பாப்பரசரும் பரமபிதாவும் சிலுவையும் பொழியும் கருணை மழை !

ஜெர்மனியைச் சேர்ந்த மரச் சிற்பக் கலைஞர் திரு.மார்ட்டின் கிப்பன் பெர்க்கர் சிலுவையில் அறையப் பட்ட தவைளை ஒன்றை மரச் சிற்பமாகச் செதுக்கிக் காட்சிப் படுத்தினார்.


அது பற்றிப் பாப்பரசர் அருட் திரு.பெனடிக்ற் கண்டனம் தெரிவித்துள்ளாராம். அவருடைய கவலை அது ஒரு கலை வேலைப் பாடு அல்ல கடவுள் நிந்தனையாம்.

சிலுவையைக் கடவுளின் அடையாளமாகக் கிருஸ்தவர்கள் பார்க்கிறார்கள், அவர்களின் மனங்கள் புண் படுத்தப் பட்டு விட்டனவாம்.

தவளைக்குப் பதிலாக மகிந்தர் வடக்குக் கிழக்கு தமிழரைத்தான் இனஅழிப்புச் சிலுவையில் ஆணி அறைந்து கொல்கிறார்.

பரிசுத்த பாப்பரசருடைய பேச்சுக்கு மறு பேச்சு நாம் பேச வரவில்லை. எமது கவலை எல்லாம் அவர் தெரிவித்துள்ள கடவுள் தத்துவம் கருணை என்பவற்றுக்கான அர்த்தம் பற்றிதே. மேலும் பூலோக அரசரான பாப்பரசரின் அருட் கருணை மழையும் பற்றியதே. எமது கவலைகளைப் பாப்பரசரிடம் எடுத்துச் சொல்ல எவரும் இல்லை.

அந்தத் தகுதி இன்றையை பாப்பரசரின் தரிசனமும் இரண்டு தடவை ஆசியும் பெற்று வந்துள்ள இலங்கை அதிபர் மகிந்தருக்கு மட்டுமே இருக்கிறது.

ஆனால் மகிந்தவோ தவளையைச் சிலுவையில் அறைந்தால் பாப்பரசரின் மனம் வெந்து நீறாகிவிடுமே என்ற கவலை கொண்டவர். அதனால் தவளைக்குப் பதிலாக மகிந்தர் வடக்குக் கிழக்கு தமிழரைத்தான் இனஅழிப்புச் சிலுவையில் ஆணி அறைந்து கொல்கிறார்.

இலங்கை அரச படைகள் நடத்திய போரின் கொடுமைக்குப் பயந்து நாவாலிப் பேதுருவானவர் தேவாலயத்தில அடைக்கலம் புகுந்து ஆண்டவரே காப்பாற்றும் என அலறித் தவித்தனர் தமிழ் மக்கள். பெண்கள் குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்கள் பல நூறு பேரின் உயிரைப் பறித்து ஊனப் படுத்தியது அரச விமானப் படையின் குண்டு வீச்சு. அப்போது பாப்பரசராய் இருந்த அரண்டாவது அருளப்பர் சின்னப்பருக்கும் அவரது அருளாசி பெற்று ஆட்சி நடத்தும் உலக அரசுகளுக்கும் இத்தனை உயிர்களின் அழிவு அற்பமாகப் போய்விட்டது.

ஏன் என்றால் அந்த மக்கள் ஆண்டவரால் சபிக்கப் பட்ட தமிழ் மக்களாக பாப்பரசருக்கும் ஏனைய உலக அரசுகளுக்கும் தெரிந்து இருக்கலாம்.

இலங்கை கத்தோலிக்க மேற்றிராணியாரும் தென்னிந்தியக் கத்தோலிக்கத் திருச்சபையும் செபம் செய்ததோடு பாவநிவர்த்தி கொடுத்து விட்டது போலாகி விட்டது. அங்கே கொல்லப் பட்வர்களின் ஆத்மாக்கள் பரமபிதாவால் இரட்சிக்கப் படாமலே போய் விட்டனரோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இராணுவப் பிடிக்குள் மடுமாதாவே மரச் சிலுவையில் அறையப் பட்டுன்ள தவளை போன்ற நிலையில் இருக்கிறார். இவை இன்னும் பாப்பரசர் அருட் திரு பெனடிக் அவர்களின் அருட்பார்வைக்குத் தெரியாதிருப்பது ஏன்?

இன்று வல்லரசுகளின் ஆசியுடன் போரை நடத்திவரும் மகிந்த அரசு பல கத்தோலிக்க அருட் பணியாளரைப் படுகொலை செய்தும் கத்தோலிக்கத் தமிழ் மக்களின் அழிவையும் நடத்தி வருகிறது. இந்த அழிவுகளைச் செய்த படியே மகிந்தரும் இதே பாப்பரசரின் அருளாசியைத் தொடர்ந்தும் பெற்றவராக இருக்கிறார்.

பல நூறு வருடப் பழம் பெரும் புகழ் வாய்ந்த கத்தோலிக்கத் தேவாலயமான மடுமாதா கோயில் மீது இராணுவ நடக்கை நடத்திப் பாழடித்துச் சாதனை படைத்துள்ளார் மகிந்தர்.

இன்று இராணுவப் பிடிக்குள் மடுமாதாவே மரச் சிலுவையில் அறையப் பட்டுன்ள தவளை போன்ற நிலையில் இருக்கிறார். இவை இன்னும் பாப்பரசர் அருட் திரு பெனடிக் அவர்களின் அருட்பார்வைக்குத் தெரியாதிருப்பது ஏன்?

ஒரு வேளை மடுமாதாவும் பாவப் பட்ட தமிழரின் பாவப் பட்ட அன்னையாய் பாப்பரசரின் அருட் கண்களுக்குத் தெரிகிறராரோ என்னமோ ?

நிலங்களை ஆழ உழுவது போல் உங்கள் மனங்களை ஆழ உழுங்கள் என்றார் தேவ குமாரன் ஏசு. முன் பின் அறியாத பரதேசியையும் உங்களைப் போலவே நேசியுங்கள் என்றார். அடுத்தவனை நோகும் முன்னர் உன் கண்ணில் உள்ள புரையை நீக்கிவிடு என்றார்.

இவை எல்லாம் ஆலயத்தில் காணிக்கை செலுத்தி மண்டியிட்டு மன்றாடும் எம் போன்றவருக்கான போதனைகளா ?

பாவிகளையும் இரட்சியும் எனப் பகிரங்கமாகப் பிராத்தனைகளை உலகெங்கும் நடத்திவரும் திருச்சபையே ஏதும் அறியாத அப்பாவி மக்கள் இனத்தை அழித்து வரும் அரசுக்கு ஆசிவழங்கி ஆதரவு அளிப்பது ஏன் ? ஆண்டுகள் பலவாய் நடக்கும் போர் பற்றி நீதி நியாயம் வழங்க மறுப்பது எந்தத் தேவனின் நீதி ?

அப்படியான தேவனும் தேவனின் திருச்சபையும் உலகுக்கு வழங்கும் சேவை என்ன தேவை என்ன? ஆதரவற்ற மனங்களின் வேதனை தாங்காது நிற்கும் கேள்விகள் இவை.

பணம் இருந்தால்தான் வைகுண்டத்திலும் கைலாயத்திலும் இடம் கிடைக்கும் என்ற நினைப்பில் மனித மனங்கள் வரண்டு போய் உள்ளன

இன்றைய உலகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த உலகம் அல்ல. அரக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய்க் கடலுக்குள் ஓளித்தான் , திருமால் மீன் வடிவம் எடுத்துப் போய் அவனுடன் போராடிப் பூமியை மீட்டு வந்தார் எனக் கூறி இனியும் பயமும் பக்தியும் வளர்க்க முடியாது. ஆதாமையும் ஏவாளையும் படைத்தார் என்ற கதை டார்வினின் கண்டு பிடிப்புகள் வந்த பின் செல்லாக் காசாகிக் கிடக்கிறது. எனவே மதங்கள் மனங்களை உழ முடியாது போர் ஆயுதங்கள் செய்து விமானக் குண்டு எறிகணை வீச்சுக்களை நடத்திக் கடவுளைக் காட்ட நினைக்கினறன. அதற்கு இங்கு நடக்கும் போர்கள் அவசிய தேவைகளாக உள்ளன.

பணம் இருந்தால்தான் வைகுண்டத்திலும் கைலாயத்திலும் இடம் கிடைக்கும் என்ற நினைப்பில் மனித மனங்கள் வரண்டு போய் உள்ளன.இந்த அளவுக்குத் திருச்சபையும் மற்ற மத பீடங்களும் மனித மனங்களைப் பாழ் படுத்தி விட்டன. இந்த நிலையில் தவளை என்ன தமிழன், அரபியன், ஆபிரிக்கன், அமெரிக்கன், சீனன், இந்தியன் என எவனாயினும் எந்த உயிரும் பணம் உள்ள வரைதான் வாழ்வு என்பதாக உள்ளது.

அதனால்தான் ஈழத் தமிழினம் இன்று அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அந்த இனத்தின் வாழ்வுக்கான நியாயமான ஆசையும் அபிலாசையும் பரமபிதாவின் கருணைக்கு பாத்தியதை இல்லை என்பதாகவே புனித பாப்பரசரின் அருட் பார்வையும் கத்தோலிக்கத் திருச்சபையின் பார்வையும் உள்ளன.

எந்தத் தலைமையைத் தமிழினம் தனது உயிர் காப்புக் கவசமாக நம்பி வாழ்கிறதோ அதே உயிர்க் கவசமாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கத்தோலிக்கத் திருச்சபையின் அருளாசியுடன் ஆட்சி நடத்தும் உலக அரசுகள் பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தி முழுத் தமிழினமுமே பயங்கர வாதிகளாக்கி அடக்கு முறைக்கும் அழிவுப் போருக்கும் உள்ளாக்கப் படுகிறார்கள்.

தனது மக்களின் அடிப்படை மனித உரிமைகளையும் மறுத்து இராணுவத்தை ஏவி இன அழிப்பை நடத்தும் அரசை அமைதி வழியில் அரசியல் தீர்வுக்கு உடன் பட இந்த அரசுகளும் பாப்பரசரும் திருச்சபையும் வற்புறுத்தாது போரை ஆதரிப்பது எந்த வகையில் பரமபிதாவுக்குசச் சித்தமாக இருக்க முடியும்?

பாப்பரசரின் பிரதி நிதியாய் இருக்கும் கொழும்பில் உள்ள பேராயரும் போரில் சிக்கியுள்ள மக்களின் பரம்பரையான வாழ்விடங்களில் வாழும் உரிமையை மறுப்பது போல் நடக்கும் அக்கிரமப் போரை நிறுத்த நினைக்காது அவர்கள் பரம்பரையாய் வாழ்ந்து வரும் இடங்களை விட்டு அகதிகளாக ஐ.சீ.ஆர்.சீ., யூ.என்.எச் சீ.ஆர். நிறுவனங்களின் கண்காணிப்பில் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுவது ஆன்மீக சேவையா அரசியலா ?

யூ.என்.எச்.சீ.ஆர் ஐ.சீ.ஆர்.சீ. நிறுவனங்களின் ஆதரவில் இயங்கும் முகாம்கள் சிறைச்சாலைகளாக இருப்பது தெரியவில்லையா?

இன்று கொழும்புப் பேராயர் காட்டும் மனித நேயமும் செய்யும் அருட்பணியும் தமிழரை அகதிகள் ஆக்கித் தஞ்சம் புகவைத்துப் புனர் வாழ்வு மையங்களில் இரு கைகளையும் ஏந்தி உங்கள் முன்னும் உலக மக்கள் முன்பும் மண்டி இடவைத்துப் பார்க்கும் தாராள மனமா?

இவைகளைப் பார்க்கும் பொழுது ஆபிரிக்கக் கவிஞன் ஒருவனின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. “நீங்கள் எங்கள் தேசத்துக்கு வந்த பொழுது உங்கள் கைகளில் பைபிளும் எங்கள் கைகளில் நாடும் இருந்தது. இப்போ உங்கள் கைகளில் எங்கள் நாடும் எங்கள் கைகளில் உங்கள் பைபிளும் இருக்கின்றன ,’’ என அந்தக் கவிஞனின் கவி வரிகள் எத்தனை தூரம் உண்மை என்பது முழு உலகும் அறியும்.

எங்கள் இனம் எவர் முன்னும் மண்டி இட்டு நிற்க விரும்பாது. மானம் அழிந்த பின் வாழாமை கோடி பெறும் என்று சொல்லி வளர்த்தவள் தமிழ் மக்களின் தாயான ஒளவைப் பாட்டி.

வீர மறவர் காவியம் வடித்த உண்மைக் கதைகள் நிறைய எமது வரலாற்றில் உண்டு. மகாவம்சமும் சூளவம்சமும் எழுதி வைக்கவில்லை என்பதால் எமக்கு வம்சமோ வரலாறோ இல்லை என்பதாகி விடாது.

இன்று மேதகு பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் எழுதும் வீரவரலாறு எமது பழைய கதைகளின் மீளாக்கம்தான். திருத்திய வடிவம் ! திருந்திய வடிவம் ! உலகைத் திரும்பிப் பார்க்க வைக்கிற வடிவம்!

- ஈழப்பிரியன்-


Comments