இராணுவத் திட்டங்களை விட முக்கியத்துவம் மக்களின் வாழ்நிலைப் பிரச்சினைகளுக்கே

இலங்கை இனப்பிரச்சினையும் அதனால் வெடித்துள்ள குரூரமான உள்நாட்டுப் போரும் இப்போது மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளன.

எண்ணிப்பார்க்க முடியாத மனிதப் பேரவலக் கொடூரம் உருவாகும் ஆபத்து ஏதுநிலை புலப்படுகின்றது.

இந்த நிலைமையின் மோசமான தன்மையைப் புரிந்துகொண்டுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமைகள், இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காகத் தமது அவசரக் கூட்டம் ஒன்றை அடுத்துவரும் சில நாட்களுக்குள் நியூயோர்க்கில் கூட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

வன்னியில் யுத்தம் தீவிரமடைந்திருக்கிறது. இப்பத்தியில் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியமை போன்று அண்மைக்கால யுத்தத்தினால் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் ஏதிலிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு யுத்தம் தொடர்ந்து மென்மேலும் தீவிரமடைந்து வருவதால் அகதிகளின் எண்ணிக்கை மேலும் பல்லாயிரக்கணக்கால் உயரும் அச்ச நிலை உருவாகியுள்ளது.

இந்த அகதி மக்களின் அவசர அத்தியாவசிய மனிதாபிமானத் தேவைகளை விரைந்து நிறைவு செய்வதில் உள்நாட்டு வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனங்களும் ஐ.நா.அமைப்புகளும் அதீத பங்காற்றி வந்தன.

போர் மூர்க்கமான கட்டத்தை எட்டி ஏதிலிகளின் அவசர மனித நேயப் பிரச்சினைகள் என்றுமில்லாதவாறு உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் இச்சமயத்தில்தான், அவர்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவுசெய்யும் தொண்டர் அமைப்புகளைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து கூண்டோடு காலி பண்ணியிருக்கின்றது அரசு.

இதனால் வன்னியின் மீது அரசு தொடுத்துள்ள பயங்கர யுத்தத்தின் விளைவாக அங்கு ஏற்படும் மோசமான மனிதாபிமானப் பிரச்சினை, தொண்டர் அமைப்புகள் வெளியேற்றப்பட்டமையால் இன்னும் மிக மோசமான கட்டத்தை எட்டும் என்று அஞ்சப்படுகின்றது.

இந்தப் பின்புலத்திலேயே வன்னியின் மனிதாபிமான நிலைவரம் குறித்து ஆராயும் நோக்குடன் இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் (தற்சமயம் ஒன்றியத்துக்கு பிரான்ஸ் தலைமை வகிப்பதால் அந்த நாடு) ஆகியன அவசரக் கூட்டம் ஒன்றை நியூயோர்க்கில் அடுத்த வாரத்தில் நடத்தவிருக்கின்றன.

வன்னியிலிருந்து உள்நாட்டு வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளையும், ஐ.நா.அமைப்புகளின் பிரதிநிதிகளையும் வெளியேற்றிவிட்டு இப்போது, அங்கு "புலிகள் நச்சுவாயு ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றார்கள்' என்றும், தாங்களும் நினைத்தால் புலிகள் பயன்படுத்தும் நச்சு ரக ஆயுதங்களை விட அதிக நச்சு வீரியமுடைய ஆயுத ரகங்களைப் புலிகளுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்றும் பிரகடனப்படுத்துகின்றது அரசு.

இவை, நிச்சயமாக இணைத்தலைமைகளின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கும் என்று கருதலாம்.

ஒருபுறம் மனிதப் பேரவல நெருக்கடி.

மறுபுறம் நச்சுவாயு ஆயுதங்களை யுத்தத்தில் சம்பந்தப்பட்ட ஒரே தரப்போ அல்லது இரு தரப்புகளுமோ பயன்படுத்தலாம் என்ற ஆபத்து நிலைமை.

இந்த இரண்டு சிக்கல்களையும் சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதும், அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவதுமே இணைத் தலைமை நாடுகளின் தற்போதைய அவசரக் கூட்ட முயற்சியின் உள்நோக்கமாக இருக்கும் என்று கருதலாம்.

இதேசமயம்

""ஐ.நாவின் அல்லது உள்நாட்டு, வெளிநாட்டுத் தொண்டர் அமைப்புகளுக்கு ஏற்றவாறு இலங்கை அரசு தன்னுடைய இராணுவ நிகழ்ச்சித் திட்டங்களை மாற்ற முடியாது '' என்று இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், ஜனாதிபதிக்கு அடுத்து பாதுகாப்பு விடயங்களில் அதிக செல்வாக்கு உடையவரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை அவரது கூற்று சரியாக இருக்கலாம். ஆனால் அப்பாவிப் பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் அவர்களில் லட்சக்கணக்கானோரை மிக மோசமான மனிதப் பேரவல மற்றும் பேரழிவுக் கொடூரத்துக்குள் தள்ளிக்கொண்டு தமது இராணுவ நிகழ்ச்சித்திட்டத்தை அவர் முன்னெடுப்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்ற யதார்த்தத்தையும் அவர் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, ஐ.நா.மற்றும் உள்நாட்டு வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் அல்ல, அரசின் இராணுவ நிகழ்ச்சித்திட்டம் அல்ல, பல லட்சக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர் மற்றும் வாழ்நிலைப் பிரச்சினைகள் பற்றிய நிகழ்ச்சித் திட்டமே அதி விசேடமாக முக்கியமானது என்பதை இணைத் தலைமை நாடுகளின் நியூயோர்க் கூட்டம் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கலாம்.

அதுவும், பொதுநலவாய அமைப்பு நாடுகளின் சந்திப்புக்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க் விஜயம் செய்யும் சமயத்தில் இக்கூட்டம் நடைபெறுவதால், எந்த நிகழ்ச்சி நிரலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலை இணைத் தலைமைகள் ஏதேனும் மார்க்கத்தில் அவருக்கும் தெளிவாகத் தெரியப்படுத்தக்கூடும் என்றும் நம்பலாம்.


Comments