திங்கட்கிழமை அதிகாலை நாச்சிக்குடாவுக்கு தென்புறம் மற்றும் துணுக்காய் பகுதிகளில் இருந்து வடகிழக்காக வன்னே?க்குளம் நோக்கி 58 ஆவது படையணியும்,
அதற்கு உதவியாக அக்கராயனை நோக்கி 57 ஆவது படையணியின் 1 ஆவது பிரிகேட்டும் நகர்வை மேற்கொண்டிருந்தன. நகர்வை மேற்கொண்ட படையினர் விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்ப்புக்களை தொடர்ந்து தமது முன்னரங்க நிலைகளை பலப்படுத்திய பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் நகர்வை மேற்கொள்ள முனைந்த சமயம் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் படையினரின் நிலைகளை ஊடறுத்து தாக்குதலை மேற்கொண்டிருந்தன.
58 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட்டை சேர்ந்த 11 ஆவது இலகு காலாட்படைப் பிரிவு, லெப். கேணல் சேனக விஜசூரிய தலைமையிலும், 6 ஆவது கெமுனுவோச் பற்றலியன் லெப். கேணல் கமல் பின்னவல தலைமையிலும் நகர்வுகளை மேற்கொண்ட போது அதனை 3 ஆவது பிரிகேட்டின் பிரிகேட் கட்டளை அதிகாரி லெப். கேணல் சுராஜ் பன்சயாயா வழி நடத்தியிருந்தார்.
இந்த படைப்பிரிவுக்கு உதவியாக லெப். கேணல் ரவிப்பிரிய தலைமையில் 571 ஆவது பிரிகேட்டை சேர்ந்த 4 ஆவது சிங்க றெஜிமென்ட் படையினர் அக்கராயனை நோக்கிய நகர்வை மேற்கொண்டிருந்தனர்.
அதிகாலை 5.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை நடைபெற்ற உக்கிர மோதல்களில் இராணுவம் கடுமையான இழப்புக்களை சந்தித்துள்ளது. இந்த மோதல்களில் அக்கராயனுக்கு வடக்குபுறமாக நகரமுற்பட்ட இராணுவத்தின் வலிந்த தாக்குதல் படைப்பிரிவான 57 ஆவது படையணியின் 1 ஆவது பிரிகேட் கடுமையான இழப்புக்களை சந்தித்துள்ளது.
இந்த பிரிகேட்டின் 4 ஆவது சிங்க றெஜிமென்டை சேர்ந்த பெருமளவான படையினர் மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
30 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும், இழப்புக்கள் மிக அதிகம் என சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன் போது 75 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 100 இற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாச்சிக்குடா பகுதியில் நடைபெற்ற மோதல்களில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 51 படையினர் காயமடைந்துள்ளதாகவும், அக்கராயன் மற்றும் வன்னேரிக்குளம் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 50 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
24 மணிநேரம் நடைபெற்ற உக்கிர மோதல்களில் 31 சடலங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், உருக்குலைந்த நிலையில் இருந்த இரு சடலங்கள் கள?னைகளில் தகனம் செய்யப்பட்டதுடன், 29 சடலங்களில் புதன்கிழமை 19 சடலங்களும், வியாழக்கிழமை 10 சடலங்களும் அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திடம் விடுதலைப்புலிகளால் கையளிக்கப்பட்டிருந்தன.
புதன்கிழமை கையளிக்கப்பட்ட சடலங்களை பெற்றுக்கொண்ட படைத்தரப்பு அவற்றில் 7 சடலங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் நாச்சிக்குடா பகுதியில் நடைபெற்ற மோதல்களில் காணாமல் போன படையினர் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மோதல்களில் பி.கே.எல்.எம்.ஜி, ஆர்.பி.ஜி.
உந்துகணை செலுத்திகள் உட்பட 35 இற்கு மேற்பட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
571 ஆவது பிரிகேட் படைப்பிரிவே இந்த சமரில் அதிகளவு இழப்புக்களை சந்தித்த போதும், இந்த பிரிகேட்டை சேர்ந்த லெப். கேணல் எஸ் வெலிகல தலைமையிலான 4 ஆவது சிங்கப்படைப்பிரிவு (4குகீ) கடுமையான இழப்புக்களை சந்தித்துள்ளது டன், அதன் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. சிங்க றெஜிமென்டை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளமை அதன் நடவடிக்கைகளில் அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவம் கடுமையான எறிகணை மற்றும் பல்குழல்உந்துகணை செலுத்தி தாக்குதல்களை மேற்கொண்டவாறு முன்நகர்ந்த போதும் விடுதலைப்புலிகள் சிறப்பு அணிகள் கேணல் பானுவின் வழிநடத்தலில் களமிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலதி படையணி, இம்ரான் பாண்டியன் படையணிகளுடன், சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் சில பிளட்டூன் படைப்பிரிவுகளும் களமிறங்கியிருந்தன.
இராணுவத்தினரால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பல பதுங்குகுழிகள் விடுதலைப்புலிகள் வசம் வீழ்ச்சி கண்டதை தொடர்ந்து முன்நகர்வை கைவிட்டு இராணுவத்தின் முன்னணி பிரிகேட்டுக்கள் இரண்டும் பின்வாங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகள் வெளியிட்ட புகைப்படங்களில் கேணல் பானு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்வையிடும் புகைப்படங்களையும் காணக்கூடியதாக உள்ளது.
இராணுவத்தின் தற்போதைய நகர்வுகளை பொறுத்தவரையில் வன்னி பகுதியில் 6 படைப்பிரிவுகள் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன. பிரிகேடியர் சவீந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படையணி மன்னாரில் இருந்து கரையோரமாக நகர்ந்து தற்போது நாச்சிக்குடாவுக்கு தென்புறமாக நிலைகொண்டுள்ளதுடன், வன்னேரிக்குளம் மற்றும் முளங்காவில் பகுதிகளை நோக்கிய நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான 57 ஆவது படையணி கல்விளான் மற்றும் துணுக்காய் பகுதிகளை கைப்பற்றிய பின்னர் தற்போது அக்கராயன் மற்றும் முறிகண்டி பகுதிகளை நோக்கி தனது நகர்வுகளை செறிவாக்கி வருகின்றது. 56 ஆவது படையணி வவுனியாவின் வடக்கு பகுதிகளை தக்கவைப்பதில் ஈடுபட்டுவருவதுடன், பாலமோட்டை நோக்கி நகர்வை மேற்கொண்டு வருகின்றது.
இந்த படையணியின் ஆதரவுடன் புதிதாக உருவாக்கப்பட்ட 62 ஆவது படையணி பிரிகேடியர் றோகன பண்டார தலைமையில் முன்றுமுறிப்பு நவ்வி பகுதிகளை நோக்கியும், 59 ஆவது படையணி மணலாறில் இருந்து முல்லைத்தீவை குறிவைத்தும் நகர்வில் ஈடுபட்டு வருகின்றன. 62 ஆவது படையணி கடந்த ஜூன் மாதம் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவை தவிர புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றுமொரு படையணியான 61 ஆவது படையணி மடு தொடக்கம் பெரியமடு வரையிலான பகுதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இது ஒரு தற்காப்பு படைப்பிரிவாகும். எனினும் 56, 57, 58 மற்றும் 59 ஆவது படையணிகள் 3 பிரிகேட்டுக்களை கொண்ட வலிமையான படையணிகளாக உள்ளபோதும், ஏனைய 61 மற்றும் 62 ஆகிய படையணிகள் பிரிகேட் அளவிலான படையினருடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வன்னியை ஒரு முற்றுகைக்குள் கொண்டு வந்து பல களமுனைகளை திறக்கும் படையினரின் இந்த நகர்வுகளை முறியடிப்பதற்கு புலிகள் தீர்மானித்து விட்டதையே விடுதலைப்புலிகள் கடந்த வாரம் மேற்கொண்ட பதில் தாக்குதல்கள் கோடிட்டு காட்டுவதாக படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
வெற்றிநிச்சயம் படை நடவடிக்கையின் போது 53 ஆவது படையணி அதிக இழப்புக்களை சந்தித்ததை போல தற்போது வலிந்த தாக்குதல் படைப்பி?வுகளான 57 மற்றும் 58 ஆவது படையணிகள் அதிக இழப்புக்களை சந்தித்து வருகின்றன.
எதிர்வரும் பருவமழைக்கு முன்னர் பூநகரி அல்லது கிளிநொச்சியை கைப்பற்றுவது தான் படையினரின் தற்போதைய இலக்கு.
இவற்றில் ஒன்றை படையினர் அடைந்துவிட்டால் அவர்களுக்கான பின்தள உதவிகள் பாதுகாப்பானது என்பது படையினரின் கணிப்பு.
இந்த இலக்கிற்கான கால எல்லையை இராணுவம் இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதமாகவே முன்னர் திட்டமிட்டிருந்தது.
எனினும் விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்கள் படையினரின் நிகழ்ச்சி நிரல்களை தலைகீழாக்கி விட்டுள்ளன.
தற்போது ஒரு வலுவான இலக்கினை அடையாமல் இராணுவம் நடுவழியில் தொங்கி நிற்பது பேரழிவுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சங்கள் படை அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளன.
படையினரின் இந்த அச்சங்களை கடந்த வாரம் வன்னியில் நடைபெற்ற மோதல்கள் மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் காலங்களும் மிகவும் கடுமையானதாகவே மாறப்போவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கடந்த மாதம் 26 ஆம் திகதி வான்புலிகள் கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகமான திருமலைத் துறைமுகம் மீது மேற்கொண்ட வான் தாக்குதலினை தொடர்ந்து பல புதிய சிக்கல்கள் அரசாங்கத்துக்கு தோன்றியுள்ளன.
அதாவது ஏழு தடவைகள் வான்புலிகள் இரவு நேர தாக்குதல்களை நடத்தியுள்ளமை, அவர்களின் இரவுநேர தாக்குதல் உத்திகள், அதற்கு தேவைப்படும் உபகரணங்கள் தொடர்பாக படைத்தரப்பை சிந்திக்க வைத்துள்ளது. ஸிலின்143 சாதாரண இலகுரக விமானம். ஆனால் அதன் மூலம் இரவு நேர தாக்குதலை நடத்த வேண்டும் என்றால் இரவு நேர தாக்குதல் உபகரணங்கள் அந்த விமானத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது விமானி அதனை அணிந்திருக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ள படங்களில் அவர்களின் விமானிகள் சாதாரண சீருடைகளை மட்டுமே அணிந்துள்ளனர்.
அவர்கள் தாக்குதல் விமானம் ஒன்றை செலுத்துவதற்கான விமானிக்குரிய முழுமையான உபகரணங்களை அணிந்திருக்கவில்லை. இது விடுதலைப்புலிகளின் இரவு நேர தாக்குதல் உத்திகள் தொடர்பான ஒரு கணிப்பீட்டை செய்வதற்கு படையினருக்கு பெரும் இடைஞ்சலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறுகிய கால பயிற்சிகளுடன் வான்புலிகளால் துல்லியமான இரவுநேர தாக்குதலை நடத்தமுடியுமா என்பது தொடர்பாகவும் படைத்தரப்பு ஆச்சரியம் அடைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் இந்த உத்திகளின் பலம் ஒருபுறம் இருக்க, இலங்கை படையினர் தமது வான்பாதுகாப்பு பொறிமுறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வான்புலிகளின் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை, தாக்குதல் நடைபெறுவதற்கு 12 நிமிடங்களுக்கு முன்னரே கிடைத்த போதும் திருமலை துறைமுகத்தை பாதுகாக்க முடியாது போனது. திருமலைத் துறைமுகம், சீனன்குடா தளம், கடற்படை கப்பல்கள் போன்றவற்றில் உள்ள பீரங்கிகள் மூலமும் தரையில் நின்ற படையினர் தமது கைகளில் இருந்த சாதாரண துப்பாக்கிகள் மூலமும் வானத்தை நோக்கி சரமாரியாக தாக்குதலை நடத்திய போதும் வான்புலிகள் தளத்தை தாக்கிவிட்டு பாதுகாப்பாக திரும்பியது என்பன அரசாங்கத்துக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
மேலும் சீனாவிடம் இருந்து புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட எவ் 7 வான் தாக்குதல் விமானங்கள் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட 20 நிமிடங்களில் மேலெழுந்த போதும் அதனால் வான்புலிகளை இடைமறித்து தாக்க முடியவில்லை.
இருபரிமாண ராடர்கள் வான்புலிகளின் விமானங்களை இனம் கண்ட போதும் அவற்றால் விமானங்களின் தரையிறக்கம் தொடர்பான தெளிவான தகவல்களை திரட்ட முடியவில்லை. இந்தக் குறைபாடுகள் அதிக பொருளாதார செலவில் தனது வான்பாதுகாப்பு பொறிமுறைகளை மறுசீரமைக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கத்தை தள்ளியுள்ளது.
இது மேலதிக பொருளாதார அழுத்தங்களை மக்களுக்கு ஏற்படுத்தும்.
அதேவேளை உக்கிரமடைந்துவரும் வன்னி களமுனைகளும், கிழக்கிலும், வடக்கிலும் அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளில் அதிகரித்துவரும் தாக்குதல்களும் அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும்.
-அருஷ்-
Comments