வாகரையில் பரீட்சித்தது வன்னியில் பலிக்குமா?


வன்னிப்பெரு நிலப்பரப்பில் வாழும் மக்களைப் பணயமாக வைக்கும் சூழ்ச்சி நடக்கின்றது. சிங்களப் பேரினவாத அரசு தமிழீழ விடுதலையை 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்ற நிலமைக்குத் தள்ளி விடுவதற்கே கங்கணம் கட்டி நிற்கின்றது.

மக்களைப் பணயமாக வைத்து போராட்டத்தின் வேரைப் பிடுங்கி விடுவதற்கான உச்சவேலைகளை முடுக்கி விட்டுள்ளது. அப்படியான எண்ணத்துடன் தான் வன்னிப் பெருநிலப்பரப்பில் புலிகளின் ஆளுகைக்குள் மக்களுக்காகத் தொண்டாற்றி வந்த தொண்டு நிறுவனங்களை வெளியேறி விடுமாறு அறிவித்தது.

தொண்டு நிறுவனங்களும் வெளியேற வேண்டி வந்துள்ளது. ஈழத்தமிழரை அழித்து எஞ்சியவர்களை அடிமைகளாக்கி விட்டால் இலங்கைத்தீவு முழுவதையும் தாமே ஆண்டுவிடலாம் எனவும், சிங்களப் பேரினவாதிகளுக்கு இடையேயான அரசியல் பிழைப்புக்கும் ஈழத் தமிழரின் அழிவு அவர்களிற்குத் தேவைப்படுகின்றது.

எனவே, மனிதாபிமானம் பேசிக்கொண்டு ஈழத்தமிழர் மீது மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். சிறிலங்காவின் சனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் சிங்களப் பேரினவாத சமூகத்திற்கு தன்னை சிங்களவரின் காவலர்களிற்கான தலைவர் எனக் காண்பித்துக் கொண்டு தமிழ் மக்களை அழிப்பதற்கு தலைமை தாங்குகின்றார்.

இவரிற்கு முந்திய சிறி லங்காவின் அரசுத் தலைவர்கள் தமிழ்மக்கள் மீது தொடுத்த கொடுமைகள் தமிழின அழிப்புக்களிலும் அதிகமாகச் செய்தால் தான் தனது பெயரை சிங்களப் பேரினவாதிகள் ஏற்பார்கள் என்றோ அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக மீண்டும் கதிரையில் இருந்து கொள்வதற்கு உகந்ததாக இருக்குமென்றோ எண்ணித் தான் மும்முரமாக தமிழ் மக்களை அழிப்பதில் அக்கறை காட்டி அதற்குத் தலைமை தாங்குகின்றார்.

இதில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வலுவும் அதற்கு தமிழ் மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பும் சிங்களப் பேரினவாதிகளிற்கு வியப்பிற்குரிய ஒன்றாக இருந்து வந்துள்ளது. காரணம் மக்கள் மீது எவ்வளவு அதிகமாக துன்பத்தைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக கொடுத்தார்கள். ஆனால்.... மக்களோ எந்தத் துன்பத்தையும் தூங்கிக் கொண்டு விடுதலைப் போரை ஆதரித்தார்கள். சிங்களப் பேரினவாதிகள் ஏற்படுத்திய அழிவுகளும் கொடுமைகளும் மக்களை வாட்டிய வேளைகளில் நோவிற்கு ஒத்தணம் கொடுப்பது போல தொண்டு நிறுவனங்களின் பணிகள் மக்களிற்கு சிறு ஆறுதலாகவும் நிம்மதியாகவும் இருந்து வந்தன.

எனவே, தொண்டு நிறுவனங்களின் பணிகளை எப்படி முடிவிற்கு கொண்டு வருவதென சிங்களப் பேரினவாதிகள் நீண்டகாலமாகவே ஆலோசித்து வந்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய உள்நாட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.

இலங்கைத் தீவிற்குள் தமிழரின் தாயக நிலப்பரப்பில் மட்டுமல்லாமல் முழு இடங்களிலும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் இலக்கானார்கள். அவை பற்றிய தகவல்களைப் பட்டியலிட்டால் நீண்டதொரு ஆய்வுக்கட்டுரையினையே வழங்க முடியும்.

சுட்டிக்காட்டுவதற்காக மூதூரில் பதினேழு தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலை, மட்டக்களப்பில் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்திப் படுகொலை செய்யப்பட்டமை, மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் கொழும்பில் வைத்துக் கடத்திப் படுகொலை செய்யப்பட்டமை, அனைத்து மாவட்டங்களிலும் (வடக்கு கிழக்கில்) கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் இலக்கு வைக்கப்பட்டமை என பட்டியலிடக் கூடியவை ஏராளம் நிறைந்து கிடக்கின்றன.

இவை அனைத்தும் சிறிலங்கா அரசின் ஏவலாளர்களால் அவர்களின் நெறிப்படுத்தலில் தான் செய்து முடிக்கப்பட்டன. இதற்கு யாராவது ஆதாரம் கேட்பீர்கள் என்றால்.... ஒரு விடயத்தை மட்டும் உறுதியாக கூறிவைக்கலாம் தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலையை செய்த கொலையாளி எவரையும் சிறிலங்கா அரசு இதுவரை கைது செய்யாததற்கு காரணம் என்ன?

என சிந்தித்தால் விடை இலகுவாக கிடைக்கும்.

அவர்களின் ஆட்களை அவர்களே எப்படிக் கைது செய்வது?

என்றதன் அடிப்படையில் தான் தொண்டு நிறுவனப் பணியாளர்களின் கொலையாளிகள் பற்றி சிங்களப் பேரினவாத அரசு ஏதேதோ வியாக்கியானங்களை முன்வைக்கின்றது.

தொண்டு நிறுவனங்கள் என்ற அடிப்படையில் எம்மவர்களால் எம்மவர்களிற்கு உதவி புரியக்கூடியது தமிழர் புனர்வாழ்வு கழகம் மட்டுமே. இதனை நன்கு புரிந்து தான் அதனைத் தடை செய்தார்கள். இப்படியான வேளைகளில் எல்லாம். சிறிலங்கா அரசு என நோக்கி அவர்களின் செயல் பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளாமல் விட்டவர்களிற்கு

இன்று உண்மையைப் புரிய வைத்துள்ளனர்.... சிங்களப் பேரினவாத அரச தரப்பினர்.

வன்னிப்பெரு நிலப்பரப்பை விட்டு தொண்டு நிறுவனங்களை வெளியேற்றுவதற்கு ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகின்றனர்? என்பதனைப் பார்ப்போமெனின் தொண்டு நிறுவனங்கள் மக்களிற்கு தொண்டு செய்வதற்காக மக்களோடு நின்றால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் பற்றியவற்றிற்கு அவர்களும் சாட்சியாகி விடுவார்கள்.

அத்தோடு சிங்களப் பேரினவாத அரசு அதன் படைகளை ஏவி தொடராக தமிழ் மக்கள் மீது செய்துவரும் கொடுமைகளிற்கு மக்கள் பலியாகின்ற போது அவர்களின் தேவைகள் யானைப் பசியாகவிருந்தாலும் சோளப் பொரியைத் தரக்கூடியவர்களாக தொண்டு நிறுவனங்களே இருந்து வந்துள்ளன. இவற்றையும் தடுத்து விடுவது தான் எதிர்தரப்பினரின் நோக்கம்.

பன்முகத்தன்மையோடு செயற்பட்டு வரும் சிறிலங்கா அரசு பச்சோந்தி போன்றதெனச் சொல்லக்கூடியதே. இன்று ஈழத் தமிழர் மீது நாலாபுறமும் தொடுத்து வரும் போரிற்கான காரணம் எப்படிக் கூறப்படுகின்றது?

'பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்கின்றோம் என்பது தானே?

" உண்மை அதுவானால்... கொழும்பில் இருந்து தமிழ் மக்களை உங்களுடைய சொந்த ஊருக்குப் போங்கள் என ஏன் வற்புறுத்த வேண்டும்?

(ஓடி ஒழிக்க வழியின்றி நாட்டைவிட்டே வெளியேறி விடுவோம் என கொழும்பில் தங்கியிருக்கும் தமிழ் மக்கள்.)

எந்தப் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி ஓட முற்படுகின்றனர்?

மீண்டும் அவர்களை எந்தப் பயங்கரவாதத்துள் (பயங்கரமான சூழ்நிலைக்குள்) தள்ளி விடுகின்றீர்கள்?

என்பது தர்க்கத்திற்குரியது தானே?

எந்த வழியாலும் நியாயப்படுத்த முடியாத மனித உரிமை மீறலையே தமிழர் மீது கட்டவிழ்த்து விடும் சிறிலங்கா அரசு தனக்கேற்றாற் போல எதனைச் செய்தாலும் அதனை எவரும் கேட்க மாட்டார்கள் என்பது போல நடக்கின்றது. அதனால் தான் அவர்களால், 'தமிழரை பாதுகாக்கின்றோம் எம்மிடம் வாருங்கள்" எனக் கேட்கவும், 'தேசத்தின் பாதுகாப்பிற்கு தமிழர் அச்சுறுத்தலாக இருக்கின்றீர்கள் போங்கள் உங்களுடைய இடத்திற்கு" எனவும் சொல்ல முடிகின்றது.

தமிழ் மக்களின் மனங்களைக் கசக்கிப் பிழிகின்றனர். சுதந்திரமாக நிம்மதியாக வாழ இடமில்லாத சூழ்நிலை ஏற்படுத்தப்படுகின்றது. எங்கும் பாதுகாப்பில்லை என்ற நிலையை இலங்கைத்தீவிற்குள் ஏற்படுத்துகின்றனர். இதனை இன்னும் வலுவாகச் செய்வதற்கே தற்போதைய போர்க்களம் திறக்கப்பட்டுள்ளது. தமிழின அழிப்பின் தொடர்ச்சி இன்று முதிர்ச்சி பெற்றுள்ளது. ஆகவே இன அழிப்பு பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்ய வேண்டுமெனின் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றுவதும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் ஒன்றுதான்.

இன்று எமதுறவுகளின் துயர்துடைக்கக்கூடியவர்கள் யார் என்றால்.... தொண்டாற்றவும் உயிர்காக்கக் கூடியவர்களாகவும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். அவர்கள் ஊடாக எமதுறவுகளின் துயர்துடைக்க நாமே உதவ வேண்டும் என தமிழர் அனைவருமே முன்வரலாம். இப்படியான விடயம் பற்றி பேசுகின்ற போது கொழும்பில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தை தடை செய்துள்ளனர்.

இந்த நிலையில் எப்படி அவர்களால் தமிழ் மக்களிற்கு உதவ முடியும்? என்ற கேள்வி வருவதனையும் அவதானிக்க முடிந்தது. எந்த வழியால் உதவுவார்கள் எனச்சொன்னால் அதனையும் சிறிலங்கா அரசு தடுத்து விடுவதற்கே முனைப்புக்காட்டும்.

எனவே, வேறுவிதமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் எந்தச் சூழ்நிலையிலும் எமதுறவுகளிற்கு உதவும் என்று சொல்ல வேண்டியுள்ளது. அதாவது, 2002 ஆம் ஆண்டிற்கு முன்னர் எப்படி உதவினார்களோ அதேபோன்று உதவுவார்கள்.

எனவே, எந்தச் சூழ்நிலையிலும் எமக்கு நாமே துணை என்ற நிலையில் தான் தமிழர் உலகத்தவரில் ஏனைய சமூகத்தின் முன் எமது நியாயத்தை எடுத்துச்சொல்ல முடியும். தமிழ் மக்களிற்கு சிறிதளவு தொண்டாற்றக்கூடிய வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை வெளியேற்றக்கூடிய வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை வெளியேற்றி விட்டு தமிழரைப் பணயமாக வைத்து தமிழீழ விடுதலைப் போரை அணைத்து விடலாம் என்று நினைத்துச் செயற்படும் சிறிலங்கா அரசை தொண்டு ரீதியான பணியையும் தமிழரே முன்னெடுத்து வெல்ல வேண்டிய பொறுப்புள்ளதை ஏற்று நகர வேண்டியுள்ளது.

அரசியல், கல்வி, பொருளாதாரம், பரப்புரை சார்ந்த விவகாரங்களை குறிவைப்பது சிறிலங்கா அரசின் புதிய திட்டமில்லை தமிழீழ விடுதலைப் போரில் ஆயுதப் போராட்டம் வருவதற்கு முன்பிருந்த தமிழரின் அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளையும் அழிப்பதில் நுட்பமாகச் செயற்பட்டு வந்துள்ளனர்.

எனவே குறிப்பிட்ட சிங்களப் பேரினவாதிகள் குறிவைக்கும் தமிழரின் முன்னேற்றங்களை அழிவில் இருந்து காத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழரிடம் உள்ளது. தமிழீழ மண்ணில் உயிர்களை ஈகம் செய்து போராடுகின்றனர். தாய் மண்ணில் வாழும் மக்கள் வலிகளைத் தாங்கி தமிழினத்தின் இருப்பைக் காக்கின்றனர்.

புலம்பெயர்ந்தவர்களே..... எந்தவகையான கருத்தியலையும் எதிர்கொண்டு கரம் நீட்டி வந்துள்ளீர்கள். இன்னும் விடுதலைக்கான போர் தான் நடக்கின்றது. தமிழீழ விடுதலைப் போரில் புலம்பெயர்ந்த தமிழரும் முக்கியமான ஓர் அங்கத்தினர் தான்.

எனவே எடுத்த எடுப்பில் முடிவெடுக்காமல் சிந்தியுங்கள் செயற்படுங்கள். தொண்டு நிறுவனங்களை ஏன் வெளியேறச் சொன்னார்கள்? என்பது ஒன்றும் மர்மமான விடயம் கிடையாது. தமிழ் மக்களை துவம்சம் செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர். இந்த வேளையில் தான் ஒருவேளைக்கான உணவிற்கு ஏங்கும் எமதுறவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

உண்ணாமல் உறங்காமல் எல்லையிலே நிற்கும் எமது இன விடுதலைப் போராளியை நினைக்க வேண்டும். உதவுகின்றவர்கள் தான் இன்னும் உதவி செய்ய முடியும். நாட்டைப் பிடிக்கட்டும் பிறகு பாப்போம் என்று வெறுங்கதை விடுகின்றவர்கள் சிலரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் நேரம் இதுவல்ல.

வாகரையில் தாக்குதலை தொடுப்பதற்கு காரணம் ஒன்றினைத் தேடினார்கள். மாவிலாறைத் தேர்ந்தெடுத்தார்கள். சிங்களப் பேரினவாதிகளின் திட்டம் புரியாமல் அன்றைய திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மீது பழிபோட்டு அறிக்கை விட்டவர்களும் ஒரு சிலர் உண்டு. இன்று உண்மை வெளிச்சமாகியுள்ளது.

வாகரையைக் குறிவைத்து தாக்குதலை தொடுத்த போது மக்களிற்கான உணவை தடுத்துவிட்டது சிறிலங்கா அரசு, தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு கூறியது. மக்களையும் வெளியேறுமாறு வற்புறுத்தியது. மிகையொலி குண்டுவீச்சு விமானங்கள், பல்குழல் எறிகணைகள், ஆட்டிலெறிகள் குண்டுகள் மழைபோல பொழிந்தன. குழந்தைகள் உட்பட பாகுபாடின்றி மக்கள் பலியானார்கள். உலகம் பார்த்துக் கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகள் அடுத்த கட்டம் பற்றிச் சிந்தித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் போராட்டங்களைச் செய்தார்கள். மக்கள் பணயமானார்கள்…. என்பதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை. சிறார்களின் உரிமை பற்றிப் பேசுகின்றவர்கள் அங்கு பலியான குழந்தைகளின் உடலங்களைத் தொட்டுப் பார்த்தார்கள். தடுத்து நிறுத்த எதனையும் செய்யவில்லை.

ஏனெனில், அவர்களை அங்கு பணிபுரிய அனுமதித்தவர்கள் சிறிலங்கா அரச தரப்பினர். இன்றும் வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்களை வெளியே போகுமாறு கூறியவுடன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறுகின்றனரே ஏன்? அவர்களின் சிறிலங்கா அரச அனுமதியுடன் பணியாற்றியமையால் தான். (தமிழீழம் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை அழைக்கும் போது சிறிலங்காவால் எதுவும் செய்ய முடியாமலிருக்கும்.)

இப்படியான நிலமையில் தான் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களும் பணியாற்றின. வாகரையில் மக்களைப் பணியமாக வைத்துக் கொண்டு 'பிச்சை வேண்டாம் நாயைப்பிடி" என்ற நிலமைக்குத் தள்ளினார்கள். அப்படியொரு நிலையில் வெற்றி கண்டுவிட்டது போன்று தான் சிறிலங்கா அரசு வெற்றிக் களிப்பில் இருந்தது. அதனால் தான் சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச வாகரைக்கு சென்று வெற்றி மாலை அணிந்து கொண்டார். உலகம் பார்த்துக்கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் வாகரையை விட்டு வன்னிப்பெரு நிலப்பரப்பிற்குள் போனார்கள். யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிப்பெரு நிலப்பரப்பிற்குள் போனது போல நீண்ட பயணத்தைச் செய்து வன்னிக்குப் போனார்கள். யாழ்ப்பாணத்தை மூதூர் கிழக்கை, வாகரையை, குடும்பிமலையை எல்லாம் விட்டுப் போவதற்கு வன்னியிருந்தது. வன்னியை விட்டுப் போவதற்கு எங்கே இடமுள்ளது?

தமிழீழ விடுதலைப் போரை முடிவு கட்டி விடுவதற்கு…. நீர் நிறைந்த தொட்டியில் குழாயைத் திறந்து நீரை வெளியேற்றி விடுவது போல விடுதலைப் போரை வடித்தெடுப்பதற்கு. அது இந்து மாகடலை இறைப்பதற்கு சமமானது. தமிழீழ விடுதலைப் போர் உலகத் தமிழரின் மூச்சில் கலந்துள்ளது. அதன் வலு ஆள் தொகையினால் மட்டும் தீர்மானிக்கப்படக் கூடியவொன்றல்ல. அதன் வலு அளவிட முடியாதவொன்று.

1998 ஆம் ஆண்டு அன்றைய சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை 'புலிகளை 85 வீதம் அழித்து சிறிலங்காவின் 50 ஆவது சுதந்திர தினத்திற்கு கிளிநொச்சியில் நிற்கும் படையினரும், மாங்குளத்தில் நிற்கும் படையினரும் கைகொடுப்பார்கள். ஏ-9 வீதியால் பயணிப்போம் என்று" கூறினார்.

ஆனால், உண்மையில்; நடந்ததென்ன? என்ற வரலாற்றுப் பின்னணியுடன் வன்னியிலிருக்கும் நீறுபூத்திருக்கும் போர்க்குணம் சுவாலை விடும் போது இன்று பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் என்ன செய்யும்? இன்று புலம்பெயர்ந்துள்ள உறவுகளே என்ன செய்யப் போகின்றீர்கள்?.

- கனகரவி -


Comments