இந்தியாவை அம்பலப்படுத்திய வான்புலிகளின் தாக்குதல்!


வவுனியா படைத் தலைமயகத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான், தரைத் தாக்குதல் பல மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் படையினர் சிறிலங்காப் படைகளுக்கு களத்தில் நின்றே ஆதரவாக செயற்படுவது அம்பலப்படுத்தப்பட்டது இந்தத் தாக்குதலில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு.

கடந்த 9ஆம் திகதி விடுதலைப் புலிகள் வவுனியா படைத் தலைமையகத்தின் மீது மூன்று வழிகளில் தாக்குதலை தொடுத்தனர். கரும்புலிகளின் கொமாண்டோத் தாக்குதலும், வான்புலிகளின் குண்டுவீச்சும், கிட்டு பீரங்கிப்படையணியின் எறிகணை வீச்சுத் தாக்குதலும் நடைபெற்றன.

அதிகாலை 3 மணியளவில் கரும்புலிகள் வவுனியா படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவினர். இவர்களுக்கு உதவியாக வான்புலிகளின் இரண்டு விமானங்கள் குண்டு வீச்சை மேற்கொண்டது. சரமாரியான எறிகணை வீச்சையும் விடுதலைப் புலிகள் நடத்தினர். 20இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட, 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராடர் நிலையம், ஆயுதக் கிடங்கு உட்பட பல நிலைகள் அழிக்கப்பட்டன.

வான்புலிகள் நான்கு குண்டுகளை வீசியதாக படைத் தரப்பு கூறுகின்றது. ஏனோ இம்முறை ஒரு குண்டு வெடிக்கவில்லை என்று படைத் தரப்பு சொல்லாமல் விட்டுவிட்டது.

ஆனால் அதற்கு பதிலாக பெரிய “குண்டு” ஒன்றை சிறிலங்காவின் வான்படைப் பேச்சாளர் போட்டார். வான்புலிகளின் வானூர்த்தி ஒன்றை விரட்டிச் சென்ற தமது வானூர்த்திகள் அதனை முல்லைத்தீவு வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தி விட்டதாக “குண்டு” போட்டார். ஆனால் அந்தக் “குண்டு” உண்மையிலேயே வெடிக்காமல் நமுத்துப் போய்விட்டது.

சிறிலங்காவிடம் உள்ள வானூர்த்திகள் மிகவும் நவீனமானவை. காணொளிக் கருவிகளை கொண்டிருப்பவை. இரவில் நடத்துகின்ற குண்டு வீச்சுக்களைக் கூட துல்லியமாக பதிவு செய்யக் கூடிய நவீன கருவிகள் அவைகள். வன்னியில் சிறிலங்காவின் வானூர்த்திகள் நடத்துகின்ற குண்டு வீச்சுக்களை காணொளியில் பதிவு செய்து அவற்றை சிறிலங்காவின் படைத் தரப்பு பலமுறை வெளியிட்டுள்ளது.

வான்புலிகளின் வானூர்த்தி ஒன்றை சிறிலங்காவின் வான்படை சுட்டு வீழ்த்தியிருந்தால், அது பற்றிய காணொளியை நிச்சயமாக சிறிலங்கா அரசு வெளியிட்டிருக்கும். பெரும் வெற்றிப் பரப்புரை செய்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

அத்துடன் வானூர்த்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான அடையாளம் எதுவமே ராடர்களில் பதிவாகவில்லை. நாடாளுமன்றத்தில் இது பற்றி ஐக்கிய தேசியக் கட்சியினர் கேள்வி எழுப்பிய பொழுது, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல “விடுதலைப் புலிகளின் வானூர்த்தி அழிக்கப்பட்டது உண்மை, ஆனால் எது எங்கே நடந்தது, எப்படி நடந்தது என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது” என்று சொன்னார். சிறிலங்கா அரசின் இந்தப் பொய்யான பரப்புரை கடைசியில் யாரிடமும் எடுபடவில்லை.

தமது வானூர்த்திகள் தாக்குதலை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக தளம் திரும்பி விட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்ததையே உலகம் நம்பியது. அதுவே உண்மையும் கூட.

இந்த வான் தாக்குதலில் இரண்டு இந்தியப் படையினரும் காயம் அடைந்தார்கள் என்று செய்தி இன்னும் ஒரு பரபரப்பிற்கு வழிகோலியுள்ளது. இந்திய அரசு சிறிலங்காவிற்கு உதவிகளை வழங்கி வருகின்றது என்பது பலரும் அறிந்த ஒரு செய்திதான். ஆனால் இந்தியப் படையினரே களத்தில் நின்று சிறிலங்காப் படையினருக்கு ஆதரவாக செயற்படுகின்றார்கள் என்பது பலருக்கும் அதிர்ச்சியான ஒரு செய்தி.

சில வாரங்களிற்கு முன்பு மன்னார் பகுதியில் சிறிலங்காப் படைத் தரப்பின் வானூர்த்தி ஒன்று தாக்குதலுக்கு இலக்காகியது. தொழில்நுட்பக் கோளாறு எனறு சிறிலங்கா அரசு அதைக் கூறியது. அவசரமாக தரையிறக்கப்பட்ட அந்த உலங்குவானூர்த்தியில் இருந்தவர்கள் இந்தியப் படை வீரர்கள்.

மெதுவாக இச் செய்தி வெளியில் கசிந்த பொழுது அதை சிறிலங்காவும் இந்தியாவும் மூடி மறைத்து விட்டன. ஆனால் தற்பொழுது அப்படிச் செய்ய முடியாமல் போய் விட்டது. இந்தியப் படையினர் காயமடைந்து கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், எதையும் மூடிமறைக்க முடியாமல் போய் விட்டது.

சிறிலங்கா அரசுதான் வெட்கமில்லாமல் “வெளிநாட்டவர் எவரும் தாக்குதலில் காயமடையவில்லை” என்று பொய் சொன்னது. ஆனால் இந்தியத் தூதரகம் தமது படையினர் காயமடைந்ததை ஒத்துக் கொண்டது. இந்திய வான்படையின் சார்ஜண்ட்களாகிய சிந்தாமணி ராவுத் மற்றும் ஏ.கே. தாக்கூர் ஆகியோர் காயமடைந்ததாக இந்தியத் தூதரகம் அறிவித்தது.

சுருட்டு அணைவதற்குள் முடிந்து விடுவார்கள் என்று கருதப்பட்ட “சாரம் கட்டிய பையன்கள்” இருபது ஆண்டுகள் கழித்து விமானத்தில் வந்து குண்டு வீசுவார்கள் என்று இந்தியா எதிர்பார்த்திருக்க முடியாதுதான். ஆனால் அது நடந்தே விட்டது.

வான்புலிகளின் தாக்குதலில் இரண்டு இந்தியப் படையினர் காயமடைந்தது இந்தியாவின் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டை முற்றுமுழுதாக அம்பலப்படுத்தி விட்டது. இன்றைக்கும் இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கும் தமிழர்கள் சிலருக்கு இது ஒரு கசப்பான செய்தி. இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவாதா என்று சிலர் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்க, இந்தியாவோ எமது போராட்டத்தை அழிப்பதற்கு களத்தில் நின்றே முயன்று வருகின்றது.

அமெரிக்காவின் ஆதரவோடு கொசோவிற்கு ஒரு “நிழல்” விடுதலை கிடைத்த பொழுதும், ரஸ்யா அபிக்ஸ்ஸியாவையும் தெற்குஒசேற்றியாவையும் தனி நாடுகளாக அங்கீகரித்த போதும், ஒரு இனம் விடுதலை அடைவதற்கு வல்லரசு ஒன்றின் உதவி தேவை என்ற கருத்தை சிலர் வைக்க முற்பட்டனர். ஆனால் வல்லரசுகளின் உதவியுடன் கிடைக்கின்ற சுதந்திரங்கள் உண்மையான சுதந்திரங்களாக இருக்க முடியாது என்பதற்கும் மேற்சொன்ன நாடுகளே சாட்சிகளாகவும் இருக்கின்றன.

இதே போன்று இந்தியாவின் உதவியோடு தமிழினத்திற்கு விடுதலை கிடைக்கப் போவது இல்லை. அப்படி விடுதலை கிடைத்தாலும், அது இன்னும் ஒரு அடிமை சாசனமாகவே இருக்கும். அப்படி ஒரு அடிமை சாசனத்தில் எம்மை கையெழுத்திட வைப்பதற்காகத்தான் இந்தியா சிறிலங்கா அரசுக்கு துணை புரிந்து வருகின்றது.

இந்தியப் படையினர் நேரடியாக தமிழின அழிப்புப் போருக்கு துணை போகின்ற இந்த நிலையில் “இந்தியா உதவும், இந்தியாவோடு சற்று ஒத்துப் போக வேண்டும்” என்ற கருத்துக்களை கொண்டிருக்கும் தமிழர்கள் தமது கருத்துக்கள் சரியானதா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நாம் அடிக்கடி சொல்வது போன்று இந்தியாவை பார்ப்பனியம் ஆளும் வரை இந்தியா ஒருபோதும் எமக்கு உதவப் போவது இல்லை.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களை இந்திய அரசு அவசரமாக அழைத்த போது கூட சில தமிழர்கள் அது பற்றி புழுகாங்கிதப்பட்டார்கள். இந்தியா தமிழர்களுக்கு சார்பாக நடக்க முனைவதாக நம்பினார்கள். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கின்ற போதும் இந்தியா பிரித்தாளும் தந்திரத்தையே கையாண்டு வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் இரு வகையினர் உண்டு. ஒரு வகையினர் தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈபிஆர்எல்எவ் போன்ற கட்சிகளை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் எந்தக் கட்சிகளையும் சேராது மக்கள் மத்தியில் இருந்து தேர்வானவர்கள். மக்கள் மத்தியில் இருந்து தேர்வானவர்கள் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக பார்க்கப்படுபவர்கள்.

இந்தியா தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கும் போது கூட மிகக் கவனமாக கட்சிகளில் இருந்து தெரிவானவர்களையே சந்தித்து வருகின்றது. கட்சி சாராது மக்கள் மத்தயில் இருந்து தெரிவானவர்களை தொடர்ந்தும் புறக்கணிக்கின்றது.

ஒரு காலத்தில் தன்னுடன் மிக நெருக்கமாக இருந்தவர்களை மீண்டும் தன் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்ப்பதற்கே கட்சி சார்ந்த உறுப்பினர்களை இந்திய அதிகாரிகள் அடிக்கடி சந்திக்கின்றார்கள். ஆனந்தசங்கரிக்குப் பிறகு யாரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தன் பக்கம் இழுக்க இந்தியாவால் முடியவில்லை.

கட்சி சாராது மக்கள் மத்தியில் இருந்து தெரிவானவர்களை ரகசியமாக மட்டும் ஓரிரு தடவைகள் இந்திய அதிகாரிகள் சந்தித்துள்ளார்கள். அவைகள் ராஜதந்திர மட்டங்களில் நடைபெறும் எதிரியை நாடி பிடித்துப் பார்க்கின்ற சந்திப்புக்கள். அவ்வளவுதான். மற்றையபடி இந்தியா பிரித்தாளும் தந்திரத்தையே கைக்கொள்ள முனைகின்றது.

எவ்வகையில் பார்த்தாலும் இந்தியா தமிழினத்திற்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றது. அரசியில் ரீதியாகவும் இராணுவரீதியாகவும் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தி அழிக்க முனைகின்றது. 265 இந்தியப் படையினர் இலங்கையில் நிலைகொண்டுள்ளதாக இந்தியத் தூதரகம் கூறுகின்றது. ஆனால் இதை விட அதிகமானளவு இந்தியப் படையினர் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டு சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு துணை புரிந்து வருகின்றனர்.

வான்புலிகளின் தாக்குதல் இந்தியாவினை அம்பலப்படுத்தி உள்ளது. இந்த நிலைக்குப் பிறகாவது தமிழீழத்திலும் தமிழ்நாட்டிலும் வாழும் தமிழர்கள் இந்தியாவின் நயவஞ்சகக் சூழ்ச்சியினைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வி.சபேசன் (11.09.08)

Comments