கருணாநிதிக்கு உலகத் தமிழர்கள் கடுங் கண்டனம்!

தன்னைப்பற்றிய விமர்சனங் களை செரிக்கத் தெரிந்தவனே நல்ல அரசியல்வாதி ஆவான். இல்லையேல் இடிப்புரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடுவான் என வள்ளுவர் சொன்னது போல கெட்டொழிந்து விடுவான்.

முதல்வர் ஆட்சிக் கட்டிலில் இருப்பவர். சொற்களை அளந்துபேச வேண்டும். எழுதவேண்டும். முதல்வர் எழுதிய கவிதையில் கண்ணியம் கடுகளவும் இல்லை. அண்ணாவின் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை தனது வசதிக்கேற்ப பயன்படுத்துவதோடு நின்றுவிடுகிறார். அதனை முதல்வர் கடைப்பிடிப்பதில்லை.

50 ஆண்டு களுக்கு மேலாக பொதுவாழ்வில் இருக்கும் நெடுமாறன் போன்ற ஒரு தமிழ் உணர்வாளரை, தமிழினப் பற்றாளரை எட்டப்பன் என்றும் ஆஞ்சநேயன், விபீஷணன் என்றும், பணம் பறிக்கும் இனத்துரோகி என்றும் திட்டுவது முதல்வருக்கு அழகல்ல.

இந்தப் பட்டங்களை திருப்பி முதல்வர் மீது வீச எத்தனை வினாடி எடுக்கும்?

வைகோவை 18 ஆண்டுகளாக மேலவை உறுப்பினராக்கினேன். அது நான் அவருக்கு போட்ட பிச்சை என்று அன்றொருநாள் முதல்வர் சொன்னார். அப்படி என்றால் தி.மு.க. என்பது ஆண்டிகள் மடமா?

முதல்வர் என்ன மூத்த தம்பிரானா? அறிவுடையோர் கேட்கமாட்டார்களா?

" வைகோ புலிகளோடு சேர்ந்து கொண்டு என்னைக் கொல்லச் சதி செய்தார் என்று முதல்வர் உளறினாரே?

அது நெஞ்சாரச் சொன்ன பொய்தானே? முதல்வர் ஒரு பொய்யன் என்பதுதானே அதன் பொருள்?

நெடுமாறன் அன்றும் சரி இன்றும் சரி விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் மனம், மொழி இரண்டினாலும் நேசிப்பவர், அவரைப் பார்த்து "வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே குத்திக்கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!" என்பது கொஞ்சமும் பொருந்தாது.

வேண்டு மென்றால் அது முதல்வருக்குத்தான் பொருந்தும்.

முதல்வர்தான் இலாபம் இருந்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது, இழப்பென்றால் காததூரம் விலகி ஓடுவது என்ற கொள்கையை வைத்திருக்கிறார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நெடுமாறனுக்கு இருக்கும் ஆதரவில் நூற்றில் ஒரு பங்கு கூட முதல்வருக்கு இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம்!

இந்திரா காந்திக்கு எதிராகக் கறுப்புக்கொடி பிடித்தீர்கள். கற்களை எறிந்து இந்திரா காந்தியைக் கொல்ல நினைத்தீர்கள். அப்போது இந்திரா காந்தியைக் காப்பாற்றியவர் இன்று நீங்கள் எட்டப்பன், ஆஞ்சநேயன், துரோகி என்று அர்ச்சிக்கும் பழ. நெடுமாறன்தானே. இல்லையா?

பின்னர் மானம், வெட்கம், இரண்டையும் கக்கத்தில் வைத்துக்கொண்டு "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக" என தட்டை மாற்றி லாலி பாடினீர்களே?

இதனை வைத்து முதல்வர் கருணாநிதியை ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்றால் அது பிழையாமோ?

பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு, "அரசியலில் தீண்டாமை இல்லை" என்று சொல்லிக் கொண்டு அவர்களோடு கை கோர்த்த குத்துக்கரண வீரர் கருணாநிதியா? நெடுமாறனா?

நள்ளிரவில் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை அன்றைய கருணாநிதியைக் குண்டுக் கட்டாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போனபோது "அய்யோ என்னைக் கொல்றான்களே" என்று கூக்குரல் விட்டு அழுதீர்களே?

அது கோழைத்தனம் இல்லையா?

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபைக்குப் போகாமல் கையெழுத்தைமட்டும் போட்டுவிட்டு சம்பளத்தை ஒழுங்காக எடுத்த முதல்வர் வீரத்தைப் பற்றிப் பேசலாமா?

தமிழகத்தில் ஊழலை எப்படிச் செய்யவேண்டுமென கற்றுத்தந்தவர் முதல்வர்தான்.நெடுமாறன் அல்ல.

வீராணம் என்றாலே ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. 23 கோடி செல வில் தீட்டப்பட்ட வீராணம் திட்டத்தில் நடைபெற்றது ஊழலா இல்லையா என்பதற்கு சான்றாக இன்றும் கூட வீராணத்திலிருந்து சென்னை வரை அன்றைக்கு வாங்கப்பட்ட சிமெண்ட் குழாய்கள் சாலையோராமாகப் பரிதாப மாகக் கிடக்கின்றன. இந்த ஊழலை விசாரித்த சர்க்காரியா ஊழலை விஞ்ஞான முறையில் செய்திருக்கிறார் என முதல் வரை எள்ளி நகையாடினார். தமிழர்கள் கூனிக் குறுகிப் போனார்கள்.

"தமிழகம் நோக்கி தஞ்சம் புகும் ஈழத் தமிழர்கள் ஏதிலிகள் அல்ல. அவர்கள் எங்கள் விருந்தினர்கள்" என்று சட்டசபையில் கொட்டி முழக்கினீர்கள். இப்போது யார் யார் வீடுவாங்கி இருக்கிறார்கள். யார் யார் வண்டிவாகனம் வைத்திருக்கிறார்கள் என்று கணக் கெடுத்து அவர்களைக் கைது செய்து வழக்குப் போடுமாறு முதல்வர் தனது காவல்துறையை ஏவிவிட்டிருக்கிறாரே?

இது இரண்டகம் (துரோகம்) இல்லையா. இதுதான் "மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்று குறளுக்கு உரை எழுதியவர் விருந்தினர்களை நடத்தும் அழகா?

சிங்களப் படையெடுப்பால் வீடு வாசல் இழந்த தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் ஊர் ஊராகச் சென்று உணவும் உடையும் திரட்டினாரே?

தமிழக முதல்வர் என்ன செய்தார்?

இன்று கூட தமிழீழம் எதிரி படை யெடுப்பால் நெருப்பில் வேகிறது. ஒன்றரை இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து குடிக்கத் தண்ணீர் இன்றி ஒரு நேரக் கஞ்சிக்கு வழியின்றி மரநிழல்களில் வாழ்கிறார்கள். உரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னர் போல் கோட்டையில் இருந்துகொண்டு குழல் வாசிக்கின்றாரே? இது அந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?

புறநானூற்று வீரம் என்றால் ஆகா என்று மேடையில் பேசுவது எழுதுவது. அதே வீரத்தை புலிகள் போர்க்களத்தில் செய்து காட்டும் போது "எனக்கு வன்முறை பிடிக்காது" என்று சொல்லும் உங்களை உங்கள் நடையில் கோழை என்று சித்திரிப்பதில் தவறு ஏதாவது இருக்கிறதா?" "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல் வாரடி! - கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!" - "கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடீ நாளும் மறப்பாரடீ!" என்ற பாரதியின் கவிதை வரிகள் முதல்வருக்கு அச்சொட்டாகப் பொருந்துகிறதா இல்லையா?

"உருசிய குடிமக்கள் எங்கிருந்தா லும் அவர்களது உயிரையும் தன்மானத் தையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அவர்களது கொலைக்குப் பொறுப்பாளர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளையே உருசியா மேற்கொண்டுள்ளது" என உருசிய ஆட்சித் தலைவர் டிமித்திரி மித்விடெவ் தோள் தட்டினாரே? அவரிடம் இருக்கும் இனப்பற்றில் முதல்வருக்கு நூற்றில் ஒரு விழுக்காடுதானும் உண்டா? நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியுமா?

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு முதல்வர் மற்றவர்கள் மீது கல் லெறியக் கூடாது. ஏன் ஆடையையும் களையக்கூடாது! கல்லெறிந்தால் அது தனக்குத்தான் இழப்பு. ஆடை களைந்தால் அது அவருக்குத்தான் வெட்கக்கேடு.

இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். அதற்கு எல்லை இருக்காது. கீழ்க்கண்ட அவ்வையார் பாடலைை மட்டும் உங்கள் பார்வைக்கு வைத்து இப்போது விடை பெறுகிறேன்.

ஆலைப் பலா ஆக்க லாமோ அருஞ்சுணங்கன்

வாலை நிமிர்க்க வசமோ - நீலநிறக்

காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா

மூர்க்கனைச் சீர் ஆக்கலா மோ?

- நக்கீரன், கனடா.



தமிழின விடுதலைக்காக உயிரையும் மதியாமல் அயராது பாடாற்றிவரும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களை இழிவுபடுத்திய அந்த இழிமகன் யார்? தமிழகத் தமிழர்கள் இந்த இழிமகனைச் சும்மா விடக்கூடாது.

கடல்கடந்து வாழும் மலேசியத் தமிழர்களும் ஐயா நெடுமாறன் மீது ஆழ்ந்த மதிப்பும் பற்றும் வைத் துள்ளோம். அவருடைய சீரிய தமிழ் விடு தலைப் பணிகளை நன்கு அறிந் துள்ளோம். அவருடைய அரிய பணி களுக்கு துணைநிற்கும் தமிழர் பார்வை வலைப்பதிவை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

- சுப.நற்குணன் - மலேசியா



தமிழக முதல்வரின் கீழ்த்தரமான கவிதை படித்து வெட்கிப்போனேன். புலம்பெயர் தமிழர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். அவர்மீது வைத்திருந்த கொஞ்ச நம்பிக்கையையும் அவரே பாழடித்துள்ளார். திரு. நெடுமாறன் அவர்கள் இது கண்டு கலங்கத் தேவையில்லை. தமிழக முதல்வர் தன்மீதே சேற்றைப் பூசி உள்ளார். ஈழத்தமிழர்கள் நெடுமாறன் அவர்களை நன்றே அறிவார்கள்.

கி.பி. அரவிந்தன்.



கருணாநிதிக்கு உண்மையில் ஆட்சிக் கட்டிலில் தொடர விருப்பம் இல்லையென்றால்...? தமிழ்க் கல்வி, தமிழக மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, காவிரி பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை இவற்றைத் தீர்ப்பதற்கு ஆணித்தரமாக குரல் கொடுக்கலாம் அல்லவா? ஏன் டில்லிக்கு பயந்த அறிக்கையை தொடர்ந்தும் வெளியிட்டுக் கொண்டிருக்க வேண்டும்? ஆட்சியில் தொடர விருப்பம் இல்லை என்பதெல்லாம் வெறும் பொரிமாத் தோட்டி கதை. பழ. நெடுமாறன் அய்யாவின் இனமானத் தொண்டிற்கும் இன உணர்விற்கும் முன்னால் கருணா நிதியின் பணி எதுவும் அய்யாவின் கால் தூசுக்கும் பெறாது. கருணாநிதி தமிழி னத்துக்கு உதவாத புகழ்விரும்பும் அவமானச் சின்னம்!

- திரு



இதுவரை உலகத் தமிழர்கட்கு தன்மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் கருணாநிதி இந்த பித்தலாட்டத் தனத்தால் இழந்து விட்டார். இது ஒரு வரலாற்று தவறு. அய்யா நெடுமாறனின் கண்ணியம் இது போன்ற பிதற்றல்களால் இம்மி அளவும் குன்றாது. மாறாக என்றும்போல் மலைபோல் மேலோங்கியே நிற்கும்.

- காசில் ஹரிகரன்



கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைவர் நெடுமாறன் மீது மீண்டும் சேற்றைவாரி இறைத்துள்ளார். முன்பு ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறுத்தி வைக்கிறேன் என்று கலைஞர் கூறிய போது அது தமிழர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என்று தலைவர் நெடுமாறன் கூறியபோது அவர் மீது என்ன குற்றச்சாட்டுகளை கூறினாரோ அவற்றையேதான் இப்பொழுதும் கூறியுள்ளார்.

கலைஞர் கூறிய குற்றசாட்டுகளில் உண்மை உள்ளதா என்றால் மருந்துக்குக் கூட இல்லை.

இந்த நூற்றாண்டுகளில் உலகி லேயே மிகசிறந்த வீரன் தமிழ்மறவன் வேலுபிள்ளை பிரபாகரனாகும். அத் தகைய வீரனின் உருவாக்கத்தில் தலைவர் நெடுமாறன் பங்கு மிகச் சிறந்ததாகும்.

புலியை உருவாக்கிய புலி நெடுமாறனாகும் . அவர் காகிதப்புலியல்ல! புலிகளுக்கு ஆரம்பத்திலிருந்து இன்றுவரை வீடு, வீடாகச் சென்று நிதியும், மற்ற பொருள்களும் வசூலித்து புலிகளுக்கு அளித்து, கொடுத்து வருகிறார். இந்த உண்மை கலைஞர் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பது நியாயமில்லை.

புலிகள் இயக்கத்துக்கு தலைவர் நெடுமாறன் அளித்துவரும் ஆக்கமும் ஊக்கமும் தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும். இனி கலைஞர் கூறிய ஆழ்வார் கதையும் ஆதாரமற்றது. நான் காங்கிரஸ் கட்சியில் வட்ட தலைவரிலிருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வரை பல பொறுப்புகளில் இருந்து பணி யாற்றியவன். பெருந்தலைவர் காமராசர் தலைமையில் தலைவர் நெடுமாறன் அவர்கள் மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக இருந்தபோது நான் தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக இருந்தேன். காமராசர் இடத்தில் அவரின் தலைைைம சீடராக நெடுமாறன் இருந்தார்.

அதுமட்டுமல்ல எந்த முக்கிய பிரச்சினையிலும் தலைவர் நெடுமாறன் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார் காமராசர். காமராசர் இறக்கும் வரையில் அதே நிலைதான்.

மூப்பனாருக்கு துரோகம் இழைத் தார் என்று எதனால் சொல்லுகிறார் என்று புரியவில்லை. அவர் கட்சியிலிருந்து தனியாகப் பிரிந்து தனிக்கொடி ஏற் றியது துரோகம் என்றால் அந்த வகை யில் முதல் ஆழ்வார் கலைஞர்தான்.

பெரியாரிடமிருந்து 1948-ல் பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்ததிலிருந்து பதவி காப்பாற்றிகொள்வதற்கு மத்தியில் பா.ஜ.க. ஆட்சியிலிருந்தபோது ஆர்.எஸ்.எஸ். என்பது பெரியார் இயக்கம் போல ஒரு சமுதாய இயக்கம்தான் என்று கூறிய ஆழ்வாரும், பார்ப்பன பத்திரிகைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்ற பெரியாரின் கொள்கைக்கு மாறாக இன்று ஒரு தொலைக்காட்சியை ஏற்படுத்தி அதனை பார்ப்பனர் கையில் கொடுத்து அவர் களும் தமிழ் மற்றும் தமிழ் பண்பாட்டினை அழிப்பதை மிகவேகமாக செய்துவருகின்றமைக்குத் துணை போகும் ஆழ்வார் வேலை செய்பவரும் கலைஞர்தான்.

கலைஞரால் தமிழ்க்கும் தமிழருக்கும் நன்மை என்பதைவிட தீமையே அதிகம் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும்.

தலைவர் நெடுமாறன் அவர்கள் தமிழுக்கும், தமிழர்க்கும் ஆற்றிவரும் அரும்பெரும் தொண்டினையும் அதற் காக அவர் மேற்கொள்ளும் தியாகத்தை யும் தமிழ் உலகம் நன்றாக அறியும்!

கலைஞர் தமிழினம் என்பது தனது குடும்ப உறுப்பினர்களைத்தான். அவர் கூறும் தமிழ்மொழி என்பது அவருடைய கலைஞர் தொலைக் காட்சியில் பேசப்படும் மொழிதான்.

உலகிலுள்ள தமிழின மக்கள் அனைவரையுமே தன் உறவினர்கள் என கருதிக் செயல்படுவோர் தலைவர் நெடுமாறன். தமிழ்மொழி ஆக்கத்திற்கும் அவருடைய பங்கு சிறப்பானது ஆகும். பதவியில் இருப்பதாலேயே கலைஞரின் தமிழ்த் தொண்டு உயர்ந்தது என்றோ. பதவியில் இல்லாததால் நெடுமாறனின் தமிழ்த்தொண்டு குறைந்ததுஎன்றோ மதிப்பிட்டுவிட முடியாது. "தனக்கோ தன் குடும்பத்திற்கோ பாதிப்பு ஏற்படும் என்று சொன்னால் தமிழையும் தமிழ் மக்களையும் கைவிடத் தயங்கமாட்டார் கலைஞர் கருணாநிதி என்ற உண்மை உலகம் அறிந்ததே!

இராசு. நெடுங்கிள்ளி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினர்.



நெடுமாறன் அவர்கள் எழுதியிருந்தது ஒரு விமர்சனக் கட்டுரை. விமர்சனம் கடுமையானதுதான். ஆனாலும் அது விமர்சனமேயன்றி வசவு அல்ல. கடுமையான அரசியல் தவறுகளை இழைத்திருக்கும் முதல்வரைக் கடுமையாக விமர்சனம் செய்வது முறைதானே? இக்கட்டுரையில் உள்ளதை விட ஆயிரம் மடங்கு கடுமையான விமர்சனங்களை அமெரிக்க அதிபர் புஷ் எதிர்கொள்கிறார். அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் நிற்கும் மக்கெயின், ஓபாமா ஆகிய இருவருமே அன்றாடம் எதிர்கொள்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் பதிலுக்கு வாயில் வந்தபடி ஏசுவதில்லை.

இத்தனைக்கும் நெடுமாறன் அவர்களின் விமர்சனம் பொறுப்பு மிக்கதாகவும், காரண-காரியத் தொடர்பு களை விளக்கி வாதிடுவதாகவுமே உள்ளது. தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து அக்கறையெதுவும் காட்டாமல் அவ்வப்போது பரபரப்பூட்டும் நோக்கத்துடன் தமது அரசியல் ஓய்வு பற்றி அறிவிப்பு வெளியிடும் முதல்வரை அறவியல் சினத்தோடும், அளவு மீறாமலும் இடித்துரைக்க நெடுமாறன் போன்ற பெரியோர்க்கு உரிமை உண்டு. அது அவர்களின் கடமையும் கூட.

ஆனால் இந்த விமர்சனத்துக்கு விடையாக விளக்கம் எதையும் முறையாகத் தரவில்லை முதல்வர். மாறாக வசைமொழியை வாரியிறைத் துள்ளார்.

முதல்வர் கையாண்டிருப்பது வாதத்துக்கு எதிர்வாதம் என்ற முறையை அல்ல. அவரது கவிதையில் வெளிப்பட்டிருப்பது முறைகேடான ஒருமுறை. இதனை ஆங்கிலத்தில் ஹற்ற்ஹcந் bஹ் ண்ய்ய்ன்ங்ய்க்ர் என்பார்கள். அதாவது போகிறபோக்கில் சொல்லிவைப்பது. இந்தப் பாணியில் இவர் வேறுபலரையும் கூடக் கவிதை என்ற பெயரில் ஏசியுள்ளதை நாம் அறிவோம்.

"தமிழும் நானே, தமிழகமும் நானே", என்றும், "தமிழர்களின் வேலை என்னைக் கடலில் தூக்கிப்போடும் நன்றிகெட்டசெயல். என் கடனோ எனில் கட்டுமரமாக மாறி அவர்கள் மூழ்கி விடாமல் காப்பாற்றுவது," என்றும் ஓயாமல் பிரச்சாரம் செய்து, அந்தப் பொய்யுரைக்குத் தானே பலியாகி நடப் புலகத்தை அறியாமல் மக்களிடமிருந்து தனிப்பட்டுக் கிடக்கிறார் அவர்.

பெருந்தலைவர் பித்து என்றொரு மனக்கோளாறு உள்ளது. இட்லர் போன்றோர்களுக்கெல்லாம் இது இருந்தது.

இந்த மனநிலை கொண்டவர்கள் தங்களை உயர்தனிச் சிறப்பு வாய்ந்த மிகு மனிதர்களாகக் கருதிக்கொள்வார்கள். இவர்களிடம் அரசியல் அதிகாரம் சிக்கினால் நாட்டுக்குப் பெரிய கேடு விளையும். இத்தகையவர்கள் சகிப்புத் தன்மை அற்றவர்களாகவும், கலந் துறவாடலை விரும்பாதவர்களாகவும், தன்னிச்சையாகச் செயல்படுப வர்களாகவும்தான் இருப்பார்கள்.

- பேரா. மருதமுத்து



முரசொலியில் கலைஞர் எழுதியுள்ள "கவிதை"யைப் படித்தேன். மிகமிக வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

கலைஞர் தமிழ் இயக்க (திராவிட இயக்க) அடிப்படைக் கொள்கைகளை யெல்லாம் (இஹள்ண்c பங்ய்ங்ற்ள்) காயடித்து விட்டார். நீர்த்துப்போக வைத்துவிட்டார்.

கலைஞர் நம் காவிரி உரிமைக்குச் செய்த கேடுகளை எல்லாம் நான் 4 புத்தகங்களாக எழுதியுள்ளேன். 5வது நூல் அச்சாகும். கோவை ஞானி என் கட்டுரைகள் சிலவற்றை (காவிரி பற்றி) ஒரு சிறு நூலாக வெளியிட்டுள்ளார்.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புக்குரிய, ஆணையை தமிழ்நாட்டுக்கு விரோதமாக மாற்றி, வாஜ் பாயிடம் கையெழுத்துப்போட்டு, தமிழ் நாட்டுக்கு விரோதமாக மாற்றிவிட்டு, "ஆவணம் கொண்டு வந்துவிட்டேன்" எனத் தம்பட்டம் அடித்து, அந்த துரோகத்தை மறைத்தே விட்டார்.

இவர் ஊழலை அம்பலப்படுத்திய சர்க்காரியா கமிஷன் மீது, மேல் நடவடிக்கை இல்லை. காரணம் கலைஞர் இந்திராகாந்தி காலில் விழாத குறையாய்க் கெஞ்சி மேல் நடவடிக்கை இல்லாமல் செய்துகொண்டார்.

என்னுடைய எண்ணம், அந்த சர்க்காரியா அறிக்கையை அடிப்படை யாக வைத்து ஒரு பொதுநல வழக்குப் போட்டு, மீண்டும் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து ஒரு விசாரணை நடத்த வேண்டும். சேலம் கண்ணன் கொடுத்த குற்றச்சாட்டுகளில் 90 சதம் உண்மை என்று சர்க்காரியா கூறியுள்ளார்.

- பி.ஆர். குப்புசாமி,



கலைஞரின் கவிதைக்கு மறுப்பு

கல்லாதான் கற்றகவிக் கோருவமை சொல்வார்

கானமயில் தோகைவிரித் தாடிடவான் கோழி

இல்லாத அதைவிரித்தே ஆடியதாம் தானும்!

இதைப்போன்ற தேகலைஞர் கவிதையெனப் பாடும்

எல்லாமே யாப்புவழி யொழுகாத பாடல்!

இவர்தமிழைச் சிதைப்பதையார் பொறுத்தாற்ற வல்லார்?

கல்லாத மேற்கொண்டு தாமொழுகல் நீங்கிக்

கற்றறிய முனைவரெனில் அறிவுலகம் ஏத்தும்!

நெடுமாற னைத்தூற்றி யெழுதியுள்ள பாடல்

நெறிபிறழ்ந்த ஒன்றென்போம் பீடன்று கண்டீர்!

நடுநிலையில் சீர்தூக்கிப் பார்ப்பவர்க்குத் தோன்றும்

நயன்மையில்லாத் தரந்தாழ்ந்த எழுத்தென்று கொள்வர்!

கெடுமதிகொண் டாரல்லர் நெடுமாறன்! யார்க்கும்

கீழறுப்புச் செய்தறியாத் தமிழ்ச்சான்றோ னாவன்!

தொடுவானின் கீழ்தமிழர் அடிமையராய் வாழும்

துயர்நோற்ற லென்கொலிவை விடுதலைக்கே ஊறாம்!

- மருத நாடன்


Comments