தமிழில் பேச முயல்வதை விட தமிழரோடு பேச முயன்றிருக்கலாம்


கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 63 ஆவது பொது அமர்வில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை முக்கிய பல செய்திகளை அவரது அரசின் தீவிர நிலைப்பாட்டுப் போக்கு உட்பட்ட பல விடயங்களை வெளிப்படையாகவே எடுத்தியம்பி நிற்கின்றது.

உலக நாடுகளின் பொதுமன்றமான ஐ.நாவில் போய் நின்றுகொண்டு "புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துத் தங்களின் போர் வலிமையைக் கைவிட்டு, ஜனநாயக வழிக்குத் திரும்பினால் மட்டுமே புலிகளுடன் பேச்சு, இல்லையேல் யுத்தம்தான் ஒரே மார்க்கம்'' என்று அவர் அங்கு முழங்கியிருக்கின்றார்.

இது, அமைதி வழித் தீர்வு இனிச் சாத்தியமே இல்லையென்ற போர்ப்பிரகடனமாகக் கருதப்படவேண்டிய அறி விப்பாகும்.

இந்தத் திட்டவட்டமான அறிவிப்பின் மூலம், அமைதி முயற்சிக்கான கதவை இறுகச் சாத்தி, வலிமையான போர்ப்பூட்டை அதற்குப் போட்டுப் பூட்டி, தீர்வு என்ற அதன் திறப்பை மீண்டும் கைக்கு எட்டவேமுடியாத பாதாளத்திற்குத் தூக்கி வீசிவிட்டார் இலங்கைத் தீவின் ஜனா திபதி என்றே கருத நேர்ந்திருக்கின்றது.

கடந்த இரண்டரை தசாப்தகால இலங்கை அரசின் போக்கை குறிப்பாக விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை உற்றுநோக்கு பவர்கள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்.
அது ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் நியாயமான ஒரு தீர்வு எட்டப்பட்டு அது முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படும்வரை தங்களுடைய உரிமைப் போருக்கான ஆயுத பலத்தை எந்த அழுத்தம் கருதியும் விடுதலைப் புலிகள் கைவிடவே மாட்டார்கள் என்ற யதார்த்தம்தான்.

அந்தக் கொள்கைப் பிடிப்பில் புலிகள் எவ்வளவு பற்றுறுதியும் திடசங்கற்பமும் கொண்டவர்கள் என்பது யாவருக்கும் புரிந்த விடயமே.

ஆகவே, புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு தமது போர்த்திறன்களைத் துறந்தால் மட்டுமே இனி அமைதிப் பேச்சு என்று அறிவிப்பதும்

இனிப் பேச்சே இல்லை, இனிப் போர்தான் என்று பிரகடனப்படுத்துவதும் ஒன்றுதான்.
ஐ.நா. சபையின் கடந்த வருடப் பொது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அங்கு நடந்துகொண்ட தமது செயற்பாடுகள் மூலம் தென்னிலங்கைச் சிங்களத்தை "மெய்சிலிர்க்க' வைத்தார்.

இலங்கையின் இதற்கு முந்தைய தலைவர்கள் ஐ.நா. பொதுச்சபை அமர்வு போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில், உலக சமூகத் தலைவர்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலமொழியிலேயே உரை நிகழ்த்துவது வழமையாக இருந்து வந்தது.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ கடந்த வருட ஐ.நா. பொதுச்சபை அமர்வில் முற்றுமுழுதாக சிங்களத்தில் தமக்கு நன்கு பரிச்சயமான மொழியில் முழங்கி, சிங்கள மக்களைப் பேருவகையில் ஆழ்த்தினார்.

ஐ.நா. மன்றத்திலேயே தனிச்சிங்களத்தில் முழங்கி நம் மொழிக்குப் பெருமையை உலக மன்றத்தில் சேர்த் தார் நாட்டின் தலைவர் என்று தென்னிலங்கையின் பௌத்த சிங்கள மேலாதிக்கம் அவரைத் தலையில் தூக்கி வைத் துக் கொண்டாடியது. சிங்களத்தில் பேசிய தமது அந்தப் பாவனை நடிப்பில் தென்னிலங்கையை அதிகம் மயக்கி வெற்றிகண்ட ஜனாதிபதி மஹிந்தர்,

அதே தந்திரோ பாயத்தைத் தமிழர் மீதும் பிரயோகிக்கத் தீர்மானித்தார் போலும்!
இந்தத் தடவை ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் தமிழிலும் சில வார்த்தைகள் பேசினால் கடந்த வருடம் தென்னிலங்கைப் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை மயக்கியமை போல வடக்குக் கிழக்குத் தமிழர்களையும் மயக்கிவிடமுடியும் என்று ஆட்சித் தலைவர் பகற்கனவு கண்டிருக்கின்றார் போலும்.

அதனாலேயே சில கருத்துகளை தமிழில் எழுதி, வாசித்துப் பாடமாக்கிச் சென்று அவற்றைத் தமது நீண்ட சிங்கள உரையின் மத்தியில் தமிழில் ஒப்புவித்திருக்கின்றார் அவர்.
ஆனால் படித்த புத்திசாலிகளை அதிகம் கொண்ட ஈழத்தமிழர் சமூகம், இந்த நடிப்புக் காய்ச்சல் தந்திரோ பாயத்திற்கு நசிந்து கொடுக்கவில்லை. அந்த முயற்சிக்கு எடுபடவுமில்லை.

தமிழே தெரியாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில தமிழ் வாசகங்களைச் சிங்களத்தில் எழுதிப் பாடமாக்கித் தமது நியூயோர்க் உரையில் அவற்றைப் பிரயோகித்ததும், அதற்கு அப்படியே அடிமைப்பட்டு, பரவசப்பட்டு நிற்பதற்குத் தமிழர்கள் தரப்பு ஒன்றும் முட்டாள்கள் அல்லர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஐ.நா. உரையில் தமிழில் பேச முயற்சித்திருப்பதை விட, தமிழர் தரப் போடு தாம் பேசுவது குறித்து ஆக்கபூர்வமான பயனுள்ள வகையில் ஒரு கருத்தைக் கூறியிருப்பாராகில் அது இலங்கைப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வைக் காண் பதற்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கும்.

ஆனால், அமைதி வழியில் அல்ல, இராணுவ வழியி லேயே தீர்வு என்று விடாப்பிடியாக பிடிவாதமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதால், இத்தகைய"தமிழ்ப் பேச்சு' தந்திரோபாய எத்தனம்தான் அவரிடமிருந்து வெளிப்படமுடியும்.

சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்?


Comments