சிறி லங்கா வான்படையின் பெருமைகளைப் புரட்டிப் போட்ட புலிகளின் வான் தாக்குதல்


திருகோணமலைக் கடற்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் வான்படை நடத்திய தாக்குதல் சிறி லங்கா விமானப்படையின் வான் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

ஓகஸ்ட் 26 ஆம் திகதி இரவு சுமார் 9 மணியளவில் வவுனியா விமானப்படைத் தளத்தில் பொருத்தப் பட்டிருந்த இரு பரிமாண ராடர் தொகுதியில் இரண்டு சந்தேகத்துக்கிடமான விமானங்களின் பறப்பு அவதானிக்கப் பட்டது.

முல்லைத்தீவில் இருந்து அந்த விமானங்கள் திருகோணமலை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. திருகோணமலையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அவை பறந்து கொண்டிருந்தபோதே விமானப்படையால் இனங் காணப்பட்டன. உடனடியாக சகல படைத்தளங்களும் உசார்படுத்தப் பட்டன.

குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் கடற்படைத் தளம், விமானப்படைத் தளம் என்பனவற்றில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு புலிகளின் விமானங்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்தபோது இரவு 9.05 மணியளவில் துறைமுக வான்பரப்புக்குள் வான்புலிகள் பிரவேசித்தனர்.

மழை பெய்து கொண்டிருந்த நேரம் அது. வானத்தில் முகில்கள் நிறைந்திருந்தன. இரண்டு விமானங்களும் துறைமுகத்தினுள் பிரவேசித்ததை உணர்ந்து கொண்ட விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவ நிலைகளில் இருந்து வானத்தை நோக்கி நெருப்புக் கோளங்கள் ஏவப்பட்டன.

விமான எதிர்ப்புப் பீரங்கிகளின் சரமாரியான சூட்டுக்கும் மத்தியில் புலிகளின் விமானங்கள் அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்றன. குண்டுகள் அனைத்தும் கடற்படைத் தளத்தின் கட்டடப் பகுதிகளிலேயே விழுந்தன. ஒன்று மட்டும் வெடிக்கவில்லை.

இந்தத் தாக்குதலில் கடற்படையினர் 4 பேர் கொல்லப்பட்டு 20 இற்கும் அதிகமானோர் காயமுற்றதாக அரசதரப்பு ஏற்றுக்கொண்டது. ஆனால் பத்துக் கடற்படையினர் கொல்லப்பட்டு 31 பேர் காயமுற்றதாக சுயாதீனமான தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்துக்குப் படையினரை ஏற்றிச் செல்லும் பாரிய துருப்புக்காவிக் கப்பலான ‘ஜெட்லைனர்’ பயணத்துக்குத் தயாராக துறைமுகத்தில் தரித்து நின்றபோதே இந்தத் தாக்குதலை வான்புலிகள் நிகழ்த்தினர்.

புலிகள் ஜெட்லைனர் துருப்புக்காவி கப்பலையே குறிவைத்ததாகவும், ஆனால் அவர்களின் இலக்குத் தவறிவிட்டதென்றும் கூறிப் படைத்தரப்பு தம்மைச் சமாதானப்படுத்திக் கொண்டது.

இந்தத் தாக்குதல் இராணுவ ரீதியாக படைத்தரப்புக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தா விட்டாலும் அதன் மைய நோக்கில் வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இலங்கை விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மார்ஷல் றொஷான் குணதிலக, “இனிமேல் புலிகளால் விமானத் தாக்குதல்களை நடத்தவே முடியாது” என்று பேட்டி கொடுத்த சில நாட்களுக்குள்ளாவே இந்தத் தாக்குதல் நடந்து முடிந்திருக்கிறது.

புலிகள் ஆறாவது தடவையாகவும் விமானத் தாக்குதலை நடத்திவிட்டு பத்திரமாகத் தமது விமானங்களைத் தரையிறக்கியிருப்பதுதான் முதலாவது ஆச்சரியம்.

வான்புலிகளைச் சமாளிக்க புதிய ரேடர்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், கருவிகளை இலங்கை விமானப்படை கொள்வனவு செய்திருந்த போதும் அவை வெறும் புலூடா என்பதை நிரூபித்துவிட்டுத் தளம் திரும்பியிருக்கின்றனர் வான்புலிகள்.

முல்லைத்தீவில் இருந்து விமானங்கள் மேலெழுந்த போதே வவுனியாவில் இருந்து அவற்றைக் கண்டு பிடித்து விட்டோம் என்று சொல்லியிருக்கின்ற விமானப்படை அதிகாரிகள் எதனால் அவற்றைக் தாக்கி அழிக்க முடியாது போனதென்பதற்கு வௌ;வேறு விளக்கங்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

முகில்கள் இருந்ததால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை என்று ஒரு காரணம் சொல்லப்பட் டிருக்கிறது. அதே முகில்கள் இருந்த போது தானே புலிகள் வானத்தில் இருந்து சரியாக கடற்படைத் தளத்தினுள் குண்டுகளை வீசியிருக்கிறார்கள்.

புலிகளால் தரையில் உள்ள இலக்குகளைச் சரியாக இனங்காண முடிந்தபோது விமானப்படையின் அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்ட விமானங்களுக்கு புலிகளின் விமானங்கள் முகில்களால் மறைக்கப் பட்டது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

முல்லைத்தீவில் இருந்து புறப்பட்ட புலிகளின் விமானங்கள் திருகோணமலைக்குச் சென்று திரும்பும் வரை கட்டுநாயக்கவில் இருந்தோ, அனுராதபுரத்தில் இருந்தோ எந்தவொரு ஜெட் போர்விமானமும் வன்னி வான்பரப்பைச் சென்றடையவில்லை.

இங்கே வான்படையின் உசார்நிலை மீது கேள்வி எழுப்புவதா அல்லது பலவீனம் குறித்து சந்தேகம் கிளப்புவதா என்பது தெரியவில்லை.

இரணைமடுவில் இருந்து புலிகளின் விமானம் மேற்கிளம்பிய மறுகணமே சுட்டு வீழ்த்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மார்ஷல் றொஷான் குணதிலக முன்னர் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பின்னர் புலிகள் மணலாறிலும் திருகோணமலையிலும் குண்டுகளை வீசிவிட்டுப் பத்திரமாகத் திரும்பியிருக்கின்றனர். இதனையடுத்து விமானப் படையின் வான்பாதுகாப்புத் திறன் குறித்த சந்தேகங்கள் இப்போது தென்னிலங்கையில் ஏற்பட்டு விட்டது.

கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என்றும் இனிமேல் வான்புலிகளால் தாக்குதலை நடத்தவே முடியாது என்றும் கற்பனை செய்துகொண்டிருந்த படைத் தரப்புக்கு வான்படையை இயக்கி தாக்குதல் நடத்தும் அளவுக்குப் புலிகள் பலத்துடன் இருப்பது தெரியப்படுத்தப் பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த வான் தாக்குதல் குறித்து ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, “இது புலிகளின் ஒரு உளவியல் போர் உத்தி” எனத் தெரிவித்திருந்தார்.

அவர் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இந்த வான்தாக்குதல் பற்றிக் கேட்கப் பட்டதற்கு, “அவர்கள் 6 தடவைகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள், நாங்கள் 6000 தடவைகள் நடத்தியிருக்கிறோம்” என விரக்தியுடன் பதிலளித்திருக்கிறார்.

விமானப் படையினர் ஆறாயிரம் தடவைகள் நடத்திய வான் தாக்குதல்கள் ஏற்படுத்தாத பரபரப்பை, பீதியை புலிகளின் இந்த 6 வான் தாக்குதல்களும் ஏற்படுத்தி இருக்கின்றன. சேதங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

புலிகளின் ஆறு விமானத் தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட படையினரின் மொத்த எண்ணிக்கை 20 இற்கும் அதிகமாகும். காயமுற்ற படையினரின் தொகை 50 இற்கும் அதிகம். ஆனால் விமானப்படையின் 6000 விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் விகிதத்தோடு ஒப்பிட்டால் எது துல்லியமான தாக்குதல் என்பது கோத்தபாய ராஜபக்ஸவுக்கே தெளிவாகப் புரியும்.

கடற்படைத் தளத்தின் மீது கடும் இருள் சூழ்ந்திருந்த, மேகங்கள் நிறைந்திருந்த, மழைபெய்து கொண்டிருந்த போது புலிகளால துல்லியமாக் குண்டுகளை வீச முடிந்திருக்கிறது என்பது படைத்தரப்புக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கின்றதொரு விடயமே.

கடற்படைத் தளத்தைப் புலிகள் இலக்கு வைத்தனரா அல்லது ஜெட்லைனர் துருப்புக்காவியை இலக்கு வைத்தனரா என்பது புலிகளால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப் படவில்லை.
சுமார் 3000 படையினரை ஏற்றிக் கொண்டு ‘ஜெட் லைனர்’ துருப்புக்காவி யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படத் தயாராக நின்றபோது வான் தாக்குதல் நடந்ததால் இதைக் குறிவைத்தே புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று ஊகங்கள் வெளியிடப் பட்டிருக்கின்றன.

ஒரே நேரத்தில் பெருந்தொகையான படையினரைக் கொல்லும் திட்டத்தைப் புலிகள் விரும்பமாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதற்காக அவர்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்தே ‘ஜெட்லைனர்’ மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றில்லை. கடலில் பயணத்தை மேற்கொள்ளும் போது கூட தாக்குதல் நடத்த முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேவேளை புலிகள் ஜெட்லைனர் துருப்புக்காவியைக் குறிவைத்திருப்பின் அதன் பயணத் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் புலிகளுக்கு எப்படிக் கிடைத்தன என்பது படைத்தரப்பை குழப்பத்தில் ஆழ்த்தியி ருக்கிறது.

புலிகள் இரவு 9.05 மணியளவில் வான் தாக்குதலை நடத்தி விட்டுத் திரும்பிய பின்னர், நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் துறைமுகத்தில் கேட்ட பாரிய வெடிச்சத்தத்தை அடுத்து, மீண்டும் வானத்தை நோக்கி படையினர் விமான எதிர்ப்புப் பீரங்கிகளை ஏவித் தாக்கினர்.

ஆனால் துறைமுகத்தில் தரித்திருந்த ‘ஜெட்லைனர்’ துருப்புக்காவியை கடலடித் தாக்குதலில் இருந்து பாதுகாக்;கும் நோக்கில் கடலில் வெடிக்க வைக்கப்படும் சார்ஜர் குண்டு வெடிப்பினால்தான் அந்தச் சத்தம் கேட்டதென்பது படையினருக்குத் தெரியவில்லை.

டிங்கிப் படகு ஒன்றில் இருந்து உட்துறைமுகக் கடலில் சார்ஜர்களை வீசிக் கொண்டிருந்தபோது அவற்றில் ஒன்று தவறுதலாக வெடித்து இரு கடற்படையினர் கொல்லப் பட்டனர். இதைப் புலிகள் தான் விமானத்தில் வந்து மீண்டும் தாக்குகிறார்கள் எனக்கருதி படையினர் வானத்தை நோக்கிச் சுட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர்.

அந்தளவுக்குப் படையினர் முதல்நாள் இரவு நடாத்தப்பட்ட வான் தாக்குதலால் குழம்பிப் போயிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளின் வான் தாக்குதல்கள் இதுவரையில் படையினருக்கு ஏற்படுத்திய இழப்புகள் என்று பார்க்கும் போது குறைவாக இருந்தாலும் அவற்றின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருந்துள்ளது.

குறிப்பாக வன்னியில் புலிகளின் தலைமையகத்தை நெருங்கி விட்டோம் என்றும், இன்னும் சில மாதங்களில் புலிகளை முற்றாக அழித்து விடுவோம் என்றும் தென்னிலங்கையில் அரசு பிரசாரம் செய்து வரும் நிலையில் புலிகள் நடத்திய ஆறாவது விமானத் தாக்குதல் அரசின் பிரசாரங்களுக்கு ஆப்பு வைத்து விட்டது.

இப்போது இந்தத் தாக்குதல் தொடர்பாக விமர்சிக்க முற்படும் ஊடகங்கள் பலவும், இவ்வாறு குறுகிய நேரத்தில் குறிப்பிட்ட இலக்கு மீது தாக்குதல் நடத்தி விட்டு மீள்வதற்கு சிறப்புப் பயிற்சி பெற்ற விமானிகளால்தான் முடியும். புலிகளால் அது சாத்தியமில்லை. வெளிநாட்டு விமானிகளைக் கொண்;டு வந்தே புலிகள் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றன.

நன்கு பயிற்சிபெற்ற- வெளிநாட்டு விமானிகளாலேயே நடத்தப் பட்டிருக்கக் கூடிய தாக்குதல் என்று கூறும் அளவுக்குப் புலிகளின் தாக்குதல் அமைந்திருக்கிறது. அத்துடன் வான்புலிகள் இனிவரும் காலத்தில் தாக்குதல் நடத்த முடியாதென்று, விமானப்படை இனியொரு தடவை உரிமை கோர முடியாதபடி இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

விமானப்படை ஆறாயிரம் தடவைகள் வான் தாக்குதல்களை நடத்தியதால் பெற்றுக்கொண்ட பெருமைகளை புலிகளின் இந்த ஆறு வான் தாக்குதல்களுமே புரட்டிப் போட்டு விட்டிருக்கின்றன.

அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களையும், ஆயுதங்களையும் கொண்டிருக்கின்ற போதும் புலிகளின் சிறிய ரக விமானங்களைக் கூட சுட்டு வீழ்த்த முடியாத விமானப்படை என்ற வரலாற்றுப் பழியை இலங்கை விமானப்படை சுமந்து நிற்கிறது.

- அங்கதன்-



Comments