அந்த இரவு, விடியவே இல்லை!

கடந்த வெள்ளிக்கிழமை விடியலை உற்சாகமாக எதிர்கொண்டார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினிக்கு, வேலூர் பெண்கள் சிறையே பளிச்செனத் தெரிந்தது. சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீது அன்றுதான் விசாரணை. தமிழக அரசு தனக்குச் சாதகமான முடிவை நிச்சயம் அறிவிக்கும் என்று எதிர்பார்த்தார் நளினி!



சகோதரர் பாக்கியநாதனின் இரண்டு வயது மகளை வேலூர் சிறைக்கு அழைத்து வரச் சொல்லிஇருந்தார். குட்டி மருமகளின் மழலைக் குழைவை அதிகமாகவே ரசித்தார். ''அரித்ராவைத்தான் (நளினியின் மகள்) பார்த்து ரெண்டரை வருஷமாச்சு. ஆனா, சீக்கிரமே அவகூடவே இருக்கிற மாதிரி தீர்ப்பு வந்துரும்'' என்றவரின் கண்களில் ஒளி!

ஆனால், அந்த ஒளி மதியத்துக்கு மேல் கண்ணீர்த் துளியாக மாறிப் போனதுதான் சோகம். நளினி தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளித்த தமிழக அரசு, 'நளினியை விடுதலை செய்ய முடியாது' என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இருண்ட முகத்துடன் மீண்டும் சிறையில் தனது தனி அறைக்குள் முடங்கிக்கொண்டார் நளினி.

26 வயதில் சிறை சென்ற நளினிக்கு இப்போது வயது 43. தனிமைக்குத் தன் இளமையைக் காவு கொடுத்துவிட்டவர், நடுத்தர வயதையேனும் தன் செல்ல மகளுக்காகச் செலவிட விரும்பினார். ஆனால், மீண்டும் சிறைக் கம்பிகளை வெறித்தபடி நாட்களைக் கழிக்கத்தான் அவருக்குக் கொடுத்துவைத்திருக்கிறது. 'இன்னும் 20 ஆண்டுகள்கூட நளினியைச் சிறையில் வைத்திருங்கள். ஆனால், அதன் பிறகாவது விடுவிப்பீர்களா என்பதைத் தெளிவாகக் கூறுங்கள்!' என்பதுதான் அவரது ரத்த சொந்தங்களின் கண்ணீர்க் கதறல்!

13.06.1991, நள்ளிரவு 11 மணி. சென்னை சைதாப்பேட்டையில் வந்து நின்ற விழுப்புரம் பேருந்திலிருந்து அமைதியாக இறங்கினார்கள் அந்த ஆணும் பெண்ணும். சென்னை 'ஸ்டேஷன் 95'-ல் இருந்து தமிழீழம் 'ஸ்டேஷன் 910'-க்கு வொயர்லெஸ் செய்தியில், 'ஆபீஸர் பெண்மணி' என்று அழைக்கப்படும் நளினியும் 'இந்து மாஸ்டர்' என்று அழைக்கப்படும் முருகனும்தான் அந்த ஜோடி. காத்திருந்து கைது செய்தது சிறப்புப் புலனாய்வுக் காவல் துறை. மறுநாள் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, நளினி உயிருக்காகப் போராடிக்கொண்டு இருந்தார். தன் உயிருக்கு அல்ல, தனது வயிற்றில் வளரும் உயிருக்காக. காலங்கள் கடந்த நிலையில், இப்போது லண்டனில் வாழும் நளினியின் மகள் அரித்ரா(மேகரா)வுக்கு வயது 16.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 41 பேரில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிக் காத்திருந்தார்கள். 'அவர்களை மன்னித்து, தூக்குத் தண்டனையை நிறுத்திவையுங்கள்' என்று ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு சோனியா காந்தியே கடிதம் அனுப்பினார். ஆனாலும், இதுவரை நளினியின் தூக்கு மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.

'ஆயுள் தண்டனை என்றால் 14 வருஷங்கள்தானே. 2004-ல் தன்னை விடுதலை செய்துவிடுவார்கள்' என்ற நளினியின் காத்திருத்தலுக்குப் பலன் இல்லை.

விடுதலைப் புலிகளின் வொயர்லெஸ் தகவலில் 'ஆபீஸர் பெண்மணி' என்று நளினி அழைக்கப்படக் காரணம், அவர் அப்போது அடையார் அனபாண்டு சிலிகான் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் வேலை பார்த்தவர் என்பதுதான். நளினியின் குடும்பம், சென்னை மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்தது. சங்கரநாராயணன்- பத்மா தம்பதியரின் மூன்று வாரிசுகளில் மூத்தவர் நளினி. புலிகள் அமைப்பு தமிழகத்தில் சுதந்திரமாக உலா வந்தபோது, அந்த அமைப்பினரைத் தங்கவைத்து ஆதரித்த எத்தனையோ குடும்பங்களில் நளினியுடையதும் ஒன்று. அந்தச் சமயம் இந்த வீட்டுக்குள் ஐக்கியமானவர் முருகன். புலிகள் அமைப்பின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி முருகனுக்கு நளினி மீது ஏற்பட்ட ஈர்ப்பு, காதலாக மாறியது. அந்தச் சமயம்தான் நளினியின் வீட்டில் தங்க வந்தனர் சுபா, தணு ஆகியோர்.

ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன் புலிகளின் வொயர்லெஸில், 'இந்து மாஸ்டர் வீட்டில் அவள்தான் மூத்த பெண். நெருக்கமாகப் பழகி வருகிறேன். நம்மைத் தவிர வேறு யாருக்கும் நமது நோக்கம் தெரியாது. ஆட்சியைப் பிடிக்கப் போகும் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இது என்று அவளிடம் சொல்லியிருக்கிறேன்' என்று தகவல் பரிமாறப்பட்டதாகச் சொல்கிறது சி.பி.ஐ.

பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு வந்து தன்னைச் சந்தித்தபோது, இந்தக் கதையைச்சொல்லித் தான் அழுதிருக்கிறார் நளினி. 'உங்கள் அம்மா எங்களை மன்னித்துக் கருணை காட்ட வேண்டும் என்று எழுதிய கடிதம்தான் இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஆறுதல் அளித்த ஒரே விஷயம்' என்று அப்போது பிரியங்காவிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார் நளினி.

'நான் ஏமாற்றப்பட்டவள்!' - நளினி அடிக்கடி உதிர்க்கும் வாசகம் இது. ஆனால், அதையே நினைத்து சோர்ந்துபோகாமல் சிறைத் தருணங்களை சிறப்பாகவே கழித்திருக்கிறார் நளினி. சாதாரண அலுவலக கிளார்க்காகச் சிறை சென்ற நளினி, இப்போது எம்.ஏ. மற்றும் எம்.சி.ஏ. பட்டதாரி. ஃபேஷன், டெய்லரிங், ஹோம் சயின்ஸ், கிராஃப்ட், முதலுதவி, யோகா போன்ற பாடங்களில் டிப்ளமோ பட்டங்களையும் பெற்றிருக்கிறார். 'பொழுதுபோக்குக்காக இந்தப் படிப்புகளை நான் படிக்கவில்லை. விடுதலையான பிறகு, யார் தயவையும் எதிர்பார்க்காமல் நானே என் மகளைக் காப்பாத்தணும். அதற்குத்தான் இத்தனை தொழிலைக் கத்துக்கிட்டேன். இதில் நிச்சயம் ஏதோ ஒண்ணு என்னைக் காப்பாத்தும்!' என்பதும் தற்போது நளினியின் நம்பிக்கை. பொதுவாகப் பெண் கைதிகள், சிறை வளாகத்தில் ஏதேனும் வேலைகள் பார்ப்பார்கள். ஆனால், அதில் நளினிக்கு ஆர்வம் இல்லை. எப்போதும் மற்றவர்களிடமிருந்து தனித்தே இருக்கிறார். படித்து முடித்த பாடங்களை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருக்கிறாராம். காலையில் திறந்தவெளிகளில் உலவவிட்டு, மாலையில் அறையில் அடைக்கும் நடைமுறைதான் நளினிக்கும். ஆனால், தனி அறை.

நளினியும் முருகனும் சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை வளாகத்துக்குள் சந்திக்கிறார்கள். காவலர்களின் கண்காணிப்பில்தான் உரையாட வேண்டுமென்றாலும் அதுவே பெரிய ஆறுதல்.

நளினி, செங்கல்பட்டு சிறையில் இருந்தபோது பிறந்தவள் அரித்ரா. இரண்டு மாதக் கருவாக சிறைக்குள் வந்த அரித்ரா, 2 வயது வரை நளினியுடன் சிறையிலேயே இருந்தாள். பிறகு, முருகனின் அம்மா, தன் பேத்தியை இலங்கைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். 6 வயது வரை அங்கிருந்த அரித்ராவை, முருகனின் சகோதரர்கள் லண்டனுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இலங்கையில் இருக்கும்போது ஆண்டுக்கு ஒருமுறை அப்பா, அம்மாவைப் பார்க்க வேலூர் சிறைக்கு வருவது அரித்ராவின் வழக்கம். கடைசியாக இரண்டரை வருடத்துக்கு முன் அம்மாவைச் சந்தித்திருக்கிறாள். 'அம்மா சீக்கிரமே வந்துடுவேன். நாம இனிமே சேர்ந்தே இருப்போம்!' என்று நளினி சொல்ல, 'நீ லண்டனுக்கு வந்துடும்மா. அங்கே பத்திரமா நான் உன்னைப் பார்த்துக்குறேன்!' என்று அழைத்திருக்கிறாள் அரித்ரா.

ஆனால், அரித்ரா நினைத்தது போல நளினி விடுதலை ஆகவில்லை. நளினி எதிர்பார்த்துக் காத்திருக்க, அரித்ரா வேலூருக்கு வரவில்லை. காரணம், அரித்ராவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அனுமதிக்கு விசா கிடைக்கவில்லை.

'அரித்ராவின் அப்பா முருகன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று சொல்லி விசா மறுக்கிறார்கள். ஆனால் முருகனின் அப்பா, அம்மா, சகோதரிகளுக்கு விசா தருபவர்கள், மகளுக்கு மட்டும் ஏன் மறுக்க வேண்டும்' என்பது உறவினர்களின் கவலை. மகளைப் பார்க்க முடியாத கவலையில், தனது அம்மா பத்மாவை மாதம் ஒருமுறையாவது தன்னைப் பார்க்க வரச் சொல்லி இருக்கிறார் நளினி.

65 வயதான பத்மா, சென்னையில் மகன் பாக்கியநாதனுடன் இருக்கிறார். அப்பா சங்கரநாராயணன், திருநெல்வேலியில் வாழ்கிறார். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் இவர். நளினியின் நெருங்கிய உறவினர்கள் பட்டியலை போலீஸ் வாங்கிவைத்துள்ளது. அவர்களைத் தவிர, மற்றவர்கள் யாரும் நளினியைப் பார்க்க அனுமதிப்பதில்லை.

மே 26-ம் தேதியும் ஜனவரி 21-ம் தேதியும் குடும்பத்தினர் நளினியைச் சந்திப்பதை வழக்கமாகக்கொண்டுள்ளார்கள். முன்னது, நளினியின் பிறந்தநாள். அடுத்தது, மகள் அரித்ராவின் பிறந்த நாள். இந்த இரண்டு நாட்களில்தான் சந்தோஷமாக இருப்பாராம் நளினி.

இந்த 17 வருடங்களில் நளினி வெளியே வந்தது ஒரே ஒருமுறைதான். (நளினி - பிரியங்கா சந்திப்பு நிகழ்ந்தது சிறைக்கு வெளியே ஓர் இடத்தில் என்கிறார் சுப்பிரமணியன் சாமி.) சகோதரர் பாக்கியநாதனின் திருமணம் சென்னையில் நடந்தது. கல்யாண மண்டபத்தில் மூன்று மணி நேரம் மட்டும் இருக்கலாம் என்ற அனுமதியுடன் வந்தார் நளினி. அன்றுதான் நெருங்கிய உறவினர்கள் அனைவரையும் பார்த்தார். அந்த சந்தோஷத்தின் தொடர்ச்சியாக அன்றைய திருமண ஆல்பத்தை சிறையில் வைத்திருக்கிறார். 'குடும்பம் என்னோடு இருப்பது போல இருக்கிறது' என்பாராம் ஆல்பத்தைப் பார்க்கும்போதெல்லாம்!

நெல்லையில் அப்பா; சென்னையில் அம்மா, சகோதரன், சகோதரி; கணவன் அடுத்த சிறையில்; மகள் லண்டனில்; மாமனார், மாமியார் இலங்கையில் என நளினியின் குடும்பம் கலைந்து உருக்குலைந்துகிடக்கிறது.

நளினிக்கு மட்டும், அந்த இரவு இன்னும் விடியவே இல்லை!

நன்றி: ஆனந்த விகடன், Sept 10, 2008



Comments