தவறு இழைக்கிறார் கருணாநிதி


"எமது சகோதரர்களான ஈழத் தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் ஈவிரக்கமற்ற அரக்கத்தனமான மனிதநேயமற்ற முறையில் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு இந்திய அரசு இராணுவ உதவியையும் ஆயுதங்களையும் தாராளமாக வழங்கி வருகின்றது.

""எனவே, இதற்குப் பிறகும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி மௌனம் காக்கக்கூடாது. உடனடியாகத் தனது மௌனத்தைக் கலைத்து, இலங்கைக்குப் படையை அனுப்பும் மத்திய அரசை அதற்காக எச்சரிக்க வேண்டும்.

""குண்டு மழைக்கு நடுவினிலும், குருதி மழை நடுவினிலும் நின்று தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும்.''

இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர் ராமதாஸ் நேரடியாக வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார்.

தமிழக முதல்வரின் காதில் இந்தக் கோரிக்கை விழுமா என்று கேட்டால், பதில் சந்தேகம்தான்.
ஈழத்தமிழர் விவகாரத்தில் ஏதோவெல்லாம் நடந்தேறுகின்றன. ஆனால், அதில் தமக்கு ஏதும் தொடர்பில்லை என்பதுபோல அதில் பட்டும் படாமலும் ஒதுங்கிக் கிடக்கின்றார் தமிழக முதல்வர்.

புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டமையை ஒட்டி ஒரு நான்கு வரிக் கண்ணீர் அஞ்சலி எழுதி, அதனால் வந்த எதிர்ப்புகளுக்கு அஞ்சி இப்போது துவண்டுவிட்டார் போலும் கலைஞர் கருணாநிதி.

இலங்கை விவகாரத்தில் பிடித்த பிள்ளையார் போன்ற அவரது அசையாத மௌனம், பலரையும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்காக நீதி வேண்டிப் போராடும் தமிழகப் பிரமுகர்கள் பலரையும் வியப்புக்குள் ஆழ்த்தி நிற்கின்றது.

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பப்போய் அது, புலிகள் ஆதரவு நிலைப்பாடாக அர்த்தப்பட்டுவிட்டால், அது தமக்கும் தமது ஆட்சிக்கும் சிக்கல் எதையும் உருவாக்கிவிடும் என்ற அச்சம் காரணமாக இந்தப் பிரச்சினைகளை எல்லாம் கண்டும் காணாமலும் இருப்பவர்போல நடந்து, ஒதுங்கிவிடுகிறார் அவர் என விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

""தமிழர்களுக்கு ஒரு தனிநாடு; அது தமிழீழ நாடு!'' என்று தாம் எதிரணியில் இருந்தபோது எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் முழங்கிய கலைஞர்தான்

இன்று இலங்கைத் தமிழர்களுக்குப் பேரவலம் நிகழ்கையில் பெருமௌனம் பேணுகின்றார்.

ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக முன்னர் ஐந்து உறுதிமொழிகளை வழங்கியிருந்தவர் கலைஞர் கருணாநிதி.

"தமிழீழம் மலர ஆதரவு, தமிழர்களுக்கு நிலையான உரிமை, நிரந்தரப் பாதுகாப்பு, ஈழத் தமிழர்களுக்கு அடைக்கலம் தருவது நமது கடமை, தமிழினத்தைப் பாதுகாக்க எந்தத் தியாகத்துக்கும் தயார்!' என்பவையே அந்த உறுதிமொழிகள்.

அப்படி சத்தியம் செய்தவர்தான் இன்று ஈழத் தமிழர் பிரச்சினையில் மௌனம் காக்கின்றார் என டாக்டர் ராமதாஸ் சுமத்தும் குற்றத்தில் தவறில்லை.

ஈழத் தமிழரைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இந்தியா நேரடியாகவே உதவுகின்றது என்பது எப்போதோ அம்பலமாகிவிட்டது.

அத்தகைய அழிவு நடவடிக்கைக்கு இந்தியா, உதவுவதைத் தடுக்காமல், பார்த்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டே டாக்டர் ராமதாஸ் போன்ற சில தரப்புகளால் முன்வைக்கப்படுகின்றன.
அது தவறு. இவ்விடயத்தில் அதிலும் விடப்பெரிய குற்றத்தைக் கலைஞர் இழைத்து வருகின்றார் என்பதே உண்மையாகும்.

இந்தியாவில் இன்று காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சியில் நின்று, நிலைத்து, நீடிக்கின்றது என்றால் அதற்குப் பிரதான காரணகர்த்தர் கலைஞர் கருணாநிதிதான். அவரது தயவில்தான் புதுடில்லியில் காங்கிரஸ் அரசு கோலோச்சுகிறது.

அதுவும், தமிழகம் தாண்டி, தென் மூலையில் இருக்கும் இலங்கையின் விவகாரத்தை இப்படித்தான் கையாளவேண்டும் என்று, தனது தயவில் ஆட்சியைக் கொண்டிழுக்கும் புதுடில்லி மத்திய அரசை வழிப்படுத்துகின்ற உரிமையும், தகுதியும், செல்வாக்கும் உடையவராக இன்றைய தமிழக முதல்வர் உள்ளார்.

அந்நிலையில், ஈழத் தமிழருக்கு எதிரான போராட்டத்தில் இந்தியப் படைகளை நேரடியாகச் சம்பந்தப்படுத்தும் மத்திய அரசின் செயற் போக்குக்குக் கலைஞரும் பொறுப்பே.

அவர் இந்த விடயத்தில் வெறுமையாகப் பார்த்திருந்து வாளாவிருந்து தவறிழைக்கிறார் என்பதிலும் பார்க்க, தவறுக்கு குற்றத்துக்கு நேரடியாகப் பொறுப்பு என்ற அளவில் குற்றவாளியாகிறார் எனக் கூறுவதுதான் பொருத்தமானதாகும்.

ஆட்சி, அதிகார சொகுசு அவரை ஈழத் தமிழர் பால் நியாயம் செய்ய விடாமல் தவறிழைக்க வழி செய்து நிற்கிறது. அதுதான் உண்மை.


Comments