கருத்துருவ ஆக்கிரமிப்பு

அடக்குமுறை ஆட்சியாளர்களின் ஆதிக்கச் செல்வாக்கை நிலைநிறுத்தும் கருவிகளாக வெறும் நாசகார ஆயுதங்களும், படைப்பலங்களும் மட்டும் பிரயோகிக்கப்படுவதில்லை. அதற்கு அப்பாலும் ஒரு வலிமையான கருவி இருக்கிறது.

அந்தக் கருவி ஜடப்பொருள் அல்ல. அந்த உபகரணம் உடலால் தொட்டுணரக் கூடியதல்ல. ஆனால் அது பெருநாசம் ஏற்படுத்த வல்லது. அது சிந்தனையால் அறியப்படுவது.
ஆயுதங்களும், படைப்பல வலிமையும் பௌதீக ரீதியான தீங்கை இழைக்கின்றன என்றால் இந்தக் கருவி எண்ணரீதியான அழிவை நிலைநிறுத்துகிறது.
அதுதான் கருத்துருவ ஆதிக்கம்.

தமிழர் தேசத்தின் மீது ஒருபுறம் பெரும் போரைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொழும்பு அரசு, வழமை போல ஏனைய அடக்குமுறை ஆட்சியாளர்களைப் போன்று கருத்தாதிக்கத்தையும் ஓர் அடக்குமுறைத் தந்திரோபாயக் கருவியாகக் கனகச்சிதமாகப் பயன்படுத்துவதைக் காண்கிறோம்.

சமூகச் சிந்தனை உலகை, ஒரு பொய்மையான மாயத் தோற்றத்துக்குள் சிக்கவைத்து, அதுவே உண்மை என்பதுபோல ஒரு கருத்துருவாக்கத்தை சமூகத்தின் மத்தியில் நம்பச்செய்து, அந்த சமூகத்தை ஆக்கிரமித்து நிற்பது ஒரு அதீத யுக்தி.

குள்ளநரித்தனக்கலை. மெய்மையைத் திரிபுபடுத்தி, பொய்மையை மெய்மையாகக் காட்டும் இந்த எத்தனம் ஒருவகையில் எத்தன் வேலைதான். இந்தச் சூட்சுமமான கண்கட்டு வித்தை தம்மீது கட்டவிழ்ந்து, அதில் தாங்கள் ஆகர்ஷிக்கப்பட்டு, சுயசிந்தனை இழந்து கட்டுண்டு போவதை மக்கள் இலகுவில் புரிந்து கொள்ளப் போவதில்லை.

இந்தப் போலியான கருத்துருவாக்க பேய்க்காட்டலின் பின்னால் புதைந்து கிடக்கும் உண்மைகள் யதார்த்தங்கள் மக்களுக்குப் புரிவதில்லை.

அத்தகைய பொய்மை வலையில் தன்னையறியாமல் இன்று கட்டுண்டு கிடக்கிறது தென்னிலங்கை.

சிந்தனைச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கொள்கைகளை எடுத்தியம்பிப் பரப்பும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவை சாம, பேத, தான, தண்டம் என்ற நால்வகைத் தந்திரோபாயங்களினாலும் சாமர்த்தியமாக மூடிக்கட்டப்பட்டு ஒரு திசை நோக்கியனவாகத் திருப்பி விடப்பட்டிருப்பதைத் தென்னிலங்கைச் சமூகம் இன்றும் இன்னும் புரிந்து கொள்ளவேயில்லை. இந்தச் சதிப்போக்கு அரங்கேறுவது சர்வதேச சமூகத்தாலும் கூட இன்னும் சரிவர உணரப்படவில்லை.

உண்மைகளைக் கண்டறிந்து, நிஜங்களை உள்வாங்கி, யதார்த்தங்களைப் புரிந்து, அவற்றின் அடிப்படையில் சரியான எண்ணக் கருத்துக்களை உருவாக்கி, அந்தக் கருத்துக்களை வெகுசன அரங்கில் பரப்பி, சமூகக் கருத்தோட்டத்தைக் கட்டி வளர்த்து, சமூக சிந்தனைப் போக்கை நெறிப்படுத்தி, இன சமரசத்தை நிலைநிறுத்தவேண்டிய கருத்து உற்பத்தி நிறுவனங்கள் வேறு வார்த்தைகளில் கூறுவதானால் வெகுஜன ஊடகங்கள் குறிப்பாக இன்று தென்னிலங்கையில், அதிகார ஆதிக்கம் பெற்ற அரசியல் செல்வாக்கிற்கு விரும்பியோ, விரும்பாமலோ, பயந்தோ அல்லது வேறு பேரினவாத எண்ணம் காரணமாகவோ அடிமைப்பட்டுப் போயிருக்கின்றன.

தென்னிலங்கையின் மனவமைப்பை மூளையத்தை இந்தத் தவறான கருத்தாதிக்கச் சிந்தனை செழும்பாகப் பற்றிப் பீடித்து மூடிவிட்டிருப்பதால் அது சுயசிந்தனை இழந்து நிற்கிறது. அதனால்தான் ஈழத் தமிழர்களின் வாழ்நிலைப் பிரச்சினையையும், அதில் ஆழமாகப் புதைந்து கிடக்கும் நீதி, நியாயங்களையும், கள யதார்த்தங்கள் பற்றிய உண்மைகளையும் அதனால் புரிந்துகொள்ளவே இயலாமல் உள்ளது.

தென்னிலங்கையைப் பற்றிப் பீடித்திருக்கும் இந்தத் தவறான கருத்தாதிக்கச் சிந்தனையை அம்பலப்படுத்தி, அதன் முகமூடிகளைக் கிழித்தெறிந்து, உண்மையை அதற்குப் புரியவைக்க வேண்டுமானால், கள யதார்த்தம் தெற்குக்கு உறைப்பாக உணர்த்தப்பட வேண்டும்.

தெற்கின் அதிகார வர்க்கத்தின் அரூபக் கரங்களால் திரையாகப் போடப்பட்டிருக்கும் இந்தத் தவறான கருத்தாதிக்கச் சிந்தனையை மானசீக நம்பிக்கையை தகர்க்கும் விதத்திலான செயற்பாடுகள் மூலம் மட்டுமே இந்த மூடிமறைப்புத் தந்திரோபாயத்தைத் தவிடுபொடியாக்க முடியும்.

அதிகார வர்க்கத்தின் வலுவான கோயாபலஸ் பிரசாரத்தை முறியடிப்பதன் வாயிலாகவே சரிந்து செல்லும் தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனையையும் தூக்கி நிறுத்தமுடியும்.

உண்மை சுடும் என்பார்கள். அவ்வாறு சுடும் வகையில் உண்மைகளை உறைப்பாக உணர்த்தும் நிகழ்வுகள் நடந்தேறும்போதுதான் எத்தகைய தவறான போலியான மனவமைப்பில் தாங்கள் இதுவரையிலும் சிக்குண்டு கிடந்தார்கள் என்ற தெளிவு தென்னிலங்கைக்கு ஏற்படும்.

அத்தகைய தெளிவை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப் பங்களுக்காகத் தமிழ்த் தேசியவாதிகள் காத்திருக்கிறார்கள்.


Comments