இலங்கை இனச்சிக்கலில் தமிழக முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வரும் மௌனத்தை பத்து நாட்களுக்குள் கலைக்காவிட்டால் தான் மேற்கொள்ளப் போகும் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,
ஈழத் தமிழர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துக!
தமிழகத் தமிழனே தூங்காதே!
ஈழத் தமிழனைக் காக்கப் புலியெனப் புறப்படு!
சிறிலங்கா அரசுக்கு இந்தியாவே! ஆயுத உதவி வழங்காதே
ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஆற்றிய உரை:
தமிழீழத்தில் தமிழன் கொல்லப்படுகிறான். தாய்த் தமிழகத்தில் தமிழன் தூங்குகிறான். தாய்த் தமிழகத்துக்குத் தலைமையேற்கிற முதல்வர் கலைஞரோ அமைதி காக்கிறார்.
ஈழத்தில் குண்டுகள் வெடிப்பது கலைஞரின் காதுகளுக்குக் கேட்கவில்லையா?
ஈழத்தில் உள்ள தாய்மார்கள் கண்ணீர் வடிப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?
இன்னும் ஏன் அமைதி காக்கிறீர்கள்?
ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகத்தான் அமைதி காக்கிறீர்களா?
உங்களுக்கென்ன ஆட்சி பெரிதா?
நீங்கள் பார்க்காத ஆட்சியா?
இப்போதும் 5 ஆம் முறையாக ஆள்கிறீர்கள். 6 ஆம் முறையாகக் கூட நீங்கள் ஆட்சிக்கு வர ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இலங்கை இனச்சிக்கலில் உறுதியான முடிவெடுங்கள்.
உங்களை வாழ்த்த 8 கோடித் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்.
நான் முதலில் உங்களை வந்து வாழ்த்துவேன்.
இந்திய அரசையே நீங்கள்தானே வழிநடத்துகிறீர்கள். அவர்கள் எப்படி உங்கள் ஆட்சியைக் கலைப்பார்கள்?
அப்படியேக் கலைத்தாலும் நாங்கள் சும்மா விட்டு விடுவோமா?
இலங்கை சிக்கலை ஆராய தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா என அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அனுப்பி வைக்கலாம். குழு அனுப்பப்படும் நாளில் இருந்து சண்டை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அக்குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கட்டும்.
தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி ஈழத் தமிழர்களை ராஜபக்ச அரசு படுகொலை செய்வதைக் கண்டித்தும்-
தனித் தமிழீழத்தை ஆதரித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்- அதை நடுவண் அரசு ஏற்றுக் கொள்ளும்.
இலங்கை இனச்சிக்கலில் பத்து நாட்களுக்குள் கலைஞர் முடிவெடுக்காவிட்டால் ஆயிரக்கணக்கான கருஞ்சட்டை வீரர்கள் தீவுத் திடலில் கூடி ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கிறோம் என்று அறிவிப்பார்கள்.
அதன் பிறகும் மெளனம் கலையவில்லையென்றால்- பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலேயே உண்ணாநிலை மேற்கொள்வார்கள்.
அவர்களைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்-
இளைஞர்கள்- மகளிர்
என அனைத்துத் தரப்பினரும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்வார்கள்.
பாகிஸ்தான் - சீனா ஆகிய நாடுகளிடமிருந்து சிறிலங்கா ஆயுதம் வாங்குவதாலும் புதுவை காந்த அலைத் தொலை அளவி- ராடர் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்படுகின்றன.
தமிழர்கள் துரத்தி துரத்திக் கொல்லப்படுகிறார்கள்.
இனியும் முதல்வர் கலைஞர் அமைதி காக்கக்கூடாது.
இங்குள்ள தமிழர்கள் கலைஞர் தலைமையில் ஒன்றாதல் கண்டு எங்கோ மறைந்தார் பகைவர்கள் என்ற செய்தி வர வேண்டும். அவ்வாறு வந்தால் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்றார் அவர்.
பா.ம.க. தலைவர் கோ.க.மணி, திரைப்பட இயக்குநர் சீமான், இந்திய நாடாளுமன்ற பா.ம.க. உறுப்பினர் மூர்த்தி, வேல்முருகன் உள்ளிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவையின் பா.ம.க. உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கருஞ்சட்டையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Comments