தாய்மடி தாங்குவோம்

கனடா மண்ணிற் தோற்றம் பெற்றுப் புத்தொன்பது ஆண்டுகளை நிறைவுசெய்யும் வானம்பாடிகள், தாயக விடுதலைக் கனவுகளைச் சுமந்தவர்களாக ஆண்டுதோறும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

உலகிலுள்ள பல்லின மக்களின் இசைக் குழுவினரையும் விஞ்சும் வகையில் அவர்கள் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அவர்களது பாடல்களிற் பெரும்பாலும் விடுதலைப் பண்களே இடம்பெற்றிருக்கும்.

மூச்சிலும் பேச்சிலும் நிறைந்திருப்பது தமிழீழ விடுதலை பற்றிய விடயங்களன்றி வேறெதுவும் கிடையாது.

இத்தகு உணர்வாளர்களாகத் திகழும் மேற்படி இசைக்குழுவினர் இந்நிகழ்ச்சிகளினூடாகத் தமது பிறந்தகத்து மக்களுக்கு அரிய, பல தொண்டுகளை ஆற்றி வருகின்றனர்
~வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

என்னும் வள்ளுவன் வாக்கியத்திற்கமையத் தமக்கென எதுவித பலனும் கருதாது இயங்கிவரும் இக்கலைஞர்கள், இன்று அரச பயங்கரவாதத்தின் கொடுமையினால் அல்லற்பட்டு உடமைகள் அத்தனையும் இழந்து கொடும் வெயிலினதும், கொட்டும் மழையினதும் தாக்கங்களுக்கு மத்தியில் காடுகளிலும், வீதியோரங்களிலும், மரங்களின் கீழும் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில், கவளச் சோற்றுக்கும் வழியின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் தங்கள் உடன்பிறப்புக்களின் அவலநிலை போக்கும் பொருட்டு ~தாய்மடி தாங்குவோம் என்னும் நிகழ்ச்சியை இருபத்தேழு மணித்தியாலங்களாகத் தொடர்ந்து நிகழ்த்த முன்வந்துள்ளனர்.

இவ்வுலக மாந்தரை மட்டுமன்றி, வானுறையும் எம்முயிர்க் கண்மணிகளாம் மாவீரத்; தெய்வங்களின் செவிகளையம் சென்றடையும் வண்ணம் இவர்களது இசை வெள்ளம் எங்கும் ஓங்கி ஒலித்து வருவது கண்கூடு.

இத்துடன் ஐந்தறிவு படைத்த உயிரினங்களின் உணர்வுகளையும் தட்டியெழுப்பும் வண்ணம் அதி உன்னத ஒலியமைப்பில் இசையமுதினை வழங்கும் ஆற்றலும் இவர்க்குண்டு.

உறக்க நிலையில் இருக்கும் மரம், செடிகொடி, புல்பூண்டு பூவினங்கள் யாவும் இவர்களது இசையொலி கேட்டால் சிலிர்த்தெழுந்து தாமும் இசைந்து அசைவியக்கத்தில் இன்பம் துய்க்கும்.

தம்மை ஈன்றெடுத்த தாயவளாம் தமிழீழ அன்னையின் பெருமைகள், அவளது விடுதலைக்காய்த் தம்மை ஈகம்செய்து அன்னவளின் மடி மீது துயில் கொள்ளும் அன்புச்செல்வங்கள், உலகில் யர்ருக்குமே ஒப்புவமை கூறமுடியாத் தன்னிகரிலாத் தலைவன், அண்ணனின் சுட்டுவிரல், கண்ணசைவிற்காய்க் காத்திருக்கும் அனைத்துப் போராளிகள், இவர்களுக்கான பாக்களை உணர்வோடு ஒன்றிப்பாடுதலே இவர்தம் ஆற்றலாகும். இடையிடையே இளஞ் சிட்டுக்களை மகிழ்விப்பதற்காகத் திரையுலகப் பாடல்களையும் வழங்குவர்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளும் முடக்கப்பட்ட நிலையில் கஞ்சிக்கும் வழியின்றி உணர்வுகள் கலங்க, ஒட்டிய வயிற்றில் உறைவிடமின்றி ஓடியலையும் எம்மின்னுயிர் உறவினரின்; துயர் துடைக்க நாமும் எமக்கான பங்களிப்பாக இந்நிகழ்ச்சியிற் கலந்து கொள்வதன்மூலம் கடமையை ஆற்றுவோமாக!

வன்னிக்கு இடம்பெயர்ந்த மக்களை வஞ்சனை எண்ணத்திற் தமது பகுதிகளுக்குள் வரும்படியும், வாழ வழிசமைப்பதாகவும் அரசு அறிக்கை விடுத்து ஆசை காட்டிய போதிலும், ~மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரி மானொத்த எம்மினம் அசையாது சாவினைத் துணிந்து வரவேற்றுத் திடமான உள்ளத்திற் தமது தலைவன் மீது நம்பிக்கை வைத்து அங்கேயே உறுதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அவ்வாட்சியினரின் வேண்டுதலையும் மறுத்துத் துன்ப துயரங்களின் மத்தியில் எதிர் நீச்சலடித்தப் போராடிக் கொண்டிருக்கும் எம்மக்களது தாயகப் பற்றினையும் ஈகை உணர்வினையும் கண்டு உலக நாடுகளே வியந்து நிற்கின்றன.

கோழைத்தனத்தில் சுயநலம் மிக்கவராய் எம்மைக் காக்கவென வெளிநாடுகளுக்குப் பயணித்து, இன்று சிறப்பான வாழ்வில் நாம் திளைத்திருக்க, எமது வீடுவளவு, நிலம், மண் யாவற்றையும் தமது உயிரீய்ந்து காத்து வருபவர்கள் எம்முற்றவர்களன்றோ? இவ்வாறான போற்றுதற்குரிய எமது சொந்தக்காரருக்குக் கடமை செய்யும் காலம் இதுவாகும்.

இதற்கான வாய்ப்பாகச் சாதனையாக அன்றிப் பெரும் சோதனைகளில் மூழ்கியிருக்கும் எம் மக்களின் வேதனை போக்கவென வானம்பாடி இசைக்குழுவினர் நடத்தவிருக்கும் இருபத்தேழு மணித்தியாலத் தொடர் நிகழ்ச்சியில் நாமும் கலந்து எமது பங்களிப்பை ஆற்றுவோமாக!

- பவித்திரா (கனடா) -


Comments