புலம்பெயர்ந்து வாழும் எமது உடன்பிறப்புக்கள் என்றும் இல்லாதவாறு அனைத்துலக நாடுகள் முழுவதிலும் எழுச்சிகொண்டு அந்தந்த நாட்டு அரசுகளுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மக்கள் புரட்சியின் ஊடாகவே தமிழீழ தேசிய விடுதலை சாத்தியம் என்பதை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன் அவர்கள் கூறியிருந்தார்.
இவ்வாறான மக்கள் எழுச்சியும் புரட்சியும் தற்போது தமிழீழ மண்ணில் வியாபித்துள்ளது. தமிழீழ மண்ணில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலை தொடர்பான எழுச்சி என்றும் இல்லாதவாறு காணப்படுகின்றது.
தமிழீழ மண்ணில் தற்போது போர்க்களங்களில் தமிழ் மக்கள் களப்பணிகளை ஆற்றி வருகின்றனர். சிறிலங்கா படை என்றும் இல்லாதவாறு பலவீனமான முறையில் அகலக்கால் பதித்துள்ளது.
இதனை எமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழீழ மண்ணினை மீட்டெடுப்பது மட்டுமல்லாது சிறிலங்கா படையினரின் வல்வளைப்பில் உள்ள மக்களையும் நிலங்களையும் மீட்கும் சாதகமான நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
தற்போது இருக்கும் களநிலமையை எமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது விடுதலையை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் வென்றெடுக்க வேண்டும்.
வன்னியில் செயற்பட்ட ஜக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களை சிறிலங்கா அரசு வெளியேற்றியுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழும் எமது உடன்பிறப்புக்கள் என்றும் இல்லாதவாறு அனைத்துலக நாடுகள் முழுவதிலும் எழுச்சிகொண்டு அந்தந்த நாட்டு அரசுகளுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.
இந்நிகழ்வானது எமது விடுதலைப் போருக்கு பெரும் பலமாகவே இருக்கும் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் எமது தேசம் விடுதலை அடைகின்ற வரையும் தொடர்ந்து இது போன்ற போராட்டங்களை நடத்தி தமிழீழத்திற்கான பலத்தினை சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
Comments