சுவிற்சர்லாந்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் சுவிஸ் வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் சுவிற்சர்லாந்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் 1500க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். கவனயீர்ப்பு நடவடிக்கை நடைபெற்ற ஏக காலத்தில், வன்னி மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் முகமாக இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மனித அவலத்திற்குள் தள்ளப்பட்டும், ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் மெளனமாக இருப்பது ஏன்? என கலந்துகொண்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலர் கிருபாகரன், சுவிஸ் தமிழர் பேரவையின் துணைத்தலைவர் சண் தவராஜா, செயலர் நமசிவாயம், பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பத்மநாதன், இராமலிங்கம் உட்பட பலர் உரையாற்றியிருந்தனர்.
கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமநேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியின் செயலரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 9வது கூட்டத்தொடர் தற்பொழுது நடைபெற்று வருவதால்இ இன்றைய கவனயீர்ப்பு நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது.
Comments