தடை தாண்டுவார்களா படையினர்?

வன்னிக்களமுனை அதிர்ந்து கொண்டிருக்கிறது. படையினரின் பாரிய முன்னகர்வு முயற்சிகளுக்கெதிராக விடுதலைப் புலிகளும் கடும் பதில் தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு என்றுமில்லாதளவுக்கு உக்கிரச் சமர் நடைபெற்று வருகிறது.

எந்த முனையில் திரும்பினாலும் எதிர்த் தாக்குதல் மிகக் கடுமையாயிருப்பதால் முன்நகர்வுக்கான முனைகளை மாற்ற வேண்டிய நிலையில் படையினர் உள்ளனர்.

இது, அடுத்து வரும் நாட்களில் எந்த முனைகளிலும் படையினர் மிகப்பெரும் எதிர்ப்புக்களைச் சந்திக்கப் போவதைக் காட்டுகிறது. வவுனியா - மன்னார் வீதியிலிருந்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் முன் பாரிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டியிருந்த போதும் பின்னர் அந்தக் கடும் எதிர்ப்பைத் தளர்த்தியிருந்தனர். இந்தத் தளர்வைச் சாதகமாகப் பயன்படுத்திய படையினர் இன்று எண்பது கிலோ மீற்றரைத் தாண்டி கிளிநொச்சியின் வாசலுக்கு வந்து விட்டனர்.

ஆனாலும் கிளிநொச்சியை சென்றடைய அடுத்த எட்டுக் கிலோ மீற்றர் தூரத்தை தாண்டுவதில் படையினர் மிகப்பெரும் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

கிளிநொச்சி மீதான முதலாவது தாக்குதலை அடுத்த வாரமளவில் தொடங்கப் போவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ள போதிலும் அவர்கள் கிளிநொச்சிக்கான தாக்குதலை எப்போதோ தொடங்கிவிட்டனர்.

ஆனாலும் கிளிநொச்சியை நெருங்க முடியாது நீண்ட நாட்களாகவே கடும் எதிர்ப்புக்களைச் சந்தித்து வருவதால் இனித்தான் கிளிநொச்சி மீதான தாக்குதலைத் தொடுக்கப்போவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த அவர் முயல்கின்றார் என்பது வெளிப்படை.

இது படையினரின் இயலாமையை காண்பிக்கின்றதோ என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளது. மன்னார் - பூநகரி வீதியில் (ஏ 32) பூநகரியைக் கைப்பற்றும் அதேநேரம் அந்த வீதிக்குச் சமாந்தரமாகச் சென்ற படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவர் என்பது அரசினதும் படைத் தரப்பினதும் எதிர்பார்ப்பாகும்.

ஆனாலும் ஏ-32 வீதியில் நாச்சிக்குடாவைத் தாண்டிச் செல்ல முடியாது நிற்கும் படையினர் கிளிநொச்சிக்குள்ளும் செல்ல முடியாது நிற்கின்றனர். இதனால், பூநகரி நோக்கிய நகர்வை விட இன்று கிளிநொச்சி நோக்கிய நகர்வுக்கே மிகப்பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

எனவே, கிளிநொச்சிக்கான நகர்வுக்காக படையினர் களமுனைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இந்தப் படை நடவடிக்கைகளுக்காக படையினரின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் படையினருக்குத் தேவையான போர்த்தளபாடங்கள் வன்னிக் களமுனையில் குவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான், இந்தியா, சீனா என அனைத்து நாடுகளும் போட்டி போட்டு வழங்கும் மிக நவீன போர்த் தளபாடங்களைப் பயன்படுத்தியும் வன்னிக் களமுனையில் இலக்கை அடைய முடியாதிருப்பது அரசுக்கும் படையினருக்கும் களமுனையில் பின்னடைவுகள் ஏற்பட்டு வருவதையே காட்டுகிறது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் இலங்கை விவகாரத்தில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கூறும் இந்தியா, தனது துருப்புக்களில் நூற்றுக்கணக்கானோரை இலங்கை மண்ணில் ஈழத்தமிழருக்கெதிரான போரில் களமிறக்கியுள்ளது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதற்கேற்ப இந்தியாவுடன் போட்டி போட்டு, பத்து நாளைக்கு ஒரு தடவை பாகிஸ்தானிலிருந்து ஆயுதக் கப்பல்கள் இலங்கை வருகிறது.

இவையெல்லாவற்றையும் மீறி சீன அரசு அனைத்து வகைப் போர்த்தளபாடங்களையும் இலங்கைக்கு அனுப்பி வருவதால், புலிகள் வன்னியில் போரிடுவது இலங்கைப் படையுடனா அல்லது ஆசியாவின் வல்லரசுக்காகப் போட்டியிடும் அனைத்து நாடுகளுடனுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்தளவிற்கு இலங்கை அரசிற்கும் படையினருக்கும் உதவிகளுள்ள போதிலும் அவர்களால் இலக்கை அடைய முடியாதுள்ளது. ?ஏ 32? வீதி என்றாலும் சரி ஏ- 9 வீதிக்கு இடையில் என்றாலும் சரி எந்தப் பாதையில் படையினர் முன்னேறினாலும் தற்போது புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்துகின்றனர்.

இதனால் களமுனையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இது அவர்களைப் பெரிதும் அலைக்கழித்து வருவதுடன், எப்போதும் எந்த வேளையிலும் படையினர் மீது புலிகள் பாரிய தாக்குதல் சமரை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை தொடுக்கலாமென்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நாச்சிக்குடா விலிருந்து கிழக்கே வன்னேரி ஊடாக அக்கராயன்குளம் வரை பாரிய மண் அணையை எழுப்பி பெரும் தடுப்புச் சுவரை அமைத்து படையினரின் முன்நகர்வைத் தடுத்த புலிகள், அந்த முனையில் மேலும் சில தடவைகள் முன்நகர முயன்ற படையினருக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தினர்.

இதையடுத்து நாச்சிக்குடாவுக்கும் அக்கராயன் குளத்திற்கும் இடைப்பட்ட 20 கிலோ மீற்றர் தூரத்தினூடாக மேலும் வடக்கே முன்னகரும் முயற்சியைக் கைவிட்ட படையினர், அக்கராயன் குளத்திற்கும் அதற்குக் கிழக்கே ஏ- 9 வீதியிலுள்ள திருமுறிகண்டிக்கும் இடைப்பட்ட சுமார் பத்து கிலோமீற்றர் பகுதியூடாக பாரிய முன்னகர்வு முயற்சியை மேற்கொண்டனர்.

கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான இந்தச் சமர் அப்பகுதியில் பரவி உக்கிரமாக நடைபெற்றது. மன்னார் - பூநகரி வீதியில் நாச்சிக்குடாவுக்கும் அக்கராயன்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தோல்வியைப் போன்றே, அக்கராயன்குளத்திற்கும் திருமுறிகண்டிக்குமிடையில் மேலும் வடக்கே முன்னகர மேற்கொண்ட முயற்சியும், தோல்வியடைந்தது.

இவ்விரு பகுதிகளையும் ஊடறுத்துச் சென்றால் மட்டுமே பூநகரி நோக்கியும் கிளிநொச்சி நோக்கியும் தொடர்ந்தும் முன்நகர முடியுமென்ற நிலையில் இவை சாத்தியப்படாது போகவே படையினர் தங்கள் நகர்வுப் பாதைகளை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாச்சிக்குடா முதல் திருமுறிகண்டி வரையான எந்தப் பகுதியிலும் ஊடுருவ முடியாதென்பதால் தற்போது அக்கராயன்குளப் பகுதியிலும் அதற்குக் கிழக்கேயும் நிலைகொண்டுள்ள படையினர் ஏ- 9 வீதிக்குச் சென்று விட முனைகின்றனர். இந்த வீதிக்குச் செல்வதன் மூலம் கிளிநொச்சிக்கும் வவுனியாவுக்குமிடையிலான விநியோகப் பாதையை மூடி வன்னிக்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கு பெரும் தடைகளை ஏற்படுத்த படைத்தரப்பு முயல்கிறது. தற்போதைய நிலையில் ஏ- 9 வீதியில் திருமுறிகண்டிக்கும் கொக்காவிலுக்கும் இடைப்பட்ட பகுதிக்கு படையினர் சென்றாலும் அதனால் அவர்களுக்கு உடனடியாகப் பலனேதும் கிடைக்கப் போவதில்லை.

ஏ- 9 வீதியூடாக படையினரால் கிளிநொச்சி நோக்கி முன்நகர முடியாது. புலிகளும் அதற்கு அனுமதிக்கமாட்டார்கள். இதனால், ஏ- 9 வீதிக்கு கிழக்கே சென்று பின்னர் அங்கிருந்து கிளிநொச்சியை நோக்கி நகரலாமெனப் படையினர் கருதினாலும் அங்கும் படையினருக்கு பெரும் சிக்கல் நிலையே ஏற்படும். ஏனெனில், ஏ- 9 வீதிக்கு கிழக்கே முல்லைத்தீவுப் பக்கமாயிருக்கும் இரணைமடுக்குளம் படையினரின் பாரிய முன்நகர்வு முயற்சிக்கு தடையாகிவிடும்.

அக்கராயன்குளத்திற்கு கிழக்கே, அக்கராயன்குளத்தை மையமாக வைத்து ஏ- 9 வீதியிலுள்ள திருமுறிகண்டி வரை எப்படிப் பாதுகாப்பு அரண்களை மிக இறுக்கமாக அமைத்து பாரிய படை நகர்வைத் தடுத்தார்களோ அப்படியே, ஏ- 9 வீதிக்கு கிழக்கே திருமுறிகண்டி முதல் கிழக்கே சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இரணை மடுக்குளம் வரை வலுவான பாதுகாப்பு அரண்களை அமைத்து படையினரின் பாரிய முன்நகர்வு முயற்சியை தடுக்க புலிகள் முயல்வர்.

இது படையினருக்கு சாதகமற்ற களமுனையாகவே இருக்கப்போகிறது. ஏ- 9 வீதிக்கு மேற்கே அக்கராயன்குளத்தை மையமாக வைத்து ஏ- 9 வீதிவரை எப்படிப் பாதுகாப்பு அரண்களை அமைத்து படைநகர்வைத் தடுத்தார்களோ அவ்வாறே ஏ- 9 வீதிக்கு கிழக்கே இரணைமடுக்குளத்தை மையமாக வைத்து ஏ- 9 வீதி வரை பாதுகாப்பு அரண்களை அமைத்து படைநகர்வைத் தடுக்க புலிகள் திட்டமிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் கிளிநொச்சி நோக்கிய பாரிய படைநகர்வுகளைத் தடுக்கும் முக்கிய மையங்களாக அக்கராயன்குளமும் இரணைமடுக்குளமும் இருக்கப் போகின்றன.

யாழ்.குடா நாட்டில் கிளாலி - முகமாலை - நாகர்கோவில் அச்சிலிருந்து, ஒடுங்கிய அந்த நிலப்பிரதேசத்தூடாக எப்படிப் படையினரால் முன்நகர முடியாததொரு நிலையுள்ளதோ அதேபோன்றதொரு நிலை தற்போது கிளிநொச்சி மற்றும் பூநகரி நோக்கிய நகர்விலும் படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

அக்கராயன்குளத்தை மையமாக வைத்து ஏ-9 வீதிக்கு மேற்கே எப்படி வலுவான பாதுகாப்பு நிலைகளை அமைத்தார்களோ அப்படி ஏ- 9 வீதிக்கு கிழக்கே இரணைமடுக்குளத்தை மையமாக வைத்து வலுவான பாதுகாப்பு நிலைகளைப் புலிகள் அமைத்தால் இரணைமடுக்குளத்தை சுற்றிச் சென்று கிளிநொச்சி நோக்கிய நகர்வை மேற்கொள்ள வேண்டிய நிலைமை படையினருக்கு ஏற்படும்.

அது நீண்ட நாள் செல்லும். அக்கராயன்குளத்தை விட மிக கூடிய நீளத்தையும் மிகப்பெரிய அகலத்தையும் கொண்டது இரணைமடுக்குளம். மாரிகாலம் தொடங்கவுள்ள நிலையில் இவ்விரு மிகப்பெரிய குளங்களையும் மையமாக வைத்து அவற்றுக்கு அண்டிய பகுதிகளில் பாரிய படைநகர்வுகளை மேற்கொள்வது சாத்தியமில்லை.

மழைகாலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதி பாரிய படை நகர்வுக்கு சாத்தியமற்றதாயிருக்கையில் பாரிய குளங்களுக்கு சமீபமாயுள்ள பகுதிகள் படை நடவடிக்கைகளுக்கு வாய்ப்பற்றிருக்கும்.

இதனால் மாரிகாலம் தொடங்க முன்னர் படையினர் வன்னிக்குள் பாரிய படைநகர்வுகளை மேற்கொண்டு இலக்குகளைச் சென்றடைந்து விட வேண்டும். இல்லையேல் அது அவர்களுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தும் களமுனைகளாகிவிடும்.

இதனைப் படைத் தரப்பும் நன்குணரும். இதனால் தான் அடுத்த வாரம் கிளிநொச்சியை நோக்கி பாரிய தாக்குதலைத் தொடுக்கப் போவதாக இராணுவத் தளபதி கூறியிருக்கலாம்.

தற்போதைய நிலையில் வன்னிக்களமுனை குறித்த தகவல்களை புலிகள் ஆரவாரமாக வெளியிடுவதில்லை. படைத் தரப்பு தினமும் கூறுவது போல் புலிகள் எதுவும் கூறுவதில்லை.

இது ஏனென்று தெரியாதுள்ளது. ஆனாலும் கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அக்கராயன்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மிகக் கடும் சமர் நடைபெற்றுள்ளது.

இந்தச் சமரில் படைத்தரப்பு பாரிய இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது. இது குறித்து விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை அறிவிப்பார்களென எதிர்பார்க்கப்பட்ட போதும் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவலும் வெளியாகவில்லை.

அதேநேரம், படைத்தரப்பும் இந்தச் சமர்குறித்து உடனடியாக எதுவித தகவல்களையும் தெரிவிக்கவில்லை. புலிகள் ஏதாவது தெரிவித்தால் அதன் பின்னர் அது குறித்து எதையாவது கூறலாமென படைத்தரப்பு தாமதித்திருக்கலாம்.

எனினும் புலிகள் எதனையும் கூறாது போகவே கடந்த திங்கட்கிழமை படைத்தரப்பு ஒரு சில தகவல்களை வெளியிட்டது. வன்னேரி - அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற கடும் சமரில் புலிகளுக்கு பலத்த சேதமேற்பட்டதாகவும் 59 புலிகள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன் தங்கள் தரப்பில் எட்டுப் படையினர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் படைத் தரப்பு தெரிவித்தது. உடனடியாக வெளிவராது தாமதித்து வந்த இந்த அறிவிப்பு, அங்கு மோசமான விளைவுகள் ஏற்பட்டுள் ளதை சுட்டிக்காட்டுகிறது.

எனினும், தற்போது அங்கு மிகக் கடும் சமர் நடைபெற்று வருகின்ற போதும் புலிகள் இது குறித்து மௌனம் சாதித்தே வருகின்றனர். படையினர் பாரிய கனரக ஆயுதங்களை மிகத் தாராளமாகப் பயன்படுத்துகின்ற போதும் அவர்களால் புலிகளின் கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாதுள்ளது. புலிகளும் சில கனரக ஆயுதங்களை புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் இந்தக் கனரக ஆயுத பாவனைக்குப் பின்னர் படைத் தரப்பு தங்களது சில கனரக ஆயுதங்களை களமுனையிலிருந்து பின்நகர்த்தியுள்ளதகாவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கும் மேலாக உக்கிர சமர் நடைபெற்றுள்ளது. படையினர் தங்கள் முன் நகர்வுப் பாதைகளை மாற்றியமைத்துள்ளதால் புலிகளும் தங்கள் தாக்குதலை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வன்னிக்கள முனையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறுப் பகுதியில் படையினரின் முன்நகர்வு முயற்சிகள் பலத்த பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. குறிப்பிட்டளவு தூரம் மட்டுமே படையினரால் நகர முடிந்துள்ளது. மன்னார், வவுனியா,கிளிநொச்சி கள முனைகளில் படையினர் நகர்ந் தது போல் மணலாறு முனையில் படையினரால் நகர்வுகளை மேற்கொள்ள முடிய வில்லை.

அங்கு படைநகர்வை பெரும்பாலும் தடுத்து நிறுத்தியுள்ள புலிகள் மன்னார், வவுனியா களமுனையில் தொடர்ந்தும் நகர அனுமதித்து விட்டுத் தற்போது படையினருக்கு கடும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர்.

இதனால் கிளிநொச்சியை நோக்கிய நகர்வுக்காக படையினர் புதிய புதிய பாதைகளூடாக நகரவேண்டிய நிலை யேற்பட்டுள்ளது. தற்போது படையினர் திருமுறிகண்டிக்கும் மாங்குளத்திற்குமிடையில் ஏ-9 வீதியில் கொக்காவில் வரை நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகி றது.

அடுத்து அவர்கள் கொக்காவில் பகுதியில் ஏ-9 வீதியைக் கைப்பற்றினாலும் அங்கு அவர்களால் நிலைகொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. துணுக்காயையும் மல்லாவியையும் படையினர் கைப்பற்றியுள்ள போதிலும் அங்கிருந்து கிழக்கே நகர்ந்து சென்று அவர்களால் ஏ-9 வீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்ற முடியவில்லை. துணுக்காய்க்கும் மல்லாவிக்கும் இடையில் நிலைகொண்டுள்ள புலிகள் படையினர் மாங்குளம் சந்தி நோக்கி நகர்வதற்குத் தடையாக இருக்கிறார்கள்.

இதேபோன்றே துணுக்காய் மற்றும் மல்லாவிக்கு வடக்கே முன்னேறிச் சென்ற படையினர் தொட்டம் தொட்டமாகவே நிற்கின்றனர். இடையிடையே புலிகள் நிலைகொண்டிருப்பதால் படையினரின் முன்நகர்வு முயற்சிகளுக்கு பலத்த சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

கொக்காவில் பகுதியில் படையினர் முன்நகர்ந்து ?ஏ9? வீதியைக் கைப்பற்றினாலும் அந்த வீதியில் கொக்காவிலுக்கு வடக்கேயும் தெற்கேயும் புலிகளே நிற்பர் என்பதால் ஏ-9 வீதிக்கு வரும் படையினருக்கு எவ்வேளையிலும் பெரும் ஆபத்தேற்படலாமென்றதொரு சூழ்நிலையே ஏற்படும்.

ஆனால், வன்னிக் களமுனை குறித்து ஆரம்பம் முதல் படையினர் கூறிவருவது போல் பார்த்தால் தற்போது படையினர் யாழ்ப்பாணம் சென்றிருக்க வேண்டும். அங்குள்ள நிலைமைகள் குறித்து அரசும் படைத்தரப்பும் மிகைப்படுத்தப்பட்ட பிரசாரங்களையே மேற்கொள்கின்றன என்பதற்கு அண்மையில் கிளிநொச்சிக்கு மேற்கே வலைப்பாடு கடற்பரப்பில் இடம்பெற்ற நீண்ட நேர கடற் சமரே நல்ல உதாரணம். மன்னார் கரையோரத்தை முழுமையாகத் தாங்கள் கைப்பற்றிவிட்டதால் மன்னாருக்கும் பூநகரிக்கும் இடையிலான கடற்பரப்பில் கடற் புலிகளின் முகாம்கள் எதுவுமே இல்லை என்றும் கடற்புலிகள் தங்கள் சிறிய ரக படகுகள் அனைத்தையும் முல்லைத்தீவுக்கு மாற்றிவிட்டார்களென்றும் அரசும் படைத்தரப்பும் கூறிவந்தன.

அதே படையினரே, கடந்த 10ஆம் திகதி வலைப்பாடு கடற்பரப்பில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையில், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நான்கு மணிநேரம் உக்கிர சமர் நடைபெற்றதாகக் கூறியது. கடற்புலிகளின் 15 இற்கும் மேற்பட்ட படகுகள் இந்தச் சமரில் ஈடுபட்டதாகவும் பிற்பகல் 3 மணிக்குப் பின் பலத்த இழப்புகளுடன் சேதமடைந்த படகுகளையும் கட்டியிழுத்துக் கொண்டு கடற்புலிகள் கரை திரும்பியதாகக் கூறியிருந்தனர். கரையோரம் முழுவதும் படையினர் வசமென்றும் கடற்புலிகளின் முகாமோ படகுகளோ இல்லையென்றும் கூறிவந்தவர்கள், நான்கு மணிநேரக் கடற்சமர் நடைபெற்றதாகக் கூறியதன் மூலம் இதுவரை மேற்குக் கரையோர நிலைமைகள் தொடர்பாக தாங்கள் கூறிவந்ததெல்லாம் பொய் என்பதை ஒத்துக் கொண்டுள்ளனர்.

இல்லையேல் 15 இற்கும் மேற்பட்ட படகுகள் எப்படி நான்கு மணி நேரம் அந்தக் கடலில் சமரிட்டிருக்க முடியும்? சமர் முடிந்ததும் எப்படிக் கரைக்குத் திரும்பியிருக்க முடியும்? இதுவரை காலமும் மேற்குக் கரையோர நிலைமைகள் தொடர்பாக தாங்கள் கூறிவந்ததெல்லாம் பொய் என்பதை இந்தச் சமர் குறித்து அவர்கள் தெரிவித்த செய்திகள் மூலம் அவர்களே உறுதிப்படுத்தியுள்ளனர். இதுபோன்றே வன்னி மோதல்கள் குறித்து அரசும் படைத் தரப்பும் கூறும் செய்திகள் உள்ளன.

ஆனால், அங்கு களமுனையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. படையினர் தங்கள் நகர்வுப் பாதைகளை மாற்றுகிறார்களென்றால் அங்கு நிலைமை சாதகமாயில்லை என்பதே அர்த்தமாகும்.

இல்லையென்றால், கிளிநொச்சியிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் நிற்பதாகக் கூறும் படையினர் கிளிநொச்சி நோக்கிச் செல்லாது ஏன் நகர்வுப் பாதையை மாற்ற வேண்டும் அவர்கள் பலத்த எதிர்ப்புகளைச் சந்திப்பதுடன் அந்த நான்கு கிலோ மீற்றர் தூரத்தை இலகுவாகச் சென்றடைய புலிகள் அனுமதிக்க மாட்டார்களென்பதை படையினர் உணரத் தொடங்கிவிட்டனர் என்பதே அதற்குக் காரணமாகும். இதேநேரம், ஏ-9 பாதையைக் கைப்பற்றி கிளிநொச்சிக்கான விநியோகப் பாதையை மூடிவிட்டால் மக்களை வன்னியிலிருந்து வெளியேற்றி விட முடியுமென அரசு நம்புகிறது.

கொழும்பிலிருந்து வடபகுதி மக்களை வடக்கே விரட்ட முனையும் அரசு, வடக்கிலிருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றி தெற் கிற்கு அனுப்ப முற்படுகிறது. இந்த மக்களின் விடயத்தில் கூட ஒழுங்கான கொள்கையொன்றை வகுக்க முடியாது திணறும் அரசு வெறு மனே தனது அரசியல் நோக்கத்திற்காக இந்த யுத்தத்தை நடத்து கிறது.

இந்த யுத்தத்தின் வெற்றியே இந்த அரசின் வெற்றியாகும். வன்னி யுத்தத்தில் தோல்விச் செய்திகள் வருமானால் இந்த அரசும் ஆட்டம் கண்டு விடும். இதனால் தெற்கில் தங்களது ஆட்சியை இந்த அரசு தொடர வேண்டுமானால் வடக்கில் தொடர்ந்தும் வெற்றிச் செய்திகள் கிடைக்க வேண்டுமென்றதொரு நிலையேற்பட்டுள்ளது.

எனினும், வன்னிக் களமுனை எதிர்பார்த்தது போலில்லை. சில அயல் நாடுகள் அள்ளிக் கொட்டும் ஆயுதங்களை வாங்கிக் குவித்து வன்னிப் போரில் வென்றுவிட அரசு துடிக்கிறது. இது சிங்களவரின் தேசம், தமிழர்கள் சிறுபான்மையினர்.

பேசாமல் கிடைப்பதை பெற வேண்டுமே தவிர வேறெதனையும் உரிமை கோரமுடியாதென இராணுவத் தளபதியும் அரசியல் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. வன்னிப் போர் முனை வெற்றியே இவ் வாறு அவர்களையும் அரசியல் பேச வைக்கிறது.

ஆனால் களமுனையில் மாற்றமேற்படும் போது உண்மையான அரசியல் என்ன என்பதை இராணுவத் தளபதி மட்டுமல்ல ஆளும் தரப்பினரும் அறிவர். அதுவரை அவர்கள் பேசும் அரசியலை அனைத்துத் தமிழர்களும் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

விதுரன்

Comments

ers said…
வன்னிக் களமுனை குறித்து ஆரம்பம் முதல் படையினர் கூறிவருவது போல் பார்த்தால் தற்போது படையினர் யாழ்ப்பாணம் சென்றிருக்க வேண்டும். அங்குள்ள நிலைமைகள் குறித்து அரசும் படைத்தரப்பும் மிகைப்படுத்தப்பட்ட பிரசாரங்களையே மேற்கொள்கின்றன????

இலங்கை அரசு எப்போது உண்மை சொல்கிறது... எல்லாமே பொய் தான்... அவர்களின் கணக்குப்படியெல்லாம் பார்த்தால் இப்போ இலங்கையில் தமிழர்களே இருக்கமாட்டார்கள்...