இராணுவத் தீர்வு தான் அரசாங்கத்தின் அரசியல் தீர்வு

கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையில் ""பிரபாகரனும் பொட்டு அம்மானும் சரணடைய வேண்டும். அவர்கள் ஆயுதங்களுடன் சரணடைந்த பின்னர் தான் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். அரச படைகள் களமுனையில் விடுதலைப்புலிகளை முற்றாகத் தோற்கடித்து விடுவர்.

பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் உயிருடன் பிடித்தால் இந்தியாவுக்கு அனுப்புவேன். அவர்களை நாம் தலையெடுக்க விட்டு வைக்கப்போவதில்லை. அவர்களுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முடியும் என்று எண்ண வேண்டாம். உண்மையில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான தேவை இருக்கப்போவதில்லை' என்று கூறிவைத்தார்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் சரணடைவார்கள் என்பது நடைபெறக்கூடிய காரியமல்ல என்பதை எந்தவொரு அரசியல் அவதானியும் அறிவர். இங்கு ஜனாதிபதி ராஜபக்ஷ முன்னுக்குப் பின் முரணாகக் கருத்து வெளியிட்டிருப்பதைக் காணலாம்.

எதுவாயினும் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வே ஒழிய அரசியல் தீர்வில் நம்பிக்கையில்லை என்பதே அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்பது மிகத் தெளிவாகக் காணமுடிகிறது.

மறுபுறத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சிங்கப்பூரில் தெற்காசிய கற்கைகள் நிலையத்தில் உரையாற்றுகையில், ""இலங்கை அரசாங்கம் ஒரு அரசியல் தீர்வு காண்பதில் உறுதியாயுள்ளது.

அதேநேரத்தில் நியாயமும் நீதியுமானதொரு தீர்வினை நடைமுறைப்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கு இராணுவ நடவடிக்கை தேவை என்பதில் அரசாங்கம் குறியாயுள்ளது. "யுத்த ஜனாதிபதி' என யாராவது வரையும் சித்திரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்பதை சூழ்நிலைகள் உணர்த்துகின்றன' என்று கூறியுள்ளார்.

அவர் மேலும், தனதுரையில்; ""நவம்பர் 2005 இல் பதவியேற்ற ஜனாதிபதி ராஜபக்ஷ விடுதலைப்புலிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு அயராது பாடுபட்டவர். அதாவது, அவர் ஒரு அரச தூதுக்குழுவினை இரு தடவைகள் ஜெனீவாவுக்கும் ஒரு தடவை ஒஸ்லோவுக்கும் அனுப்பிவைத்தவர்.

ஆனால், அவை எதுவும் பலனளிக்கவில்லை. விடுதலைப்புலிகளால் மாவிலாறு அடைக்கப்பட்ட பின்னரே இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது' என்றும் கூறியுள்ளார்.

மேற்கூறியவாறு ஜெனீவா மற்றும் ஒஸ்லோ சென்ற தூதுக்குழு ஒரு அரசியல் தீர்வுத் திட்டமோ, வேறு ஆக்கபூர்வமான யோசனையோ இன்றி வெறுங்கையோடு சென்றிருந்தது என்பது பகிரங்க இரகசியமாகும்.

மாவிலாறு பிரச்சினையைப் பொறுத்தவரை, தமிழ் பகுதிக்கென திட்டமிடப்பட்டிருந்ததாகிய ஒரு குடிநீர் விநியோகத் திட்டம் மாற்றாந்தாய் மனப்பான்மையில் கைவிடப்பட்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையாகவே மாவிலாறு அடைக்கப்பட்டதாக அன்று விடுதலைப்புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பின்பு அதனைத் திறந்து விடுவதற்கு யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவினர் சகிதம் விடுதலைப்புலிகள் முற்பட்டபோது, அரசாங்கம் குறிப்பாக ஜே.வி.பி., ""ஜாதிக ஹெல உறுமய' போன்ற சக்திகளின் தூண்டுதலின் பேரில் அந்த முயற்சியை முறியடித்ததோடு, அதனைத் தம்மால் திறந்துவிட முடியுமென கங்கணம் கட்டி நின்று இராணுவத் தாக்குதலை மேற்கொண்டதன் மூலம், மீண்டும் யுத்தத்தை முடுக்கி விடுவதற்குப் பயன்படுத்திக் கொண்டது.

அமைச்சர் பீரிஸ் ஆலாய்ப் பறந்து செய்யும் பிரசாரம்

கடந்த சில மாதங்களாகச் சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகிய இலங்கைக்கான ஜீ.எஸ்.பி.+ வர்த்தக சலுகையைக் கைநழுவ விட்டுவிடக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நாடி அமைச்சர் பீரிஸ் ஆலாய்ப்பறந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.

பிரித்தானிய வர்த்தக துணை அமைச்சர் கரெத் ஈவான்ஸ் என்பவரோடு பீரிஸ் அண்மையில் நடத்திய கலந்துரையாடலின்போது, ""யுத்தநிறுத்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் இலகு விமானங்களைச் சுவீகரிப்பதற்கும், ஆட்சேர்ப்புக்கும் பயன்படுத்தியதாகவும் கிழக்கில் இன்று விடுதலைப்புலிகள் அல்லாத ஒருவர் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் விடுதலைப்புலிகள் தம்மை மக்களின் ஏகபிரதிநிதிகள் என மார்தட்டி வந்த நிலைப்பாடானது தகர்க்கப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்ததோடு நின்றுவிடாமல் இலங்கை எப்போதுமே பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை மேசைக்கு விடுதலைப்புலிகளைக் கொண்டு வருமுகமாக, அவர்களைப் பலவீனப்படுத்துவதற்காகவே யுத்தம் தொடர்கிறது எனவும் கூறிவைத்த அதே மூச்சில் ஜீ.எஸ்.பி.+ சலுகை இலங்கைக்கு வழங்கப்பட வேண்டியது அவசியம் எனவும் வேண்டியிருந்தார்.

பிரித்தானிய அமைச்சர் மல்லோ பிறவுண் பிரித்தானிய தமிழருடன் சந்திப்பு

அதேவேளை, பிரித்தானியாவில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழருடனான சுமுக சந்திப்பு ஒன்றின்போது உரையாற்றியவராகிய பிரித்தானிய வெளிநாட்டமைச்சர், மல்லோ பிரவுண் இலங்கை சிவிலியன் மக்களின் நிலைமைகள் பற்றிக் குறிப்பிடுகையில்;

""எந்தவொரு நாட்டிலென்றாலும் சரி, சிறுபான்மை மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள் என பிரித்தானிய அரசாங்கம் கருதுகிறது. இலங்கை அரசாங்கம் எவ்வாறு நடந்துகொள்கிறது தமிழ் சமூகத்தினரை எவ்வாறு நடத்திவருகின்றது என்பதில் நாம் "மிகவும் கரிசனை கொண்டுள்ளோம்.

இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு எம்முன்னுள்ள அனைத்து வழிவகைகளையும் கையாண்டு வருகிறோம்' என சூளுரைத்திருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு அன்றி, அரசியல் தீர்வே காணப்பட வேண்டும் எனவும் அதனை ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளரிடம் தான் கூறிவைத்ததாகவும் பிறவுண் தெரிவித்தார்.

புலிச்சாயம் பூசுபவர்கட்குப் பதிலடி

இவ்வாறாக சர்வதேச மட்டத்தினரால் கருத்துக்கள் தெரிவிக்கப்படும் போது, அவை விடுதலைப்புலிகளுக்குச் சார்பானதாக அரச தரப்பினராலும் பேரினவாத சக்திகளாலும் பரிகசிக்கப்படுவது வழக்கமாகி வந்துள்ளதைக் காணமுடிகிறது.

சர்வதேச மட்டங்களில் உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களை "கொயபல்ஸ்' பாணியில் முன்னெடுப்பவர்களே தமக்கு பிடித்தமில்லாத கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் மீது புலிச்சாயம் பூசுவதில் முனைப்பாயுள்ளனர்.

இத்தகைய சக்திகளுக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையிலேயே வெளிநாட்டு உறவுகள் மற்றும் அயல்துறைக்கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் பெனிற்றா ஃபெரேரோ வல்டனர் அம்மையார் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

அதாவது, ""ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிரானதொரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது முட்டாள்த்தனமானதாகும். இலங்கைக்குச் சாதகமான நிகழ்ச்சி நிரல் தான் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உண்டு.

அதனை நாம் இலங்கையின் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் (அமெரிக்கா, ஜப்பான், நோர்வே அடங்கலான) இணைத் தலைமை நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். அது தான் இலங்கையில் அனைத்து மக்களுக்கும் பயனளிக்க வல்ல சமாதானத் தீர்வு கிட்டுவதுடன், சமாதானமும் சுபீட்சமும் எட்டப்படுவதற்கான ஒட்டுமொத்தமான நிகழ்ச்சி நிரலாகும்' என பெனிற்றா அம்மையார் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், தாம் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் அல்ல, அவ் அமைப்பானது ஒரு பயங்கரவாத இயக்கமென 2006 இல் ஐரோப்பிய ஒன்றியம் பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால், அது தமிழருக்கு எதிரான செயல் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இலங்கைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் விஜயம் செய்து ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாடல்கள் நடத்தியவர். ஆனால், சிங்கள கடும்போக்காளர்கள் ""வெள்ளைப்புலிகள்' வார்த்தை ஜாலங்களில் கைதேர்ந்தவர்கள் என்ற வகையில் முடிச்சுகள் போடுவதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அமைச்சர் பீரிஸ் போலவே அமைச்சர் விதாரணவும் பிரசாரம்

வெளிநாடுகள், சென்று அமைச்சர் பீரிஸ் மேற்கொண்டு வரும் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக மேலே குறிப்பிட்டுள்ளேன். அதுபோலவே, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் செயற்பட்டு வருகின்றார்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் என்ற வகையில் அவர் இந்தியா, தென்னாபிரிக்கா, அயர்லாந்து அடங்கலாக பல நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

அண்மையில் கூட சென்னையில் ""பாதுகாப்பு ஆய்வுக்கான மையம்' நடத்திய செயலமர்வின் போது அவர் உரையாற்றுகையில்,

""இலங்கை அரசாங்கத்தின் மூலோபாயமானது இராணுவ நடவடிக்கையை முன்னோடியாகக் கொண்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதாகும். அவ்வாறான இருமுனை அணுகுமுறை பெரிதும் பயனளித்துள்ளதென அவர் கூறியுள்ளார்.

கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் விரட்டப்பட்ட பின் தேர்தல் நடத்தப்பட்டதை விதாரண உதாரணமாக எடுத்துக்காட்டினார்.

வடக்கிலும் அரச படைகள் துரித கதியில் முன்னேறி வருவதாகவும் எடுத்துக்கூறிய அவர் அரசியல் தீர்வு தொடர்பாகக் குறிப்பிடுகையில், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் என்ற வகையில் தீர்வுக்கான 90% விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் அங்கே கூறிவைத்தமை கேலிக்கூத்தானது மட்டுமல்லாமல் பச்சையான ஏமாற்றுவித்தை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஏனென்றால் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசியக்கட்சியோ ஜே.வி.பி.யோ பங்குபற்றுவதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒருபோதும் அழைப்பே விடுக்கப்படவில்லை. மற்றும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அரச உயர்மட்டத்தினரால் ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதில்லை.

அடுத்து, வாஷிங்டன் இலங்கை தூதரகத்தில் புலம்பெயர்ந்த இலங்கையர் மத்தியில் நேற்று முன்தினம் உரையாற்றிய வெளிநாட்டமைச்சர் ரோகித்த போகொல்லாகம, ""இலங்கையில் இன முரண்பாடுகளோ, மொழிப் பிரச்சினையோ இல்லை.

உண்மையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான முயற்சியில் மொழி ஒரு பிரதான கருவியாக உள்ளது' என்று கூறியுள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய்ப் பிரசாரம் என்பது கண்கூடு.

கிழக்கில் 15 வருடகாலமாக மக்கள் ஜனநாயகத்தை அனுபவிக்க முடியாமலிருந்தது. அங்கே அண்மையில் ஒரு முதலமைச்சர் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கே ஜனநாயகம் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் போகொல்லாகம கூறியிருந்தார்.

கிழக்கில் இன்று ஜனநாயகம் மலர்ந்துவிட்டதென்றால் நாடு முழுவதிலும் எவ்வளவு ஜனநாயகம் நிலவுகின்றது என்பதைக் கண்டுகொள்ள முடியவில்லை.

வ. திருநாவுக்கரசு

Comments

Thamizhan said…
பொய்யிலே பிறந்து பொய்யிலே
வளர்ந்த புத்த வெறியனே!
உன் பொய்யும் புரட்டும் உலகம்
உணர்ந்திட உதவியவனே
கன்விலே வாழ்ந்து கனவுகள்
காணும் கயவனே
உலகம் புரிந்து கொண்டுள்ளது
தமிழீழத்தின் அவசியந்தன்னை.