தமிழிசை குறித்து சிறு கண்ணோட்டம்

உலக இசை வரலாறு கிரேக்க நாட்டிசையின் தொடக்கத்திலிருந்தே ஆராயப்படுகின்றது. கி.பி. 15 ஆவது நூற்றாண்டிற்குப் பின்பு ஐரோப்பியர்கள் ஒற்றைச் சுரங்கங்களால் ஆக்கப்படும் பண்ணிசை (Melodic) இசைக்கும் முறையை விடுத்துப் பல சுரங்களை இசைக்கும் (Polyphony) முறைக்குச் சென்றனர். இதனால் கிரேக்க இசையின் இலக்கணங்களைப் பற்றி பின்னால் அவர்களால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இராசி மண்டலங்கள் குறித்து (Zodiac) ஏன் பேசுகின்றனர் என வியப்படைகின்றனர். பண்டைய கிரேக்க இசைக்கு அடிப்படையாக அமைந்தது தமிழிசையே என்பதை அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்து கின்றன.

தமிழிசை குறித்த இன்றைய ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்தவர் ஆபிரகாம் பண்டிதர் ஆவார். இவரைத் தொடர்ந்து சுவாமி விபுலாநந்தர் (யாழ்நூல்) இராமநாதன் (சிலப்பதிகார இசை நுணுக்க விளக்கம்) சாம்பமூர்த்தி (South Indian Music) சுந்தரம் (தமிழிசைக் கலைக் களஞ்சியம்) போன்றோர் தமிழிசை ஆய்வுக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர்.

பரத நாட்டியம் என்பது தமிழர் நடனமே என்பது இன்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கர்நாடக இசை என்பதும் தமிழர் இசையே என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடரும் ஆய்வுகள் தமிழிசையே உலகின் முதல் இசை என்பதையும் மெய்ப்பிக்கும். இந்த விடயத்தையும் தமிழிசையின் ஆழ அகலத்தையும் தொட்டுக்காட்டவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. இதில் வரும் விடயங்கள் ஓலை சஞ்சிகை (சூலை, மாசி 2008), சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள் எனும் சேலம் செயலட்சுமியின் நூல் ஆகியவற்றிலிருந்து பெரும்பாலும் மாற்றமின்றி எடுத்தாளப்பட்டுள்ளன.

முத்துச்சாமி நாடாருக்கும் அன்னம்மாளுக்கும் சாம்பவர் வடகரை எனும் ஊரில் 02.08.1859 இல் ஆபிரகாம் பிறந்தார். இவர் 31.08.1919 இல் மறைந்தார். கர்நாடக சங்கீதம் எனும் இசை மரபு பழந்தமிழ் இசை மரபே என்ற எண்ணம் ஆபிரகாம்; பண்டிதருக்கு ஏற்பட்டது. அவர் சிலப்பதிகாரத்தை ஆராய்ந்தபோது, அதில் வானநூலில் குறிப்பிடப்படும் இராசிப் பெயர்கள் இசையைக் குறிப்பிட வருவது கண்டு ஆச்சரியமடைந்தார். மருத்துவம், சோதிடம், வான் நிலைச் சாத்திரம் ஆகியவற்றில் அறிவு கொண்டிருந்த பண்டிதர் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள வட்டப்பாலை, இராசிச் சக்கரம் பற்றிய பகுதிகளையும் சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்ற நூல்களையும் ஆய்ந்தபோது அங்கு அரைச்சுரம், காற்சுரம், நுண்சுரங்கள் குறித்து திட்டவட்டமாக இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளதைக் கண்டுகொண்டார்.

சங்கீத ரத்னநாமம், சங்கீதபாரியாதன், இராகவிபோதம், சுரமேளகலா நிதி முதலிய வடமொழி நூல்களில் ஒரு இசுதாயியில் 22 சுருதிகளுள்ளன என்றே கூறப்பட்டுள்ளது.

பண்டிதர் இராகங்களில் நுட்ப சுருதிகள் வருவதைக்கண்டு தமிழிசை 12 சுரங்களிலோ, 22 சுருதிகளிலோ கட்டப்படாது என்றும் 24, 48, 96 போன்ற நுட்ப சுருதிகள் இருக்க வேண்டும் என்றும் ஆய்வு முறையாக நிறுவுவதில் வெற்றிகண்டார். பழந்தமிழ் மக்கள் ஒரு இசுதாயியிலுள்ள 12 சுரங்களை ச, ப முறையாகவும் ச, ம முறையாகவும் சுர ஞானத்தைக் கொண்டு கிரகசுர மாற்றில் பல பண்களை உண்டாக்கிக் கானம் பண்ணினர். பழந் தமிழ் நூல்கள் பேசும் ஆயப்பாலை முறை இதுவே எனப் பண்டிதர் கண்டுபிடித்தார்.

நமது பழந்தமிழ் நூல்களில் ஏழ்பெரும்பாலை என அடிக்கடி கூறப்படுகின்றது. சிலம்பில் கூறப்படும் வட்டப்பாலை முறையில் ஏழ்பெரும் பாலைகளை செம்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, மேற்செம் பாலை, படும்மலைப்பாலை, செல் வழிப்பாலை, விரிம்பாலை என அமைத்துக்காட்டுவதில் பண்டிதர் வெற்றி பெற்றார்.

ஆபிரகாம் பண்டிதர் இந்த ஏழு பண்களையும் வட்டப்பாலை முறையில் இசையின் 12 சுரத்தானங்களை 12 இராசி வீடுகளில் கொண்டு வட்டத்தை 12 உட்பிரிவுகளாகப் பிரித்தார். அதாவது, அரைவட்டம், கால்வட்டம் என்று குறுக்காக அவற்றில் 12 சுரத்தானங்களை அமைத்து ஏழ்பெரும் பாலைகளைக் கண்டு பிடித்துக் காட்டினார்.

எடுத்துக்காட்டாக வட்டப்பாலை குறித்து வரும் சூத்திரத்திற்கு அமைவாக சுர நிலைகளை நிறுத்தினால் அதாவது குரல் (ச) இடப இடத்திலும் துத்தம் (ரி) கடகத்திலும் கைக்கிளை (க) சிம்மத்திலும் உழை (ம) கோலாகிய துலாத்திலும் இளி (ப) தனுசிலும் விளரி (த) கும்பத்திலும் தாரம் (நி) மீனத்திலும் இடம்பெறும். இந்தப் பாலையின் நிரல் செம்பாலைப் பண்ணைக் குறிக்கின்றது. செம்பாலைப் பண்ணே முதற்பண் என்றும் கூறப்பட்டுள்ளது. இது அரிகாம்போதி எனப்படுகின்றது. சிலர் முதற்பண் சங்கராபரணம் என்று கூறுவர். இது குறித்துச் சர்ச்சை முழுமையாகத் தீரவில்லை.

இதற்கான சூத்திரமும் இராசி வட்டமும் கீழே தரப்பட்டுள்ளன.

'ஏத்தும் இடபம் அலவனுடன் சீயங்

கோற்றனுக் கும்பமொடு மீனமிவை - பார்த்து குரன் முதற்றார மிறு வாய்க் கிடந்த

நிரலேழும் செம்பாலை நேர்"

பண்டிதரால் தமிழிசை குறித்து எழுதப்பட்ட 'கருணாமிர்த சாகரம்" எனும் நூல் தமிழிசை குறித்த ஓர் ஒப்பற்ற நூலாகும்.

கர்நாடக இசையானது பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே அந்தப் பெயர் பெற்றது. புரந்தரதாசர் என்ற வைணவப் பெரியார் கர்நாடக மாநிலத்திற்தோன்றி இசைக்குரிய அடிப்படைப் பயிற்சிகளை அலங்காரம், கீதம், சுரம், யதி முதலியவைகளை ஆக்கிவைத்ததால் அவரையே கர்நாடக சங்கீதத்தின் பிதாமகன் எனப் பிழையாக அழைக்கும் வழக்கம் தோன்றியது.

வடமொழியிலும் தெலுங்கிலும் இசை குறித்து நூல்கள் தோன்றின. இந்த நூல்கள் ஏழிசைப் பிறக்கும் முறை, பண்கள் பிறக்கும் முறை பற்றிய அடிப்படைக்கொள்கைகள் ஒன்றையும் கூறாமல் இருப்பதைக் காணமுடியும். இவற்றிற்கான வேர்களைத் தமிழ் இலக்கியங்களில் இலகுவாகக் காணமுடியும். புரந்தரதாசரே இசைப் பாரம்பரியம் மிகப் பழமையானது எனக் கூறியுள்ளார்.

இதேபோல் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் வேங்கடமதி என்பார் அவரது மேளகர்த்தாத் திட்டத்தில் ரிசபத்திற்கு h,ரி,ரு என்றும் காந்தாரத்திற்கு க.கி.கு. என்றும் சுரக் குறிப்புக்களைக் குறிக்கும் முறையை ஏற்படுத்தினார்.

மேலும் தானே இதனைக் கண்டுபிடித்ததாகவும் கூறினார். ஒரு சுரத்தில் நான்கில் ஒரு பாகக்கூறுகளை உயிரெழுத்து மூலம் உணர்த்தும் வழக்குத் தமிழ் நாட்டில் இருந்தது. குடுமியாமலைக் கல்வெட்டில் ஒரு சுரம் நான்காகப் பகுக்கப்பட்டு ர, ரி, ரு, ரெ என்றவாறு குறிக்கப்பட்டுள்ளதைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்தக் கல்வெட்டு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவமன்னன் மகேந்திரன் காலத்ததாகும். குடுமியாமலைக் கல்வெட்டில் ஆ.ஈ.ஊ.ஏ (ஏழிசைக்கு சமமான உயிரெழுத்துக்கள்) ரா, ரி, ரு, ரே, (ரீன் நான்கு வகை கள்) கா, கி, கூ, கெ (கவின் நான்கு வகைகள்) தா, தீ, தூ, தே (தவின் நான்கு வகைகள்) எனும் குறிப்புக்கள் உண்டு.

ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழர்; பண்பாடு மிகவும் இன்பம் பயக்கத் தக்கது.

'வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு

குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்

ஆடும் என்றிவை ஏழிசை ஓசை-பிங்கலந்தை நிகண்டு

தமிழிசையில் ஐந்திசை கொண்ட (Penta Tonic) பண்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.

'கிளை எனப்படுவ கிளக்கும் காலைக்

குரலே இளியே துத்தம் விளரி

கைக்கிளை என ஐந்தாகும் என்ப"

என சிலப்பதிகாரம் உரையிற் கூறப்படும் மேற்கண்ட சூத்திரத்தின் படி குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை, ச, ப, ரி, க, ம என்ற ஐந்து சுரங்கள் கிடைக்கின்றன. இந்தச் சுரங்கள் மோகனம் என்ற அழகிய பண்ணை உருவாக்குகின்றன. பழம்பெரும் நாகரிகங் கொண்ட சீன நாடு இந்த ஐந்திசைப் பண்களைப் போற்றுவதோடு அந்த இசையில் எள்ளளவும் மாற்ற இன்னும் உடன்படாது இருக்கின்றது.

கூங், இட்சி, சாங்;, யூ, கியோ என அவர்கள் குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளையை அழைக்கின்றனர். இவற்றுள் சில சொற்கள் தமிழ்ச் சொற்களை ஒத்திருப்பதையும் காணமுடியும்.

தமிழர்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்து வளர்ந்து செழிப்புற்ற தமிழிசை கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பின் வீழ்ச்சியுற்று அதன் சிறப்புக்கள் பல மறைந்து தாழ்வுற்றது. தமிழிசைக்குச் சொந்தம் கொண்டாட வேறு பலர் முன்வந்தனர்.

இன்று மேலைநாடுகளில் சிறப்பாக நடத்தப்படும் கூட்டு வாத்திய இசை அமைப்பு முறை மேனாடுகளில் செயற்படத்தொடங்கியதிற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்க காலத்தில் இசைக்கருவிகளின் கூட்டு இசையை ஆமந்திரிகை, பல்லியம் எனத் தமிழர் அழைத்து வந்தனர்.

இன்று உலக இசை அரங்கிலே தமிழிசை சிறப்பு இடம்பெற்றிருப்பதற்கு காரணம் ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பே அதுவும் அதன் இலக்கணமும் மிகுந்த வளர்ச்சி பெற்றிருந்ததால் தான் எனக்கூறும் பண்ணிசைக் கலாநிதி சிவபாலன் இவ்வாறான தமிழிசையே உலகின் முதல் இசை என்பது நன்கு பெறப்படும் எனக் கூறுகின்றார்.

குறிப்பு:- அரிகாம்போதி, நடன பைரவி, இருமத்திமத்தோடி, சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி, கல்யாணி ஆகிய ஏழ் பெரும் இராகங்களே தென்னக இசையில் 2000 ஆண்டுகட்கும் முன்னர் தோன்றிய ஆதி ஏழ்பெரும் இராகங்கள். இராகங்களின் வரலாறு இவ்வாறு தொடங்குகிறது. முழுப்பெரும் பண்களுக்கு ஆதியில் ~யாழ்| என்றும் பின்னர் ~பாலை| என்றும் இன்று ~மேளகர்த்தா இராகம்| என்றும் பெயரும் வழங்கி வருகின்றது. (தகவல் தமிழிசைக் கலைக் களஞ்சியம்)

- யோ.செ.யோகி -

வெள்ளிநாதம் (29.08.08)

Comments