புலிகளின் வலிந்த தாக்குதல் எப்பொழுது?

வன்னிக் களம் தொடர்ந்தும் அதிர்ந்து கொண்டிருக்கின்றது. பூநகரியை இலக்காகக் கொண்டு படையினர் புறப்பட்டிருப்பதாக ஆரம்பத்தில் நம்பப்பட்டாலும், தற்பொழுது கிளிநொச்சியை நோக்கி படையினர் தமது கவனத்தை திருப்பியுள்ளனர்.

கிளிநொச்சியை இந்த ஆண்டுக்குள் கைப்பற்றி விடுவோம் என்று சிங்களத் தரப்பு உற்சாகமாக பிரகடனம் செய்து வருகின்றது. மகிந்த ராஜபக்ஸவும் தாம் கிளிநொச்சியில் இருந்து நான்கரை கிலோமீற்றர்கள் தொலைவிலேயே நிற்பதாக கூறுகிறார்.

ஏ32 வீதியில் அமைந்துள்ள நாச்சிக்குடாவில் சில வாரங்களுக்கு முன்பு சிறிலங்காப் படையினர் சந்தித்த பேரிழப்பினை அடுத்து அப் பகுதியில் முன்னேற்ற நடவடிக்கைகளை படையினர் சற்று நிறுத்தி வைத்துள்ளனர். நாச்சிக்குடாவிலிருந்து ஏறக்குறைய 25 கிலோமீற்றர்கள் தொலைவில் பூநகரி அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதலினால் ஏ32 வீதியுடான பூநகரி நோக்கிய நகர்வு தற்பொழுது சாத்தியம் குறைந்த ஒன்றாக மாறியுள்ளது.

மறுபுறம் அக்கராயன்குளத்திற்கு அருகில் நிலைகொண்டிருக்கும் படையினர் கிளிநொச்சி நோக்கி நகர முற்படுகின்றனர். இங்கிருந்து ஏறக்குறைய 12 கிலோமீற்றர்கள் தொலைவில்தான் கிளிநொச்சி அமைந்துள்ளது. பூநகரியைக் கைப்பற்றுவதை விட கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே படையினருக்கு மிகப் பெரும் வெற்றியாக அமையும்.

கிளிநொச்சி நகரைக் கைப்பற்றினால் அதன் பிறகு பரந்தனும், பின்பு ஆனையிறவும் சிறிலங்காப் படைகளின் கைகளில் வீழ்ந்து விடும். அப்படி ஒரு நிலை நேருமாகில் பூநகரியில் நிலைகொண்டுள்ள விடுதலைப் புலிகளின் அணிகள் சுற்றி வளைக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் அங்கிருந்து புலிகளின் அணிகள் தாமாகவே பின்வாங்கி விடுவார்கள்.

சண்டைகள் இன்றியே பூநகரி, ஆனையிறவு, பளை என்று அனைத்தும் படையினர் வசமாகி விடும். சிறிலங்கா அரசின் பல ஆண்டுக் கனவான யாழ் குடாவிற்கான தரைப் பாதை திறக்கப்பட்டு விடும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி முல்லைத் தீவுக்குள் சுருங்கிப் போய் விடும்.

சிறிலங்காப் படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதில் இத்தனை ஆபத்துக்கள் இருக்கின்றன. இவற்றை விட மிகப் பாரியதொரு மனிதப் பேரவலம் ஏற்படும். ஏற்கனவே இடம் பெயர்ந்துள்ளவர்களோடு மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களும் இடம் பெயர நேரிடும். தற்பொழுது பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளிலும் காடுகளிலும் மரங்களின் கீழும் வசித்து வருகின்றார்கள். இவர்கள் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்பப்படுகின்றார்கள்.

சிறிலங்கா அரசு திட்டமிட்டே விவசாய நிலங்களை நோக்கி தனது படை நடவடிக்கைகளை நடத்தி வருகின்றது. வவுனிக் குளம், அக்கராயன் குளம் என்று குளங்களை நோக்கி நகர்வதில் சிறிலங்காப் படையினர் இதுவரை குறியாக இருந்து வருகின்றார்கள். தமிழர்களின் விவசாயத்தை பாழ்படுத்துவதன் மூலம் தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை பட்டினிப் போட்டுக் கொல்ல விரும்புகின்றது.

வளம் குறைந்த யாழ் மண் கூட ஒரு காலத்தில் பல ஆண்டுகாலப் பொருளாதாரத் தடையை தாக்குப் பிடித்து நின்றது. வளம் பொருந்திய வன்னி மண்ணால் சிறிலங்காப் படைகளின் பொருளாதாரத் தடைகளை இலகுவாக தாக்குப் பிடிக்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு வன்னி மண்ணின் வளங்களை அழித்து ஒழிப்பதில் சிறிலங்காப் படைகள் மும்மரமாக செயற்பட்டு வருகின்றன.

இப்படியான நடவடிக்கைகளின் மூலம் வன்னி மக்களை பேரவலத்தில் சிக்கச் செய்வதற்கு சிறிலங்க அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது. சிறிலங்காப் படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றினால், தற்போது உள்ளதை விட மிகப் பெரும் நெருக்கடியை தமிழ் மக்கள் எதிர்கொள்ள நேரிடும்.

மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து அவலத்தில் தள்ளுவதன் மூலம் அந்த மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து அந்நியப் படுத்த முடியும் என்று சிறிலங்கா அரசு நம்புகின்றது. புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் சில முகாம்களை அமைத்து வைத்துக் கொண்டு அங்கே வன்னி மக்களை வரும்படி சிறிலங்கா அரசு அழைக்கின்றது. அனைத்து வழிகளிலும் மக்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கின்ற போது, மக்கள் விடுதலைப் புலிகளை மீறி இந்த முகாம்களை நோக்கி வருவார்கள் என்று சிறிலங்கா அரசு நம்புகின்றது.

கிளிநொச்சியையும் கைப்பற்றி, மக்களையும் தமது கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி இழுப்பதன் மூலம் மிகப் பெரும் இராணுவ அரசியல் வெற்றியை ஈட்டுவதோடு, தமிழீழப் போராட்டத்திற்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் என்று மகிந்தவின் அரசு கணக்குப் போடுகின்றது. இதை விடுதலைப் புலிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதுதான் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு மிகுந்த கேள்வியாக இருக்கின்றது.

சிறிலங்காப் படையினர் அக்கராயன் குளத்தில் இருந்து ஏ9 வீதியில் உள்ள கொக்காவில் நோக்கியும், வன்னி விளாங்குளத்தில் இருந்து மாங்குளம் நோக்கியும் நகர்வதற்கு கடும் முயற்சி எடுத்து வருகின்றார்கள். பாலமோட்டையில் இருந்து படையினர் ஏ9 பாதையை நெருங்கி விடாத வண்ணம் ஒன்றரை ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மறிப்புச் சமர் புரிவது போன்று, ஏ9 வீதியில் அமைந்துள்ள மாங்குளம், கொக்காவில் போன்ற இடங்களையும் படையினர் கைப்பற்றுவதற்கு இலகுவில் அனுமதிக்கப் போவது இல்லை என்பது ஊகிக்க கூடிய ஒரு விடயம்.

ஆனால் நீண்ட காலத்திற்கு தற்காப்புச் சமரை மட்டும் செய்து கொண்டு இருக்க முடியுமா என்ற கேள்வி சில ஆய்வாளர்களுடைய மனங்களில் இருக்கின்றது. வலிந்த தாக்குதலை நடத்தாது விட்டால், சில மாதங்கள் கழித்து என்றாலும் படையினர் கிளிநொச்சியை கைப்பற்றி விடுவார்கள் என்று இவர்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள்.

இதே வேளை விடுதலைப் புலிகள் ஒரு பாரிய வலிந்த தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கொழும்பில் உள்ள பாதூப்பு நிலவரங்களை வெளியிடும் சில ஊடகங்கள் கூறுகின்றன. கொழும்பின் படைத் துறை ஆய்வாளர்களும் அவ்வாறான கணிப்புகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் யாழ் குடாவில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சிறிலங்காப் படையினர் கூறுகின்றனர்.

விடுதலைப் புலிகள் ஒரு பாரிய தாக்குதலை யாழ் குடா நோக்கி ஆரம்பிக்க இருப்பதாகவும், அதை எதிர்கொள்ளும் வகையில் மூன்று நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், அத்தியாவசியமான பொருட்களை மக்கள் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் படையினர் கூறியுள்ளதாக தெரிய வருகின்றது. கனரக ஆயுதங்களையும் பெருமளவிலான படையினரையும் முகமாலை நோக்கி நகர்த்துவதற்காகவே சிறிலங்காப் படையினர் இந்த ஊரடங்கு உத்தரவை அறிவிக்க உள்ளதாக சிலர் கருத்துத் தெரிவிக்கன்றனர்.

ஆயினும் பலர் கூறுவது போன்று விடுதலைப் புலிகள் ஒரு பாரிய தாக்குதலை ஆரம்பிக்கப் போகின்றார்களா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிய வரக் கூடும்.

ஜெயசிக்குறுவை எதிர்கொண்டதை விட, விடுதலைப் புலிகள் படையினரின் தற்போதைய நடவடிக்கைகளை வேறு விதமாக எதிர்கொண்டு வருகின்றார்கள். ஜெயசிக்குறுவின் போது நடத்திய “செய் அல்லது செத்துமடி” போன்ற ஊடறப்புத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தற்போதைய நடவடிக்கையில் செய்யவில்லை. கடந்த ஆண்டில் விளாத்திக்குளம் பகுதியில் அப்படியான ஒரு தாக்குதலை நடத்தியிருந்தார்கள். இதைத் தவிர சொல்லிக் கொள்ளக் கூடடிய ஊடறப்புச் சமர்களை விடுதலைப் புலிகள் செய்யவில்லை.

ஊடறப்புச் சமர்கள் விடுதலைப் புலிகள் தரப்பிலும் குறிப்பிட்டளவு இழப்புக்களை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ச்சியான ஊடறப்புச் சமர்களின் மூலம் ஜெயசிக்குறுச் சமரையும் எதிர்கொண்ட அதே நேரத்தில் ஓயாத அலைகள் இரண்டின் மூலம் கிளிநொச்சி நகரை முன்பு விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருந்தார்கள். விடுதலைப் புலிகளின் சிறப்புத் தாக்குதற் படையணிகள் கிளிநொச்சி நோக்கி நகர்த்தப்பட்டதால், மாங்குளம் சிறிலங்காப் படைகளிடம் அப்பொழுது விழ நேரிட்டது.

மாங்குளத்தைக் கைப்பற்றிய பொழுது, சண்டை அனுபவம் குறைந்த சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிறிலங்காப் படையினரால் உயிரோடு கைதும் செய்யப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றி பெரும் வெற்றி ஈட்டியதால், மாங்குளத்தின் வீழ்ச்சியானது அன்றைய நிலையில் சிறிலங்காப் படையினருக்கு ஒரு வெற்றியாக அமையவில்லை.

ஆயினும் இச் சம்பவம் சில விடயங்களை விடுதலைப் புலிகளுக்கு உணர்த்தியிருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு வலிந்த தாக்குதலுக்கான படையணிகளை ஊடறப்புச் சமர்களில் ஈடுபத்தாது விடுதலைப் புலிகள் பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள் என்று கொள்ளலாம். இன்றைக்கு விடுதலைப் புலிகள் வலிமையான தற்காப்புச் சமரைச் செய்யக் கூடிய படையணிகளையும், வலிந்த தாக்குதல் செய்யக் கூடிய படையணிகளையும் கொண்டிருக்கின்றார்கள்.

தற்காப்புச் சமருக்கான படையணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வன்னிக் களமுனையில் சிறிலங்காப் படையினரின் நகர்வுகளை தாமதப்படுத்துவதிலும், தடுத்து நிறுத்துவதில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரவுக்கு காத்திருக்கும் வலிந்த தாக்குதல் படையணிகள் களம் இறங்குகின்ற போது, சிறிலங்காப் படைகளின் கிளிநொச்சிக் கனவு முற்று முழுதாக சிதைக்கப்படும். படையினர் கிளிநொச்சியை நெருங்கி வருவதால், விடுதலைப் புலிகளின் பாரிய வலிந்த தாக்குதலுக்கான காலமும் தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருகின்றது.

- வி.சபேசன் (25.09.08)

Comments