து செல்லும் சிறிலங்காவின் அந்நியச் செலாவாணியை ஈட்டிக்கொடுக்கும் துறைகளான உல்லாசப் பயணத்துறை, தேயிலை ஏற்றுமதி போன்றவற்றை தூக்கி நிறுத்தும் விதமாக கனடாவில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா அரசின் முயற்சியொன்று தமிழ் மகளிர் அமைப்பும் கனடியத் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து நடத்திய கவனயீர்ப்பு நிகழ்வினால் பெரும் சவால்களை எதிர்கொண்டது.
உக்கிரமடைந்து வரும் போரினால் பெரும் சரிவைச் சந்தித்துள்ள சிறிலங்காவின் உல்லாசப்பயணத்துறை மற்றும் ஏற்றுமதித்துறைகளை வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் முகமாக, கனடா ரொறன்ரோவில் உள்ள "ஹாபர் ஃபுரொன்ட் சென்டரில்" (Harbour Front Centre) இல் "சிறிலங்கா நாள்" என்னும் நிகழ்வு இந்த வார இறுதி நாட்களில் (20-21.09.08) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இங்கு இலங்கையின் உண்மை நிலையினை மறைத்து உல்லாசத்துறை மற்றும் தேயிலை போன்ற ஏற்றுமதித்துறைகளை ஊக்குவிக்கும் முகமாக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆனால், அங்கு எமது தமிழர்கள் படும் அவலங்களை வெளி உலகுக்கு எடுத்துக்கூறி சிறிலங்காவின் உண்மை முகத்தை தெரிவிக்கும் வகையில் தமிழ் மகளிர் அமைப்பினராலும் கனடிய தமிழ் இளையோர்களாலும் எதிர்ப்பு நிகழ்வு ஒன்று "சிறிலங்கா நாள்" நடைபெற்ற மண்டபத்துக்கு முன்பாக நடைபெற்றது.
இதில் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளைச் சித்தரிக்கும் படங்கள் மற்றும் வாசகங்கள் என்பனவற்றை தாங்கியவாறு வீதிக்கு இரு புறங்களிலும் திரண்டிருந்த மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
அத்துடன் இது மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதும், உல்லாசப் பயணிகள் பெருமளவில் பார்வையிடும் நகரின் மத்திய பகுதி என்பதனால், இங்கு வழங்கப்பட்ட சிறிலங்காவின் முகத்திரையைக் கிழித்துக்காட்டும் ஆதாரங்களுடன் கூடிய சிறு பிரசுரங்களை வேற்றின மக்கள் படித்துவிட்டு தம்முடன் கொண்டு சென்றதையும், அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன் தமது ஆதரவினையும் கவனயீர்ப்பு நிகழ்விற்கு தெரிவித்துக் கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்நிகழ்வினை கனடிய ஊடகங்களும் பதிவு செய்தன.
நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் "சிறிலங்காவே, தமிழர்களைக் கொலை செய்யாதே" (Sri Lanka, Stop Killing Tamils) என்ற வாசகத்தினைக் கட்டியிழுத்தபடி வானூர்தி ஒன்று சுமார் இரண்டு மணித்தியாலங்களாக ரொறன்ரோ நகர் முழுவதினையும் வலம் வந்ததாகும்.
ரொறன்ரோ நகரின் பெரும்பாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்து பார்க்கக்கூடியதாகப் பறந்த இந்த வானூர்தியின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகம் அனைத்து மக்களுக்கும் ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கும்.
அதாவது, நடக்கும் உண்மைகளை வெளித்தெரிய விடாது தடுத்து தனது போலி முகத்தினை வெளிக்காட்டும் சிறிலங்காவின் உண்மை முகத்தினை தோலுரித்துக் காட்டுவதாக இச்செய்தி அமைந்திருந்தது.
இதேவேளை, அங்கு வருகை தந்திருந்த வேற்றினச் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு அந்த வானூர்தி அந்த வாசகத்துடன் சுற்றி வந்ததன் காரணம் பற்றி சுற்றுலாப் பிரயாண வழிகாட்டிகள் எடுத்துக்கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் இந்த அமைதி வழியிலான எதிர்ப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமையும் இதே இடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments