ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள்


நியாயம் வேண்டியும், நீதியான கௌரவமான வாழ்வு வேண்டியும் ஈழத் தமிழர்கள் இலங்கைத் தீவில் நடத்தும் போராட்டம் தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கின்றது.

இந்த நெருக்கடியான சமயத்தில், களத்திலும் புலத்திலும் தாயக மண்ணிலும், இடம்பெயர்ந்த தேசங்களிலும் வாழ்கின்ற தமிழ் உடன்பிறப்புகளை மனவுறுதி தளராது, நம்பிக்கையும், தைரியமும் ஊட்டி, வழிப்படுத்தி, மனவளப்படுத்தி, திட சிந்தனையோடு வைத்திருப்பது மிக முக்கியமான விவகாரமாகும்.

இந்த வரலாற்றுத் திருப்புமுனை வேளையிலே, இந்த மிகமுக்கிய பொறுப்பு, ஊடகங்களின் தோள்களில் பொறிந்திருப்பது மறுக்கமுடியாத உண்மை.

களத்திலும் புலத்திலும் நம் தமிழ் உடன் பிறப்புகள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திவரும் ஊடகங்கள் இந்தக் கனதியான பொறுப்பைக் கடமையுணர்வோடு சுமந்து, தம் கடன் பணியாற்றி நிற்பதை பெருமிதத்தோடு இச்சமயத்தில் நாம் நினைவுகூர முடியும்.

அவை, தாயக மண்ணிலிருந்து அல்லது கொழும்பிலிருந்து வெளிவரும் தேசியப் பத்திரிகைகளாக இருக்கலாம். இணையத்தளங்களாக இருக்கலாம். இலத்திரனியல் ஊடகங்களாக இருக்கலாம். அல்லது புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து பிரசுரமாகும் அச்சு ஊடகங்களாகவோ, இணையத்தளம், வானொலி, தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் ஊடகங்களாகவோ இருக்கலாம்.

அவை அனைத்துமே தமிழரது உரிமைப் போரை முன்னோக்கித் தூக்கி, நெம்பித் தள்ளிவிடுவதில் கரிசனை கொண்டுள்ளவையாகவே விளங்குகின்றன.

இவ்விடயத்தில் அவற்றின் பங்குபணியும், செயற்பாங்கும் விதந்து போற்றி மெச்சத்தக்கவை.
அதிலும் குறிப்பாகத் தாயக மண்ணிலும், இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் இருந்து இயங்கும் ஊடகங்களின் சேவை வித்தியாசமானது.

களத்தில் தம் மீதான நிர்ப்பந்தங்கள், கட்டுப்பாடுகள், அழுத்தங்கள், நெருக்குவாரங்கள், அச்சுறுத்தல்கள், அழிவு நாச எத்தனங்கள் போன்றவற்றுக்கு மத்தியிலும் தமது வரலாற்றுக் கடமையை அவை முன்னோக்கிக் கொண்டு செல்லவேண்டியவையாக இருக்கின்றன; கொண்டு செல்கின்றன.

ஒருபுறம் தம்மை நோக்கி ஏவிவிடப்படக்கூடிய சட்டம். மறுபுறம் சட்டத்தை மிதித்து சதிராடும் அட்டகாசத் தரப்புகள். இவற்றுக்கு மத்தியில் கத்தியில் நடப்பதுபோல அந்த ஊடகங்கங்கள் ஆற்றும் அளப்பரிய பணி பலருக்கும் புரிவதில்லை.

தமது நிர்வாகத்தின் நோக்கு போக்கு, இலக்கு, கொள்கை ஆகிய சிக்கல்கள் மற்றும் தைரியமோ, திடசங்கற்பமோ இல்லாத முகாமைத்துவம் போன்ற பின்னடைவுகளுக்கு முகம் கொடுத்தபடியே மறுபுறத்தில் தமிழர் தரப்பு நியாயத்தையும் இயன்றளவு முன்நகர்த்தும் இந்த ஊடகங்களின் "இரண்டுங்கெட்டான்' கஷ்ட நிலைமை பலருக்குப் புரிவதில்லை.

அதுவும் புலம்பெயர்ந்த தேசத்தில் பாதுகாப்பாக இருந்துகொண்டு, தம் இஷ்டப்படி விமர்சனங்களை வெளியிட்டு அள்ளி வீசியபடி வியாக்கியானம் செய்யும் ஊடகப் பெரியவர்கள் பலருக்குக் களத்தில் உள்ள ஊடகங்களின் சிக்கல்கள் புரிவதில்லை.

உண்மையில்

எல்லாத் தமிழ் ஊடகர்களையும் அரவணைத்துத் தமிழரின் பொதுநலனுக்கான பொது முயற்சியில் அவர்களின் ஆதரவை அவரவர்களது தளத்திலிருந்து இயன்றவரை திரட்டி எடுப்பதே தமிழர் தரப்பின் ஏக இலக்காகவும் முயற்சியாகவும் இருக்கவேண்டும்.

அதை விடுத்து தத்தமது நெருக்கடிகள், கஷ்டங்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு உத்வேகம் அளிக்கும் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் களநிலை நெருக்கடிகளைப் புரிந்துகொள்ளாது எழுந்தமானத்தில் விமர்சிப்பது,

அப்படி நெருக்கடிக்குள்ளும் தம்மால் இயன்றளவு ஆதரவைத் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு வழங்கிவரும் அத்தரப்பை மேலும் தூரத் தள்ளிவைத்து, அவர்களது ஆதரவையும் நாம் இழக்கவே வழி செய்யும்.

தவிரவும், புலத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தபடி தமிழ்த் தேசியத்துக்கு எழுச்சியூட்டும் ஊடகவியலாளர்களைக் குதர்க்கம் பேசி, தேவையில்லாமல் விமர்சித்து, வித்துவக் காய்ச்சல் விடயங்களை விவகாரமாக்கி, அவர்களைத் தள்ளிவைக்கும் புறந்தள்ளும் ஒருவித நோயும் நம்மவர்களின் சில ஊடகங்களுக்கு இப்போது தொற்றியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

எல்லோரும் சேர்ந்து தேர் இழுப்போம் வாரீர்!

தேர் இழுக்க வருவோருக்குக் கால்தடம் போட்டு வீழ்த்துவதை விடுத்து, அனைவரும் ஓர் இலக்கைக் குறிவைத்து நமக்குள் இழுபறிப்படுவதை விலக்கி ஒன்றுபட்டு செயற்படுவோம். தோள்கொடுங்கள்.

"ஊடக உபத்திரவங்கள்' என்று தேவையற்ற ஊசலாட்டங்களைக் கிளறுவதை விடுத்து, ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் உயர்வான பணியை மெச்சிப் பாராட்டி, அவர்களின் சேவையை மேலும் வென்றெடுக்கத் தூண்டுவோம்.

எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் பற்றிய கன்னாபின்னா என்ற எமது கற்றுக்குட்டி விமர்சனங்களாலும், செயற்பாடுகளினாலும் இதுவரை எம் மத்தியில் எமக்காகச் செயற்பட்ட பலரை நாம் இழந்து எதிர்த்தரப்பில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறோம்.

இது தேவைதானா? இது நியாயமானதா? இப்போக்குத் தொடரவேண்டுமா?

இயக்கத்தக்கவர்களின் ஊடகங்களாகத் தம்மை முன்னிறுத்தியபடி, அணைத்துச் சேர்க்கவேண்டிய பலரை ஒதுக்கித் தள்ளுகின்ற கைங்கரியத்தில் சில தரப்புகள் செயற்படுவதும் வேதனையளிக்கிறது.

வேண்டாம் இந்த வீண் விபரீதம்!



Comments